வெளியிடப்பட்ட நேரம்: 11:21 (01/09/2016)

கடைசி தொடர்பு:15:09 (01/09/2016)

எழுத்தாளர்களின் வேடந்தாங்கல்...! கவிஞர் மீராவின் நினைவலைகள்

"கனவுகள்+கற்பனைகள்= காகிதங்கள்."
வாசிக்கும் பழக்கமுள்ள யாரிடமும் இந்த வரிகளை சொன்னால் படக்கெந்து அவர்களுக்கு கவிஞர் மீராவின் ஞாபகம் வந்துவிடும். தீக்குச்சியை கொளுத்தி போட்டதுபோன்ற எழுத்துக்களால் சமுதாய அழுக்கை எரிப்பதற்காக 1970 - 80 கால கட்டங்களில் கொளுத்தி போட்டவர். பல புதிய கவிஞர்களுக்கு மெழுகுவர்த்தியாய் வாழ்ந்தவர். அவர் வாழ்ந்த காலம் வரை சிவகங்கையை கவிதை கங்கையால் குளிப்பாட்டிக் கொண்டிருந்தார். அவர் குறைவான புத்தகங்கள் எழுதியிருந்தாலும், அனைத்தும் நிறைவானவை.
ஆனால், அவர் நடத்திய அகரம் அச்சகம், அவர் உடலின் இரத்த ஓட்டம் போல் எப்போதும் ஓய்வில்லாமல் ஓடிக்கொண்டிருக்கும், தங்கள் படைப்புகளை புத்தகம் போட வசதியற்ற சக தோழர்களுக்காக அச்சகம் ஓடிக் கொண்டிருக்கும்.அன்னம் பதிப்பத்தை அவருக்காக நடத்தவில்லை.
பாரதி விட்டு சென்ற புதுக்கவிதை தேரை, பலரும் இழுத்த போதிலும், அதை சிவகங்கை கருவைக்காட்டுக்குள்ளும், கண்மாய்க்குள்ளும் முடிந்த வரை இழுத்து கொண்டு வந்தவர். கவிஞர் மீராவை இன்றைய தலைமுறைக்கு அவ்வளவாக தெரிந்திருக்க வாய்ப்பில்லைதான். ஆனால் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டியவர். அதற்கு காரணம் அவருடைய கவிதைகள், கட்டுரைகள். எக்காலத்துக்கும் புரியும், படித்தால் அறிவு விரியும். அப்படிப்பட்ட அற்புதமான கவிஞர் மீராவின் நினைவு தினம் இன்று.
மீரா என்ற மீ. ராசேந்திரன், 1938 ஆம் ஆண்டு சிவகங்கையில் பிறந்தவர், சிவன் கோயில் தெருவில் வளர்ந்தவர். இவருடைய பெற்றோர்கள் பர்மாவில் தொழில் செய்துவிட்டு சொந்த ஊரில் குடியேறியவர்கள். சிவகங்கைக் கல்லூரியில் படித்து அங்கேயே பேராசிரியராகவும் பணியாற்றி முதல்வர் பொறுப்பு வரைக்கும் வகித்து ஓய்வு பெற்றவர்.
ஆரம்பத்தில் திராவிட இயக்க கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு, பின் பொதுவுடமைக்காராக மாறிப்போனார். சிவகங்கை மன்னர் துரைசிங்கம் கல்லூரியில் இவர் பேராசிரியராக பணி செய்தார். கல்லூரிப்பணி, சமூகப்பணி, ஆசிரியர் இயக்க பணி இவைகளுடன் இலக்கிய பணியையும் மிகவும் விரும்பி செய்தார். 
இராசேந்திரன் கவிதைகள், மூன்றும் ஆறும், கோடையும் வசந்தமும், ஊசிகள், கனவுகள்+கற்பனைகள்=காகிதங்கள் , குக்கூ,  வா இந்தப் பக்கம், மீரா கட்டுரைகள், பாரதியம், சுயம்வரம் போன்ற நூல்களை அவர் எழுதியுள்ளார். இதில்  ஊசிகள்,  கனவுகள்+கற்பனைகள்=காகிதங்கள் ஆகிய கவிதை நூல்கள் இலக்கிய வெளியில் மட்டுமல்ல, பொதுவெளியிலும் மிக பரவலாக பேசப்பட்டது. இளைஞர்கள் கொண்டாடும் நூல்களாக அந்த காலகட்டத்தில் இவை இருந்தது. 

கந்தக பூமியான சிவகங்கையில், கவிதை சந்தனமாக திகழ்ந்தார் மீரா. அந்த காலகட்டத்தில் பிரபலமான கவிஞர்களும், எழுத்தாளர்களும் சிவகங்கைக்கு படையெடுத்து வந்தனர். மாதம்தோறும் மீரா வீட்டு வாசலில் கவி இரவு நடைபெறும். அதை பார்க்க ஊர் சனமெல்லாம் வெட்டலில் கூடும். வறுமைக்கு வாக்கப்பட்ட தன் மண்ணின் மக்களை, இலக்கிய செழுமையாக்க இதுபோன்ற இலக்கிய நிகழ்வுகளை நடத்துவதை வழக்கமாக கொண்டிருந்தார் கவிஞர் மீரா.
கவிக்கோ அப்துல்ரகுமானும், சிற்பி, கா.காளிமுத்தும், பேரா.நா.தர்மராஜனும் மிகவும் நெருக்கமான நண்பர்களாக இருந்தனர். கல்லூரி பேராசிரியர் உரிமைகளுக்காக தீவிரமாக செயலாற்றி வரும் 'மூட்டாவை' அன்று உருவாக்கியவர்களில் முக்கியமானவர் மீரா.
சமூக அவலங்களையும் சுட்டிக்காட்ட, கண்டிக்க அவர் தவறவில்லை. மீராவின் ‘ஊசிகள்’ நூல் அன்றைய தமிழகத்தின் அரசியல், சமூக வாழ்க்கையின் சிக்கல்களை, சிறுமைகளை, கொடுமைகளை அழகியலோடும் கடுமையாக சாடும் எள்ளல் வரிகளோடும் வெளியானது.
எங்கள் ஊர் எம்.எல்.ஏ
ஏழு மாதத்தில்
எட்டுத் தடவை
கட்சி மாறினார்
மின்னல் வேகம்
என்ன வேகம்? 
இன்னும் எழுபது
கட்சி இருந்தால்
இன்னும் வேகம்
காட்டி இருப்பார்.....
என்ன தேசம்
இந்தத் தேசம்?

