Published:Updated:

அரவை பருவம் முடிவதற்குள் நிலுவைத் தொகையை வழங்க கரும்பு விவசாயிகள் வேண்டுகோள்!

Vikatan Correspondent
அரவை பருவம் முடிவதற்குள் நிலுவைத் தொகையை வழங்க கரும்பு விவசாயிகள் வேண்டுகோள்!
அரவை பருவம் முடிவதற்குள் நிலுவைத் தொகையை வழங்க கரும்பு விவசாயிகள் வேண்டுகோள்!

சென்னை: கரும்பு அரவை பருவம் முடிவதற்குள் நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் என கரும்பு விவசாயிகள் முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

விவசாயிகளின் போராட்டம் ஓயவே ஓயாது போலிருக்கிறது. அதுவும் கரும்பு விவசாயிகளின் நிலை அரசிடமும், ஆலைகளிடமும் சிக்கி பரிதவித்து வருகிறது. இருப்பினும் போராட்டத்தை விடுவதாக இல்லை என்று விவசாய சங்கங்களும், விவசாயிகளும் போராடிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

அரவை பருவம் முடிவதற்குள் நிலுவைத் தொகையை வழங்க கரும்பு விவசாயிகள் வேண்டுகோள்!

அதன் ஒருபகுதியாக இந்திய விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் சென்னை, சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே இன்று (18ஆம் தேதி) நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழகம் முழுவதுமுள்ள தனியார் மற்றும் கூட்டுறவு சர்க்கரை ஆலைகளின் விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள், விவசாயிகள் என சுமார் ஆயிரம் பேர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் பேசிய இந்திய விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு மாநில பொதுச்செயலாளர் விருத்தகிரி, "மாநில அரசின் பரிந்துரை விலையை சரிவர கொடுக்காமல் தனியார் சர்க்கரை ஆலைகள் இழுத்தடித்து வருகின்றன. ஒரு டன் கரும்புக்கு 2,550 ரூபாய் கொள்முதல் விலையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் சில தனியார் ஆலைகள் 2,100, 2,250 ரூபாய் வரையில் மட்டுமே வழங்கி வருகிறது. இப்படி கொடுக்காமல் உள்ள நிலுவைத் தொகை மட்டுமே 500 கோடி ரூபாயை எட்டும்.

அரவை பருவம் முடிவதற்குள் நிலுவைத் தொகையை வழங்க கரும்பு விவசாயிகள் வேண்டுகோள்!

பார்கவா கமிஷனின் பரிந்துரைப்படி லாபத்தில் 50% கொடுக்க வேண்டும் என்ற விதிமுறை இருந்தது. கடந்த ஆட்சியில் மத்திய வேளாண்துறை அமைச்சர் சரத்பவார் கரும்பு கட்டுப்பாட்டுச் சட்டம் பிரிவு 5ஏ-யின்படி இந்த விதிமுறையை நீக்கிவிட்டார். 2004-05 முதல் 2008-09 பருவம் வரை இந்தச் சட்டம் அமலில் இருந்தபோது, கொடுக்க வேண்டிய நிலுவைத் தொகையை வழங்காமல் ஆலைகள் இழுத்தடித்து வருகின்றன. குஜராத், மேற்கு கர்நாடகாவில் வயல் விலையாக ஒரு டன்னுக்கு 3 ஆயிரம் ரூபாயை வழங்கி வருகின்றனர். அதேபோன்று தமிழ்நாட்டிலும் வயல் விலையாக ஒரு டன் கரும்புக்கு 3,000 ரூபாயை வழங்க வேண்டும். எதற்கெடுத்தாலும் குஜராத்தை முன்மாதிரியாக சொல்லும் முதல்வர், இந்த விஷயத்தில் கவனம் செலுத்தாமல் இருப்பது ஏன்?

அரவை பருவம் முடிவதற்குள் நிலுவைத் தொகையை வழங்க கரும்பு விவசாயிகள் வேண்டுகோள்!

தேசிய வேளாண் ஆணையம் அமைத்த எம்.எஸ்.சுவாமிநாதன் குழுவின் பரிந்துரைப்படி உற்பத்தி செலவுடன் 50% அதாவது, உற்பத்தி செலவில் பாதி தொகையை சேர்த்து வழங்க வேண்டும். விவசாயக் கடன்களுக்காக நகைகளை ஏலம் விடுதல், டிராக்டர்களை ஜப்தி செய்யும் நடவடிக்கைகளை ரத்து செய்ய வேண்டும். தற்போது ஆலைகளில் ஒரு நாளைக்கு 2,500 மெட்ரிக் டன் கரும்பு அரவை செய்யப்படுகிறது. எஸ்.கே.துதேஜா குழுவின் பரிந்துரைப்படி 5,000 மெட்ரிக் டன்னாக அரவைத்திறனை உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

மேலும், "கோரிக்கைகள் குறித்து அமைச்சர்களிடம் பேசினால் ‘முதல்வரிடம் பேசுங்கள்; கார்டனுக்கு செல்லுங்கள்’ என்கிறார்கள். பிரதமரை கூட சந்தித்துவிடலாம். ஆனால் தமிழ்நாடு முதலமைச்சரை சந்திப்பது பெரிய விஷயமாக இருக்கிறது. செப்டம்பர் 30ஆம் தேதியோடு 2013-14க்கான கரும்பு பருவம் முடிகிறது. அக்டோபர் 1ஆம் தேதி முதல் 2014-15க்கான கரும்பு பருவம் தொடங்குகிறது. அதற்குள் எங்கள் கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்க முதல்வர் ஆவண செய்ய வேண்டும்" என்றும் அவர் வலியுறுத்தினார்.

இந்திய விவசாய சங்கங்களின் கூட்டமைப்பின் மாநிலத் தலைவர் புத்தி சிகாமணி, செயல் தலைவர் ராஜ்குமார், கோத்தாரி சர்க்கரை ஆலை விவசாய சங்கத் தலைவர் ராஜேந்திரன் உடனிருந்தனர்.

த. ஜெயகுமார்

படங்கள்: கார்முகில் வண்ணன்