வெளியிடப்பட்ட நேரம்: 17:55 (07/04/2016)

கடைசி தொடர்பு:15:41 (10/04/2016)

30 வயதில் 106 திவ்ய தேசங்களை இரண்டு முறை சுற்றிய அதிசய தமிழர்!

வைஷ்ணவ பெரியோர்களான பன்னிரு ஆழ்வார்கள் மற்றும் ஶ்ரீராமனுஜர், மகாவிஷ்ணு கோயில் கொண்டுள்ள புனித ஸ்தலங்களுக்கு விஜயம் செய்து பெருமானை சேவித்து, மங்களாசானம் செய்து பாடல்களைப் பாடியிருக்கிறார்கள். இதனால் அந்த ஸ்தலங்கள் தெய்வீக நிலையை அடைந்தன. அவ்வாறு பாடப்பெற்ற 108 ஸ்தலங்களை திவ்யதேசங்கள் (108 திருப்பதிகள்) என்று போற்றி வருகின்றனர். இந்த ஸ்தலங்களுக்குச் சென்று பெருமாளை வழிபடுவதை பெரும் பாக்கியமாக ஆன்மிக பக்தர்கள் கருதுகின்றனர்.

மிகவும் புனிதமாக போற்றும் இந்த 108 திருப்பதிகளில், 106 திவ்ய ஸ்தலங்களை ஒரு முறையல்ல இரண்டு முறை தரிசித்து பெரும் பாக்கியம் அடைந்திருக்கிறார் ரகுபதி. அவர் போகாத மீதமுள்ள இரண்டும் மனித ரூபத்தில் போகமுடியாத விண்ணுலகத் திருப்பதிகள் ஆகும். அவை, ஆன்மிக பக்தர்களின் வணக்கத்துக்குரிய திருப்பாற்கடல் மற்றும் திருப்பரமபதம்.

தமிழகத்தில் ஶ்ரீரங்கம், உப்பிலியப்பன் கோவில், கள்ளழகர் கோவில், சோளிங்கர் உட்பட 82 திருப்பதிகள் இருக்கின்றது. ஆந்திராவில் இரண்டு திருப்பதிகளும், கேரளத்தில் திருவனந்தபுரம், திருவல்லா உட்பட 13 திருப்பதிகளும், வட இந்தியாவில் அயோத்யா, பத்ரிநாத், துவாரகா, இறைவன் வன ரூபத்தில் எழுந்தருளி இருக்கும் நைமி சரண்யம் உட்பட எட்டு திருப்பதிகள் உள்ளன. இது தவிர நேபாளத்தில் முக்திநாத் என்றழைக்கப்படும் சாளக்ரமத்தையும் சேர்த்தால், ஏழு மாநிலங்கள் மற்றும் ஒரு வெளிநாடு என அவர் சென்ற ஊர்களின் பட்டியல் மிகப் பெரியதாக இருக்கிறது.

''இந்த 106 திருப்பதிகளில் பத்ரிநாத், நான் தரிசித்த 100-வது ஸ்தலமாக அமைந்தது மனதிற்கு பெரும் மகிழ்ச்சியாக இருந்தது" என்கிறார் ரகுபதி. பொதுவாக 108 திருப்பதிகளுக்கு பயணம் மேற்கொள்பவர்களுக்கு முதல் ஸ்தலமாக பத்ரிநாத்தான் இருக்கும். பெரும்பாலோர் இந்த பயணத்தை அவர்களது 50 வயதுக்கு மேல்தான் தொடங்குவார்கள்.

ஆனால், 106 திருத்தலங்களுக்கும் இரண்டு முறை புனித யாத்திரை சென்று திரும்பியிருக்கும் ரகுபதியின் வயது என்ன தெரியுமா? நாற்பத்திரண்டு. 28 வயதில் புனிதயாத்திரை செய்யத் தொடங்கியவர் 32 வயதில், 106 திருப்பதிகளையும் தரிசித்து விட்டார். அவர் மட்டும் சென்று வந்தது பெரிய விஷயமல்ல, அவர் சென்று தரிசித்த 106 திவ்ய தேசங்களுக்கும், அவரது பெற்றோரையும் அழைத்துச் சென்றிருக்கிறார். இதில் நேபாளத்திலிருக்கும் முக்திநாத் இமயமலையின் அன்னபூர்ணா சிகரத்தில் 3,800 மீட்டர் கடல் மட்டத்தை விட உயரம் கொண்டது.

இதில் ஶ்ரீராமானுஜர் நேரில் வந்து மங்களாசாஸனம் செய்த ஸ்தலமான முக்திநாத்துக்கு சென்று வந்த, தன் மனதை விட்டு அகலாத அந்தப் பயணத்தைப் பற்றி சொல்கிறார்.  

''நான், மனைவி, அப்பா, அம்மா மேலும் இரு உறவினர்களுடன் சென்னையிலிருந்து ரயில் மூலம் கோரக்பூர் சென்றடைந்தோம். இரவு அங்கேயே தங்கி விட்டோம். பைரவா எனும் இடத்திலிருந்து போக்ரா (Pokhara)வுக்கு விமான டிக்கட் முன்பதிவு செய்திருந்தோம். ஆனால், திடீரென விமானம் ரத்து செய்யப்பட்டது. ஜோம்சோம் (Jomsom) போய் அங்கிருந்து முக்திநாத் சென்று திரும்பவும் போக்ரா வந்தடைய விமான டிக்கெட் மற்றும் கோவேறு கழுதைகளுக்கும் முன் பதிவு செய்து வைத்திருந்தோம்.

