Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

600 மாடுகளை அன்புடன் பாதுகாக்கும் ஈரோடு கோசாலை!

ஈரோடு மாவட்டம், கொடுமுடி அருகே சாவடிபாளையத்தில் அமைந்துள்ள, கோ சேவா சங்கத்தினுடைய கோசாலை பிரசித்தி பெற்றது. தனித்தனியாக செட் அமைக்கப்பட்டு ஒவ்வொரு மாட்டுக்கும் இடைவெளிவிட்டு சுத்தமாக சுமார் 600 மாடுகள் இங்கு பராமரிக்கப்பட்டு வருகின்றன. அதனை பராமரிப்பதோடு மட்டுமில்லாமல், நமது பரிகார பூஜைகளையும் கூட, இங்கே இலவசமாக செய்ய வாய்ப்பளிக்கின்றனர். 

இந்த கோசாலையைப் பராமரித்து வரும் அதன் நிர்வாகி விமல் கோயல், கோசாலை பற்றிய தகவல்களை நம்மிடம் பகிர்ந்துகொண்டார். "இந்த அமைப்பு 2004 -ம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி அன்று 21 நாட்டு மாடுகளை கொண்டு ஆரம்பிக்கப்பட்டது. இப்போது, 632 உள்ளூர் நாட்டு மாடுகளுடன், 10.8 ஏக்கர் பரப்பளவில் செயல்பட்டு வருகிறது. மேலும், இங்கே எந்த வெளிநாட்டு மாடுகளையும் இங்கே வளர்ப்பது இல்லை. ஒரு சில வெளிமாநில மாடுகள் வளர்க்க முடியாமல், இங்கே விட்டு சென்றுள்ளதை மட்டும் கவனித்து வருகிறோம். இங்கே கோ தானம் செய்யப்படும் மாடுகளையும் கவனித்து வருகிறோம். இந்த கோசாலை இந்தியாவில் உள்ள மற்ற கோசாலை நிர்வாகங்களுடன் தொடர்பில் உள்ளது. அதனால் பல்வேறு விதமான ஆலோசனைகள் எளிதாக பரிமாறப்படுகின்றன. இதற்கு தினசரி முப்பதாயிரம் ரூபாய் செலவாகிறது. அது மட்டுமல்லாமல் முப்பது தினசரி பணியாளர்களுக்கான கூலி என அனைத்தும் நன்கொடையாளர்களால் கொடுக்கப்படும் பணத்திலிருந்து செலவு செய்யப்படுகிறது. இங்கே மாட்டு பொங்கல், யுகாதி திருநாள், கோகுலாஷ்டமி போன்ற விழாக்கள் சிறப்பாக கொண்டாடப்படும். கோ மாதாவிற்கு பற்பல பூஜைகள் சிறப்பாக நடைபெறும். ஞாயிறு மற்றும் திங்கள் கிழமைகளில் வார பூஜைகள் நடைபெறும்" என்றார்.

கோ சேவா சங்கத்தில் விவசாய பிரிவை கவனித்து வரும் பாலசுப்ரமணியம் இதுகுறித்து நம்மிடம் விரிவாக பேசினார்... "இந்த இடத்தை வெறும் பசுக்களை பாதுகாக்கிற இடம்னு மட்டும் நினைக்கல... கோசாலையின் முக்கிய நோக்கமே நாட்டு பசு மாடுகளையும், காளை கன்றுகளை இறைச்சிக்காக கொல்லப்படுவதை தடுக்குறதும்தான். நாட்டு மாட்டின் மூலம் கிடைக்கும் சாணம், கோமியம் போன்றவற்றை பயன்படுத்தி பஞ்சகவ்யம், அமிர்தகரைசல் போன்ற இயற்கை உரங்களை உருவாக்கவும் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துறோம். இயற்கை விவசாயத்தை எல்லாரையும் பின் பற்ற வைக்கணும்ங்குறதுதான் எங்களின் இலக்கு. 

 கோசாலையில் வெவ்வேறு நாட்டு இன மாடுகளை கொண்டு வந்து வளர்க்கலாம். அது கிராம சுயராஜ்யத்துக்கு எதிரானது. அதனால நம்ம ஊர் நாட்டு பசுக்களையும் காங்கேயம் காளைகளையும் இங்க பராமரிச்சுக்கிட்டு வர்றோம். அது தவிர அடி மாட்டுக்கு போகிற நாட்டு மாடுகளை வாங்கி  பாதுகாக்குறோம். மாடுகளுக்கு தீவனமா தினமும் 2 டன் மக்காச்சோளத்தட்டு தேவைப்படுது. சங்கத்து மூலமா இப்போ 150 விவசாயிகள் மக்காச்சோளம் பயிரிடறாங்க. இந்த மாதிரி ஒரு விவசாய வளர்ச்சியைதான் இந்த கோசாலை ஊக்குவிக்குது. இப்போ சில ரசாயன பூச்சி மருந்துகளை பயன்படுத்துறாங்க, நாங்க இயற்கை விவசாயத்தின் மூலமா பயிரிட சொல்லி இருக்கோம். இன்னும் கொஞ்ச நாள்ல அவங்க மாறிடுவாங்க. அதுல கிடைக்கிற நன்மைகளை பார்த்துட்டு அவங்கள சுத்தி இருக்கவங்களும் இயற்கை விவசாயத்துக்கு மாறுவாங்க. பசுமை விகடன் பல பேர் விவசாயம் பண்ண தூண்டுகோலாக இருக்கு. அதே போல நாங்களும் இயற்கை விவசாயத்தை பாதுகாக்குறதுக்காக எங்களால் ஆன முயற்சியை எடுத்திருக்கோம். 

நாங்க இயற்கை விவசாயம் பண்றோம்னு சொல்லி வந்தவங்களுக்கு, இலவசமா காளைக் கன்றுங்களையும், கிடாரி கன்றுகளையும் இலவசமாக கொடுத்தோம். சிலர் அதை தவறான முறையில பயன்படுத்தப் பார்த்தாங்க, நாங்க அதைக் கண்டுபிடிச்சு தடுத்துட்டோம். இலவசமா கொடுத்தா அதுக்கு மதிப்பு இருக்கிறது இல்ல.

இயற்கை விவசாயத்தில் நாட்டு மாடுகளின் பங்கு அதிகம்ங்குறதால, சாவடிபாளையத்த சுத்தி உள்ள கிராமங்களை சேர்ந்த விவசாயிகளின் நாட்டு பசு மாடுகளுக்கு இலவசமா இனவிருத்தி செய்து கொடுக்கிறோம். இதுக்காகவே இருபது காங்கேயம் காளைகளை வளர்த்து வர்றோம். இந்த கோ சங்கத்தில் மாடு வளர்ப்பு குறித்த கருந்தரங்குகளும், நாட்டு மாடுகளின் மூலம் பஞ்சகவ்யம், ஊதுவர்த்தி, பினாயில், விபூதி மற்றும் மருத்துவ பொருட்கள் போன்றவற்றை எவ்வாறு தயாரிப்பது என்பதையும் இலவசமா சொல்லிக் கொடுக்குறோம்" என்றார்.


- ச.செந்தமிழ் செல்வன், லோ.பிரபு குமார்

படங்கள்: க.மணிவண்ணன்

(மாணவப் பத்திரிகையாளர்கள்)

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement