Published:Updated:

உயிரைப் பறிக்கத் துடிக்கும் உயர் மின்கோபுரங்கள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
உயிரைப் பறிக்கத் துடிக்கும் உயர் மின்கோபுரங்கள்!
உயிரைப் பறிக்கத் துடிக்கும் உயர் மின்கோபுரங்கள்!

ஷாக் அடிக்கும் கிராமங்கள்... தானாக எரியுது ட்யூப் லைட்... உடலில் வைத்தால் மினுங்குது பவர் டெஸ்டர்...

பிரீமியம் ஸ்டோரி

யர் மின்கோபுரங்களுக்கு எதிராக விவசாயிகள் போராடுகிறார்கள். போராட்டத்தை ஒடுக்குகிறது அரசு. ஆனால், ஏன் போராடுகிறார்கள் தெரியுமா? தெரிந்துகொள்ள வேண்டுமானால், கோவை மாவட்டம் எளச்சிப்பாளையம் கிராமத்துக்குச் சென்று பாருங்கள்... அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி அங்கே காத்திருக்கிறது. அங்கிருக்கும் உயர் மின் கோபுரங்களின் அருகே சென்று நின்றால், நம்மையே அறியாமல் உடலில் மின்சாரம் பாய்கிறது. மின்சாரம் இருக்கிறதா என்பதைச் சோதிக்கும் ‘பவர் டெஸ்டர்’ஐ உடலில்வைத்தால் லைட் எரிகிறது. அவ்வளவு ஏன்? ட்யூப் லைட்டைத் தூக்கிப்பிடித்தால் பளீரென எரிகிறது லைட்! மாயமில்லை... மந்திரமில்லை... விவசாயிகள் மற்றும் கிராம மக்களின்மீது அரசுகள் திணித்திருக்கும் அரச பயங்கரவாதம்தான் இது!

உயிரைப் பறிக்கத் துடிக்கும் உயர் மின்கோபுரங்கள்!

உயர் மின்கோபுரங்களுக்கு எதிரான விவசாயிகள் போராட்டம், கடந்த நான்கு ஆண்டுகளுக்கும் மேலாகக் கொங்கு மண்டலத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தங்கள் நிலத்துக்குள் வரக்கூடாது என்று அதிகாரிகளைத் தடுக்கும் விவசாயிகளை, போலீஸைக்கொண்டு ஒடுக்குகிறது அரசு. சமீபத்தில்கூட, கோவையை அடுத்த செம்மாண்ட பாளையத்தில் உயர் மின்கோபுரங்கள் அமைப்பதற்கு எதிராகப் போராடிய நான்கு பெண்கள் உட்பட 11 பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். ‘இவ்வளவு ஒடுக்குமுறைகளைக் கடந்தும் ஏன் விடாமல் போராடுகிறீர்கள்?’ என்று விவசாயிகளைக் கேட்டால், ‘உயர் மின்கோபுரங்கள் எங்கள் நிலத்தை மட்டும் பறிக்கவில்லை; எங்கள் உயிரையும் பறிக்கத் துடிக்கின்றன’ என்று அழாத குறையாகச் சொல்லி அதிர்ச்சி கிளப்புகிறார்கள். அதற்கான உதாரணம்தான் முதல் பாராவில் நீங்கள் படித்தது.

திருப்பூர் மாவட்டம், தாராபுரத் திலிருந்து காங்கேயம் செல்லும் வழியில் உள்ள இச்சிப்பட்டி அருகே உள்ள நியூ புகளூர் என்கிற இடத்தில், மிகப் பெரிய அளவில் துணை மின் நிலையத்தை அமைத்து வருகிறது தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழகம். தமிழகத்தின் பிற மாவட்டங்களில் தயாரிக்கப்படும் மின்சாரத்தை இங்குக் கொண்டு வருவதற்காகத்தான் கொங்கு மண்டலத்தில் தற்போது விவசாய நிலங்களில் உயர் மின்கோபுரங்கள் அமைக்கப்படுகின்றன.  புகளூரிலிருந்து மைவாடி வரை 85 கி.மீ தொலைவுக்கும் புகளூரிலிருந்து கேரள மாநிலம் திருச்சூர் வரை 240 கி.மீ தொலைவுக்கும் புகளூரிலிருந்து வேலூர் மாவட்டம் திருவளம் வரை 390 கி.மீ தொலைவுக்கும் புகளூரிலிருந்து அரசூர் வரை 85 கி.மீ தொலைவுக்கும் புகளூரிலிருந்து இடையர்பாளையம் வரை 65 கி.மீ தொலைவுக்கும் இடையர்பாளையத்திலிருந்து உடுமலை மைவாடி வரை 60 கி.மீ தொலைவுக்கும் உயர்மின் கோபுரங்கள் அமைப்பதற்கான முயற்சிகள் நடைபெறுகின்றன. 

