Published:Updated:

கரூர்: `அந்த ஓவியப் போட்டி தோல்விதான் இதுக்கு இன்ஸ்பிரேஷன்!' காய்கறித் தோட்டம் அமைத்த சிறுமி

காய்கறி அறுவடையில் நிரஞ்சனா
காய்கறி அறுவடையில் நிரஞ்சனா ( நா.ராஜமுருகன் )

`மரம் வளர்ப்பு' பற்றிய ஓவியப்போட்டியில் அவர் வரைந்த ஓவியம் பரிசுபெறவில்லை என்றாலும், அவர்களிடம் பெற்ற விதைகளைக் கொண்டு, தனது வீட்டியில் இயற்கை முறையில் நிரஞ்சனா காய்கறித் தோட்டத்தை அமைத்து, இயற்கை ஆர்வலர்களின் பாராட்டைப் பெற்றுள்ளார்.

கொரோனா ஊரடங்கு காலத்தில், ஓர் அமைப்பு வைத்த இயற்கை சம்பந்தமான ஓவியப்போட்டியில் தோல்வியைத் தழுவிய இரண்டாம் வகுப்பு படிக்கும் சிறுமி ஒருவர், போட்டி வைத்த அமைப்பிடமே நாட்டு காய்கறி விதைகளை வாங்கி, தனது தோட்டத்தில் காய்கறித் தோட்டத்தை இயற்கை முறையில் அமைத்து அசத்தியிருக்கிறார்.

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சியைச் சேர்ந்தவர் குமரேசன். டைப்ரைட்டிங் பயிற்சி மையம் வைத்து நடத்திவருகிறார். இவருக்கு நிரஞ்சனா என்ற மகள் உள்ளார். தற்போது, இரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். கொரோனா ஊரடங்கையொட்டி, கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன்பு, பசுமைக்குடி என்ற அமைப்பு பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக ஓவியப்போட்டியை வைத்தது. 'மரம் வளர்ப்பு' என்ற தலைப்பில் மாணவர்களை ஓவியம் வரையச் சொல்லி, போட்டி வைத்தார்கள். அந்தப் போட்டியில், நிரஞ்சனாவும் கலந்துகொண்டு, மரம் வளர்ப்பதின் பயன்கள் குறித்த ஓவியத்தை வரைந்து, பசுமைக்குடி அமைப்பு நிர்வாகிகளுக்கு அனுப்பினார்.

நிரஞ்சனா வரைந்த ஓவியம்
நிரஞ்சனா வரைந்த ஓவியம்
நா.ராஜமுருகன்
கரூர்: `யாருக்கும் சத்துக்குறைபாடு இருக்கக்கூடாது! பள்ளியில் காய்கறித் தோட்டம் அமைத்த தலைமை ஆசிரியர்

ஆனால், அவரது ஓவியம் பரிசுக்கு தேர்வாகவில்லை. இருந்தாலும், பசுமைக்குடி அமைப்பு நாட்டு விதைகள் கொடுப்பதைக் கேள்விப்பட்ட அந்தச் சிறுமி, தன் தந்தை மூலம் நாட்டுவிதைகளைக் கேட்டு வாங்கியிருக்கிறார். ஒன்றரை மாதங்களுக்கு முன்பு, அதைத் தனது வீட்டில் காலியாக உள்ள இடத்தில் விதைத்து, பெற்றோரின் ஆலோசனையோடு காய்கறித்தோட்டதைப் பராமரித்து வருகிறார். 'மரம் வளர்ப்பு' பற்றிய ஓவியப்போட்டியில் அவர் வரைந்த ஓவியம் பரிசுபெறவில்லை என்றாலும், அவர்களிடம் பெற்ற விதைகளைக் கொண்டு, தனது வீட்டியில் இயற்கை முறையில் நிரஞ்சனா காய்கறித் தோட்டத்தை அமைத்து, இயற்கை ஆர்வலர்களின் பாராட்டைப் பெற்றுள்ளார்.

தனது தோட்டத்தில் உள்ள காய்கறிச் செடி, கொடிகளுக்கு தண்ணீர் ஊற்றுதல், காய்கறிகளைப் பறித்தல் என்று 'பிஸி'யாக இருந்த நிரஞ்சனாவை சந்தித்துப் பேசினோம்.