இது போன்று அரசியல் சமூக வாழ்வின் சிக்கலை தனது கவிதையில் சுட்டிக்காட்டி வந்தார் கவிஞர் மீரா.
அதேபோல் ஜப்பானிய ஹைக்கூ கவிதை வடிவத்தை கொஞ்சம் மாற்றி 'குக்கூ' என்று எழுதினார். மோசமான அரசியல் பண்பாட்டை, சாதி பெருமிதத்தை, சமூக அவலங்களை என எதையும் அவர் கண்டிக்க தவறவில்லை.
"செத்த பிணத்தைக்
கட்டி அழலாம்
முடிந்தால்
காட்டி அள்ளலாம்..."

இது போன்ற கவிதைகளில், மோசமான அரசியல் பண்பாட்டை விமரித்தவர், படித்தவர்கள், முற்போக்காளர்கள் மத்தியிலும் சுயசாதி பெருமிதம் பின்னிக்கிடப்பதையும் தனது கவிதைகளில் எள்ளல் நடையில் விமர்சித்திருந்தார்.
உனக்கும் எனக்கும்
ஒரே ஊர் -
வாசுதேவ நல்லூர் ...
நீயும் நானும்
ஒரே மதம்...
திருநெல்வேலிச்
சைவப் பிள்ளைமார்
வகுப்பும் கூட,..
உன்றன் தந்தையும்
என்றன் தந்தையும்
சொந்தக்காரர்கள்...
மைத்துனன்மார்கள்.
எனவே
செம்புலப் பெயல்நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம்கலந் தனவே.

(நூல்- ஊசிகள். )
தந்தை பெரியாரின் சுயமரியாதை இயக்க தாக்கம், அறிஞர் அண்ணா தந்த தமிழ்மொழிக் காதல், மார்க்சின் பொதுவுடைமைச் சித்தாந்தங்கள் ஆகியவற்றை உள்வாங்கிக்கொண்ட கலவையாகத்தான் கவிஞர் மீரா திகழ்ந்தார். அதன் வெளிப்பாடாகவே அவருடைய கவிதைகளும், கட்டுரைகளும் இருந்தன. அன்னம் விடு தூது என்ற சிற்றிதழையும் நடத்திக் கொண்டிருந்தார். அது ஒரு மாறு்பட்ட இதழாக அப்போது வந்து கொண்டிருந்தது. சிவகங்கை சீமைக்கு விடுதலை போராட்டத்துடன் தொடர்புடைய வரலாற்று பெருமை இருந்தாலும் அதன் இலக்கிய பெருமை மீராதான். இவ்வளவு பெருமை வாய்ந்த மீரா, 2002 ஆம் ஆண்டு இதே நாளில் மறைந்தார். ஆனால் அவரை நினைவுபடுத்த எந்த முயற்சியும் அரசு செய்யவில்லை. அவர் பேரை சொல்லும் வகையில் சிவகங்கையில் ஒரு தெருவுக்கு கூட அவர் பெயர் இல்லை. 

ஆண்டு தோறும் மீராவின் நினைவு தினத்தை சிவகங்கை மக்களுக்கு நினைவூட்டி வரும் ஆசிரியர் இளங்கோ நம்மிடம் பேசினார். "கவிஞர் மீரா மறைவுக்கு வந்த கவிஞர்கள் நடத்திய இரங்கற்கூட்டத்தில் கவிக்கோ அப்துல்ரகுமான், கவிஞர்கள் மறைந்துவிட்டால் மக்களும் மறந்து விடுகிறார்கள். மக்களும், சக கவிஞர்களும் ஆண்டுதோறும் அவருக்கு மரியாதை செய்ய ஒரு நினைவிடம் சிவகங்கையில் கட்டப்பட வேண்டும் என தனது விருப்பத்தை தெரிவித்தார். அப்போது இருந்த அரசியல் தலைவர்கள் அதை செய்வதாக சொன்னார்கள். ஆனால் அது அப்படியே விட்டுப்போனது. சிவகங்கைக்கு பெருமை சேர்த்தவர் மீரா. அவர் பெயரில் தெருவுக்கு கூட பேரில்லை என்பது தான் வேதனை. அவர் மனனர் துரைசிங்கம் கல்லூரியில் நீண்டகாலம் சிறப்பாக பணி புரிந்தவர். அதனால் அந்த கல்லூரிக்கு செல்லும் சாலைக்காவது அவர் பெயரை சூட்டலாம்" என்றார்.
தன் பதிப்பாக்கங்களால் மிகச்சிறந்த விருதுகள் பெற்ற படைப்பாளிகளை உருவாக்கி அற்புத படைப்பாளி கவிஞர் மீரா. எழுத்தாளர்களின் வேடந்தாங்கலாக திகழ்ந்தவர். அவரது நினைவை போற்றுவதும், அவர் புகழ் பரப்புவதும் நம் ஒவ்வொருவரின் கடமை.

-செ.சல்மான்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்