Published:Updated:

20 ஆடுகள், ஆண்டுக்கு ரூ. 2,20,000 லாபம்! - வெகுமதி கொடுக்கும் வெள்ளாடு வளர்ப்பு!

கிருஷ்ணன்
பிரீமியம் ஸ்டோரி
News
கிருஷ்ணன்

கால்நடை

ழைகளின் ஏற்றத்துக்கு எப்போதும் உதவியாக இருப்பது ஆடு, மாடு, கோழி வளர்ப்புதான். முன்பெல்லாம் விவசாயத்தின் உபதொழிலாக இருந்தவை, இன்று பிரதான தொழிலாக மாறி வருகிறது.

காரணம் அதற்கான சந்தை நன்றாக வளர்ந்து வருவதுதான். இந்த கொரோனா காலத்தில் ஒரு கிலோ ஆட்டுக்கறி 1,000 ரூபாயைத் தொட்டுவிட்டது. இந்நிலையில் 40 ஆண்டுகளுக்கு முன்பே வெள்ளாடு வளர்ப்பைக் கையிலெடுத்து, இன்றும் தொடர்கிறார் கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் தாலூகா, சென்றாயநாய்க்கனூர் கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணன். பட்டியில் குட்டிகளுக்குப் பால் குடிக்க வைத்துக்கொண்டிருந்தவரைச் சந்தித்தோம்.

பட்டியில் வெள்ளாடுகள்
பட்டியில் வெள்ளாடுகள்

‘‘ஏழு வயசுல ஆடு மேய்க்கத் தொடங்கினேன். இப்ப 55 வயசாகுது. இன்னைக்கும் விடாம மேய்ச்சிட்டிருக்கேன். பள்ளிக்கூடத்துக்குப் போனேன். ‘வாத்தியாரு நீ ஆடு மேய்க்கத்தான் லாயக்கு’ சொன்னார். அதே வேகத்துல பள்ளிப்படிப்பை விட்டுட்டு அப்பையன்ங்கறவோடு சேர்ந்து ஆடு மேய்க்க ஆரம்பிச்சேன். 10, 15 வருஷம் அவரோடு சேர்ந்து மேய்ச்சேன். அப்புறம் தனியா நானே ஆடுகளை மேய்க்க ஆரம்பிச்சேன். இந்த ஏரியாவில வெள்ளாடு வேணும்னா என்னையத்தான் தேடுவாங்க. ‘வெள்ளாட்டுக்கார கிருஷ்ணன்’னாதான் பல பேருக்கு என்னை அடையாளம் தெரியும். அந்தளவுக்கு இந்த வெள்ளாடுக எனக்கான அடையாளத்த வாங்கிக் கொடுத்திருக்கு” என்று முன்கதை சொன்னவர் தொடர்ந்தார்.

“என்கிட்ட இருக்கிறது கிருஷ்ணகிரி கறுப்பு ஆடுகள். (சேலம் கறுப்பு ரகத்தைச் சேர்ந்தவை) காடு, மலைனு நல்லா ஏறி மேயும். ஒரு ஈத்துக்கு ரெண்டு குட்டி போடும். சில நேரங்கள்ல ஒருசில ஆடுக, மூணு, நாலு குட்டிக வரைக்கும்கூடப் போடும். இது மேய்க்கிறவங்கிட்ட நல்லா பழகிக்கும். நான் இதுவரை வெளியிலிருந்து ஆடு வாங்கினதில்ல. பழைய ஆடுகள்ல இருந்தே குட்டி எடுத்து, ஆடா மாத்திட்டு வர்றேன்.

கிருஷ்ணன்
கிருஷ்ணன்

நான் மேய்ச்சல் முறையிலதான் ஆடுகள வளர்க்கிறேன். காலையில 10 மணிக்குப் பட்டியைத் திறந்துவிட்டா, காடு, மலைனு பல இடங்கள்லயும் மேய்க்கிறேன். பகல்ல சுனைநீர், தொட்டிகள்னு போற இடத்துல தண்ணி குடிச்சுக்கும். காரச்செடி தலை, முள்ளுச்செடி, கருவேலங் காய்கள்னு பல இலைதழைகளை மேயுது” என்றவர் வருமானம் பற்றிப் பேசினார்.