"எங்கப்பாவும், அம்மாவும் எனக்கு மரம் வளர்க்கிறதைப் பத்தி சிறுவயதில் இருந்தே ஆர்வத்தை ஏற்படுத்தினாங்க. அதனால், எங்க வீட்டைச் சுற்றி பத்துக்கும் மேற்பட்ட மரங்களை வச்சு வளர்த்துக்கிட்டு வர்றோம். இந்த நிலையில்தான், கடந்த ஒன்றரை மாதத்துக்கு முன்பு பசுமைக்குடி அமைப்பு, மரம் வளர்க்கிறதைப் பத்தி ஓவியப்போட்டி வச்சாங்க. அதைப்பத்தி என்கிட்ட சொன்ன எங்கப்பா, 'நீயும் இந்தப் போட்டியில் கலந்துக்க'னு உற்சாக்கப்படுத்தினார். நானும் ஆர்வத்தோடு அந்தப் போட்டியில் கலந்துகிட்டேன். மரம் வளர்த்தால், மழை பெய்யும், மழை பெய்தால், பூமி செழிக்கும், பூமி செழித்தால், பூமியில் உள்ள அனைத்து உயிர்களும் பிழைக்கும்னு அர்த்தம் வர்றமாதிரி ஓவியம் வரைஞ்சேன்.

காய்கறி அறுவடையில் நிரஞ்சனா
காய்கறி அறுவடையில் நிரஞ்சனா
நா.ராஜமுருகன்

அதை எங்கப்பா, போன் மூலமாக பசுமைக்குடி அமைப்புக்கு அனுப்பினார். `கண்டிப்பாக நீதான் முதல் பரிசு வாங்குவ'னு எங்கப்பா சொன்னார். நானும் அப்படிதான் நினைச்சுக்கிட்டு இருந்தேன். ஆனா, எனக்கு பரிசு கிடைக்கலை. மனசு சோர்ந்துப்போச்சு. அப்போதான் பசுமைக்குடி அமைப்புல உள்ளவங்க, எல்லாருக்கும் இயற்கை விதைகளைக் கொடுப்பதைப் பற்றி கேள்விப்பட்ட எங்கப்பா, `எங்களுக்கும் காய்கறி விதைகள் வேணும்'னு கேட்டு வாங்கினார். வெண்டை, கொத்தவரை, அவரை, சுரை, பீர்க்கன், தண்டுக்கீரை, முருங்கை, சிறுகீரை, பருப்புக்கீரைனு பல காய்கறிகளோட விதைகளைக் கொடுத்தாங்க.

அதை எங்கப்பா எங்க தோட்டத்துல, என் கையால விதைக்க வச்சார். தினமும் நான், எங்கப்பா, அம்மானு மூணு பேரும் போட்டிபோட்டுக்கிட்டு அதுக்கு தண்ணீர் ஊற்றிவந்தோம். ஆடுகளோட கழிவு, சமையலுக்குப் பயன்படுத்தின காய்கறிகளோட கழிவுனு இயற்கை உரங்களை மட்டுமே பயன்படுத்தினோம். அதனால், எல்லா செடி, கொடிகளும் நல்லா வளர்ந்துச்சு. இப்போ வெண்டை காய்க்குது. கீரையைப் பறிச்சு சமையலுக்குப் பயன்படுத்துகிறோம். இயற்கையா வௌஞ்சதால, அனைத்தும் அவ்வளவு ருசியா இருக்கு. முன்னாடியெல்லாம் காய்கறிகளைச் சாப்பிட மாட்டேன்.

அறுவடை செய்த காய்கறியைக் கொடுக்கும் நிரஞ்சனா
அறுவடை செய்த காய்கறியைக் கொடுக்கும் நிரஞ்சனா
நா.ராஜமுருகன்

இப்போ இயற்கை முறையில் விளைஞ்ச காய்கறிகள்ங்கிறதால, அதுவும் நானே விதைச்ச காய்கறிங்கிறதால, மிச்சம் வைக்காம சாப்பிடுறேன். அதோடு, நான், எங்கப்பா, அம்மானு மூணுபேரும் ஒவ்வொரு செடிகளையும் பிரிச்சுக்கிட்டு, அதுக்கு நீரூற்றி வளர்க்கிறோம். வெண்டைச்செடியையும் சுரைக்காய் செடியையும் தண்ணீர் ஊற்றி வளர்க்கிறேன். நான் வளர்க்கிற செடிகள்தான், அவங்க வளர்க்கிற செடிகளைவிட நல்லா வளர்ந்திருக்கு. நான் ஓவியப்போட்டியில ஜெயிக்கலை. ஆனால், அவங்ககிட்ட வாங்கின விதைகளைக் கொண்டு, உண்மையிலேயே தோட்டம் அமைத்து, நிஜத்துல ஜெயிச்சுட்டேன். அந்த ஓவியப் போட்டி தோல்விதான் இதுக்கு இன்ஸ்பிரேஷன்!" என்று வெள்ளந்தியாகச் சொல்லி முடித்தார்.

அடுத்த கட்டுரைக்கு