விவசாயிகள் மட்டுமல்ல... விவசாயமும் மரணித்துக்கொண்டிருக்கிறது! | Not just farmers, Agriculture is also dying in our country

வெளியிடப்பட்ட நேரம்: 18:14 (05/01/2017)

கடைசி தொடர்பு:14:21 (06/01/2017)

விவசாயிகள் மட்டுமல்ல... விவசாயமும் மரணித்துக்கொண்டிருக்கிறது!

விவசாயிகள்

'ந்தியாவின் முதுகெலும்பு கிராமங்கள்' "இந்தியா கிராமங்களில்தான் வாழ்கிறது" இந்த வாசகம் நம்மில் பெரும்பாலோனோர் படித்திருப்போம், கேட்டிருப்போம். ஆனால் இன்று அந்த கிராமங்கள் விவசாயத்தை இழந்து, நிம்மதியை இழந்து இன்று பல விவசாயிகளையும் இழந்து பரிதாபமாக காட்சியளிக்கிறது. நாள்தோறும் விவசாயிகள் தற்கொலை என்ற செய்தி கேட்கும்போது வருத்தப்படுவோரும் உண்டு, சாதாரணமாக கடந்து செல்வோரும் உண்டு. வட்டிக்கு வாங்கி, அக்கம் பக்கம் கடன் வாங்கி, போதா குறைக்கு வங்கியிலும் கடன் வாங்கி நாற்று விட்டு தண்ணீர் வறட்சி ஏற்பட்டு பயிரைக் காப்பாற்ற போராடும் நிலைதான் இன்று தமிழகத்தில் நிலவி வருகிறது. வாடிய பயிரைக்கண்டபோதெல்லாம மனம் வாடினேன்...என்று பாடினார் வள்ளலார். ஆனால், இன்று வாடிய பயிரைக்கண்டு மனம் வாடி நில்லாமல், கூடவே உயிரையும் மாய்த்து கொண்டு வருகிறார்கள், தமிழக விவசாயிகள். கிரிக்கெட் ஸ்கோர் என்ன என கேட்பதுபோல "இன்னைக்கு விவசாயிகள் எத்தனை பேர் இறந்தாங்க" என கேட்கும் அளவிற்கு டெல்டா மாவட்டங்களில் அன்றாடம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது விவசாயிகள் மரணம். இந்த தொடர் மரணங்கள் நாடெங்கும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. இன்றோடு கடந்த ஒரு மாதத்தில் 105 விவசாயிகள் தற்கொலை மற்றும் அதிர்ச்சி மரணம் அடைந்துள்ளார்கள்.

விவசாயி மரணம்

விவசாய மரணங்களை தடுத்து நிறுத்தாமல் இருக்கும் தமிழக அரசை கண்டித்து சமூக ஆர்வலர்கள் சிலர் பொது நல வழக்கு ஒன்றை தொடுத்துள்ளார்கள், அதை விசாரித்த உயர்நீதி மன்றம். பிப்ரவரி 14ம் தேதிக்குள் விவசாயிகள் தற்கொலைக்கான உண்மை காரணம் குறித்து பதில் சொல்லவேண்டும் என்று  தமிழக அரசுக்கு கெடு விதித்து உயர்நீதி மன்றம் உத்திரவிட்டுள்ளது. இது குறித்து பேசிய தற்சார்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் கி.வே.பொன்னையன், "நெல் விவசாயிகள் மட்டுமல்ல தமிழ்நாட்டின் மற்ற மாவட்டங்களில் உள்ள கரும்பு, மஞ்சள், வாழை உள்ளிட்ட இறவைப்பயிர்களை மேற்கொண்டுவரும் ஒன்றரைக்கோடி விவசாயிகளும் இன்னும் சில மாதங்களில் வாழ்வாதரத்தை இழந்து நிர்கதியில் நிற்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. பவானி நதி நீர் பொய்த்துபோனதால் பல ஆயிரம் ரூபாய் செலவு செய்து பயிர் செய்திருந்த மஞ்சள் பயிர் பாதியில் கருகியது கண்டு, ஈரோடு மாவட்டம்  கொடுமுடியை சேர்ந்த முத்துசாமி, ராமலிங்கம் என்கிற இரண்டு விவசாயிகள் மனம் உடைந்து தற்கொலை செய்து கொண்டார்கள். ஊருக்கு சோறு போடுகின்ற உழவர்கள் செத்து மடிவது குறித்து எந்த கவலையும் இல்லாமல் இருக்கிறது, தமிழக அரசு.


        விவசாயி


 பொது நல வழக்கு போட்டுத்தான் இதை அவர்கள் கவனத்திற்கு கொண்டுபோக வேண்டிய சூழல் உள்ளது. இது தமிழ்நாட்டுக்கான சோதனைக்காலம் என்றே சொல்லவேண்டும். காவிரியும், பவானியும் வறண்டு போனதால் நெல்லும், மