Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மக்கள் நண்பன் தேனீ !

உலக தேனீக்கள் தினம்: #worldhoneybeeday2016           

சுறுசுறுப்பாக இயங்க வேண்டும் என்பதற்குப் பெரியவர்கள் அடிக்கடி  சொல்லும் உதாரணம், 'தேனீ மாதிரி உழைக்கணும்' என்பதாகவே இருக்கும்.  அப்படி, உழைப்புக்கு முன்னுதாரணம் காட்டப்படும் தேனீக்கள் நாளுக்கு நாள் அழிந்துவருகின்றன  என்பது வேதனை தரும் விஷயமல்லவா! அதுமட்டுமல்ல, பூக்களில் இருந்து தேனீக்கள் சேகரித்து , தேனடை மூலமாகக் கொடுக்கும் 'தேன் ', உலகின் மிகச் சிறந்த இயற்கை மருத்துவப்  பொருளாகக் கருதப்படுகிறது. அத்தகைய சிறப்பு வாய்ந்த தேனீக்களைக் கொண்டாட வேண்டிய தினம் இன்று. ஆம், இன்று உலக தேனீக்கள் தினம்.

 'தேனீக்கள் அனைத்தும் இப்புவியில் இருந்து அழிக்கப்பட்டுவிட்டால், அதன்பின்மனிதன் வாழ்வதற்கு 4 ஆண்டுகளுக்கு மேல் மிச்சம் இருக்காது' என்பார்கள். இதிலிருந்து தேனீக்கள் எந்த அளவுக்கு மனித வாழ்க்கைக்கு முக்கியமானவை என்று அறியலாம். தாவரங்களின் மகரந்தச் சேர்க்கைக்கு முக்கியப் பங்கு ஆற்றுபவை தேனீக்கள். ஆனால், அவை இன்று அழிந்து வரும் உயிரினமாக மாறிவருவது வேதனைக்குரிய விஷயம்.

முப்பெரும் கூட்டணி:


ஒரு தேன் கூட்டில் மூன்று வகையான தேனீக்களின் கூட்டணி இருக்கும். அக்கூட்டணியில்,  ஒரே ஒரு ராணித் தேனீயும், ஆயிரக்கணக்கான ஆண் தேனீக்களும், பல்லாயிரக்கணக்கான வேலைக்காரத் தேனீக்களும் இருக்கும் . இவற்றில் ராணித் தேனீ மட்டுமே முட்டையிட்டு, இனவிருத்தி செய்யும். அக்கூட்டின் கேப்டன்      ராணித் தேனீதான். அது சராசரியாக மூன்று வருடங்கள் வரை உயிர் வாழும். வேலைக்காரத் தேனீக்கள் 35 நாட்கள் வரை உயிர்வாழ்கின்றன. ஆனால், மற்ற ஆண் தேனீக்கள்  ராணித் தேனீயுடன் உறவுகொண்ட பின் இறந்துவிடும். 

உணவுச் சேகரிப்பு, தேன்கூடு கட்டுவது, தேனைப் பக்குவப்படுத்துவது போன்ற மிக முக்கியப் பணிகளை வேலைக்காரத் தேனீக்கள்  செய்கின்றன. தேன் கூட்டைப் பராமரிப்பது இதர ஆண் தேனீக்களின் வேலை. இப்படி ஒவ்வொரு வேலையையும் பிரித்துக்கொண்டு செய்து, அந்தக் கூட்டமைப்பை ஒரு கட்டுக்கோப்பில் வைத்திருக்கின்றன தேனீக்கள்.  

வருமுன் காப்பவை:
  தேனீக்கள் வருமுன் காப்பவை. தேனீக்கள் தேனைச் சேகரிப்பதன் முக்கிய நோக்கமே, பூக்கள் பூக்காத காலங்களிலும், தங்களுக்குத் தேவையான உணவைச் சேமித்து வைத்துக்கொள்ள வேண்டும் என்பதுதான். அதனால்தான், ஆண்டொன்றுக்கு 450 கிலோ எடையளவில், மலரின் குளுகோஸ், புரோபோலிஸ் எனப்படும் பிசின், நீர் மற்றும் மகரந்தத்தை முன்கூட்டியே கொண்டுவந்து சேர்த்து விடுகின்றன. அப்படி, தேனீக்கள் தேனைச் சேகரித்துப் பதப்படுத்துவதுதான்  உணவுப் பதப்படுத்துதலின் முன்னோடி எனலாம்.

