Published:Updated:

`செடியைப் பிடுங்கிப் பார்த்தா கடலையே இல்லை!’- வேளாண்மைத்துறை அலட்சியத்தால் குமுறும் விவசாயிகள்

நிலக்கடலை
நிலக்கடலை

`மண்ணின் தரம் அறியாமலே வேளாண்மைத்துறையினர் சி 7 என்ற இறக்குமதி செய்த, கடலை விதைகளை எங்களிடம் கொடுத்துவிட்டனர்.'

மண்ணின் தரம் அறியாமல் கஜா புயல் பாதித்த பகுதிகளில் வேளாண்மைத்துறை கொடுத்த விதையால், சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் கடலைச் செடிகள் முளைக்காமல் வீணாகி உள்ளது. இதனால் விவசாயிகள் பெரும் கவலை அடைந்துள்ளனர்.

நிலக்கடலை
நிலக்கடலை

நாகை மாவட்டத்தில் நெல் சாகுபடிக்கு அடுத்தபடியாகப் பரவலாக நிலக்கடலை பயிரிடுகின்றனர். கால்நடைகளுக்கு நிலக்கடலைச் செடி சிறந்த தீவனமாக இருப்பதாலும், 90 நாள்களில் பயன் தரக்கூடிய பணப்பயிர் என்பதாலும், இதைச் சாகுபடி செய்வதில் விவசாயிகள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இந்நிலையில் கஜா புயல் சீற்றத்தால் பெரும் பாதிப்புக்குள்ளான நாகை மாவட்டக் கடலோரக் கிராமங்களில் கடல் நீர் உள்ளே புகுந்ததால் மண்ணின் தரம் மாறுபட்டுள்ளது. நிலத்தில் நச்சுத் தன்மையும் அதிகமாகி இருக்கிறது. இதை ஆய்வு செய்து மண்ணை வளமாக்கி, அதில் என்ன சாகுபடி செய்தால் விவசாயிகளுக்கு லாபம் கிடைக்கும் என்பதை உறுதி செய்ய வேண்டியது தமிழக அரசின் வேளாண்மைத்துறைதான். ஆனால், அவர்களுக்கு கஜா புயல் பாதித்த பகுதி விவசாயிகள் மீது அக்கறை இல்லை என்று குற்றம்சாட்டுகின்றனர் விவசாயிகள்.

நிலக்கடலை
நிலக்கடலை

இதுபற்றி நாகை அருகேயுள்ள வேட்டைக்காரணிருப்பு கிராம நிலக்கடலைச் சாகுபடி விவசாயிகளிடம் பேசினோம். ``நிலக்கடலைச செடிகள் நன்றாக வளர்ந்திருக்கின்றன. அறுவடை காலம் நெருங்கிய நிலையில், இப்போது செடியைப் பிடுங்கிப் பார்த்தால், அடிப்பகுதியில் கடலைகளே இல்லாமல் வெறும் செடியாகவே இருக்கிறது. இதற்குக் காரணம் வேளாண்மைத்துறையின் அலட்சியப் போக்குதான். கஜா புயலின் போது எங்கள் பகுதி நிலங்களில் கடல் நீர் புகுந்து பல நாள்கள் தேங்கிக் கிடந்தது.

இதனால் மண் வளம் கெட்டுவிட்டது. இதுபற்றி எங்களுக்குத் தெரியாது. மண் பரிசோதனை செய்த பின்பே விவசாயம் செய்திருக்க வேண்டும் என்று இப்போது சொல்கிறார்கள். மண்ணின் தரம் அறியாமலே வேளாண்மைத்துறையினர் சி 7 என்ற இறக்குமதி செய்த, கடலை விதைகளை எங்களிடம் கொடுத்துவிட்டனர். அவர்களை நம்பி நாங்கள் சாகுபடி செய்தோம். அறுவடை நெருங்கிய இந்நாளில் நிலக்கடலைச் செடிகளைப் பிடுங்கிப் பார்க்கும்போது, கடலைகளே இல்லாமல் வெறும் செடிகளாகவே உள்ளன. இதனால் நாங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளோம். இதற்குக் காரணம் தமிழக அரசின் வேளாண்மைத்துறைதான். எனவே, எங்கள் பகுதி விவசாயிகள் சாகுபடி செய்துள்ள பரப்பளவை கணக்கீடு செய்து, அனைவருக்கும் உரிய இழப்பீடை அரசு வழங்க வேண்டும்" என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு