வெளியிடப்பட்ட நேரம்: 13:14 (31/03/2016)

கடைசி தொடர்பு:14:01 (31/03/2016)

ரத்ததானம்: நன்மை நமக்கும்தான்!

’ரத்த தானம் செய்வீர்’ என்ற வாசகத்தையோ, ‘ரத்தம் அவசர தேவை’ என்ற வாட்ஸப் மெசேஜையோ தினந்தோறும் நம்மில் பலர் எதிர்கொள்கிறோம். இது குறித்து எத்தனை பேருக்கு விழிப்புணர்வு உள்ளது?

ஆனால் தாரமங்கலத்தை சேர்ந்த வடிவேலு, மக்களிடையே இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருவதோடு மட்டுமல்லாமல்,  கடந்த 10 வருடங்களாக களத்திலும் இறங்கி செயல்படுத்தி வருகிறார் . தாரமங்கலம் மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில் ரத்த தான முகாம்களை நடத்தி,  சேலம் அரசு மருத்துவமனை ரத்த வங்கிக்கு வழங்கி வருகிறார்.

இது மட்டுமல்லாமல் விபத்து, பிரசவ காலங்களில் ஏற்படும் அதிக உதிர போக்கினால் மகளிருக்கு ஏற்படும் பிரச்னை போன்ற அவசர காலங்களுக்கும் இவரின் அமைப்பின் உறுப்பினர்கள் மூலம் ரத்த தானத்திற்கு ஏற்பாடு செய்கிறார்.  

இதற்காக இவருக்கு சிறந்த ரத்தத்தான ஆர்வலர் விருதும், தமிழக ஆளுநர் ரோசய்யாவிடமிருந்து பாரத ரத்னா ஏ.பி.ஜே. அப்துல்கலாம் எக்ஸலன்ஸ் விருதும் வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அவரிடம் பேசியபோது, “2005-ல் ஒருமுறை ரத்த தானம் முகாம்  நடக்க இருப்பதை அறிந்து அங்கு டொனேட் செய்ய போயிருந்தேன். அது ஒரு தனியார் அமைப்பு நடத்திய முகாம். அதில் சரியானபடி எடுக்கவில்லை. நிறைய பேர் சாப்பிடாமல் வந்ததை கூட பொருட்ப்படுத்தாமல் ரத்தம் எடுத்தார்கள். இதனால் நிறைய பேருக்கு மயக்கம், வாந்தி போன்ற பிரச்னைகள் வந்தது. எத்தனையோ பேர் உண்மையான ஆர்வத்துடன் வருகிறார்கள். அவர்களை சரியாக எடுத்து செல்ல வேண்டும் என தோன்றியது. எனவே நானே களத்தில் இறங்கினேன்.

தாரமங்கலத்தில் வேதாத்திரி இளைஞர் நற்பணி மன்றம் 2005-ல் தொடங்கினேன். தாரமங்கலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கு எங்கள் அமைப்பின் தன்னார்வலர்கள் மூலம் வருடத்திற்கு 6 கேம்ப் நடத்தி வருகிறேன்.

ரத்தம் தருவதற்கு பலருக்கும் ஆர்வம் இருந்தாலும், யார் யாரெல்லாம் ரத்தம் தரலாம் என்பதற்கும், ரத்தம் தரும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் குறித்தும் ஒரு லிஸ்ட் உண்டு.

 

* மது அருந்துபவர்கள் ரத்தம் தருவதாய் இருந்தால் ஒரு நாளுக்கு முன்னரே அவர்கள் குடிப்பதை நிறுத்த வேண்டும்.

* ரத்தம் தரும் நபர் ரத்தம் தருவதற்கு முன் கட்டாயம் ஒரு அரை மணி நேரத்திற்கு முன்னரேனும் சாப்பிட்டு இருக்க வேண்டும்.

* ஒரு முறை ரத்த தானம் செய்தவர்கள் குறைந்தது 3 மாத இடைவெளி விட்டுதான் அடுத்த முறை அளிக்க  வேண்டும்.

* 18-60 வயதிலான ஆண், பெண் இருவரும் ரத்த தானம் செய்யலாம். இவர்களது எடை குறைந்தபட்சம் 45 கிலோ  இருக்க வேண்டும்.

ரத்த தானம் செய்வது பிறருக்கு மட்டுமல்ல நமக்கும் அதிகம் நன்மை தரக்கூடிய ஒன்று. ரத்த தானம் செய்வதால் உடல் எடை குறையும் என்பதெல்லாம் தவறான நம்பிக்கை. ரத்த தானம் செய்வதால் நமது உடலின் ரத்தம் புதிதாக ஊறும்.

எனவே, ரத்த தானம் குறித்த தவறான நம்பிக்கைகளை கை விட்டு இன்னும் நிறைய பேர் முன்வர வேண்டும்” என்றார் இறுதியாக.

தொகுப்பு: ச. ஆனந்தப்பிரியா
படங்கள்: சூ. நந்தினி
( மாணவப்பத்திரிகையாளர்கள் )
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்