Published:Updated:

ஏக்கருக்கு ரூ.5 லட்சம்: இயற்கை முறையில் கொடித் தக்காளி சாகுபடி செய்வது எப்படி?

தக்காளி
தக்காளி

இதுவரைக்கும் 50 பறிப்புகள் மூலமா 39,000 கிலோ மகசூல் கிடைச்சிருக்கு. இதுல 10,200 கிலோ ரூ.25-க்கும் (2,55,000), 9,500 கிலோ ரூ.19-க்கும் (1,80,500), 11,150 கிலோ ரூ.18-க்கும்(2,00,700), 8,150 கிலோ ரூ.15-க்கும் (1,22,250) விற்பனையாச்சு.

கொடித் தக்காளி மூலமாக ஏக்கருக்கு 39 டன் மகசூல் எடுத்து அசத்தியிருக்கிறார், திருநெல்வேலி மாவட்டம், மானூரைச் சேர்ந்த இயற்கை விவசாயி சுப்பிரமணியன். "எனக்குச் சொந்த ஊர் திருநெல்வேலிதான். பி.ஏ. பொருளாதாரம் படிச்சு முடிச்சுட்டு ஏஜென்ஸி நடத்திட்டு இருந்தேன். நல்லாப் போய்க்கிட்டிருந்த தொழில் திடீர்னு நஷ்டம் ஆகிடுச்சு. வேற ஏதாவது தொழில் செய்யலாம்னு நண்பர்கள்கிட்ட ஆலோசனை கேட்டேன். 'நிலத்தை வாங்கி விவசாயம் செய்யலாம். இனி வருங்காலம் விவசாயிகளுக்கான காலம். அதிலும் இயற்கை விவசாயத்துக்கு பொற்காலம்'னு சொன்னாங்க.

போன வருஷம், மானூர்ல கொடிபோலப் படரும் தக்காளியை இயற்கை முறையில் சாகுபடி செய்யற இயற்கை விவசாயி பாஸ்கரைச் சந்திச்சேன். கொத்துக் கொத்தா காய்கள் திரட்சியாக இருந்துச்சு. 'ரேபிட் குரோ'னு அந்த ரகத்தின் பேரைச் சொன்னாரு. `இந்தப் பழத்தை 20 நாள் வரைக்கும் இருப்புவைக்கலாம். நல்ல மகசூல் கிடைக்குது. இதிலிருந்து விதையெடுத்து விதைக்கவும் செய்யலாம்'னு சொன்னார். தொடர்ந்து என்னோட குத்தகை நிலத்துல சோதனை முயற்சியா ஒரு ஏக்கர்ல தக்காளிச் சாகுபடி செஞ்சேன். கிட்டத்தட்ட அறுவடை முடியும் நிலையில இருக்கு.

70-ம் நாள் 100 கிலோ மகசூல் கிடைக்கும். அதிலிருந்து படிப்படியாக அதிகரிச்சு 100-ம் நாளுக்கு மேல ஒரு பறிப்புக்கு 500 கிலோவுல இருந்து 1,000 கிலோ வரைக்கும்கூடக் கிடைக்கும். ஒருநாள்விட்டு ஒருநாள் அறுவடை செய்வோம். இதுவரைக்கும் 50 பறிப்புகள் மூலமா 39,000 கிலோ மகசூல் கிடைச்சிருக்கு. இதுல 10,200 கிலோ ரூ.25-க்கும் (2,55,000), 9,500 கிலோ ரூ.19-க்கும் (1,80,500), 11,150 கிலோ ரூ.18-க்கும்(2,00,700), 8,150 கிலோ ரூ.15-க்கும் (1,22,250) விற்பனையாச்சு. இதன் மூலம் மொத்தம் ரூ.7,58,450 வருமானமா கிடைச்சிருக்கு. இதுல ரூ.2,14,000 செலவு போக மீதமிருக்கும் ரூ.5,44,450 லாபம். இன்னும் 300 கிலோ கிடைக்க வாய்ப்பிருக்கு" என்றார். ஒரு ஏக்கர் பரப்பில் தக்காளிச் சாகுபடி செய்வது குறித்து சுப்பிரமணியன் கூறிய தகவல்கள் பாடமாக இங்கே: விரிவாக படிக்க க்ளிக் செய்க... http://bit.ly/2Q8vOnB

ஏக்கருக்கு ரூ.5 லட்சம்: இயற்கை முறையில் கொடித் தக்காளி சாகுபடி செய்வது எப்படி?

