Published:Updated:

5 மரங்கள்... ரூ.2 லட்சம்! கல்யாண செலவுக்கு உதவிய 'மரம்' தங்கசாமியின் குறுங்காடு!

மறுபயணம்
பிரீமியம் ஸ்டோரி
News
மறுபயணம்

மறுபயணம்

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங் கலம் அருகே சேந்தன்குடி என்ற குக்கிராமத்தில் பிறந்தவர் ‘மரம்’ தங்கசாமி. தமிழகத்தின் வறட்சி பகுதிகளிலும் லட்சக்கணக்கான மரங்களைத் துளிர்க்கச் செய்தவர். ‘மரப்பயிரும் பணப்பயிரே’ என்று, வறுமையில் வாடிய பல விவசாயிகளை மரங்களை நட வைத்து, அவர்களின் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தியவர். நம்மாழ்வாரின் நெருங்கிய நண்பர்.

மரக்கன்றுகள் நடவு செய்ய வலியுறுத்தி நடைப்பயணம், சைக்கிள் பேரணி, பள்ளி, கல்லூரிகளில் மர வளர்ப்பு பிரசாரம் என மரங்களுக்காகவே வாழ்ந்தவர் ‘மரம்’ தங்கசாமி. மரங்களையே சுவாசித்த தங்கசாமி, 2018 செப்டம்பர் 16-ம் தேதி இயற்கையோடு கலந்து விட்டார். அவர் உருவாக்கிய மரங்கள் தற்போது எப்படி இருக்கின்றன என்று பார்ப்பதற்காக அவரது தோட்டத்துக்குப் பயணமானோம்.

குறுங்காடு
குறுங்காடு

கற்பகச் சோலை

சேந்தன்குடியில் உள்ள தனது வீட்டைச் சுற்றி 8 ஏக்கர் நிலத்தில் இவர் உருவாக்கிய ‘கற்பகச் சோலை’ என்ற குறுங்காடு இன்றளவும் மரங்களை நேசிக்கும் மனிதர்களைச் சேந்தன்குடி நோக்கி ஈர்த்து வருகிறது. 2018-ம் ஆண்டுத் தமிழகத்தையே உலுக்கிய கஜா புயல், தங்கசாமியின் குறுங்காட்டையும் விட்டுவைக்கவில்லை.

மா, பலா, தேக்கு, சந்தனம், மகோகனி எனத் தங்கசாமி வளர்த்த ஏராளமான மரங்களை வாரிச் சுருட்டிப் போட்டுவிட்டுப் போய்விட்டது கஜா. அப்போது சாய்ந்த தேக்கு, பலா உள்ளிட்ட பல மரங்கள் தற்போது மீண்டும் துளிர்விட்டு முளைக்கத் தொடங்கியிருக்கின்றன. நூற்றுக்கணக்கான மரங்கள் சாய்ந்தாலும், இன்னும் ஆயிரக்கணக்கான மரங்கள் அவரின் நினைவைச் சுமந்து நின்று கொண்டிருந்தன. குறுங்காட்டின் உள்ளே சென்றதும் நம்மை இறுக்கப் பற்றிக் கொள்கிறது ஒருவிதக் குளுமை.

மரம் தங்கசாமி
மரம் தங்கசாமி

குறுங்காடு... நடுவே வீடு

பறவைகளின் எச்சத்தால் உருவான சந்தனமரம், நெட்டுக்குத்தாகப் பருத்திருக்கும் தேக்கு, 4 பேர் சேர்ந்தாலும் கட்டிப்பிடிக்க முடியாத அளவுக்குப் பருத்துச் செழித்து இருக்கும் மா மரங்கள் என ஆயிரக்கணக்கான மரங்கள், நூற்றுக்கணக்கான மூலிகைச் செடி கொடி களுடன் ரம்மியமாகக் காட்சியளித்தது குறுங்காடு. பறவைகளின் ரீங்காரம் ஒலித்துக் கொண்டே இருந்தது. இயற்கைச் சூழல் நிறைந்த குறுங்காடும், அதற்கு நடுவே வீடும், தங்கசாமியின் நினைவுச் சுவடுகளாக இருக்கின்றன. தங்கசாமியின் மகன் தங்க. கண்ணன் நம்மை மகிழ்ச்சியாக வரவேற்றார்.

