அந்தியூர் சந்தை: ஸ்டாலின் கேப்டனின் விலை ரூ. 25 லட்சம்! | Anthiyur Horse fair

வெளியிடப்பட்ட நேரம்: 13:16 (13/08/2015)

கடைசி தொடர்பு:16:26 (13/08/2015)

அந்தியூர் சந்தை: ஸ்டாலின் கேப்டனின் விலை ரூ. 25 லட்சம்!

ரோடு மாவட்டம் அந்தியூரில் வருடா வருடம் குருநாத சுவாமி திருக்கோவிலில் தேர்த்திருவிழா நடைபெறுவது வழக்கம். ஐந்து நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவின் மிகப்பெரிய சிறப்பு, அங்கு நடைபெறும் கால்நடை சந்தைதான்.

நேற்று(11.08.2015) தொடங்கிய இச்சந்தைக்கு, நாட்டின் பல இடங்களிலிருந்தும் குதிரைகள், மாடுகள் மற்றும் ஆடுகளும் வந்திருந்தன. அதுமட்டுமின்றி சில வகை நாய்களையும் உரிமையாளர்கள் பார்வைக்கு வைத்திருந்தனர். நூற்றுக்கணக்கான குதிரைகள், ஆயிரக் கணக்கில் மாடுகள் என அந்த இடமே ஒரு கால்நடைக் கண்காட்சி போல் காட்சியளித்தது.

மேலும் படங்களுக்கு க்ளிக் செய்க...

குதிரை வண்டியில் ஒரு இடத்திற்குப் போவது என்பது கௌரவமாய் இருந்ததெல்லாம் ஒரு காலம். இன்றெல்லாம் குதிரைகளைப் பார்ப்பது என்பதே அரிதாகிவிட்டது. இருந்தாலும் குதிரைச் சவாரியிலும், குதிரை வளர்ப்பதிலும் இன்னும் ஆர்வம் கொண்டவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.

நாட்டின் பல இடங்களில் இருந்தும் பல வகையான குதிரைகள் சந்தைக்கு வந்திருந்தன. அவற்றுள் அதிகம் காணப்பட்டது காத்தியவாரி மற்றும் மார்வாரி ரக குதிரைகள்தான். ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் மாநிலங்களைச் சார்ந்த இந்த மார்வாரி ரக குதிரைகள், உடல் திடமும், உள் நோக்கி வரும் காது அமைப்பும் கொண்டவை. இந்த வகைக் குதிரைகளைப் போலத்தான் காத்தியவார் ரக குதிரைகளும். பல வண்ணங்களில் காணப்படும் இக்குதிரைகள், எளிதில் அனைவரையும் கவர்ந்து விடுகின்றன.

நிறங்கள் பலவன்றோ!

மேலும் படங்களுக்கு க்ளிக் செய்க...

''குதிரைகள் சவாரிக்காகவும் அழகுக்காகவும் மட்டும் வளர்க்கப்படுவது இல்லை. அவை ராசிக்காகவும் வாங்கி வளர்க்கப் படுகின்றன. முகத்திலோ கழுத்திலோ மொத்தம் 9 அல்லது 10 சுழிகள் பெற்றிருந்தால், அவை ராசியான குதிரைகள். எங்களிடம் உள்ள அனைத்து குதிரைகளும் அப்படியான குதிரைகள்தான் " என்கிறார் ஈரோட்டுக்காரரான ரமேஷ் .

ஈரோடு மற்றும் சென்னிமலையைச் சார்ந்த தனது நண்பர்களோடு குதிரை விற்பனையில் இருக்கும் இவரிடம் இருப்பவை எல்லாம் காத்தியவாரி ரகக் குதிரைகள்தான். அதிலும் சப்ஜா ,செவலச்சட்டை(brown with white), நொக்ரா(வெள்ளை), குமேத்(brown) மற்றும் தல்டா (வெள்ளையுடன் கூடிய கறுப்பு) என ஒவ்வொரு வகையிலும் குதிரைகள் இருப்பது சிறப்பம்சம். தங்கள் குதிரைகளுக்கு இரண்டு லட்சம் முதல் அதிகபட்சமாக மூன்றரை லட்சம் வரை விலை நிர்ணயித்துள்ள இவர்கள், குட்டி ஒன்றினை 1 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய்க்கு விற்றுள்ளனர்.

அழகுப் போட்டியில் வென்ற அர்ஜுன்!

மேலும் படங்களுக்கு க்ளிக் செய்க...

திருப்பூரைச் சார்ந்த பகவதியின் ‘அர்ஜுன்’ தான் தமிழகத்தில், தற்போதைக்கு பதிவு செய்யப்பட்டுள்ள ஒரே மார்வார் ரக குதிரை. பஞ்சாப்பில் நடந்த ‘முக்ஷர்’ எனப்படும் குதிரைகளின்  அழகு சார்ந்த போட்டியில் முதலிடம் பெற்றது, இந்த அர்ஜுன். இரண்டு மார்வார் ரக குதிரைகளை ரூ. 10 லட்சத்திற்கு விற்றுள்ளார் பகவதி. அர்ஜுனை 20 லட்சத்திற்கு கேட்டபோதும், அதை விற்கும் எண்ணம் இல்லை என்று சொல்லி விட்டாராம்.

கருப்புப் பேரழகி தேசி

மேலும் படங்களுக்கு க்ளிக் செய்க...

கோவையைச் சேர்ந்த சுப்ரமணியத்தின் குதிரை தேசி. காத்தியவாரி வகையைச் சார்ந்த இந்தக் குதிரை, தன் கறுப்பு நிறத்தால் நம் அனைவரையும் எளிதில் கவர்ந்துவிடுகிறது. ஒற்றையாய் நின்றாலும், சுமார் ஏழு அடியில் ஒய்யாரமாய் நிற்கும் தேசி, தன்னை 5 லட்சம் கொடுத்து வாங்கும் புதிய முதலாளியோடு பயணிக்கக் காத்திருக்கிறாள்.

ஸ்டாலின் கேப்டனின் விலை 25 லட்சம்!

மேலும் படங்களுக்கு க்ளிக் செய்க...

விழாக்களில் நாட்டியமாடவும், ஊர்வலம் செல்லவும் பயன்படும்  'பஞ்சகல்யாணி ' வகைக் குதிரை வைத்திருந்தார் மூர்த்தி. ரூ. 25 லட்சத்திற்குக் கேட்கப்பட்ட போதும், அதை விற்க மறுத்துவிட்டார் இந்த அன்னூர்க்காரர் .

 

மேலும் படங்களுக்கு க்ளிக் செய்க...

 சந்தைக்கு வந்துள்ள குதிரைகளின் மதிப்பில் இந்த ஸ்டாலின் கேப்டனே முதலிடத்தில் உள்ளான். நொக்ரா வகையைச் சார்ந்த இந்தக் குதிரையின் கனைப்பு, பார்ப்போர் அனைவரையும் சற்று பயத்தில் ஆழ்த்துகிறது. 'இந்தக் குதிரை தான் விழாக்களில் அமைதியாய் ஆடுவதா?' என்ற கேள்வியும் கூடவே எழுகிறது.

சண்டைக்குக் காத்திருக்கும் யேச்சேரி ஆடு

மேலும் படங்களுக்கு க்ளிக் செய்க...

சுற்றிலும் குதிரைகளாக நின்றிருந்து பார்வையாளர்களை இழுத்தபோதும், தன் கம்பீரத்தால் அனைவரின் பார்வையையும் தன் மீது திருப்பியது ஒரு ஆடு. யேச்சேரி ஆடு எனப்படும் இந்த ஆட்டின் காதுகள் நீண்டு நேராக நிற்கின்றன. அந்தக் காதின் பெயரனாது சோனா காது எனப்படுகிறது. சண்டைகளுக்காப் பழக்கப்பட்ட இந்த ஆடு, குதிரைகளுக்கு இணையாக 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ளதாம். இதன் உரிமையாளரான முத்துக்கவுண்டன்புதூர், அருனுக்குச் சொந்தமாக சில மாருவார் ரக குதிரைகளும் உள்ளன. சந்தையில் ஓடிக்கொண்டே நடப்பவர்களை சிதறி ஓடவிட்ட இவர்களின் கிளியோபாட்ரா 7 லட்சத்திற்கு விற்கப்பட்டுள்ளது. இது சப்ஜா வகையைச் சார்ந்தது.