தக்காளிச் சாகுபடியில் கோடைக்காலப் பருவத்துக்கு ஆடி, ஆவணி, புரட்டாசிப் பட்டங்களும், குளிர்காலப் பருவத்துக்கு கார்த்திகை, மார்கழி, தைப் பட்டங்களும் ஏற்றவை. செம்மண், செம்மண் சரளை, வண்டல், வண்டல் கலந்த மண் ஏற்றவை. தேர்வு செய்யப்பட்ட பட்டத்துக்கு ஒரு மாதத்துக்கு முன்னரே உழவுப் பணிகளைத் தொடங்கிவிட வேண்டும். 10 நாள்கள் இடைவெளியில் மூன்று முறை உழவு செய்ய வேண்டும். மூன்றாவது உழவுக்கு முன்னதாக நான்கு டன் தொழுவுரக் கலவையைக் கொட்டி உழவு செய்ய வேண்டும்.

பிறகு, ஓரடி உயரம், மூன்றடி அகலத்தில் பாத்திகள் எடுக்க வேண்டும். ஒரு பாத்திக்கும் அடுத்த பாத்திக்குமான இடைவெளி ஐந்தடி இருக்க வேண்டும். பாத்திகள் அமைக்கும்போதே சொட்டுநீர்ப் பாசனக் குழாய்கள் அமைக்க வேண்டும். நாற்று நடவு செய்யும் நாளன்று காலையில் தண்ணீர் பாய்ச்சிவிட்டு, மாலை நேரத்தில் (3 மணி முதல் 6 மணிக்குள்) நடவு செய்யலாம். 22 முதல் 25 நாள் வயதுள்ள நாற்றுகள் நடவுக்கு ஏற்றவை. விதை என்றால், ஒரு ஏக்கருக்கு 8,000 விதைகள் தேவைப்படும்.(நர்சரியில் பக்குவமாக 20 நாள்கள் வரை வளர்க்க வேண்டும்) நாற்றுகள் என்றால் 7,000 நாற்றுகள் தேவை.

நடவுக்கு முன்னதாக நாற்றுகளின் வேர்கள் மூழ்கும்படி பஞ்சகவ்யாவில் விதைநேர்த்தி செய்து 15 நிமிடங்கள் வரை உலரவைத்த பிறகு, செடிக்குச் செடி இரண்டடி இடைவெளியில் பாத்திகளில் `ஜிக்ஜாக்' முறையில் நடவு செய்ய வேண்டும். தக்காளி நாற்று நடுவதற்கு 10 நாள்களுக்கு முன்னரே வரப்பு ஓரத்தில் அகத்தி, ஆமணக்கு, செண்டுமல்லி விதைகளை மேலே உள்ள வரிசைப்படி தூவிவிட வேண்டும். இவற்றின் மூலம் பூச்சிகளைக் கவர்ந்து, கட்டுப்படுத்த முடியும். 20 மற்றும் 40-ம் நாள் களை எடுக்க வேண்டும். 50-ம் நாளுக்கு மேல் செடிகள் வளர்ந்து நிழல்படுவதால் களைகள் முளைக்க வாய்ப்பில்லை. 25-ம் நாளில் செடியிலிருந்து அரை அடி தூரத்தில் 100 கிராம் என்ற கணக்கில் ஒவ்வொரு செடிக்கும் செறிவூட்டப்பட்ட சாணக்கலவை வைக்க வேண்டும்.

ஏக்கருக்கு ரூ.5 லட்சம்: இயற்கை முறையில் கொடித் தக்காளி சாகுபடி செய்வது எப்படி?

