2016-ல் சிக்கிம் சாதித்ததும், இனி தமிழகம் சாதிக்க வேண்டியதும்! #OrganicFarming | How Sikkim became India’s first organic state in 2016?

வெளியிடப்பட்ட நேரம்: 18:47 (03/01/2017)

கடைசி தொடர்பு:14:11 (06/01/2017)

2016-ல் சிக்கிம் சாதித்ததும், இனி தமிழகம் சாதிக்க வேண்டியதும்! #OrganicFarming

சிக்கிம் விவசாயம்

2016-ம் ஆண்டு சிக்கிம் மாநிலத்திற்கு பல அங்கீகாரங்களை அளித்துள்ளது. சிக்கிம் மற்ற மாநிலங்களுக்கு முக்கிய பாடத்தையும் தந்துள்ளது. இந்தியாவின் வடகிழக்கில் உள்ள சிறிய மாநிலம்தான் சிக்கிம். ஆனால், இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்குமே முன்னுதாரணமாக விளங்குகிறது சிக்கிம். காரணம் சிக்கிம் மட்டும்தான் இந்தியாவிலேயே முழு ஆர்கானிக் மாநிலம். பெருமைக்குரிய விஷயமாக இருக்கும் இதனை செய்ய சிக்கிம் மாநிலத்திற்கு தேவைப்பட்டது மொத்தம் 13 ஆண்டுகள்.

சிக்கிம் மாநிலத்தில் உள்ள சுமார் 75000 ஹெக்டேர் விவசாய நிலங்கள் " நேஷனல் புரோகிராம் பார் ஆர்கானிக் புரொடக்சன் " வரையறுத்த இயற்கை விவசாய கொள்கை மற்றும் நடைமுறைகளைப் பின்பற்றி, முழு இயற்கை விவசாயத்திற்கு மாறியுள்ளது. அதற்கான தரச்சான்றிதழையும் பெற்றுள்ளது. செயற்கை உரங்கள், பூச்சிக் கொல்லிகள் போன்ற வணிக பூதங்களிடம் இருந்து தப்பித்து, இயற்கை விவசாயத்திற்கு மாறுவது என்பது எளிதான காரியம் இல்லை. ஆனால் விடாமுயற்சியின் காரணமாகவும், அயராத உழைப்பின் காரணமாகவும் அதை சாத்தியப்படுத்தியுள்ளனர் சிக்கிம் விவசாயிகள்.

2003 -ல் தான் இதற்கான அடித்தளம் அம்மாநில முதல்வர் பவன்குமார் சாம்லிங் அவர்களால் உருவாக்கப்பட்டது. விவசாயத்தில் பெருமளவு ஈர்ப்பு கொண்ட பவன்குமார் சாம்லிங் இதனை நிறைவேற்ற பல்வேறு யுத்திகளை கையாண்டார். அப்படி அவர் என்ன செய்தார் என்பதை பார்ப்போமா ?

சிக்கிம் முதல்வர்

2003- ல் சட்டப்பேரவையில் சிக்கிம் மாநிலத்தை " முழுமையான ஆர்கானிக் மாநிலமாக மாற்ற வேண்டும் " என்று சட்டம் இயற்றி அதை மீறுபவர்களுக்கு ஒரு இலட்சம் ரூபாய் அபராதமும் மூன்று வருட சிறை தண்டனையையும் கொண்டு வந்தார். இது மட்டுமல்லாது 'ஆர்கானிக் ஸ்டேட் போர்டு' என்ற அமைப்பை உருவாக்கி நஞ்சு பரவும் இராசயன விவசாய முறைகளின் தீமைகளைக் குறித்தும், இயற்கை விவசாயம் செய்வதால் மக்களுக்கு ஏற்படும் நன்மைகள் குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்தினார். கொஞ்சம் கொஞ்சமாக பலன் கிடைக்க ஆரம்பித்தது. .

இதோடு நின்று விடாமல், மாநிலம் முழுதும் இயற்கை உரம் தயாரிக்கும் மையங்களும், பசுந்தாள் உரம் தயாரிக்கும் மையங்களும் நிறுவப்பட்டு உழவர்களுக்கு போதுமான பயிற்சிகளும் அளிக்கப்படுகின்றன. "சிக்கிம் ஆர்கானிக் மிஷன்" என்ற அமைப்பை உருவாக்கி கிராமங்களை தத்தெடுத்து போதுமான இயற்கை விவசாய முறைகளை கற்றுக் கொடுக்கின்றனர். இந்த கிராமங்களுக்கு "பயோ வில்லேஜ்" என்று பெயரும் சூட்டப்பட்டுள்ளது.

விவசாயப் பெருமக்கள் தங்கள் தொழிலை விட்டு வெளியேறி சூதாட்டம் போன்ற செயல்களில் ஈடுபடுவதை தடுக்க 2016 ஜூலை 17-ல் சூதாட்ட விதிமுறைகளை திருத்தி அமைத்தது. இந்த முயற்சிக்கு கிடைத்த பலன் என்ன தெரியுமா? சிக்கிம் மாநிலத்தின் நான்கு மாவட்டங்களுமே நாட்டின் தலை சிறந்த, முதல் பத்து மலைப்பிரதேச மாவட்டங்களின் பட்டியலில் இடம்பெற்றிருக்கிறது. 2016 -ல் மேற்கு சிக்கிமில் உள்ள "கஞ்சன்ஜங்கா தேசிய பூங்கா " யுனெஸ்கோவால் ஜூலை 17 அன்று பாரம்பரிய தளமாகவும் அறிவிக்கப்பட்டது.

மோடி modi in sikkim

2016 அக்டோபரில் இந்தியாவின் சுத்தமான சுற்றுலாத் தளங்களைக் கொண்ட மாநிலமாக பிரதமராலும், 2016 செப்டம்பரில் தேசிய மாதிரி ஆய்வு அலுவலகத்தால் இந்தியாவின் சுத்தமான மாநிலமாகவும் சிக்கிம் அறிவிக்கப்பட்டது. மண்ணுக்கும், மனிதனுக்கும் நன்மை பயப்பது இயற்கை விவசாயம்தான் என்பது கண்கூடு. அதற்காக நாடு முழுவதும் எத்தனையோ பேர் குரல் கொடுத்து வருகின்றனர். இனி வரும் தலைமுறைகளின் ஆரோக்கியத்தையும், நம் விவசாயிகளின் நிலையையும் மனதில் வைத்து, இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுமே சிக்கிமை பின்பற்ற வேண்டும். சிறிய மாநிலமான சிக்கிமுக்கு 13 ஆண்டுகள் என்றால், இனி வரும் மாநிலங்களுக்கு அதிக காலம் பிடிக்கலாம். ஆனால் அதற்கான விதையை இன்றே நாம் விதைக்க வேண்டும். நம்மாழ்வார் போன்ற பசுமைப் போராளிகள் முளைத்த இந்த தமிழக மண்ணில், இதற்கான வேலைகளை தமிழக அரசு தீவிரமாக முன்னெடுக்க வேண்டும். அப்போதுதான் விவசாயிகளின் மரணங்களும், அழுகுரல்களும் இங்கே அடங்கும்.

- மு.முருகன்
மாணவப் பத்திரிகையாளர்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்