தங்க.கண்ணன்
தங்க.கண்ணன்

மரக்கன்று நட்டுட்டுதான் தாலி கட்டுவேன்

“1967-ம் வருஷம், அப்பாவுக்குக் கல்யாணம். நல்ல நேரம் நெருங்கிக்கிட்டு இருக்கு. அந்த நேரத்துல, மரக்கன்னு நட்டுட்டுதான் பொண்ணுக்குத் (அம்மாவுக்கு) தாலி கட்டுவேன்’னு சொல்லியிருக்காரு அப்பா. சுத்தி இருந்தவங்க, ‘இப்போ தாலியைக் கட்டுங்க. அப்புறம் எல்லாத்தையும் பார்த்துக் கலாம்’னு சொல்லி அவசரப் படுத்தி யிருக்காங்க. ஆனா, ‘மரக்கன்று நட்டுட்டுதான் தாலி கட்டுவேன்’னு பிடிவாத மாக இருந்தவரு, ஒரு மா மரக்கன்னை நடவு செஞ்ச பிறகுதான் அம்மா கழுத்துல தாலியையே கட்டியிருக்காரு. இதுதான் அந்த மா மரம்” என்று அந்த மாமரத்தை நமக்குக் காட்டி, தங்கசாமியின் நினைவைப் பகிர்ந்துகொண்டார் தங்க.கண்ணன்.

சுமார் 50 வருடங்களுக்கு முன்பு நடவு செய்யப்பட்ட அந்த மா மரத்தின் கிளைகள் கஜா புயலில் சேதமடைந்திருந்தாலும், மரம் பருமனாகவும் செழிப்பாகவும் இருந்தது. மா மரம் அருகிலேயே இருந்த பப்பாளி, அத்திப்பழம் என அங்கிருந்த பழங்களைப் பறித்துக் கொடுத்து நமக்கு விருந்து படைத்த கண்ணன், தொடர்ந்து, குறுங்காட்டுக்குள் அழைத்துச் சென்றார்.

மரம் தங்கசாமி
மரம் தங்கசாமி

‘‘தேக்கு, சந்தனம், வேம்பு, குமிழ், மா, மனோரஞ்சிதம், நாவல், செம்மரம்னு கிட்டத்தட்ட 150 வகையான மரங்கள், 50-க்கும் மேற்பட்ட மூலிகைச் செடிகள் இங்க இருக்கு. இங்க இருக்கப் பல மரங்கள், பறவைகளோட எச்சத்துல தன்னால முளைச்சது. கஜா புயல்ல எக்கச்சக்க மரங்கள் ஒடிஞ்சு விழுந்திடுச்சு. அப்பா மாதிரி இல்லாட்டியும் என்னால முடிஞ்ச அளவுக்கு விழுந்த மரங்களுக்குப் பதிலா அந்த இடத்துல புதுசா மரக்கன்றுகளை நடவு செஞ்சிருக்கேன். கீழே விழுந்த தேக்கு, பலா உட்பட பல மரங்களை அகற்றாம அப்படியே விட்டுட்டேன். அதுல பல மரங்கள் இப்போ துளிர்விட்டு முளைக்க ஆர்ம்பிச்சிருக்கு. ரெண்டு வருஷத்துக்கு முன்ன 1,000 குமிழ் மரங்களை நடவு செஞ்சேன்.

20 வருஷத்துக்கு முன்னால வச்ச சந்தன மரங்கள்ல இருக்க, பழங்களைச் சாப்பிடுற பறவைகள் போட்ட எச்சத்தால, இங்க ஆயிரக்கணக்கான சந்தனமரங்க முளைச் சிருக்கு. அதோட கிராமம் முழுசுமே இப்போ சந்தனமரங்க அதிகமா இருக்கு’’ என்றவர், தனது திருமணத்துக்கு உதவிய மரங்கள் பற்றிச் சொன்னார்.