ஆனால் போக்ரா வந்தடைந்த எங்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது, இரண்டு நாட்களாக வானிலை காரணமாக அனைத்து விமான சேவைகளையும் ரத்து செய்து விட்டிருந்தார்கள். அங்கிருந்து சாலை போக்குவரத்து வசதி இல்லை. விமானத்தில் ஜோம் சோம் சென்று அங்கிருந்து காரில் முக்திநாத்துக்கு போய்விடலாம். 2003-ல் நான் முக்திநாத் சென்ற போது போக்ராவிலிருந்து சுமார்பேனி சென்று அங்கிருந்து 97 கிலோ மீட்டர். நடந்தே சென்றேன். 2006 பெற்றோர் வந்ததால் அவர்களின் உடல் நிலையைக் கருத்தில் கொண்டு ஹெலிகாப்டரில் முக்திநாத் நோக்கி புறப்பட்டோம்.

நேபாளத்தின் தலைநகர் காட்மாண்டிலிருந்து 272 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கிறது 'முக்திநாத்' என்றறியப்படும் சாளக்ராமம். இந்தக் கோயிலில் மூலவர் முக்தி நாராயணன் என்ற திருக்கோலத்தில் ஶ்ரீதேவி அருள் பாலிக்கிறார். அருகில் காலி கண்டகி நதி ஓடுகிறது. கண்டகி நதியில் நாம் துளசி இலையுடன் நீராடி எழுந்தால் நமக்கான சாளக் ராமம் கிடைக்குமென்பது ஐதீகம். சாளக்ராமம் என்பது இறைவனின் திருஸ்வரூபம்தான். ஞானிகள் சாளக்ரமத்தை பார்த்தே, அது எந்த இறைவனின் எந்த ஸ்வரூபம் என்று கண்டுபிடித்து விடுவார்களாம்.

பார்க்க வழவழப்பாக கறுப்பாக இருக்கும் கருங்கல் தான் சாளக்ராமம் என்று வழங்கப்படுகிறது. இது கண்டகி நதியில் மட்டுமே கிடைப்பதால் அந்த நதியை சாளக்ராமி என்றும், தேவி சொரூபியாகவும் போற்றி வணங்குகிறார்கள்.

முக்திநாதரை தரிசித்தபின் மீண்டும் ஹெலிகாப்டரில் போக்ரா வந்து காட்மாண்டு கல்கத்தா வழியாக சென்னை திரும்பினோம். அங்கிருந்து கடும் வானிலையால் பார்ப்போமா என்றிந்த முக்திநாத் பயணம் இறைவன் அருளால் நல்லபடி முடிந்தது" என்று புளகாங்கிதம் அடைகிறார்.

மிகவும் சாதாரண நடுத்தர குடும்பத்தில் பிறந்த இவருக்குத் தூண்டுகோலாக இருந்தது எல்.வி.கோபாலன் எழுதிய 108 வைணவ திவ்ய தேசங்கள் எனும் புத்தகம்தான். அதைப் படித்ததிலிருந்து தான் அத்தனை திவ்ய ஸ்தலங்களையும் தரிசிக்க வேண்டும் என்ற உத்வேகம் எழுந்தது என்கிறார். ஒரு பகவத் சங்கல்பமாகக் கொண்டு முடித்திருக்கிறார்.

இதற்காக இவர் சன்யாசி ஆகிவிட்டாரா? இல்லை. திருமணத்துக்காக வரன்கள் வந்த போது '106 திருப்பதிகளையும் தரிசித்த பின்தான் திருமணம்' என்று உறுதியாகச் சொல்லி விட்டார். தான் தரிசித்த 106 திவ்ய தேசங்களில் 75 இடங்களுக்கு ஐந்து முறைக்கும் மேல் மீண்டும் மீண்டும் சென்று பெருமாளின் திவ்ய தரிசனத்தைப் பெற்றுள்ளார். இதில் நடை பயணம் முதற்கொண்டு விமானப் பயணம் வரை எல்லா போக்குவரத்து வசதிகளையும் பயன்படுத்தி இருக்கிறார்.

இதற்கு இவருடைய குடும்பத்தினர் மற்றும் இவர் அலுவலகமும் கொடுத்த ஒத்துழைப்புதான் முழு காரணம் என்கிறார்.

''அடுத்த கட்டமாக நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் பாடப்பெறாத, ஆனால் ஶ்ரீராமானுஜர் நேரில் சென்று தரிசித்து அபிமான புராண ஸ்தலங்களாக விளங்கும் ஶ்ரீகூர்மம், ப்ரயாக்கயா, புஷ்கர்ணம், மன்னார்குடி போன்ற ஷேத்திரங்களுக்கு சென்று வருகிறேன்" என்கிறார் ரகுபதி.

- கே.கணேசன்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்