உயிரைப் பறிக்கத் துடிக்கும் உயர் மின்கோபுரங்கள்!

இதுமட்டுமல்லாது, சத்தீஸ்கர் மாநிலம் இராய்க்கரிலிருந்து புகளூர் வரை 1,800 கி.மீ தொலைவுக்கு உயர் மின்கோபுரங்கள் அமைக்கப்படுகின்றன. இதில், புகளூரிலிருந்து சத்தீஸ்கருக்கு 800 கிலோ வாட் மின்சாரமும் கேரள மாநிலம் திருச்சூருக்கு 320 கிலோ வாட் மின்சாரமும் தமிழகத்தின் ஐந்து இடங்களுக்கு 400 கிலோ வாட் மின்சாரமும் கொண்டு செல்வதற் காக இந்த உயர் மின்கோபுரங்கள் அமைக்கப்படுகின்றன.

இதனால், என்னென்ன பிரச்னைகள் ஏற்படும் என்பது குறித்து ஆவணங்களைத் திரட்டிவைத்திருக்கும் பாதிக்கப்பட்ட விவசாயியான எளச்சிப்பாளையத்தைச் சேர்ந்த சதீஷ்குமாரிடம் பேசினோம். “உயர்மின் கோபுரங்கள் அமைக்கப்படும் இடத்தில் மரங்களை வெட்டிவிடுவார்கள். நிலம் பறிபோகும். மின்கோபுரத்தை ஒட்டியுள்ள 46 மீட்டர் அளவிலான நிலத்தின் பயன்பாட்டு உரிமை அரசுக்குச் சென்றுவிடும். எனவே அதைச் சுற்றியுள்ள நிலத்தின் மதிப்பும் குறைந்துவிடும். லைன் செல்லும் இடத்துக்குக்கீழ் ஆழ்துளைக் கிணறு அமைக்க முடியாது. பழைய ஆழ்துளைக் கிணற்றையும் பராமரிக்க முடியாது. இந்தப் பிரச்னைகள் காரணமாக வங்கியில் கடன் தர மாட்டார்கள். கடன் கிடைக்கவில்லை என்றால் சிறு, குறு விவசாயிகள் விவசாயமே செய்ய முடியாது. இறுதியில் நடுத்தெருவுக்கு வர வேண்டியதுதான். இவை எல்லாம் கண்ணுக்குத் தெரிந்த பிரச்னைகள். ஆனால், கண்ணுக்குத் தெரியாமல் ஏராளமான பாதிப்புகள் இருக்கின் றன” என்று அதிர்ச்சி கலந்த சஸ்பென்ஸ் வைத்தவர், “உங்களுக்கு எளிமையாகப் புரிய வேண்டுமென்றால் இருள்சூழும் வரை காத்திருங் கள்” என்றார். பதற்றம் எகிறியபடி இருளுக்காகக் காத்திருந்தோம்.

உயிரைப் பறிக்கத் துடிக்கும் உயர் மின்கோபுரங்கள்!

சூரியன் மறைந்து இருள் கவ்வ ஆரம் பித்திருந்தது... அந்தப் பகுதியின் விவ சாயிகள் சிலரை அழைத்து, அவர்கள் கையில் ஆளுக்கொரு ட்யூப் லைட்டைக் கொடுத்த சதீஷ், வேறு சில கருவிகளையும் எடுத்துக்கொண்டு, எளச்சிபாளையம் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த உயர் மின் கோபுரங்களுக்குக் கீழே அழைத்துச் சென்றார். தலைக்கு மேலே 400 கிலோ வாட் மின்சாரத்தைக் கடத்திச் சென்ற மின் கம்பிகள் ‘உர்ர்ர்ர்’ என்று சத்தம் எழுப்பிக்கொண்டிருந்தன. ‘கையில் வைத்திருக்கும் ட்யூப் லைட்டுகளை மேலே உயர்த்துங்கள்’ என்றார் சதீஷ். அவர்கள் மேலே உயர்த்தியதும் எந்த இணைப்பும் இல்லாமல் ட்யூப் லைட்கள் ஒளிரத் தொடங்கின. அதேபோல, ட்யூப் லைட்டின் ஒரு முனையைக் கீழே வைத்துவிட்டு ரப்பர் செருப்பு அணிந்துகொண்டு மறுமுனையைப் பிடித்தாலும் அது எரிந்தது. அதுமட்டுமல்ல... வீடுகளில் மின்சாரம் வருகிறதா என்று சோதனை செய்யக் கூடிய பவர் டெஸ்டரை யார் உடலில் வைத்தாலும் மின்சாரம் இருப்பதாக அந்த டெஸ்டர் சிக்னல் காட்டியது. நமக்கு அதிர்ச்சியாக இருந்தது.