குறுங்காட்டில் வளர்ந்து நிற்கும் மரங்கள்
குறுங்காட்டில் வளர்ந்து நிற்கும் மரங்கள்

5 தேக்கு மரங்கள்... 2 லட்சம் ரூபாய்

‘2007-ம் வருஷம் எனக்குக் கல்யாணம் நடந்துச்சு. அப்போ எங்க குறுங்காட்டுல இருக்க, 5 தேக்கு மரங்களை வெட்டி வித்தாரு. அதுல கிடைச்ச 2 லட்சம் ரூபாய் பணத்தை வச்சு, கல்யாணத்தை நல்லபடியா நடத்தி முடிச்சாரு. அப்பாவ ஏளனமா பார்த்த ஊர்க்காரங்க எல்லாரும் வாயடைச்சு போயிட்டாங்க. அதற்கப்புறம் எங்கள் பகுதியைச் சேர்ந்த பலரும் அதிக அளவுல அவங்க தோட்டங்கள்ல மரங்களை நடவு பண்ண ஆரம்பிச்சிட்டாங்க. என் கல்யாணத் துல மட்டும் 3,000 மரக்கன்றுகளை விழாவுக்கு வந்தவங்களுக்குக் கொடுத்தோம். அப்பா ஒரு மரத்தை வெட்டினாலும், அந்த இடத்துல 2 மரக்கன்றுகளை நடவு செஞ்சிடுவாரு. அவரோட சேவைக்காக 2008-ம் வருஷம் தமிழக அரசின் சுற்றுச்சூழல்துறையோட ‘அறிஞர் அண்ணா விருது’ அப்பாவுக்குக் கிடைச்சது’’ என்றவர் நிறைவாக,

‘‘ஒவ்வொரு தலைவரோட பிறந்த நாள், நினைவு நாள்கள்லயும் ஒரு மரக்கன்று கட்டாயம் நட்டுவிடுவாரு. அதே கொள்கை யைத்தான் நானும் கடைப்பிடிச்சிக்கிட்டு இருக்கேன். இப்போ என்னோட மகன், மகள் பிறந்த நாளப்ப, மரக்கன்றுகளை வாங்கி, பள்ளி மாணவர்கள், பொதுமக்களுக்கு இலவசமாகக் கொடுத்து நடவு செய்ய வச்சிக்கிட்டு வர்றேன்.

குறுங்காட்டில் வளர்ந்து நிற்கும் மரங்கள்
குறுங்காட்டில் வளர்ந்து நிற்கும் மரங்கள்

மரக்கன்று நடுறது தொடர்பா விழிப்புணர்வையும் ஏற்படுத்திக்கிட்டு இருக்கேன். இப்போ மரம் வளர்ப்பு பத்தி ஓரளவுக்கு மக்கள்கிட்ட விழிப்புணர்வு வந்திருச்சு. ஆனா, விழிப்புணர்வு இல்லாத காலத்துலயே விழிப்புணர்வு உருவாக்கி, அப்பா நட்ட மரங்க, தமிழ்நாடு முழுக்க வானுயர வளர்ந்து நிக்குது.

அப்பாவோட நினைவுகளைத் தாங்கி நிற்குற வைரம் பாய்ஞ்ச சில மரங்களை விலைக்குக் கேட்கிறாங்க. ஆனா, அதை வெட்டி விற்க மனசு வரல. இப்போதைக்கு மரங்களை வெட்ட வேண்டிய அவசியம் வரல. இங்க இருக்க மரங்கள் கோடிக்கணக் கான ரூபாய்க்கு விலைபோகும். என்னோட தலைமுறைக்குத் தேவையான பெரிய சொத்தை (குறுங்காட்டை) விட்டுட்டுப் போயிருக்கார்” எனப் பெருமிதமாகச் சொல்லி முடித்தார் தங்க.கண்ணன்.

