Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மருள், துத்தி, தராசுக்கொடி..இந்த ஆரோக்ய மூலிகைகளை இலவசமாக பெறலாமா?!

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே காமராஜர் நகரில் வசித்து வரும் 73 வயதான சோலைதாஸ், தனது பாட்டன்கள் காலத்தில் இருந்தே இயற்கை மூலிகைகளில் அலாதியான நம்பிக்கையை உடையவர். கடந்த 60 வருடங்களாக சில இயற்கை மூலிகைகளை தான் வசிக்கும் இடத்திலேயே வளர்த்து, அதனைப் பயன்படுத்தி வருகிறார். தற்பொழுது இந்த மூலிகைச் செடிகளை அதிக அளவில் வளர்த்து மூலிகைப் பண்ணையாக மாற்றி மற்றவர்களுக்கும் மூலிகைகளை கொடுத்து உதவுகிறார். இவர் 33 வருடங்களாக வரலாற்றுத்துறை ஆசிரியராகவும், கோச்சிக்குறிச்சி மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராகவும் பணியாற்றி ஓய்வு பெற்றவர். காலையில் மூலிகைத்தோட்டத்தில் இருந்தவரை சந்தித்தோம். 

"இயற்கையோடு ஒன்றி வாழவேண்டும், செயற்கை என சொல்லிக்கொண்டு உண்ணும் உணவு மூலம் வயிற்றை கெடுத்துக்கொள்ள கூடாது. நமக்கு எல்லா சத்துகளும் இலை, தழைகளாகிய கீரைகளில் இருந்தே கிடைக்கும். அடுத்ததாக காய்கறிகள் மற்றும் பழங்களிலிருந்து தேவையான சத்துக்கள் கிடைக்கின்றன. அத்துடன் மூலிகைகளையும் நாம் பராமரித்துப் பயன்படுத்தினால் நமக்கு நோயில்லா வாழ்வு சாத்தியமே. இப்போது அருகி வரும் மூலிகைகளானது, நம்மை சுற்றி வளரக்கூடியவைகள்தான். சிறுமலை அடிவாரம், பெரியகுளம் பண்ணை, பரளிபுதூர் அரசு வன அலுவலகம் மற்றும் அய்யனார் அருவி பக்கத்தில் இருந்து எடுத்து வந்த மூலிகைகளைத்தான் தற்போது வளர்த்து வருகிறேன்.

49 செண்டு இடத்தில் தூதுவளை, மாதுளை, பப்பாளி, மஞ்சணத்தி (நூணா), மஞ்சள் கரிசலாங்கண்ணி, அஞ்சு இலைநொச்சி, மூன்று இலைநொச்சி, முள்ளு முருங்கை (கல்யாண முருங்கை), காட்டாமணக்கு, எலுமிச்சை, வேம்பு, மருள், ஆடாதொடை, வாதாரகாச்சி, மணத்தக்காளி, அம்மன் பச்சரிசி, முடக்கத்தான், கீழாநெல்லி, நந்தியாவட்டை, முள்ளுசங்கு, புங்கை, தராசுக்கொடி (உரிகொடி, தலசுருளி) சோற்றுக் கற்றாழை, இலச்சக் கட்டக் கீரை, மருதாணி, துத்தி போன்ற மூலிகைகள் ஆகியவை என்னிடம் உள்ளன" என்றவர் மூலிகைகளின் பயன்பாடுகளை பற்றியும் விளக்கினார்.


 "மருள் என்னும் மூலிகை காது வலியை குணப்படுத்துவதில் சிறந்தது. தராசுக்கொடி என்னும் மூலிகைக்கு, விரியன் பாம்பு கடித்து வாயில் நுரை தள்ளும்போதும் கூட, உயிரைக் காப்பாற்றக் கூடிய வல்லமை உண்டு. மருதாணி, வெண்குஷ்டத்தை குணப்படுத்தக் கூடியது. லச்சக் கட்டக் கீரையை, இடுப்பு பிடி உள்ளவர்கள் இதனை உண்ண வலி நீங்கும். மாதுளை, வயிறு சம்பந்தப்பட்ட அனைத்து வியாதிகளுக்கும் சிறந்த மருந்து. நந்தியாவட்டை, கண் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களையும் குணமடைய செய்யும். அஞ்சு இலைநொச்சி வாத வலியை நீக்கும். எலுமிச்சை, நீர்க்கடுப்பு மற்றும் சூட்டினையும் குறைக்கும். ஆடாதொடை, குரலை வளப்படுத்தும் மற்றும் நெஞ்சு சளிக்கு நல்ல மருந்து. கீழாநெல்லி, மஞ்சள் காமாலைக்கு நல்ல மருந்து.

      முள்ளு முருங்கை, பெண்களின் கூந்தல் கருமையாக, நீளமாக வளர்வதற்கு உதவும். இதனை நெஞ்சு வலி மற்றும் வயிற்று வலிக்கும் பயன்படுத்தலாம். துத்தி, உள்மூலம், வெளிமூலம் போன்ற ஒன்பது வகையான மூலத்திற்கும் தீர்வு தரும். அம்மன் பச்சரிசி, முகப்பரு, முகத்தில் ஏற்படும் கருமை நிறக் கட்டி மற்றும் வெண்பருவினைப் போக்கும். முருங்கையின் மரப்பட்டையைத் தட்டி எடுக்கப்படும் சாறு, பாம்பு, பூரான், குளவி கடிகளுக்கு சிறந்த விஷமுறிவு மருந்தாகும்" என்றார். 

நாமும் நம்மால் முடிந்த மூலிகைகளை வளர்க்க முயற்சி செய்யலாமே!

கோ.கீதப்பிரியா, (மாணவப் பத்திரிக்கையாளர்),
படங்கள்: வீ சிவக்குமார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement