Published:Updated:

`மரணித்தவனுக்குக் கிடைத்த மறு ஜென்மம்போல் இருக்கு!'- 8 வழிச் சாலை விவசாயிகள் ஆனந்தக் கண்ணீர்

`மரணித்தவனுக்குக் கிடைத்த மறு ஜென்மம்போல் இருக்கு!'- 8 வழிச் சாலை விவசாயிகள் ஆனந்தக் கண்ணீர்
`மரணித்தவனுக்குக் கிடைத்த மறு ஜென்மம்போல் இருக்கு!'- 8 வழிச் சாலை விவசாயிகள் ஆனந்தக் கண்ணீர்

சேலம் டு சென்னை 8 வழி பசுமை சாலைத் திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்தியது செல்லாது என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து சேலம் மாவட்டத்தில் 8 வழிச் சாலையால் பாதிக்கப்பட்ட கிராம மக்கள் பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி, விளை நிலங்களில் நடப்பட்டிருந்த முட்டுக் கற்களைப் பிடுங்கி எறிந்து ஆனந்தக் கண்ணீரோடும், ஆர்ப்பரிப்போடு தீர்ப்பை வரவேற்றுக் கொண்டாடினார்கள்.

சேலம் டு சென்னை 8 வழி பசுமைச் சாலை திட்டம் கடந்த  25.2.2018-ம் தேதி மத்திய அரசால் 10,000 கோடியில் அமல்படுத்தப்பட்டது. இச்சாலை சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் என 5 மாவட்டம் வழியாக 277 கி.மீட்டர் தொலைவு போடப்பட இருந்தது. இச்சாலை அறிவித்த உடனே தமிழக அரசு நிலங்கள் கையகப்படுத்த தீவிர முனைப்பு காட்டி வந்தது.

சேலம் மாவட்டத்தில் மஞ்சவாடி கணவாயில் தொடங்கி அடிமலைபுதூர், ஆச்சாங்குட்டப்பட்டி, குப்பனூர், பெரிய கிருஷ்ணாபுரம், சின்ன கிருஷ்ணாபுரம், நிலவாரப்பட்டி, நாழிக்கல்பட்டி, பாரப்பட்டி, பூலாவரி, அரியானூர் வரை 36.3 கி.மீட்டர் தொலைவு நில அளவீடு செய்து முட்டுக்கல் நடும் பணி தொடங்கியபோது கடும் எதிர்ப்பு தெரிவித்தார்கள். ஆனால், நில அளவீடு செய்யும் பகுதிகளில் அறிவிக்கப்படாத 144 தடை உத்தரவு போடப்பட்டு காவல்துறையைக் கொண்டு விவசாயிகளை அச்சுறுத்தி, அடக்கி முட்டுக்கல் நடப்பட்டன.

இதையடுத்து அரசியல் கட்சிகளும், சமூக ஆர்வலர்களும், விவசாயிகளும் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்கள். இந்த வழக்கு கடந்த 6 மாதமாகச் சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், பவானி சுப்பராயன் முன்னிலையில் நடைபெற்று வந்தது. இன்று தீர்ப்பு என அறிவித்திருந்தார்கள். இதையடுத்து, சேலம் மாவட்டத்தில் 8 வழிச் சாலையால் பாதிக்கப்பட்ட சுமார் 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தீர்ப்பை எதிர் நோக்கி அயோத்தியாப்பட்டணத்தில் கூடியிருந்தார்கள்.

``சேலம் டு சென்னை 8 வழி பசுமை சாலைத் திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்தியது செல்லாது'' எனத் தீர்ப்பு வந்ததும் சந்தோஷத்தில் ஆர்ப்பரித்துக் குதித்தார்கள். பிறகு பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி, விளைநிலங்களில் நடப்பட்டிருந்த முட்டுக் கற்களைப் பிடுங்கி எறிந்தார்கள். பெண்களும், வயதானவர்களும் ஆனந்தக் கண்ணீரோடு சிரித்து மகிழ்ந்ததோடு தங்கள் வயல்களில் விளக்கு ஏற்றி மண்ணைத் தொட்டுக் கும்பிட்டார்கள்.

இதுபற்றி 8 வழி பசுமைச் சாலைத் திட்டத்தால் பாதிக்கப்பட்ட விவசாயி நாராயணன் கூறுகையில், ``இத்தீர்ப்பு விவசாயிகளுக்குக் கிடைத்த முதல் வெற்றி. எங்களுக்காகப் பாடுபட்ட  நீதியரசர்களுக்கும், ஊடக நண்பர்களுக்கும், சமூக ஆர்வலர்களுக்கும், அரசியல் தலைவர்களுக்கும் மிகுந்த நன்றியை இத்தருணத்தில் தெரிவித்துக்கொள்கிறோம். இழந்த எங்க வாழ்வாதாரம் திரும்பக் கிடைத்த சந்தோஷத்தில் இருக்கிறோம். எங்க விவசாய நிலங்களில் நடப்பட்டிருந்த முட்டுக் கற்கள் எங்களின் சவக் கற்களைப் போலவே இருந்தது. தினம் தினம் அதைப் பார்த்து வேதனையடைந்தோம். தற்போது இந்தத் தீர்ப்பு வந்ததும் சந்தோஷத்தில் விவசாயிகள் அதைப் பிடுங்கி எறிந்து வருகிறார்கள்'' என்றார்.

விவசாயி சிவகாமி, ``சந்தோஷத்தில் என்ன பேசுவதென்றே தெரியவில்லை. எங்களுக்கு உதவிய எல்லோருக்கும் நன்றி. இந்தத் தீர்ப்பு மரணித்தவனுக்கு மறு ஜென்மம் கிடைத்தது போல இருக்கு. ஒவ்வொரு நாளும் சொல்ல முடியாத துயரத்தில் இருந்தோம். இனி சந்தோஷமாக விவசாயம் செய்து நல்ல உணவுப் பொருள்களை உற்பத்தி செய்வோம்'' என்றார்.