வெளியிடப்பட்ட நேரம்: 16:31 (24/06/2015)

கடைசி தொடர்பு:15:03 (25/06/2015)

மண்பானை ருசியும்...கருவாட்டு குழம்பும்...!

மிழர்களின் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு முக்கிய ஆதாரம் பாரம்பரிய உணவு முறை. இந்த பாரம்பரிய உணவு முறையில் பிரதான இடம் வகித்தது மண்பானை சமையல்தான்.

தாகம் தீர தண்ணீர் குடிப்பதிலிருந்து, சமைத்து முடிப்பது வரை வீடுகளில் சமையல் அடுக்குகளை நிரப்பியவை மண் பானைகள்தான். ஆனால் இன்று மண்பானைகள் அருங்காட்சியகங்களை அடையாளப்படுத்தும் ஒரு பொருளாகிவிட்டது வேதனைக்குரிய விஷயம்.

மண்பானைகளின் இடத்தை எவர் சில்வர், அலுமினியம், நான் ஸ்டிக் பாத்திரங்கள் இடம் பிடித்துவிட்டன. இந்த நிலையில் அக்காலத்தில் தம் வீட்டில் சமையலுக்காக பயன்படுத்திய மண் பாத்திரங்களை அதன் மகத்துவம் உணர்ந்து இன்றும் பொக்கிஷமாக பாதுகாத்து வருகிறார் ஓய்வுபெற்ற ஆசிரியர் ஒருவர். அவர் போத்திராஜ்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகிலுள்ள ஜமீன் தேவர்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர். தான் பொக்கிஷமாக பாதுகாத்து வரும் மண்பானைகளை ஒவ்வொன்றாக காட்டியவாறே நம்மிடம் பேசினார் போத்திராஜ்.

"எனக்கு 79 வயசாகுது. இந்தப் பானைகளெல்லாம் நான் பிறக்குறதுக்கு முன்பே வாங்குனது. பிள்ளை பருவத்திலிருந்தே எங்க வீட்ல மண்பானை சமையல்தான். அப்போ சாப்பிட்ட ருசி இன்னும் என் நினைவை விட்டுப்போகலை. கடந்த 20 வருடங்கள்ல மண்பானையில் சமைக்கிற பழக்கம் குறைஞ்சு போச்சு. 1960களில் என் பள்ளிப்பிராயத்திலிருந்து வீட்டுல தினமும் வரகரிசி சோறுதான் வடிப்பாங்க. பொங்கல், தீபாவளி, ஊர்த்திருவிழா, விசேஷங்கள்ல மட்டும்தான் நெல்லரிசி சோறு போடுவாங்க. மத்த நேரமெல்லாம் வரகரிசி சோறுதான். சாணி மொழுகி வெச்ச அடுப்புல, வேப்பமர விறகால தீ பத்த வச்சி, மண் பானையில சமைச்சு சாப்பிட்டாலே தனி ருசிதான். இந்த கிராமத்துல எங்க வீடுதான் பெரிய வீடு. பக்கத்து வீடுகள்லயோ, ஊர்ல மத்த வீடுகள்ல ஏதாவது விஷேசம்னா, எங்க வீட்டுலதான் இந்த பெரிய மண்பானைகளை சமைக்க வாங்கிட்டுப் போவாங்க.

சோறு தவிர கம்புத்தோசை, சோளத்தோசையெல்லாம் சமைப்பாங்க. விளக்கெண்ணெய்ல தோசை சுட்டு, நல்லெண்ணெய்ல எள்ளுப்பொடியைக் குழப்பி தோசைக்குச் தொட்டுச் சாப்பிட்டா இரவு வரைக்கும் பசி எடுக்காது. சோறு வடிக்க, குழம்பு வைக்க, கூட்டு வைக்க, ரசம் வைக்க, கருவாட்டுக் குழம்பு, நாட்டுக்கோழி குழம்பு, ஆட்டுக்கறி உப்புக்கண்டம்னு சைவத்துக்குத் தனியாவும், கவுச்சைக்குத் தனியாவும் (அசைவம்) மண்பாத்திரங்கள் வெச்சிருப்போம்.

