கால்நடை
நாட்டு நடப்பு
Published:Updated:

ஒரு கிலோவுக்கு 6 ரூபாய்... குப்பை கொடுத்தால் பணம் கொடுக்கும் வித்தியாசமான வங்கி!

குப்பைகளைத் தரம் பிரித்தல்
பிரீமியம் ஸ்டோரி
News
குப்பைகளைத் தரம் பிரித்தல்

சுற்றுச்சூழல்

மக்கள் அன்றாடம் பயன்படுத்திவிட்டு தூக்கியெறியும் பாலித்தின் பைகள், காகிதங்கள், அட்டைகள், தெர்மாகோல், பிளாஸ்டிக் மற்றும் ரப்பர் பொருள்கள், துணிக் கழிவுகள் உள்ளிட்ட குப்பைகளால் பல வகைகளிலும் சுகாதாரம் சீர்கேடு அடைகிறது. இவற்றை அகற்றி தூய்மைப்படுத்துவதென்பது உள்ளாட்சி அமைப்புகளுக்கு மிகப் பெரும் சவாலாக உள்ளது. இந்நிலையில்தான் இது போன்ற பொருள்களைச் சேகரித்து, மறு சுழற்சிக்கு அனுப்பக்கூடிய குப்பை வங்கி (கார்ப்பேஜ் பேங்க்) விருதுநகரில் இயங்கி வருகிறது. இனி உதவாதென உதாசீனப்படுத்தும் அந்தக் குப்பைகள் மூலம் மக்கள் வருமானம் பார்க்க முடியும், பலருக்கு வேலைவாய்ப்பும் வழங்க முடியும் என நிரூபித்து வருகிறார்கள், இந்த வங்கியின் நிர்வாகிகளான மாமியார் மலர்விழி முத்து மற்றும் மருமகளான ராஜவள்ளி ராஜீவ். இவ்வங்கியில் 8 ஊழியர்கள் பணியாற்று கிறார்கள். பொதுமக்கள் தங்களுடைய சுற்றுப் புறங்களில் உள்ள குப்பைகளை இவ்வங்கியில் கொடுத்தால், ஒரு கிலோவுக்கு 6 ரூபாய் பணம் வழங்கப்படுகிறது.

மாணவர்களிடத்தில் விழிப்புணர்வு
மாணவர்களிடத்தில் விழிப்புணர்வு

விருதுநகரை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இதயம் நல்லெண்ணெய் நிறுவனத்தின் உரிமையாளரான முத்துவின் மனைவி மலர்விழி மற்றும் மருமகள் ராஜவள்ளி ராஜீவ் ஆகியோர் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் மிகுந்த ஆர்வம் கொண்டவர்கள். இந்நிலையில்தான் கடந்த 3 ஆண்டுகளாக இவர்கள் செயல்படுத்தி வரும் குப்பை வங்கி, இப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை யும் பாராட்டையும் பெற்று வருகிறது. பட்டேல் சாலையில் இயங்கி வரும் இந்த வங்கியைப் பார்வையிடச் சென்றோம். இங்கு மலைபோல் குவிந்து கிடந்த பாலித்தின் பைகள், காகிதங்கள், அட்டைகள் உள்ளிட்ட வற்றைத் தனித்தனியாகத் தரம் பிரித்து ஊழியர்கள் அடுக்கிக்கொண்டிருந்தனர். இதை மேற்பார்வை செய்துகொண்டிருந்த மலர்விழி முத்து மற்றும் ராஜவள்ளி ராஜீவ் இருவரும் மிகுந்த உற்சாகத்தோடு நம்மை வரவேற்றனர்.