சதீஷ், தான் கொண்டுவந்த இன்னொரு கருவியை எடுத்தார். அது காந்தப்புலத்தைக் கணக்கிடும் கருவி... அடுத்ததாக 2014-ம் ஆண்டு உலக சுகாதார நிறுவனம் வெளியிட்ட அறிக்கை யில், மின்சாரம் தொடர்பான பாதிப்புகளுக்கான பக்கத்தைப் புரட்டினார். அதில், காந்தப்புலம் நான்கு மில்லி காஸுக்கு மேலே இருந்தால், கேன்சர் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது என்பதை அடிக்கோடிட்டுக் காட்டிவிட்டு அந்தக் கருவியை ஆன் செய்தார். நமக்குத் தூக்கிவாரிப்போட்டது. அந்தக் கருவியில் 35-லிருந்து 40 மில்லி காஸ் வரை காட்டியது. ‘‘டவர் லைனிலிருந்து 25 மீட்டர் தூரம் வரை இதுபோன்ற காந்தப்புல பாதிப்பு இருக்கிறது” என்ற சதீஷ், தொடர்ந்து பேசினார்.

உயிரைப் பறிக்கத் துடிக்கும் உயர் மின்கோபுரங்கள்!

“அதிக அளவு கிலோ வாட் மின்சாரத்தைக் கடத்தும் இந்த உயர் மின்கோபுரங்களுக்கு அருகில் வெளிப்படும் இந்தக் காந்தப் புலம், மனிதர்களை மட்டும் பாதிக்கவில்லை; சுற்றியுள்ள பயிர் களையும் பாதிக்கிறது. இதைப் பல ஆய்வுகள் நிரூபித்துள்ளன. இதனால், கால்நடைகளுக்கும் மலட்டுத்தன்மை ஏற்படும் அபாயம் இருக்கிறது. வெறும் நிலத்துக்காக மட்டும் நாங்கள் இதை எதிர்க்கவில்லை... இவ்வளவு பிரச்னைகள் இருக் கின்றன. இவற்றை எல்லாம் ஆவணமாகக் கொடுத்தாலும் அரசு ஏற்க மறுக்கிறது” என்றார் கவலை தோய்ந்த குரலில்.

உயர் மின்கோபுரங்களுக்கு எதிரான விவசாயச் சங்கங்களின் கூட்டியக்க ஒருங்கிணைப்பாளரான சுரேஷ், “இந்தப் பிரச்னைகள் அனைத்தையும் நாங்கள் மின்துறை அமைச்சர் தங்கமணியிடம் சொல்லிவிட்டோம். ஆனால், அவர் இதையெல்லாம் காதிலேயே வாங்கிக் கொள்ளவில்லை. நாங்கள் இந்த திட் டமே வேண்டாம் என்று சொல்லவில்லை. ‘நிலத்துக்கு அடியில் கேபிள் அமைத்து, மாற்று வழியில் செயல்படுத்துங்கள்’ என்றுதான் சொல்கிறோம். விவசாயிகளை மிரட்டி, வலுக்கட்டாயமாக விவசாய நிலங்களுக்குள் நுழைந்து உயர் மின் கோபுரங்கள் அமைத்தே தீருவோம் என்று இவர்கள் சொல்வதைப் பார்த்தால்... இவர்களுக்கு இதில் வேறு ஏதோ மிகப் பெரிய லாபம் இருப்பதாகத் தோன்றுகிறது. உயர் மின் கோபுரங்கள் அமைக்கும் முயற்சியை அரசு கைவிடும் வரை எங்கள் போராட்டம் தொடரும்” என்றார் உறுதியுடன்.

அமைச்சர் தங்கமணியிடம் பேசினோம். “கோவையிலிருந்து வந்த விவசாயிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தி முடித்துவிட்டேன். இழப்பீடு வாங்கிக்கொள்வதாகச் சொல்லி சம்மதம் தெரிவித்துள்ளார்கள். அரசியல் லாபத்துக்காகப் போராடும் சிலர், இதுபோன்ற குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார்கள். மற்றபடி வேறு எந்தப் பிரச்னையும் இல்லை. எது சாத்தியமோ, அதைத்தான் செய்கிறோம்” என்றார்.

- எம்.புண்ணியமூர்த்தி

படங்கள்: கே.அருண் 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு