Published:Updated:

`ஒரே நேரத்தில் பயிரில் இறங்கினால் என்ன மிஞ்சும்?'-5000 கோயில் மாடுகளால் பதறும் விவசாயிகள்#MyVikatan

விகடன் வாசகர்

ஐந்தாயிரம் கோயில் மாடுகளால் அச்சத்தில் உறைந்துபோய் கிடக்கிறார்கள் தேவகோட்டைப் பகுதியைச் சுற்றியுள்ள கிராம விவசாயிகள்.

கோயில் மாடுகள்
கோயில் மாடுகள்

மாடுகளைக் காண்பதே அபூர்வம். அதிலும் ஒரே இடத்தில் ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட நாட்டு மாடுகளைக் காண்பது என்பது அதைவிட ஆச்சர்யம்..! ஆனால், அதேவேளை இந்த மாடுகளால் மிகப்பெரிய பாதிப்பை தேவகோட்டை வட்டார விவசாயிகள் அச்சத்துடன் எதிர்நோக்கியுள்ளனர்.

கோயில் மாடுகள்
கோயில் மாடுகள்

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டைக்கு மிக அருகில் உள்ளது தாழையூர் கிராமம். இங்குள்ள கூத்தாடிப் பெரியநாயகி அம்மன் கோயிலுக்கு நேர்த்திக்கடனாக விடப்படும் காளை மாடுகள் மற்றும் பசு மாடுகள் சிறிது சிறிதாகப் பல்கிப் பெருகி இன்று பல்லாயிரக்கணக்கில் இப்பகுதியை வலம் வருகின்றன. இவை அனைத்துமே நாட்டு இன மாடுகள். தேவகோட்டையிலிருந்து செல்லும் சிறுவாச்சி மற்றும் வெங்களூர் சாலையின் இருபுறமும் உள்ள காடுகளில்தான் இவை சுற்றி வருகின்றன. இச்சாலைகளில் பயணித்தால் பிறந்த கன்று முதல் பெரிய காளைகள்வரை கூட்டம் கூட்டமாய் ஓடிக்கொண்டிருப்பதைப் பார்க்க முடியும்.

கோயிலுக்கு நேர்த்திக்கடனாக விடப்பட்ட இந்த நாட்டு மாடுகள் அனைத்தும் அவைகளாகவே சுயமாய் தீவனம் எடுத்து, கருத்தரித்து, கன்றுகளை ஈன்று தனது இனவிருத்தியை மேற்கொண்டு வருகின்றன. இந்த மாடுகள்தான் இப்பகுதி விவசாயிகளின் மிகப்பெரிய வில்லன்களாக தற்போது உருவெடுத்து நிற்கின்றன. இப்பகுதியில் உள்ள விவசாயிகளின் நெற்பயிர்களை அழித்து பேரழிவை உருவாக்கி வருகின்றன. ஒரே சமயத்தில் ஒரு வயலில் நூற்றுக்கணக்கான மாடுகள் இறங்கினால் அந்த வயலில் என்ன மிஞ்சும் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை. இப்படி இந்த மாடுகளால் விவசாயத்தை இழந்து மிகப்பெரிய பாதிப்பையும் நஷ்டத்தையும் ஆண்டுதோறும் இப்பகுதி விவசாயிகள் சந்தித்து வருகின்றனர். விவசாயம் செய்ய ஆரம்பித்துவிட்டாலே ஒவ்வொரு நாள் பொழுதையும் இப்பகுதி விவசாயிகள் அச்சத்துடனே கடந்து வருகிறார்கள்.

கோயில் மாடுகள்
கோயில் மாடுகள்

தேவகோட்டையைச் சுற்றி உள்ள தாழையூர், இலக்கணிவயல், நெட்டேந்தல், களத்தூர், கண்டதேவி, இறகுசேரி, பூசலாகுடி, தேரளப்பூர், சித்தானூர், அனுமந்தக்குடி, மீனாப்பூர், கீரணி, சடையமங்கலம், சிறுவாச்சி, ஆணையடி, கப்பலூர், கண்ணங்குடி, தேவண்டதாவு, கேசனி, வடகீழ்க்குடி வெங்களூர், உஞ்சனை, பெருங்கானூர், குடிக்காடு என நூற்றுக்கணக்கான கிராமங்களில் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களில் நெல் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. இந்தப் போகத்திற்கான நேரடி நெல் விதைப்பு இப்பகுதியில் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. இன்னும் சில நாள்களில் இந்தப் பகுதியில் பயிர்கள் முளைக்கத் தொடங்கிவிடும். அப்போது இந்த மாடுகள் வயலில் இறங்கிவிடுமே என்ற அச்சத்தில் உறைந்துபோய் இருக்கிறார்கள் இப்பகுதி விவசாயிகள். சில கிராமங்களில் இந்த மாடுகளுக்கு பயந்தே வயல்களில் ஏர் கூட பூட்டாமல் தரிசாகவே போட்டு வைத்திருக்கிறார்கள்.