மலர்விழி, ராஜவள்ளி ராஜீவ்
மலர்விழி, ராஜவள்ளி ராஜீவ்

குப்பை மேலாண்மை குறித்து மிகுந்த ஆர்வத்துடன் பேசத் தொடங்கிய ராஜவள்ளி ராஜீவ், “எனக்கு சின்ன வயசுல இருந்தே சுற்றுச்சூழல் விஷயங்கள்ல ஆர்வம் அதிகம். குறிப்பா, சாலைகள்ல குவிஞ்சு கிடக்குற பாலித்தின் பைகள், சாக்லேட் பேப்பர், உடைஞ்ச பிளாஸ்டிக் பொருள்கள், பழைய அட்டைப் பெட்டிகள்... இது மாதிரியான பொருள்களை எல்லாம் பார்க்குறப்ப, இதையெல்லாம் தரம் பிரிச்சு மறு சுழற்சி செஞ்சா மறுபடியும் பயன்படுத்தலாம்... குப்பைகள் இல்லாம இடமும் சுத்தமா இருக்குமேனு எனக்குத் தோணும். எனக்குத் திருமணமாகி கணவர் வீட்டுக்கு வந்த பிறகு... ஒரு நாள் என்னோட மாமியார்கிட்ட என்னோட எண்ணத்தை யதார்த்தமா சொன்னேன். அவங்களும் இதுல ஆர்வ மாயிட்டாங்க. குப்பை மேலாண்மை பத்தின தேடல்ல இறங்கினோம். அப்போ உருவானதுதான் இந்த கார்பேஜ் பேங்க்னு சொல்லப்படுற குப்பை வங்கி. அது மூலமா குப்பைகளை மக்கள்கிட்ட சேகரிச்சு, மறுசுழற்சிக்கு அனுப்பலாம்னு முடிவு பண்ணினோம்.

அலங்கார மற்றும் வீட்டு உபயோகப் பொருள்கள்
அலங்கார மற்றும் வீட்டு உபயோகப் பொருள்கள்

குப்பை வங்கி தொடங்குறதுக்கான பரீட்சார்த்த பணிகளை எங்க வீட்டிலிருந்தே தொடங்கினோம். சாக்லேட் பேப்பர், பாலித்தின் பைகள், நூல், பட்டன், பிளாஸ்டிக் பொருள்கள், உடைஞ்ச கண்ணாடி பாட்டில், ஐஸ்க்ரீம் குச்சி, பேப்பர் கப், தெர்மாக்கோல், பார்சல் பேப்பர், மல்டி லேயர் பேக்கிங் கவர்... இதையெல்லாம் குப்பைக் கூடையில போடாம, தனித்தனியா சேகரிக்க ஆரம்பிச் சோம். அடுத்தகட்டமா, சொந்தக்காரங்க வீடு, எங்க குடும்பத்துக்குச் சொந்தமான எண்ணெய் ஆலையில வேலை செய்யக்கூடிய தொழிலாளர்கள் வீடு, அவங்களோட சுற்றுப் புறம்‌ இப்படி, இன்னும் பல இடங்கள்ல இருந்து குப்பைகளைச் சேகரிக்க ஆரம்பிச்சோம்.

இப்போ விருதுநகர்ல 700 வீடுகள்லயிருந்து குப்பைகளைச் சேகரிக்கிறோம். இப்படி நாங்க சேமிக்கிற எல்லாக் குப்பைகளையும் மொத்தம் 56 வகையா பிரிச்சு மறுசுழற்சிக்கு அனுப்புறோம். எங்களுக்கு இதுல கொஞ்சம் கூட லாபம் நோக்கம் கிடையாது. அப்படினா, எதுக்கு இந்தத் தேவை இல்லாத வேலைனு ஒரு சிலர் நினைக்கலாம். சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு எங்களால முடிஞ்ச பங்களிப்பை செய்யணும்ங்கற நோக்கத்துல தான் இதுல ஈடுபட்டுக்கிட்டு இருக்கோம்.

குப்பைகளைத் தரம் பிரித்தல்
குப்பைகளைத் தரம் பிரித்தல்

எங்களோட குப்பை வங்கிக்கு மக்கள் தரக்கூடிய பல தரப்பட்ட பொருள்களுக்கும் கிலோவுக்குக் குறைந்தபட்சம் 6 ரூபாய் பணம் கொடுக்குறோம். ஒரு வீட்டிலிருந்து சேகரிக்கப்படும் குப்பை எப்போ 300 கிலோ என்ற அளவை எட்டுதோ, அப்போ அதுக்கான தொகையைக் கொடுத்துடுவோம். இதனால, உதவாதுனு தூக்கிப்போடும் குப்பைகள் மூலமாவும் வருமானம் பார்க்க முடியுங்குற எண்ணத்தை மக்களுக்குள்ள விதைச்சிருக்கோம். காய்கறிக் கழிவுகளை மட்டும் நாங்க வாங்குறதில்லை. ஆனா, அதை எப்படி உரமா மாத்தலாம்னு மக்களுக்குப் பயிற்சி கொடுக்குறோம்’’ என்றார்.