தேடல் மிகுந்தவை: 


  தேனீக்கள் தங்கள்  உணவுக்காக வருடத்துக்கு 1 லட்சம் கி.மீ தூரம் பயணிக்கும்; அவற்றின்  பறக்கும் வேகம் சராசரியாக மணிக்கு 40 கி.மீ என்றால், அவை எவ்வளவு சுறுசுறுப்பு என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

சமிக்ஞை கில்லாடிகள்: 
  தேனீக்கள் தன் கூட்டைக் கலைத்து ஓர் இடத்திலிருந்து மற்றோர் இடத்துக்குச் செல்லும்போது, முதலில் அக்கூட்டில் இருந்து ஒரு வேலைக்காரத் தேனீ சென்று, ஏதேனும் புதிய இடம் கூடு கட்டுவதற்கு ஏற்ற இடமாக உள்ளதா, தட்ப வெப்பம் சீராக உள்ளதா என்று ஆராய்ந்து வரும். பின், தான் அறிந்த தகவலை இதர வேலைக்காரத் தேனீக்களுடன் நடன அசைவுகள் மூலம் தெரிவிக்கும். உடனே, மற்ற தேனீக்களும் சென்று, அந்த இடத்தைப் பார்வையிட்டு வந்த பின்பு, இடப்பெயர்ச்சியைத் தீர்மானிக்கும்.   
அதே போல், உணவுத் தேவை ஏற்படும்போது, வேவு பார்க்கும் தேனீக்கள் சில  முதலில் சென்று, பூக்கள் இருக்கும் இடத்தைக் கண்டுபிடித்துக்கொண்டு, கூட்டுக்குத் திரும்பும். வழக்கம்போல் இதை மற்ற வேலைக்காரத் தேனீக்களுக்கு தாங்கள் கண்டறிந்த சோலை எந்தத் திசையில், எவ்வளவு தூரத்தில் உள்ளது என்பதை நடன அசைவுகள் மூலம் தெரிவிக்கும்.

பசுமைப் போராளிகள்: 
  வேலைக்காரத் தேனீக்கள் தேன் சேகரிக்கும்போது, அவற்றின் காலில் ஒட்டிக்கொள்ளும் மகரந்தத்தை, வெல்வேறு பூக்களில் மாறி மாறி உட்காரும்போது, தங்களை அறியாமல் விட்டுச் செல்கின்றன. இதனால்தான், 'அயல் மகரந்தச் சேர்க்கை' எனும் நிகழ்வு நடைபெற்று, நிறைய வனப்பரப்பு உருவாகிறது. அந்த வகையில் தேனீக்களை பசுமைப் போராளிகள் எனலாம்.

அருமருந்து: 
  தேனுடன் எலுமிச்சம் பழச்சாறு கலந்து அருந்தி வந்தால், குமட்டல் மற்றும்  தலைவலி குணமாகும். தேனையும் மாதுளம் பழரசத்தையும் சமபங்கு கலந்து தினமும் குடித்து வந்தால், இதய நோய்கள் தீரும்.
  கருஞ்சீரகத்தை நீர்விட்டுக் காய்ச்சி, அதில் தேன் கலந்து சாப்பிட, கீழ் வாதம் குணமாகும். வயிற்று வலி ஏற்பட்டவர்களுக்குத் தொப்புளைச் சுற்றித் தேன் தடவ வேதனை குறையும். இவை, கிராமப்புறங்களில் நம் பாட்டிகளே கண்டுணர்ந்த இயற்கை வைத்திய முறைகள்.


தற்காலத்தில் தேனீக்கள் அழிந்து வருவதற்கு மிக முக்கியக் காரணம், பூச்சிக்கொல்லி மருந்துகள், செயற்கை உரங்கள், மரபணு மாற்றப்பட்ட பயிர்கள் ஆகியவைதான்.  தேனீக்களை அழிக்காமலே தேன் எடுக்கும் எத்தனையோ நவீன முறைகள் வந்துவிட்டன. ஆனாலும், நெருப்பு மூட்டித் தேன் எடுக்கும் பழங்கால முறையையே இன்றைக்கும் பலர் பின்பற்றி வருவதும் தேனீக்கள் அழிய ஒரு காரணமாக இருக்கிறது.


நம் வாழ்வின் உணவு உற்பத்திக்குப் பெரும்பங்கு வகிக்கும், நம் வாழ்வாதாரத்துக்கு அடிப்படையாக விளங்கும் தேனீக்களுக்கு ஒரு தினம் கொண்டாடவில்லையென்றாலும் பரவாயில்லை; இயற்கைக்குத் துரோகம் இழைக்கும் எந்தவொரு காரியத்தையும் செய்யாமல் இருப்போம்.

 - ம.மாரிமுத்து 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement
Advertisement