இப்பிரச்னைக்கு தீர்வு காண்பதற்காகவே அமைக்கப்பட்ட தேவகோட்டை– கண்ணங்குடி வட்டார விவசாயிகள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் எஸ்.பி.முத்துராமன் இதுதொடர்பாக நம்மிடம் கூறுகையில், ``இந்தப் பகுதியே வானம் பார்த்த பூமிதான். மழையும் சரி வர பெய்யுறதில்லே. அப்படி ஓரளவு பெய்யுற மழையை நம்பித்தான் விவசாயம் செஞ்சிட்டு வர்றோம். ஒரு ஏக்கர் விவசாயம் செய்ய எப்படியும் 30,000 ரூபாய் செலவாகுது. அவ்வளவு சிரமத்தோட செய்யுற விவசாயத்தையும் இந்த தாழையூர் கோயில் மாடுகள் எப்போ வந்து அழிக்கும்னே தெரியாது. ஒவ்வொரு நாள் இரவும் பயந்துக்கிட்டேதான் தூங்குவோம். இந்த வருஷ விவசாயத்துக்கு நேரடி நெல் விதைப்பு செஞ்சிக்கிட்டு இருக்கோம். அடுத்த மழைக்கு எல்லாம் முளைச்சிடும். அப்படி முளைச்சிட்டா ஆரம்பத்திலே இருந்து கடைசியா கதிர் அறுக்கிறவரை இந்த விவசாயத்தை தாழையூர் கோயில் மாட்டுக்கிட்டே இருந்து காப்பாத்துறதுதான் எங்களுக்கு மிகப்பெரிய வேலை.

எஸ்.பி.முத்துராமன்
எஸ்.பி.முத்துராமன்

பல ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாயத்தை ஒவ்வொரு வருஷமும் இந்த மாடுகள் நாசப்படுத்திடுது. இப்போதைக்கு எப்படியும் ஐந்தாயிரம் மாடுகளுக்கு மேலே இருக்கலாம். இதுலே பெரும்பாலும் 80 சதவிகிதம் காளைகள்தான். 20 சதவிகிதம் பசு மாடுகள். இந்தப் பசு மாடுகள் வருஷா வருஷம் கன்றுபோட்டு இனவிருத்தி செய்யுதுக. இப்படியே போனால் இந்த எண்ணிக்கை லட்சக்கணக்கில அதிகரிச்சிடும்.

இது சம்பந்தமா மாவட்ட நிர்வாகத்துக்கும் அரசாங்கத்துக்கும் பலமுறை கோரிக்கை மனுக்கள் கொடுத்தோம். அப்புறம்தான் மாடுகளை தனியாக அடைச்சு வைக்கிறதுக்காக சித்தானூர் கிராமத்திலே 40 ஏக்கர் பரப்பளவில் எம்.பி.நிதியிலே இருந்து 24 லட்ச ரூபாய் செலவில் கோசாலை அமைச்சிருக்காங்க.. ஆனா அதை முறையா பராமரிப்பு செய்யலை. மாடுகள் அங்கே வந்து தங்குறதும் இல்லை. அதற்கான பாதுகாப்பு வேலிகளோ, தீவனமோ இல்லை. அது சும்மா ஒரு பேருக்காகத்தான் இருக்கு. அதுனாலே எந்தப் பயனும் இல்லை. இதை சீரமைச்சு முறைப்படி செய்தால் சில ஆயிரம் மாடுகளை இங்கே அடைச்சு வைக்க முடியும். இந்தப் பகுதி விவசாயத்தை கோயில் மாடுகளிடம் இருந்து பாதுகாக்க முடியும். இதுக்கு தாமதிக்காமல் அரசாங்கம் உடனடியா முன்வரணும். ஏதாவது ஒரு தீர்வு கொடுக்கணும். அப்போதான் நாங்க விவசாயம் செஞ்சு பிழைக்க முடியும். இப்படியே போனால் நாட்டு மாடுகள் காட்டு மாடுகளாகவே மாறிப்போயிடும். எங்கள் விவசாயமும் சுத்தமாகவே அழிஞ்சுப் போயிடும்..