அவரைத் தொடர்ந்து பேசிய மலர்விழி முத்து, “மாத்திரை கவர், பாலித்தின் பைகள், பிளாஸ்டிக் பொருள்கள், தேய்ந்த செருப்பு, உலோகப் பொருள்கள், பாட்டில் மூடி, பேப்பர் துண்டு, அட்டைப்பெட்டி, மரக்கழிவு, துணிக்கழிவு, மெத்தை, தலையணை, தோல் பொருள்கள், தகரம், தேங்காய் ஓடு உட்பட மொத்தம் 56 வகையாகக் குப்பைகளைத் தரம் பிரிக்கிறோம். தரம் பிரிக்கப்பட்ட குப்பைகளை, மறுசுழற்சி செய்யக்கூடிய அந்தந்தத் தொழில்நிறுவனங்களுக்கு அனுப்பு வோம். உதாரணத்துக்குச் சொல்லணும்னா... பிளாஸ்டிக் கழிவுகளை மதுரை மற்றும் டெல்லிக்கு அனுப்புறோம். தெர்மாக்கோல் கழிவுகளை ஹைதராபாத்துக்கும், துணிக் கழிவுகளைத் திருநெல்வேலிக்கும் அனுப்புறோம். சந்தை நிலவரப்படி அதுக்கான விலையைக் கொடுத்துடுவாங்க.

மாணவர்களிடத்தில் விழிப்புணர்வு
மாணவர்களிடத்தில் விழிப்புணர்வு

6 மண்டலங்கள்

இந்த வங்கியை வெற்றிகரமா செயல்படுத்துறக்காக... மேலாளர், குப்பை சேகரிப்பாளர், கணக்கர், வாகன ஒட்டுநர்கள் உட்பட 8 ஊழியர்களை வேலைக்கு அமர்த்தினோம். விருதுநகர் நகரப்பகுதியை 6 மண்டலமா பிரிச்சோம். மக்களோட வீடுகளுக்கே நேரடியா போயி குப்பைகளைச் சேகரிச்சு கொண்டு வர்றதுக்கான வாகனங் களை வாங்கினோம். வாரம் ஒரு பகுதினு 6 நாள்களுக்கு 6 பகுதிகள்லயிருந்து குப்பை களை வாங்குறோம். ஒவ்வொருத்தரும் எத்தனை கிலோ கொடுத்திருக்காங்கனு ஞாபகம் வச்சிக்குறதுக்காக, ஒவ்வொருத்தர் வீட்லயும் அப்டேட் ஸ்டிக்கர் ஒட்டுகிறோம். அதனால இன்னொரு பலனும் ஏற்படுது... அவங்க வீட்டுக்கு விருந்தாளியா வர்றவங் களுக்கும் கார்பேஜ் பேங்க் பத்தி தெரிஞ்சுகிறாங்க.

அலங்கார மற்றும் வீட்டு உபயோகப் பொருள்கள்
அலங்கார மற்றும் வீட்டு உபயோகப் பொருள்கள்


இது தவிர, பள்ளிக்கூடம், கல்லூரி, கடைகள், வணிக நிறுவனங்கள் இருந்தும் குப்பைகளை வாங்குறோம். இதுக்கான பணிகள்ல எங்க குப்பை வங்கி ஊழியர்கள் மட்டுமல்லாம, நிறைய தன்னார்வலர்களும் பங்களிப்பு செலுத்துறாங்க. பள்ளி மாணவர் களுக்கு வாரம் ஒருமுறை குப்பை மேலாண்மை குறித்து விழிப்புணர்வு பாடம் எடுக்குறோம். பலதரப்பட்ட பொருள்களையும் தரம் பிரிக்கச் சொல்லித்தர்றோம். இதைச் சிறப்பா செய்ற மாணவர்களுக்குப் பரிசுகள் தர்றோம்.

குறைந்த வாடகையில் எவர்சில்வர் பொருள்கள்

கல்யாணம், காதுகுத்து, பிறந்தநாள் விழாக்கள் மாதிரியான விஷேச நிகழ்ச்சிகள்ல பாலித்தின், பிளாஸ்டிக் பொருள்களுக்கு மாற்றாக எவர்சில்வர் பொருள்களை மக்கள் பயன்படுத்துறதுக்கான வசதியையும் இப்ப உருவாக்கியிருக்கோம். மிகவும் குறைவான கட்டணத்துல எவர்சில்வர் பொருள்களை வாடகைக்குக் கொடுக்குறோம். சுற்றுச்சூழல்ல அக்கறையுள்ளவங்க இதைப் பயன்படுத்திக் கிறாங்க.