சொகுசுப் பயணம் தரும் துருசு!

சத்தியமங்கலத்தைச் சேர்ந்த இளங்கோவனிடம் சில அரிய வகைக் குதிரைகள் காணப்பட்டன. பண்டைக் காலத்தில் மன்னர்கள் நீண்ட தூரம் பயணம் செய்யும் போது, களைப்பு தெரியாமல் இருக்கப் பயன்படுத்தியதே துருசு வகை குதிரைகள். அந்த வகையைச் சார்ந்த ராணி  சொகுசுக் கார்களையே தோற்கடிக்குமாம். அப்படி ஒரு பயணம் மேற்கொள்ள நாம் செலவு செய்ய வேண்டியது வெறும் 4 லட்சம்தான். 

மேலும் படங்களுக்கு க்ளிக் செய்க...

குதிரை வகைகளில் மிகவும் உயரமானதான சிந்தி வகைக் குதிரையின் அழகை, கேமராவும் கண்ணடித்து ரசிக்கும். வெள்ளை நிறத்தில் ரோமங்கள் படர்ந்திருக்க, சுமார் ஏழரை அடியில் 600 முதல் 650 கிலோ எடையுள்ள பாதலின் விலை 7 லட்சம்.

இங்குள்ள குதிரைகளில் இன்னும் சிறப்பு வாய்ந்தது சேத்தக் வகைக் குதிரை. ராஜா ராணா பிரதாப் சிங் வம்சாவளியினர் பயன்படுத்திய இக்குதிரை, சவாரி செய்வதற்கு மிகவும் ஏதுவானது. உணவின் கொழுப்புகள் எல்லாம் கழுத்திலேயே சேர்ந்து விடுமோ என்று ஆச்சரியப்படுமளவிற்கு இதன் கழுத்து மட்டும் தனியாய் அழகாய்த் தெரிகிறது. தற்போது தமிழகத்தில் ஒரே ஒரு சேத்தக் ரக குதிரைதான் உள்ளது. அதனால்தானோ என்னவோ இதன் விலை ரூ.15 லட்சம்.

ஹைதராபாத் குதிரைகள்!

 

மேலும் படங்களுக்கு க்ளிக் செய்க...

சந்தையில் அதிகம் காணப்படாத ஹைதராபாத்தைச் சார்ந்த சரட்டை,செவளை மற்றும் குண்டு ரக குதிரைகள் வைத்திருந்தார் பல்லடத்தைச் சேர்ந்த ராஜசேகரன். குட்டிகள் சில இருந்த போதும் அவை தாயுடனே விற்கப்பட்டன. இந்த குதிரைகளின் மதிப்பு 1.25 லட்சம் முதல் 3 லட்சம் வரை வேறுபடுகின்றது.

வட நாட்டு வணிகன்

மேலும் படங்களுக்கு க்ளிக் செய்க...

தமிழகத்தில் இருந்து மட்டுமல்லாது, வேறு மாநிலத்தவர்களும் தங்களது குதிரைகளை விற்பனைக்குக் கொண்டு வந்திருந்தனர். உத்தரபிரதேசத்தைப் பூர்வீகமாகக் கொண்ட சபேர் கான், தனது 10 மார்வார் ரக குதிரைகளோடு சந்தைக்கு வந்திருந்தார். அவற்றுள் ராணி எனப்படும் குதிரைக்கு, அவர் வைத்துள்ள மதிப்பு 25 லட்ச ரூபாய்.

பிரெஞ்சு குதிரைப் பிரியை!

மேலும் படங்களுக்கு க்ளிக் செய்க...

