பத்துக்கு பத்து அடி இருந்தால் 10 மாடுகள் வளர்க்கலாம்.. நவீனமாகும் மாடு வளர்ப்பு..! | modernization Cattle breeding 10 cows reared

வெளியிடப்பட்ட நேரம்: 12:02 (17/11/2016)

கடைசி தொடர்பு:14:09 (18/11/2016)

பத்துக்கு பத்து அடி இருந்தால் 10 மாடுகள் வளர்க்கலாம்.. நவீனமாகும் மாடு வளர்ப்பு..!

மாடு வளர்ப்பு

வேளாண் துணைத்தொழில்களில் முக்கியமானது பால் பண்ணை. மாடு வளர்ப்பு நல்ல லாபம் தரக்கூடிய தொழில்தான் என்றாலும், வேலையாட்கள் கிடைக்காதது, மாடுகளுக்கான தீவனம் வளர்க்க ஏக்கர் கணக்கில் நிலம், அதற்குத் தேவையான தண்ணீர் போன்ற காரணங்களால் பலர் பால் பண்ணை தொழிலில் நுழையவே தயக்கம் காட்டி வருகிறார்கள். ஆனால், இனி மாடுகளுக்கான தீவனம் வளர்க்க ஏக்கர் கணக்கில் இடம் தேவையில்லை. 60 சதுர அடி இடம் இருந்தால் போதும்..பத்து மாடுகளுக்கான தீவனம் உற்பத்தி செய்து விடலாம்.’’ என்கிறார் திண்டுக்கல்லைச் சேர்ந்த சரவணக்குமார். மென்பொருள் துறையில், பல நிறுவனங்களில், பல நாடுகளில் பணிபுரிந்தவர். ‘‘ நான் ஐ.டி வேலையையும் என்ஜாய் பண்ணித்தான் செஞ்சிகிட்டு இருந்தேன். ஆனாலும், அங்க நமக்கு மேல சில பேரு இருப்பாங்க.. தினமும் சாயங்காலம் 5 மணிக்கு கான்கால்ல (கான்பரன்ஸ் கால்) வந்து, வறுத்தெடுப்பாங்க. அது பெரிய டென்சனா இருக்கும். இந்த நிலையில, என்னோட அப்பாவுக்கு உடல்நிலை சரியில்லாம போனதும், அவரோட தொழிலை கவனிச்சுக்கறதுக்காக வேலையை விட்டுட்டு வந்தேன். எனக்கு சின்ன வயசுல இருந்தே விவசாயத்து மேல ஒரு ஈடுபாடு இருந்துச்சு. இங்க வந்ததும் அது அதிகமாச்சு..எங்களுக்கு இருந்த தென்னந்தோப்பை பாத்துகிட்டு இருந்தேன். ஆனா, அதுல பெருசா வருமானம் வரலை. அப்பத்தான் பால் பண்ணை ஆரம்பிக்கலாம்னு ரெண்டு மாடுகளோட ஆரம்பிச்சேன். இப்ப 30 மாடுக இருக்கு. எல்லாமே கலப்பின மாடுங்கதான்.

 இத நான் ஆரம்பிச்சு நாலு வருஷம் ஆச்சு...இந்த நாலு வருஷத்துல பல தோல்விகள், ஏமாற்றங்கள், இழப்புகளை சந்திச்சேன். அதெல்லாம் தான் எனக்கு நிறைய அனுபவத்தைக் கொடுத்திருக்கு. ஒரு மாடு தினமும் எத்தனை லிட்டர் பால் கொடுக்குது..எவ்வளவு தீவனம் எடுத்துக்குதுங்கிற வரைக்கும் தினமும் புள்ளிவிபரங்களை கம்யூட்டர்ல பதிவு பண்ணிடுவேன். ஓரளவுக்கு பண்ணை இப்ப லாபகரமாப் போயிட்டு இருக்கு. இந்த நிலையில, மழையில்லாம தீவன பயிர்கள் வாட ஆரம்பிச்சது. தீவனம் அறுத்துப் போடுற வேலையாளும் அடிக்கடி லீவு போட ஆரம்பிச்சாரு. இதுக்கு மாற்று என்னன்னு யோசிச்சு, இணையத்துல தேடுனப்ப ‘ஹைட்ரோபோனிக்‘ முறையை பத்தி தெரிஞ்சுகிட்டேன். ‘ஹைட்ரோபோனிக்‘ங்கிறது வேறொன்னும் இல்லை..நாம தானியங்களை முளைகட்ட வெச்சு சாப்பிடுற மாதிரி, மக்காச்சோளத்தை முளைக்க வெச்சி, கால்நடைகளுக்கு தீவனமாக் கொடுக்குற ஒரு முறை. இந்த முறையை பத்தி தெரிஞ்சதும், டிரேக்கள்ல மக்காசோளத்தைக் கொட்டி, ஹைட்ரோ போனிக் முறையில வளர்த்துப் பார்த்தேன். அது சரியா வரலை. அப்பத்தான் கோபாலகிருஷ்ணன் எனக்கு அறிமுகமானரு, சொட்டுநீர் கம்பெனியைச் சேர்ந்த அவர்தான், ‘ஹைட்ரோ போனிக் முறையில தீவனம் வளர்க்குறதுக்காகவே தனி டிரேக்கள் இருக்கு’னு வாங்கிக்கொடுத்தாரு. அதை பயன்படுத்தி வளர்த்தப்ப நல்ல முறையில வளர்ந்தது. இந்த முறையில வளர்ற தீவனத்துல அதிக புரதச்சத்து இருக்கு. வழக்கமா 25 கிலோ பசுந்தீவனம் திங்குற மாடுகளுக்கு, 10 கிலோ ஹைட்ரோபோனிக் தீவனம் போதும். ஒரு கிலோ மக்காசோளத்தைப் போட்டா எட்டு கிலோ தீவனம் கிடைக்குது’’ என்றவர், ஹைட்ரோபோனிக் முறையில் தீவனம் வளர்க்கும் முறையை பற்றிச் சொல்லத் தொடங்கினார்.