அலங்கார மற்றும் வீட்டு உபயோகப் பொருள்கள்
அலங்கார மற்றும் வீட்டு உபயோகப் பொருள்கள்

கடந்த மூணு வருஷத்துல மொத்தம் 72,125 கிலோ குப்பைகளைச் சேகரிச்சு மறுசுழற்சிக்கு அனுப்பியிருக்கோம். அதுல பேப்பர் கழிவுகள் 30,000 கிலோ, பிளாஸ்டிக் கழிவு 17,898 கிலோ, துணிக்கழிவு 5,753 கிலோ, மற்றக் கழிவுகள் 18,473 கிலோ அடக்கம். அந்தப் பொருள்களை மறுசுழற்சிக்குக் கொடுத்தது மூலமா மொத்தம் 6,85,000 ரூபாய் வருமானம் கிடைச்சிருக்கு. குப்பைகள் கொடுத்த பொதுமக்களுக்கு இதுவரைக்கும் 2,54,000 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுருக்கு. ஊழியர்களுக்கான ஊதியம், போக்குவரத்து, இதர செலவுகள் எல்லாம் கணக்கு பார்த்தால், இதுல எங்களுக்கு லாபம் எதுவும் கிடைக்காது. விருதுநகர்ல எங்க கண்ல படக்கூடிய இடங்கள் தூய்மையா இருந்தா போதும். அதைத்தான் நாங்க எங்களோட உழைப்புக் கான லாபமா நினைக்குறோம்’’ என மகிழ்ச்சியோடு தெரிவித்தார்.


தொடர்புக்கு, ராஜவள்ளி ராஜீவ்,

செல்போன்: 94862 87248

அலங்கார மற்றும் வீட்டு உபயோகப் பொருள்கள்

“தரம் பிரிக்கப்பட்ட பொருள்கள்ல ஒரு குறிப்பட்ட பொருள்களை நாங்க எடுத்து வச்சிக்கிட்டு, அதுல இருந்து அலங்காரப் பொருள்கள், எழுதுபொருள்கள், வீட்டு உபயோகப் பொருள்கள் தயார் செய்றோம். இது சம்பந்தமா பொதுமக்கள்கிட்ட விழிப்புணர்வு ஏற்படுத்துறதுக்காகதான் இதைச் செஞ்சுகிட்டு இருக்கோம். இது சம்பந்தமா பயிற்சிகளும் கொடுக்குறோம். முழுமையா பயன்படுத்தப்படாத காகிதங்கள், அட்டைக்கழிவுகளைப் பயன்படுத்தி டைரி செய்றோம். வாகனங்களோட டயர்கள்ல பல வண்ணங்கள்ல பெயின்ட் அடிச்சு கலைநயமிக்க அலங்கார கடிகாரம் செய்றோம். டைலர் கடைகள்ல குப்பைகளா சேரக்கூடிய துணிக்கழிவுகள் மூலமா டஸ்ட்டர், ஃபைல், கைக்குட்டைகள், மிதியடி, கைப்பைகள், ஆவணப் பெட்டகங்கள் செய்றோம். பிளாஸ்டிக் பொருள்களைப் பயன்படுத்திப் பேனா ஸ்டாண்டு, போட்டோ ஃபிரேம் தயார் செய்றோம். சாப்பாட்டுக் கழிவுகள், மரக்கிளை, சின்னச் சின்ன குச்சி, பழத்தோல், காய்கறிக் கழிவுகள்... இதையெல்லாம் இயற்கை உரமா மாத்துறோம்” என்கிறார் ராஜவள்ளி ராஜூ.

அலங்கார மற்றும் வீட்டு உபயோகப் பொருள்கள்
அலங்கார மற்றும் வீட்டு உபயோகப் பொருள்கள்