“இப்போ என்கிட்ட மொத்தம் 30 ஆடுகள் இருக்கு. இதுல 20 ஆடுகள் குட்டி போடுது. மீதி குட்டியில இருந்து ஆடா வளர்த்திட்டு இருக்கேன். ஓர் ஆடு, ஓர் ஈத்துக்குத் தவறாம 2 குட்டிகள் போடும். 2 வருஷத்துக்கு 3 ஈத்து. சில நேரங்கள்ல 6 மாசத்துக்கு ஒரு ஈத்துக்கூடக் கிடைக்குது.

20 ஆடுகள், ஆண்டுக்கு ரூ. 2,20,000 லாபம்! - வெகுமதி கொடுக்கும் வெள்ளாடு வளர்ப்பு!

வருஷத்துக்கு ஒரு ஆட்டுல இருந்து குறைஞ்சபட்சம் 3 குட்டிகள் கிடைக்குது. நான் எப்போதும் 2 மாச குட்டியா வளர்த்து வித்திடுறேன். 2 மாச குட்டி 4,000-5,000 ரூபாய் போகுது. அதையே 6 மாசம் வளர்த்தா 6,000-7,000 ரூபாய் வரை போகுது. 2 மாச குட்டி 6 அல்லது 7 கிலோ எடை வரும். 20 ஆடுகள்ல இருந்து வருஷத்துக்கு 65 குட்டிகள் கிடைக்குது. இதுல 5 குட்டிகள் நோய், அது இதுன்னு போக 60 குட்டிகள் தேறும். அதை விற்பனை செஞ்சா, 2,40,000 ரூபாய் வருமானம் கிடைக்குது. இதுல தடுப்பூசி, நோய்னு 20,000 ரூபாய்ச் செலவாகும். மீதி 2,20,000 ரூபாய் லாபமா நிக்குது. மாசத்துக்குக் கணக்கு போட்டா 18,000 ரூபாய் சம்பளம் மாதிரி கிடைக்கும்” என்றவர் நிறைவாக,

“முன்னெல்லாம் 70, 80 ஆடுகள் வெச்சிருந்தேன். வருஷத்துக்கு 5 லட்சத்துக்கும் குறையாம வருமானம் பாத்துட்டு இருந்தேன். இப்போ வயசானதால ஆடுகளைக் குறைச்சுக்கிட்டேன். 60 ரூபாய்க்கு ஆடுகள் வித்துட்டு இருந்த காலத்திலேயே நான் 105 ரூபாய்க்கு வித்தேன். இப்போகூட ஒரு கிடாயை 20,000 ரூபாய்க்கு வித்தேன். இந்த ஆடுகள வெச்சுதான் அரை ஏக்கர் நிலம், ஒரு வீடு வாங்கினேன். 3 பசங்கள படிக்க வெச்சேன். அவங்கள்ல ரெண்டு பேருக்குக் கல்யாணம் பண்ணி வெச்சிருக்கேன். இன்னைக்கும் இதை ஒரு தொழிலா செஞ்சிட்டு இருக்கேன். நல்லது, கெட்டதுக்கு அதிகம் வெளியில போக முடியாது. அது ஒன்னுதான். மத்தபடி வெள்ளாடு வளர்ப்பு ஒரு ஜோரான தொழில்தான்” என்றபடி விடை கொடுத்தார்.

தொடர்புக்கு, கிருஷ்ணன், செல்போன்: 99527 26685

குட்டிகளே வருமானம்!

கிருஷ்ணன் மேய்ச்சல் முறையில் வெள்ளாடுகளை வளர்த்து வருகிறார். இதையே பரண்மேல் ஆடு வளர்ப்பு முறையில் எப்படி வளர்க்க வேண்டும் என்று காஞ்சிபுரம் மாவட்டம், ஏனாத்தூர் உழவர் பயிற்சி நிலைய தலைவர் மற்றும் பேராசிரியர் சௌந்தரராஜனிடம் கேட்டோம்.

