சென்னையை தூய்மையாக்குவோம் - பெல்ஜியம் பீட்டர் வான் கெயிட்

சென்னை ட்ரெக்கிங் க்ளப் தன்னார்வ தொண்டர்களால் வரும் 19ம் தேதி (நாளை) ஞாயிற்றுக்கிழமை சென்னை மெரினாவிலிருந்து 20 கி மீட்டர் வரை கடற்கரை பகுதிகள் சுத்தம் செய்யப்பட உள்ளது. ''கோஸ்டல் க்ளீன்'' கடற்கரை பகுதிகளில் சேரும் மறு சுழற்சி செய்ய முடியாத மற்றும் செய்ய முடியும் குப்பைகளை பிரித்து அவற்றை ஒட்டு மொத்தமாக கடற்கரையில் இருந்து அகற்றும் பணியை செய்ய உள்ளனர்.

சென்னை ட்ரெக்கிங் க்ளப்பின் 7வது ஆண்டு துவக்கமாக இதனை மேற்கொள்ள உள்ளனர். இது குறித்து அதன் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான பெல்ஜியம் நாட்டை சேர்ந்த பீட்டர் வான் கெயிட்டிடம் பேசினோம். "தொடர்ந்து 7வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது சென்னை ட்ரெக்கிங் க்ளப், தற்போது 30000க்கும் மேற்பட்ட தன்னார்வ தொண்டர்கள் இதில் இணைந்து தங்கள் சேவையை செய்து வருகின்றனர். மேலும் 150க்கும் மேற்பட்ட கார்ப்பரேட் நிறுவனங்களும், அதன் பணியாளர்களும் இந்த பணியில் ஈடுபட்டுள்ளனர். 

இந்த அமைப்பு வெறும்  ''கோஸ்டல் க்ளீன்''  பணிகளில் மட்டுமல்லாமல் இயற்கையை பாதுகாக்கும் பல்வேறு செயல்களை செய்து வருகிறது. இதில் சைக்கிளிங் க்ளப்கள், இயற்கை ஆர்வலர்கள் பலர் தங்களை இணைத்து கொண்டு தூய்மையான இந்தியாவை உருவாக்கும் பணிகளை செய்து வருகிறோம்.

சென்னையில் சென்ற ஆண்டு மட்டும்  ''கோஸ்டல் க்ளீன்''  மூலம் கடற்கரையில் இருந்து 50 டன் குப்பைகளை அகற்றினோம். இந்த குப்பைகள் அப்படியே இருந்தால் மனிதர்களுக்கும் கடலில் உள்ள உயிரினங்களுக்கும் பாதிப்பாக அமையும்.சென்னை மழையின் போது அடையாறு, கோட்டூர்புரம் பகுதிகளில் பன்மடங்கு குப்பைகள் சேர்ந்து இருந்தன. அவற்றை நாங்களே தன்னார்வ தொண்டர்கள் உதவியோடு அகற்றினோம். இந்த சென்னை மழை மக்கள் மனதில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் இயற்கையை பாதுகாப்பதற்கான முதல் படியாக சென்னை மழை அமைந்துவிட்டது.

சென்னையில் நாங்கள் செய்த இந்த சிறு முயற்சியை பார்த்து 16 நகரங்களில் இந்த சேவையை செய்ய பலர் முன் வந்து எங்களை தொடர்பு கொண்டனர். இதற்காக இந்தியா க்ளீன் ஸ்வீப் என்ற வாசகத்துடன் இந்தியாவை தூய்மையாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம். இந்த வருடமும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இதில் ஈடுபடவுள்ளனர். நாளை காலை சென்னை கடற்கரையை சுத்தப்படுத்தும் பணியில் இவர்கள் ஈடுபடுவார்கள். தூய்மையாகும் சென்னை கடற்கரை" என்றார்.

For Registration:

Organisations: http://bit.ly/ORCC7

Individual: http://bit.ly/INDICC7

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!