பள்ளிக்கு கிடைத்த வருமானம்

விருதுநகரில் இயங்கி வரும் தனியார் பள்ளி ஒன்றின் முதல்வர் சுந்தர், “எங்க பள்ளிக்கூடத்துக்கு வரணும்னா தெருமுனையில் இருக்குற பெரிய குப்பைத் தொட்டியைக் கடந்துதான், மாணவர்கள் பள்ளிக்கு வரக்கூடிய சூழ்நிலை இருந்துச்சு. மாணவர்களுக்கு சுத்தம், சுகாதாரம்னு பாடம் எடுக்குறோம். ஆனா, தெருமுனையிலயே இவ்வளவு குப்பைகள் கிடக்குதேனு என் மனசுக்கு நெருடலா இருக்கும். இந்தச் சூழல்லதான் குப்பை வங்கி ஊழியர்களோடு சேர்ந்து குப்பைகளைச் சுத்தம் செய்ய முடிவு செஞ்சோம். அதுக்கான முதல்கட்ட வேலையா, குப்பை மேலாண்மை பத்தி மாணவர்களுக்குப் பயிற்சி அளிச்சோம். குப்பைகளாகக் கிடந்த பொருள்களைத் தனித்தனியா பிரிச்சோம். காய்கறிக் கழிவுகளை உரமாக மாத்துறதுக்கான முயற்சிகள்லயும் இறங்கினோம். மறுசுழற்சி செய்யத்தக்க குப்பைகளை கார்பேஜ் பேங்க்குக்கு கொடுத்தோம். அந்த சமயத்தோடு இது நின்றிடாம மாணவர்கள் தொடர்ந்து செய்யணும்னு பள்ளிக்கூடத்துல குப்பை மேலாண்மையைக் கடைப்பிடிக்க அறிவுறுத்தினோம். மாணவர்கள் கொண்டு வர்ற பாலித்தின் பைகள், சாக்லேட் கவர்கள் இதையெல்லாம் எங்க பள்ளியிலேயே, ஓர் அறையில சேகரிச்சு வச்சு, வாரம் ஒருமுறை கார்பேஜ் பேங்க்குக்கு அனுப்பிக்கிட்டு இருக்கோம். இந்தப் பழக்கம், மாணவர்களோட வீடுகள்லயும் நடக்கணும்னுங்கறதுனால, அவங்களோட வீடுகள்ல சேரக்கூடிய குப்பைகளையும் தரம்பிரிச்சு பள்ளிக்கு எடுத்துக்கிட்டு வரச் சொன்னோம். மாணவர்கள் கொண்டு வந்து கொடுக்கக்கூடிய குப்பைகளை வாரக் கடைசியில எடை போடுவோம். அதிக அளவு குப்பைகள் கொடுத்த மாணவர்களுக்கு ‘இ-கோ அம்பாசிடர்’, ‘இ-கோ லவ்வர்’னு பேட்ஜ் வழங்கி ஊக்கப்படுத்திக்கிட்டு இருக்கோம்.

அலங்கார மற்றும் வீட்டு உபயோகப் பொருள்கள்
அலங்கார மற்றும் வீட்டு உபயோகப் பொருள்கள்

மாணவர்களை 4 குழுக்களாகப் பிரிச்சு, ஒவ்வொரு குழுவுக்கும் இலக்கு நிர்ணயம் செஞ்சோம். இந்த முயற்சிகள் அனைத்தும் மாணவர்களின் அன்றாடப் பழக்கவழக்கங்களில்கூட நல்ல மாற்றத்தைக் கொடுத்திருக்கு. குப்பை மேலாண்மை பற்றிய புரிதல் கிடைச்சிருக்கிறதால இப்போ பள்ளி வளாகத்துல மட்டுமல்ல, அவங்க வீட்டைச் சுற்றிலும் குப்பைகள் தேங்காம விழிப்புணர்வோடு மாணவர்கள் செயல்படுறதைப் பார்க்க முடியுது. இதுவரைக்கும் எங்க பள்ளிக்கூடத்துல சுமார் 2000 கிலோ குப்பைகள், கார்பேஜ் பேங்க்குக்கு கொடுத்திருக்கோம். அதுக்கு ஈடாகப் பள்ளியின் வங்கிக் கணக்குல இதுவரைக்கும் சுமார் 20,000 ரூபாய் வரவு வைக்கப்பட்டிருக்கு’’ எனத் தெரிவித்தார்.

சுத்தமாகும் சூப்பர் மார்க்கெட்!

விருதுநகரில் சூப்பர் மார்கெட் நடத்தும் ராமபிரான், “கடையோ, வீடோ... எதுவா இருந்தாலும் சுத்தமா இருந்தாதான் மனசுக்கு நல்லா இருக்கும். நான், ஐரோப்பா, ஆப்பிரிக்கா, ரஷ்யா, இங்கிலாந்து, சிங்கப்பூர், மலேசியா உட்படப் பல நாடுகளுக்கு போயிருக்கேன். வெளிநாடுகள்ல உள்ள மக்கள் குப்பைகளை ரொம்ப அழகா தரம்பிரிச்சு சுற்றுப்புறத்தைத் தூய்மையா வச்சுக் குறாங்க. அதுமாதிரி நம்ம ஊர்கள்லயும் நடந்தா நல்லா இருக்குமேனு எனக்கு ரொம்ப ஏக்கமா இருக்கும். அந்த ஏக்கம் இவ்வளவு சீக்கிரம் தீரும்னு நினைக்கவேயில்லை.