விற்பதற்கு மட்டுமல்ல, வாங்குவதற்கும் வெளியாட்கள் அந்தியூர் சந்தைக்கு வந்திருந்தனர். பாண்டிச்சேரியில் வசிக்கும் இரகுஹா-மிரபெல்லே தம்பதியினர் இரண்டு இளம் குதிரைகள் வாங்க அந்தியூர் வந்துள்ளனர். "நான் ருவாண்டாவைச் சேர்ந்தவன். என் மனைவி பிரான்சு. நாங்கள் பாண்டிச்சேரியில் வசிக்கிறோம். என் மனவிக்குக் குதிரை சவாரி மிகவும் பிடிக்கும். எங்களிடம் இரண்டு காத்தியவாரி ரக குதிரைகள் உள்ளது. மேலும் இரண்டு இளம் குதிரைகள் வாங்க வந்துள்ளோம்" என்கிறார் இரகுஹா.

கம்பீரமான காங்கேயம் காளைகள்!

குதிரைகளுக்கு மட்டுமல்ல மாடுகளுக்கும், ஆடுகளுக்கும் கூட அந்தியூர் சந்தை சிறப்பு வாய்ந்ததுதான். சித்தோட்டுக்காரர் செந்திலின் நான்கு காங்கேயம் காளைகள், அங்கு வந்தவர்களின் பார்வையை தங்கள் பக்கம் திருப்பின. ரூபாய் 1 லட்சம் மதிப்புள்ள அந்த காளையின் கம்பீரம், நம்மை அதிசயிக்க வைக்கிறது. அவர்களிடம் நாக்கில் மச்சம் கொண்ட அரிய வகை காராம் பசுவும் இருந்தது. முடி,கண்,கால்,உடல் என முற்றிலும் கறுப்பாய் காட்சியளித்தது அப்பசு.

மேலும் படங்களுக்கு க்ளிக் செய்க...

1 லட்ச ரூபாய் மதிப்புள்ள வண்டிக் காளையும், செவளைக் காளையும் கூட சந்தைக்கு வந்திருந்தன. கறவை மாடுகள் 63,000 ரூபாய் வரை விற்கப்படுகின்றன. வெளிநாட்டு பசு வகையான ஜெர்சி வகை பசுக்கள் 60 முதல் 70 ஆயிரம் ரூபாய் வரை விற்கப்படுகின்றன. சிந்து வகைப் பசுக்களின் சந்தை மதிப்பு ரூ. 55,000 ஆக உள்ளது. மேலும் காது நீண்ட அசாம் ஆடுகளும், மிகவும் சிறிதான, ஒரு அடிக்கு மேல் வளராத நாய் வகைகளும் சந்தையில் இடம்பெற்றிருந்தன. சந்தைக்கு வந்தவர்கள் அதிகம் ஆச்சரியப்பட்டது அந்த நாய்களின் விலையை கேட்டதால்தான் இருக்கும். காரணம் அவற்றின் மதிப்பு 85 ஆயிரம் ரூபாயாம்!

இந்தச் சந்தை, கால்நடைகளை விற்று பணம் பார்ப்பதற்காக மட்டுமல்ல. இங்கு வருபவர்கள் பலர் தங்கள் குதிரை வளர்க்கும் ஆர்வத்தைக் வெளிக்காட்டவும் வருகிறார்கள். அழிந்து வரும் சில அடையாளங்களை இப்படிப்பட்ட இடங்களில்தான் நாம் பார்க்க முடிகிறது.

இது போன்ற இடங்களுக்கு விவசாயிகளும் வியாபரிகளும் வந்தால் மட்டும் போதாது. கம்ப்யூட்டரில் 'யுனிக்கார்ன்' விளையாடும் சிறுவர்களும், 'க்ளாஷ் ஆஃப் க்ளான்ஸ்' விளையாடும் இளைஞர்களும் வரவேண்டும். கால்நடைகள் பற்றி அவர்கள் அறிய  வேண்டும். அப்போதுதான் விவசாயத்தை நம்பியுள்ள நம் தேசம் வளமை பெறும்.


- மு.பிரதீப் கிருஷ்ணா
படங்கள்: கி.சரண் பிரசாத்

(மாணவர் பத்திரிகையாளர்கள்)

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close