சௌந்தரராஜன்
சௌந்தரராஜன்

“பரண்மேல் ஆடு வளர்ப்பு முறை குட்டிகள் வளர்க்க ஏற்றது. ஏனென்றால் நிலத்தில் வளர்க்கும்போது பால் பற்றாக்குறையால் குட்டிகள் மண்ணை நக்கிச் சாப்பிட்டு கழிச்சல் ஏற்பட்டு இறப்புக்குள்ளாகி விடுகிறது. பரண்மேல் ஆடு வளர்ப்பது மூலம் அதைத் தடுக்கலாம். ஆடு வளர்ப்பில் குட்டிகள்தான் வருமானத்தைக் கொடுப்பவை. சாதாரணமாக ஒரு குட்டி 5,000 ரூபாய்க்கு மேல் விலைபோகிறது.

பரண் முறையில் பெரிய ஆடுகளையும் வளர்க்கலாம். முதலீடு அதிகம் இருப்பவர்கள் இந்த முறையை மேற்கொள்ளலாம். 20 ஆடுகள் வளர்க்க 400 சதுரஅடி இடம் தேவைப்படும். அதற்கான பரண் அமைக்க 50 ஆயிரத்திலிருந்து 1 லட்சம் வரை ஆகும். இதையே 100 ஆடுகள் என்றால் 1,800 சதுர அடி நிலம் தேவைப்படும். இதை அமைக்க 4 லட்சம் செலவாகும்.

20 ஆடுகளுக்கு ஒரு ஏக்கரில் தீவனம் வளர்க்க வேண்டும். வேலிமசால் அரை ஏக்கர், கோ-4 தீவனப்புல் அரை ஏக்கரில் வளர்க்க வேண்டும். ஆடு வளர்ப்பைப் பொறுத்தவரைப் பசுந்தீவனம்தான் முக்கியம். ஓர் ஆட்டுக்கு, ஒரு நாளைக்கு 3 கிலோ தீவனம் தேவைப்படும். குட்டிகளுக்கு ஒரு கிலோ தீவனம் தேவை. மாடுகளை ஒப்பிடும்போது ஆடுகளுக்கு நோய்ப் பாதிப்பு மிகவும் குறைவு. பரண் முறையில் வளர்க்க தலைச்சேரி, போயர் போன்ற ஆடுகளைத் தவிர்த்து, நம்ம ஊர் நாட்டு வெள்ளாடுகள், கன்னி, சேலம் கறுப்பு, செம்பொறை ஆடுகளை வளர்க்கலாம். அதுவே இன்று நல்ல விலைக்குப் போகிறது” என்று ஆலோசனை வழங்கினார்.

தொடர்புக்கு, சௌந்தரராஜன், செல்போன் 95005 63853.

1 கிடாய் 30 ஆடுகள்!

“ஒரு ஆடு குட்டி போட்ட 15 நாள்கள்ல சினைக்கு வந்திடும். அதனால, ஆடுகள்ல எப்போதும் ஒரு கிடாய் இருப்பது அவசியம். அப்பப்ப ஆடுகள் சினைக்குத் திரும்பும்போது கிடாய்கள் மூலமா சினையாயிடும். நாம கண்காணித்துச் சினைக்கு விட வேண்டிய அவசியம் இல்லை. எங்கிட்ட இருக்கிற 30 ஆடுகளுக்கும் ஒரு கிடாய்தான் இருக்கு. சரியா அந்தந்த நேரத்துல சினையாயிடும். கிடாய்க்குத் தயார் பண்றதுக்கு 2 வருஷம் ஆகியிருக்கணும்” என்கிறார் கிருஷ்ணன்.

பிச்சி நோய்

“கோடைக்காலம் முடிஞ்சு மழை பெய்யும்போது புது இலை, தழைகள்ல புழுக்கள் உட்காரும். ஆடு மேயும்போது அது தெரியாம மேய்ஞ்சிடும். அது வயித்துக்குள் போய் ஆடுகளுக்கு நோய் உண்டு பண்ணிடுது. இது வந்தா உயிரிழப்புகூட ஏற்படுத்திடும். இதுக்கு உரிய மருத்துவத்தைப் பார்க்கணும்” என்கிறார் கிருஷ்ணன்

நோய்களும் தீர்வுகளும்!