30-ம் நாளிலிருந்து 10 நாள்கள் இடைவெளியில் 10 லிட்டர் தண்ணீரில் 300 மி.லி பஞ்சகவ்யா கலந்து கைத்தெளிப்பானால் தெளித்துவர வேண்டும். 40-ம் நாளுக்கு மேல் பூப்பூக்கும். அந்த நேரத்தில் அசுவினி, அந்துப்பூச்சிகளின் தாக்குதல் இருக்கும். தாய் அந்துப்பூச்சி இலையின் பின்புறம் முட்டையிட்டு, குஞ்சுபொரித்துவிட்டு இலையின் பச்சையத்தை உறிஞ்சிவிடும். இலையின் மீது வெண்மை நிறக் கோடுகள் தென்படுவதே இதன் அறிகுறி. இதைத் தவிர்க்க 35-ம் நாளுக்கு மேல் 10 லிட்டர் தண்ணீரில் 250 மி.லி மூலிகைப் பூச்சிவிரட்டி கலந்து 10 நாள்களுக்கு ஒரு முறை கைத்தெளிப்பானால் தெளிக்க வேண்டும்.

பூப்பூக்க ஆரம்பித்த நேரத்தில் அதிகமாகப் பூ எடுக்கவும், பூக்கள் உதிராமலிருக்கவும் ஒரு ஏக்கருக்கு இரண்டு லிட்டர் புளித்தமோரில் ஐந்து தேங்காய்களிலிருந்து எடுக்கப்பட்ட பால் கலந்து, அதிலிருந்து 100 மி.லி எடுத்து 10 லிட்டர் தண்ணீரில் கலந்து கைத்தெளிப்பானால் ஐந்து நாள்களுக்கு ஒரு முறை என மூன்று முறை தெளிக்க வேண்டும். 50-ம் நாளுக்கு மேல் பிஞ்சுக் காய்கள் தென்படும். 70-ம் நாளிலிருந்து 120 நாள்கள் வரை தொடர்ந்து பறிக்கலாம்.

100-ம் நாளுக்கு மேல், செடியில் இலை உதிரத் தொடங்கும். இலை உதிர்வதைத் தடுக்க 90-ம் நாளுக்கு மேல், ஒன்பது லிட்டர் தண்ணீரில், 300 கிராம் வண்டல் மண் கரைத்து, அதனுடன் ஒரு லிட்டர் இளநீர் கலந்துகொள்ள வேண்டும். அந்தக் கரைசலிலிருந்து ஒரு லிட்டர் எடுத்து 10 லிட்டர் தண்ணீரில் கலந்து 10 நாள்களுக்கு ஒரு முறை என மூன்று முறை கைத்தெளிப்பானால் தெளிக்க வேண்டும்."

- இயற்கை விவசாயி சுப்பிரமணியன் பகிர்ந்த வெற்றி அனுபவத்தை பசுமை விகடன் இதழில் முழுமையாக வாசிக்க > ஏக்கருக்கு ரூ. 5,00,000 கொட்டிக்கொடுக்கும் கொடித் தக்காளி! https://www.vikatan.com/news/agriculture/this-variety-of-tomato-yields-a-handful-benefits

* சிறப்புச் சலுகை > விகடன் இதழ்கள் அனைத்தையும் டிஜிட்டலில் சுடச்சுட வாசித்து பயன்பெறுவதுடன், 2006 முதல் இப்போது வரை வெளிவந்த லட்சக்கணக்கான கட்டுரைகளையும் வாசிக்கலாம். ஒரேநேரத்தில் 5 டிவைஸ் வரை லாகின் செய்யும் வசதியும் உண்டு. உங்களுக்காக இதோ ஒரு சிறப்புச் சலுகை. ரூ.1499 மதிப்பிலான 1 வருட டிஜிட்டல் சந்தாவை ரூ.999-க்குப் பெற இங்கே க்ளிக் செய்க > http://bit.ly/2sUCtJ9

வீடியோ வடிவில்...

அடுத்த கட்டுரைக்கு