மாடு வளர்ப்பு

ஹைட்ரோபோனிக் தீவனம் வளர்க்கும் முறை!
‘‘ மக்காச்சோளத்தை 24 மணி நேரம் தண்ணியில ஊறப்போட்டு, அடுத்த 24 மணி நேரம் இருட்டு அறையில வெச்சிருந்தா முளைக்கட்டும். அப்படி முளைக்கட்டுன விதைகளை, ஹைட்ரோபோனிக் டிரேக்கள்ல நிரப்பி, செட்டுக்குள்ள வைக்கணும். இந்த செட்ல நாலு அடுக்கு இருக்கும்..ஒவ்வொரு அடுக்குலயும் ரெண்டு பகுதி இருக்கும். தண்ணி தெளிக்குறதுக்காக ‘பாகர்’ (நுண்நீர் தெளிப்பு) அமைப்பும் இதுல இருக்கு. தினமும் ஒரு டிரேயில மக்காசோளத்தை நிரப்பி, செட்ல வெச்சிட்டே வரணும். 8 வது நாள் எல்லா இடமும் நிரம்பிடும். அன்னிக்கு கடைசி டிரேயை வெச்சுட்டு, முதல் நாள் வெச்ச டிரேயை எடுத்தா, மக்காச்சோளம் நாத்து மாதிரி முளைச்சு இருக்கும். அதை அப்படியே மாட்டுக்கு தீவனமாக் கொடுக்கலாம். தீவனத்தை அறுவடை செஞ்ச இடத்துல மறுபடியும் மக்காச்சோளம் போட்டு டிரேயை வெச்சுடணும். இப்படி சுழற்சி முறையில செய்யும்போது, தினமும் கிடைச்சுகிட்டே இருக்கும். உரம், பூச்சிக்கொல்லி எதுவும் இல்லாத தீவனத்தை மாட்டுக்குக் கொடுக்குறதால இயற்கையான பால் கிடைக்குது. இந்த தீவனத்தைக் கொடுக்கறதால புண்ணாக்கு செலவு, ஒரு மாட்டுக்கு அரை கிலோ அளவுக்கு குறையுது. இப்ப நான் பசுந்தீவனம் போட்டு இருக்க நிலத்துல இனிமே மக்காசோளம் சாகுபடி செய்யப்போறேன். அதுமூலமா மக்காச்சோளம் வாங்குற பணமும் மிச்சமாகும். அதோட தட்டைகளை உலர் தீவனமாக் கொடுத்திடுவேன். அது மூலமா, வைக்கோலுக்கான செலவும் குறைஞ்சிடும். என்னோட அனுபவத்துல ஹைட்ரோபோனிக் முறையில தீவனம் வளர்த்தா பால் பண்ணை நிச்சயம் லாபகரமானதா இருக்கும். இதை ஆடுகளுக்கும் கொடுக்கலாம். பால் பண்ணைகளைப் பொருத்தவரை குறைஞ்சபட்சம் 30 மாடுகள் இருந்தால் தான் லாபகரமான பண்ணையா இருக்கும்..அது மூலமா மாசம் ஒரு லட்ச ரூபாய் நிச்சய வருமானம் பார்க்கலாம்‘‘. என்றார்.

அது என்ன ஹைட்ரோபோனிக்?
ஹைட்ரோபோனிக் என்பது மண்ணில்லாமல் விவசாயம் செய்யும் முறை. நமது முன்னோர்கள் பயன்படுத்திய முளைப்பாரி தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டது தான் ஹைட்ரோபோனிக். முளைகட்டிய விதைகளை டிரேக்களில் கொட்டி, அதிக வெளிச்சம் படாதவாறு வைத்து, தண்ணீர் தெளித்து வந்தால். அந்த விதைகள் முளைக்கும். எட்டு நாட்களில் நாற்றுகளாக இருக்கும் நிலையில் அதை எடுத்து தீவனமாக பயன்படுத்தலாம். இந்த தீவனம் அதிக புரதசத்து உள்ளது. இதை அமைக்க 60 சதுர அடி இடம் இருந்தால் போதும். புத்தகத் அலமாரிப்போல நான்கு அடுக்குகள் கொண்ட பிவிசி பைப் மூலம், டிரேக்களை அடுக்கி வைப்பதற்கு ஏற்ற ரேக்குகள் அமைத்துக்கொள்ள வேண்டும். ஹைட்ரோபோனிக் முறையில் தீவனம் வளர்ப்பதற்கான பிரத்யோக டிரேக்கள் கிடைக்கின்றன. இந்த டிரேக்களில் முளைகட்டிய மக்காச்சோள விதைகளைக் கொட்டி பரப்பி, ரேக்குகளில் அடுக்கி வைத்து, தண்ணீர் தெளித்து வரவேண்டும். தண்ணீர் பூத்தூவல் போல விழவேண்டும். அதற்காக பாகர் அமைப்பை அமைக்க வேண்டும். தற்போது இவை அனைத்தும் உள்ளடக்கிய ‘ஹைட்ரோபோனிக் கிட்’ விற்பனைக்கு கிடைக்கின்றன. 

தொடர்புக்கு : 95000 54080

-ஆர்.குமரேசன், படங்கள் : வீ.சிவக்குமார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்