வெள்ளாடுகளுக்கு வரும் முக்கிய நோய்களுக்கான, இயற்கை முறை வைத்தியம் பற்றித் தஞ்சாவூரைச் சேர்ந்த மரபுசார் கால்நடை மருத்துவர் புண்ணியமூர்த்திச் சொன்ன விஷயங்கள் இங்கே...

புண்ணியமூர்த்தி
புண்ணியமூர்த்தி

குடற்புழு நீக்கம்

2 அங்குல நீளச் சோற்றுக் கற்றாழையில் முள்ளை நீக்கி, சிறுசிறு துண்டுகளாக நறுக்கி, அப்படியே சாப்பிடக் கொடுக்க வேண்டும். ஆட்டுக் குட்டிகளுக்கு ஓர் அங்குலம் போதுமானது. மூன்று மாதங்களுக்கு ஒரு முறை தொடர்ந்து கொடுக்க வேண்டும்.

பேன், உண்ணி நீங்க

50 கிராம் வசம்பைத் தண்ணீரில் 8 மணிநேரம் ஊற வைத்து நசுக்கி, அதோடு நான்கு ஓமவள்ளி இலை, தலா ஒரு கைப்பிடி தும்பை, வேப்பிலை ஆகியவற்றைச் சேர்த்து நன்றாக அரைத்து, ஆட்டின் மேல் பூசி நன்கு காயவிட வேண்டும். பிறகு, தேங்காய் நாரால் பிரஷ் செய்து கழுவி விட வேண்டும். மழைக்காலம், ஈரப்பதமான சூழல்களில் இதைத் தவிர்க்க வேண்டும். தேவைப்பட்டால் மட்டுமே இதைப் பயன்படுத்த வேண்டும். இந்த அளவு ஓர் ஆட்டுக்கானது.

வயிறு உப்புசம்

வெற்றிலை-3, தரமான மிளகு-10, பெருங்காயம்-5 கிராம், இஞ்சி-50 கிராம், சீரகம் அரை ஸ்பூன் ஆகியவற்றை நன்றாக அரைத்து, நாட்டுச் சர்க்கரை-50 கிராம் சேர்த்துப் பிசைந்து சிறு உருண்டைகளாகப் பிடித்து, இரண்டு வேளை சாப்பிடக் கொடுக்க வேண்டும். இது ஓர் ஆட்டுக்கான அளவு.

கோமாரி நோய்

தலா ஒரு ஸ்பூன் மிளகு, சீரகம், வெந்தயம் ஆகியவற்றைத் தண்ணீரில் ஊற வைத்து, அதோடு ஒரு ஸ்பூன் மஞ்சள்தூள், ஒரு பூண்டு சேர்த்து அரைக்க வேண்டும். அரை மூடித் தேங்காயைத் தனியாகத் துருவி அரைத்த கலவையோடு சேர்த்து, 50 கிராம் நாட்டுச் சர்க்கரையைச் சேர்த்துச் சாப்பிடக் கொடுக்க வேண்டும். இது 5 ஆடுகளுக்கான அளவு. நோய் வராமல் தடுக்க ஒரு முறை கொடுத்தால் போதுமானது. நோய் வந்துவிட்டால் தொடர்ந்து 5 நாள்களுக்குக் கொடுக்க வேண்டும்.

சளித்தொல்லை

துளசி, முருங்கை இலை தலா ஒரு கைப்பிடி; ஆடாதொடா, தூதுவேளை தலா ஒரு இலை; மஞ்சள், மிளகு, சீரகம் தலா ஒரு ஸ்பூன் ஆகியவற்றை அரைத்து, அதோடு 50 கிராம் நாட்டுச் சர்க்கரை சேர்த்துச் சாப்பிட வைக்க வேண்டும். ஒரு நாளுக்கு ஒரு வேளையென இரண்டு நாள்களுக்குக் கொடுக்க வேண்டும். இந்த அளவு 5 ஆடுகளுக்கானது.

தொடர்புக்கு, கால்நடை மருத்துவர் புண்ணியமூர்த்தி, செல்போன்: 98424 55833.