அலங்கார மற்றும் வீட்டு உபயோகப் பொருள்கள்
அலங்கார மற்றும் வீட்டு உபயோகப் பொருள்கள்

என்னோட எண்ணத்தைப் பூர்த்திச் செய்ற மாதிரி இங்கயே குப்பை வங்கி ஆரம்பிக்கப்பட்டு, கடந்த மூணு வருஷமா வெற்றிகரமா செயல்பட்டுக்கிட்டு இருக்கு. எங்க சூப்பர் மார்க்கெட்டுக்கு வரக்கூடிய பார்சல்கள் மேல இருக்கக்கூடிய பிளாஸ்டிக் கவர், பேப்பர், அட்டைப்பெட்டி, அரிசி சாக்கு, சீனிச்சாக்கு உட்பட ஏகப்பட்ட குப்பைகள் சேருது. இதையெல்லாம் தரம்பிரிச்சு குடோன்ல போட்டுருவேன். பிறகு, வாரம் ஒருமுறை கார்பேஜ் பேங்க் ஆட்களே வந்து எடுத்துக்கிட்டு போவாங்க. என்னால முடிஞ்ச வரை பக்கத்து கடைக்காரர்களிடமும் குப்பை மேலாண்மை பத்தி எடுத்துச் சொல்லி அவங்களையும் அதுல பங்குகொள்ளச் செஞ்சிருக்கேன். எங்க கடைக்கே வந்து குப்பைகளை எடுத்துக்கிட்டு போறதோடு மட்டுமல்லாம, அதுக்குப் பணம் கொடுக்குறாங்க பாருங்க. இதை மனப்பூர்வமா பாராட்டணும்’’ என நெகிழ்ச்சியோடு தெரிவித்தார்.

ராமபிரான், சுந்தர்
ராமபிரான், சுந்தர்

எல்லா மாவட்டங்கள்லயும் குப்பை வங்கி உருவாகணும்!

குப்பை மேலாண்மை குறித்து நம்மிடம் பேசிய இதயம் எண்ணெய் நிறுவனத்தின் உரிமையாளர் முத்து, ‘‘ஆரோக்கியமான உணவுகள் குறித்துச் சமீபகாலமா, நம்ம மக்கள்கிட்ட அதிகமா விழிப்புணர்வு ஏற்பட்டுருக்கு. ஆனா, ஆரோக்கியமான வாழ்க்கைக்கு அது மட்டுமே போதாது. சுற்றுப்புறம் தூய்மையா இருக்குறதும் ரொம்ப முக்கியம். அதுக்கு குப்பை வங்கி ரொம்ப அவசியம். விருதுநகர்ல இப்ப என்னோட மனைவியும் மருமகளும் சேர்த்து இதை நடத்திக்கிட்டு இருக்காங்க. இது ஒரு நல்ல முயற்சி. என்னால முடிஞ்ச ஒத்துழைப்புகளை நான் கொடுத்துக்கிட்டு இருக்கேன். எதிர்காலத்துல இது மிகப்பெரிய அளவுல பேசப்படும். நான் எந்த ஒரு நிகழ்ச்சிகள்ல கலந்துகிட்டாலும் குப்பை மேலாண்மையின் அவசியம் பத்தி பேசுறதை வழக்கமா வச்சிருக்கேன். இது சம்பந்தமா நிறைய விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்திக்கிட்டு இருக்கேன். தமிழ்நாட்டுல எல்லா மாவட்டங்கள்லயும் குப்பை வங்கி உருவாகணும். அதுக்கு அந்தந்தப் பகுதிகள்ல சமூக ஆர்வலர்கள், தொழிலதிபர்கள் முயற்சி எடுக்கணும்’’ எனத் தெரிவித்தார்.

கின்னஸ் சாதனை

2018-ம் ஆண்டு... பள்ளிகள் மற்றும் கல்லூரிகளைச் சேர்ந்த 17,303 மாணவர்களை ஒரே இடத்தில் ஒருங்கிணைத்து, குப்பை மேலாண்மை குறித்து இந்த இருபெண்களும் நடத்திய விழிப்புணர்வு நிகழ்ச்சி, கின்னஸ் சாதனையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.