Published:Updated:

கண்டுபிடிப்பு: ‘20 ஆள்கள் வேலையை ஒரே ஆள் செய்யலாம்!’ பழைய ஸ்கூட்டர் மினி டிராக்டராக மாறியது!

தான் உருவாக்கிய களைவெட்டும் கருவியுடன் நம்பிராஜன்
பிரீமியம் ஸ்டோரி
News
தான் உருவாக்கிய களைவெட்டும் கருவியுடன் நம்பிராஜன்

இப்பணிகளை எளிதாகக் குறைந்த நேரத்தில் செய்து முடித்துவிடலாம்.

கொரோனா ஊரடங்கால் விவசாயப் பணிகளுக்குத் தேவையான ஆள்கள் கிடைக்கவில்லை. இதனால் மனம் தளராமல் பழைய மோட்டார் பாகங்களைக் கொண்டு ஒரு மினி டிராக்டரை உருவாக்கியிருக்கிறார் விவசாயி நம்பிராஜன். அவரது புதிய கண்டுபிடிப்பு விவசாயிகள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோயிலை அடுத்த கீழையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் நம்பிராஜன். ஏழாம் வகுப்புவரை மட்டுமே படித்த டூ வீலர் மெக்கானிக். கடந்த 30 ஆண்டு காலமாக இத்தொழிலைச் செய்து வருகிறார். இவர் குடும்பத்திற்குச் சொந்தமாக 5 ஏக்கர் நிலம் இருக்கிறது. இதில் ஒரு ஏக்கர் நிலத்தில் மரவள்ளிக்கிழங்குப் பயிரிட்டுள்ளார். 2 அடி இடைவெளியில் உள்ள செடிகளுக்குக் களை வெட்டவும், மண் அணைக்கவும் கூலி ஆள்கள் தேவைப்படுகிறார்கள். கொரோனா ஊரடங்கால் போதுமான ஆள்கள் கிடைக்கவில்லை. இந்த இக்கட்டான சூழல் இவரை யோசிக்க வைத்துள்ளது. இனி, ஆள்களை நம்பி பயனில்லை. அதற்குப் பதிலாக ‘இந்த வேலைகளைச் செய்வதற்கு ஒரு கருவி இருந்தால் நன்றாக இருக்குமே’ என்று யோசித்திருக்கிறார். அதன் விளைவுதான் இவரது கண்டுபிடிப்பு.

தான் உருவாக்கிய களைவெட்டும் கருவியுடன் நம்பிராஜன்
தான் உருவாக்கிய களைவெட்டும் கருவியுடன் நம்பிராஜன்

பழைய ஸ்கூட்டர் பாகங்களைக் கொண்டு ஒரே மாதத்தில், ஒரு மினி டிராக்டரை உருவாக்கி இருக்கிறார். இதன்மூலம் இரண்டடி இடைவெளியில் சாகுபடி செய்யும் அனைத்துப் பயிர்களுக்கும் களை வெட்டவும், மண் அணைக்கவும், உழவு செய்யவும் முடியும். ஒரு ஏக்கர் நிலத்திற்கு இரண்டு முறை களைவெட்டி, ஒரு முறை மண் அணைக்கச் சுமார் ரூ.20,000 செலவாகும். ஆனால் நம்பிராஜன் உருவாக்கியுள்ள மினி டிராக்டருக்கு 9 லிட்டர் பெட்ரோல் போட்டால் போதும். இப்பணிகளை எளிதாகக் குறைந்த நேரத்தில் செய்து முடித்துவிடலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதுபற்றி நம்பிராஜனிடம்பேசினோம். “நான் கரும்பு, பருத்தி, வாழை பயிர் செய்வேன். இப்ப ஒரு ஏக்கர்ல மரவள்ளி இருக்குது. அதுக்கு களை வெட்டணும். கொரோனா ஊரடங்கால, களை வெட்ட ஆள் கிடைக்கலை. ஆளுங்களைத் தேடித்தேடி அலுத்துப்போயிட்டேன். அப்பதான், ஆளுங்களுக்குப் பதிலா ஒரு மிஷின் இருந்தா நல்லாயிருக்குமேனு தோணுச்சு. மிஷினை நாமளே தயாரிக்கலாம்னு முடிவு செஞ்சி இறங்கிட்டேன். என்கிட்ட இருந்த பழைய செட்டாக் (Bajaj chetak 12 v eletronic) இன்ஜின், புல்லட் செயின் பிராக்கெட், வீல் எல்லாத்தையும் வெச்சு, நானே ஒரு கருவியை வடிவமைச்சேன். ஒரு மாசம் அதுலயே கிடந்தேன். ஒருவழியா ஒரு மினி டிராக்டரை உருவாக்கினேன். ரூ.15,000 செலவுல மிஷினை உருவாக்கிட்டேன். இதைத் தயாரிச்சதும் என் வயல்ல ஓட்டிப் பார்த்தேன். அருமையா இருந்துச்சு. ஆள் இல்லாம களை எடுக்காத வயல்ல 4 மணி நேரத்துல நான் ஒருத்தனே களை வெட்டிட்டேன். அது 20 ஆள்கள் பார்க்குற வேலை.

ஒரு ஏக்கர் நிலத்துக்குக் களை வெட்டச் சுமார் 3 லிட்டர் பெட்ரோல் இருந்தாப் போதும். 4 மணி நேரத்துல களை வெட்டிடலாம். இதுலயே மண் அணைக்குற வேலையும் செய்யலாம்; உழவும் செய்யலாம். இப்ப நான் ஆளுங்களை எதிர்பார்க்குறதே இல்லை. செலவு ரொம்ப மிச்சம். 2 அடி இடைவெளியில பார் இருக்க எல்லாப் பயிர்கள்லயும் இதைப் பயன்படுத்தலாம். அதுக்கு மேல இடைவெளி இருக்கப் பயிர்கள்ல ரெண்டு சுற்று ஓட்டிக்கலாம்.

இதைப் பார்த்துட்டு, ‘இது மாதிரி தயார் செஞ்சிக் கொடுங்க. எவ்வளவு பணம் வேணும்னாலும் தர்றோம்’னு பலபேர் கேக்குறாங்க. இதுல லாபம் சம்பாதிக்க நினைக்கலை. எல்லோருக்கும் செஞ்சுத்தர நான் தயாரா இருக்கேன். என்னோட கண்டுபிடிப்பு விவசாயிகளுக்குப் பயன்பட்டா சந்தோசம். இதுல இருக்க ஒரே சிக்கல், பழைய செட்டாக் ஸ்கூட்டர் இன்ஜின்லதான் இதைச் செய்ய முடியும். அது 150 சிசி பவர் உள்ளது. சூடாகாம இருக்க ஃபேன் வசதியும் இருக்கும். இந்த மிஷினைப் புஞ்சை நிலத்தில மட்டும்தான் பயன்படுத்த முடியும். இதேபோல மிஷின் வேணும்னு நினைக்கிறவங்க, பழைய செட்டாக் ஸ்கூட்டரோட வரணும். அது ரிப்பேரா இருந்தாலும் பரவாயில்லை. அதைச் சரி பண்ணிக்கலாம். அரசாங்கம் உதவி செஞ்சா, இதை எல்லா விவசாயிகளும் பயனடையுற வகையில் தயார் பண்ணிக்கொடுக்கத் தயாரா இருக்கேன்” என்றார்.

தொடர்புக்கு, நம்பிராஜன்,

செல்போன்: 94435 73989