சந்தையில கம்பு, வரகு, சோளம், குதிரைவாலின்னு சிறுதானியங்களை எடைக்கு கொடுத்துதான் இந்த மண்பானைகளை வாங்கினோம். மண் சட்டியில வைக்குற கருவாட்டுக்கொழம்ப சுண்டவச்சு.. சுண்டவச்சு.. ஆறுநாள் வரைக்கும் சாப்பிடுவோம். ஆறாவது நாள் குழம்புச் சட்டிக்குள்ள நெல்லுச்சோறைப் போட்டு விரவி, அம்மா உருண்டையா பிடிச்சு  தர்றதுல யாருக்கு முதல் உருண்டை..ங்குறதுல எங்களுக்குள்ள சண்டையே வரும். அதையெல்லாம் இப்போ நினைச்சா எல்லாமே கனவு மாதிரி இருக்கு. திரும்ப அப்படி ஒரு காலம் வராதா னு மனசை ஏங்க வைக்குது " என்று ஏக்கத்துடன் நினைவுகளை பகிர்ந்து கொண்டார்.

பேச்சினிடையே பானைகள் சிலவற்றை காட்டி விளக்கம் சொல்லிவிட்டு, பேச்சை தொடர்கிறார் போத்திராஜ்.

"மண் பானை சமையலை சிலாகிக்கிற பலருக்கும் எதனால் அதற்கு சுவை கூடக்கிடைக்கிறது என்பது தெரியாது. சமைக்கிற உணவு மேல அடுப்புத் தீ (வெப்பமானது) சீராகவும், மெதுவாகவும் பரவுறதுனால அடி பிடிக்காது. மண்பானையிலுள்ள நுண்ணிய துளைகள் மூலமா காற்றும், நீராவியும் ஒரே சீராக ஊடுருவும். பானையில சமைக்கப்படுற உணவுகள் ஆவியில் வேக வைத்த தன்மையிலேயே இருக்கும்.

இதனால உணவிலுள்ள சத்துக்கள் பாதுகாக்கப்பட்டு, சீக்கிரமே செரிமானமாகிவிடும். உணவிலுள்ள அமிலத்தன்மையை சமப்படுத்தும் தன்மை மண்பானைக்கு இருக்குது. மண்பானையில சமைச்சா அதிக எண்ணெய் செலவாகாது. இது எதுவும் இன்றைக்கு நாம பயன்படுத்துற பாத்திரங்கள்ல கிடையாது.

மண் பானை சமையலைச் சாப்பிட்டுத்தான் அந்த காலத்துல ரொம்ப ஆரோக்கியமா நோய், நொடி இல்லாம இருந்தாங்க. அந்தக்காலத்தில சர்வசாதாரணமா 5, 10 குழந்தைகளை சுலபமா பெத்துக்கிட்ட சூட்சுமம் இதுதான். இப்போவும் 'மண்பானை சமையல்' , 'அம்மியில் அரைச்ச மசாலா குழம்பு' ன்னு ஹோட்டல்கள்ல போர்டு வெச்சிருக்காங்க. என்னதான் இருந்தாலும் அந்தக் காலத்து மண்பானை சமையலுக்கு ஈடாகாது. இந்த வயசுலயும் வேகமா நடக்குறேன், கண்ணாடி இல்லாம தூரத்துல வர்ற ஆளை சரியா கண்டுபிடிச்சுடுறேன். இதற்கெல்லாம் அந்தக் காலத்து மண்பானை சமையலும், சத்தான சாப்பாடும்தான் காரணம்.

சில்வர், குக்கர்னு என்னென்னமோ வந்துடுச்சு. இப்போ என்னால மண்பானை சமையல் சாப்பிட முடியலை. இருந்தாலும் பாரம்பரியமா நாம பயன்படுத்துன மண்பானைகளை இன்னமும் பொக்கிஷமா பரண் மேல வச்சு பாதுகாத்துட்டு வர்றேன்" என்று பேசியவரிடம், பரண்மேல் இருந்த மீதமிருந்த பானைகளையும் இறக்கிவைக்கச் சொல்லி புகைப்படம் எடுத்துக் கொண்டு கிளம்பினோம்.

உறுதியான ஒரு கைக் குலுக்கல் மூலம் மண்பானையின் மகத்துவத்தை புரியவைத்து சினேகமாக நம்மை வழியனுப்பி வைக்கிறார் 79 வயது இளைஞர் போத்திராஜ்.

மீண்டும் ஒரு மண்பானை புரட்சி வரவேண்டும், அடுத்த தலைமுறையின் ஆரோக்கியத்தை உறுதிப்படுத்த!

-இ. கார்த்திகேயன்
படங்கள்: ஈ.ஜெ.நந்தகுமார்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்