எஸ்.கணேஷ்குமார்
எஸ்.கணேஷ்குமார்

இந்த மாடுகள் வயலில் இறங்கினால் அவைகளை விரட்டுவதற்கென்றே சில கிராமங்களில் மட்டும் இரவு பகலாக பாதுகாப்புக் குழுக்களையும் நியமிச்சு இருக்காங்க. இதனால் வேறு எங்கேயும் யாரும் எந்த வேலைக்கும் போக முடியாது. இந்த மாடுகளை விரட்டும்போது அவை கூட்டமாக திரும்பி வந்து மூர்க்கத்தனமா தாக்கவும் செய்யுது. ஒரு தடவை அரசாங்கத்தின் ஏற்பாட்டிலே வலைகளை வைச்சு பிடிக்கவும் ஏற்பாடு செஞ்சாங்க. ஆனால் ஒரு மாட்டைக்கூட பிடிக்க முடியலை. விவசாயத்துக்கு மழை பெய்றதே பெரிய காரியமா இருக்கு. அப்படி பெய்தாலும் இந்த மாடுகள்கிட்டே இருந்து எங்க விவசாயத்தை காப்பத்தி ஆகணுமே.. “ என்று கவலையுடன் தெரிவிக்கிறார் முத்துராமன்.

``பல்லாயிரக்கணக்கான நாட்டு மாடுகளை எப்படி பராமரிப்பது.. இப்பிரச்னைக்கான தீர்வுக்கு வாய்ப்புகள் ஏதேனும் உள்ளதா?” என திருச்சி, கல்கண்டார்கோட்டையில் `தாயுமானவர் கோசாலை’ என்ற நாட்டு மாடுகளுக்கான பண்ணையை நடத்தி வரும் எஸ்.கணேஷ்குமாரை தொடர்புகொண்டு கேட்டேன்.

கோயில் மாடுகள்
கோயில் மாடுகள்

``அடேயப்பா.. இவ்வளவு எண்ணிக்கையிலான நாட்டு மாடுகளா?" என ஆச்சர்யத்துடன் பேசத் தொடங்கினார். “ கலப்பில்லாமல் சுத்தமான நாட்டு மாடுகளின் எண்ணிக்கை இப்போ ரொம்ப குறைஞ்சிட்டு வருது. இந்தச் சூழலில் இவ்வளவு எண்ணிக்கையிலான மாடுகள் ஒரே பகுதியில் இருப்பதே ஆச்சர்யமானதுதான். அதேசமயம் மாடுகளால் விவசாயத்துக்கும் எந்த பாதிப்பும் வரக் கூடாது. நாடு முழுவதும் உள்ள ஒவ்வொரு கோசாலைகளுக்கும் இந்த மாடுகளை சிறிது சிறிதாக பிரிச்சுக் கொடுக்கலாம்.

ஆர்வமுள்ள விவசாயிகளுக்கு வளர்ப்புக்கு கொடுக்கலாம். நாட்டு மாடுகளின் பாலுக்கு பெரும் வரவேற்பு இருக்கு. இவ்வளவு எண்ணிக்கையிலான மாடுகளின் சாணத்தை வைத்து மண் புழு உரம், பஞ்சகவ்யம் போன்ற உயிர் உரத் தொழிற்சாலைகள் ஏற்படுத்தலாம். இயற்கை உரங்களுக்கு மிகப்பெரிய தேவை இருக்கிறது. அதே மாதிரி விபூதி தயாரிக்கலாம். இதனால் ஏராளமானவர்களுக்கு வேலைவாய்ப்பும் கிடைக்கும்.

கோயில் மாடுகள்
கோயில் மாடுகள்

இவ்வளவு பெரிய எண்ணிக்கையிலான நாட்டு மாடுகளை பராமரிப்பதற்கு ஏதாவது மிகப்பெரிய கார்ப்பரேட் கம்பெனிகள் சேவை அடிப்படையில் உதவ முன்வரலாம். ஒவ்வொரு தனியார் கார்ப்பரேட் நிறுவனமும் சமூக சேவை பங்களிப்பில் கட்டாயம் ஈடுபட வேண்டும் என்பது சட்டவிதிகளில் ஒன்று. எனவே, இந்த நாட்டு மாடுகளைப் பராமரித்து பாதுகாக்கவும், இப்பகுதி விவசாயிகளின் துயரத்தைப் போக்குவதற்கும் சில கார்ப்பரேட் நிறுவனங்கள் தம்மை ஈடுபடுத்திக்கொண்டால் அது மிகப்பெரிய சேவையாக இருக்கும். அத்துடன் மத்திய மாநில அரசுகளும் இதில் தீவிரக் கவனம் செலுத்த வேண்டும். அப்போதுதான் இதற்கு தீர்வு கிடைக்கும்'' என்கிறார்.

எப்படியோ விவசாயிகளின் வாழ்க்கையை மாடு மேயாமல் இருந்தால் சரி.....!

-பழ.அசோக்குமார்

My Vikatan
My Vikatan

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காக களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க... https://www.vikatan.com/special/myvikatan/