குறுங்காட்டில் வளர்ந்து நிற்கும் மரங்கள்
குறுங்காட்டில் வளர்ந்து நிற்கும் மரங்கள்

‘கற்பகச் சோலை’ என்று பெயர் வைத்ததே ஐயாதான்

நம்மாழ்வாருக்கும் தங்கசாமிக்குமான நட்பை பற்றிப் பேசிய தங்க.கண்ணன், ‘‘1980-கள்ல நம்மாழ்வாரும் அப்பாவும் ரொம்பவே நெருக்கமாகியிருக்காங்க. அப்ப எல்லாம் நம்மாழ்வார் எங்க வீட்டுக்கு அடிக்கடி வந்திட்டுப் போவார். அதுக்கப்புறம் ரெண்டு பேரும் சேர்ந்து பல ஊர்கள்ல விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தியிருக்காங்க.

மரம் பத்தின எந்த நிகழ்வா இருந்தாலும், ‘தங்கசாமியைக் கூப்பிடாம நடத்தக் கூடாது’ன்னு சொல்லிடுவாரு. கோயிலுக்கு மாலை போட்டு நடைப்பயணம் போற மாதிரி, மரம் வளர்ப்பு பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துறதுக்காக ஒவ்வொரு வருஷமும் மரங்களுக்கு மாலை போட்டு வீட்டிலிருந்து ரொம்ப தூரம் சைக்கிள் பயணம் போவாரு அப்பா. அந்த விழாவை நம்மாழ்வார்தான் தொடங்கி வைப்பாரு. அப்பாவைத் ‘தங்கம்’னுதான் ஐயா கூப்பிடுவாரு. எங்க வீட்டைச் சுற்றி இருந்த இந்தக் குறுங்காட்டுக்கு ‘கற்பகச் சோலை’ன்னு பெயர் வச்சது நம்மாழ்வார் ஐயாதான்.

தங்க.கண்ணன்
தங்க.கண்ணன்

நம்மாழ்வார் குதிரை வண்டி வச்சிருந்தாரு. ஒடுகம்பட்டியிலிருந்து-கீரனூர் போறதுக்கு அந்த வண்டியைத்தான் பயன்படுத்துவாரு. வீட்டுக்கு வந்தாலே ரெண்டு, மூணு நாள்கள் தங்கிடுவாரு. மாடியில அவருக்குன்னு ஓர் அறை இருக்கு. அதே மாதிரி, எனக்குக் காலாண்டு, அரையாண்டு விடுமுறை விட்டுட்டாலே அவர் வீட்டுக்கு அழைச்சிக்கிட்டுப் போயிடுவாரு. அவர் கடைசியா அறந்தாங்கியில ஒரு நிகழ்ச்சிக்கு வந்திருந்தாரு. அந்த நேரத்துலதான் அப்பாவுக்கும் ‘ஸ்டோக்’ வந்து முடியாம இருந்தாரு. அப்பாவுக்கு ஆங்கில மருந்து கொடுத்துகிட்டு இருந்தோம். நிகழ்ச்சி முடிச்சிட்டு அப்பாவைப் பார்க்க வீட்டுக்கு வந்தவரு, ‘ஏன் ஆங்கில வைத்தியம் பார்க்கிறீங்க’ன்னு எங்களை ரொம்பவே சத்தம் போட்டாரு. அப்புறம் அம்மாகிட்ட ‘உன் கையால ரசம் சாப்பிட்டு ரொம்ப நாளாச்சு, ரசம் வச்சு கொடு’ன்னு கேட்க, அம்மாவும், பொடுதலை எல்லாம் சேர்த்து ரசம் வச்சிக்கொடுத்தாங்க. ரசத்தை விரும்பிச் சாப்பிட்டதோட, தூக்குல எடுத்துக்கிட்டும் போனாரு. அவரை நாங்க நேர்ல பார்த்தது அதுதான் கடைசி. அடுத்த ஒரு மாசத்துல தவறிட்டார்னு அதிர்ச்சி செய்தி வந்துச்சு. அவரோட நினைவுகள் ரொம்ப பசுமையானது” என்றார்.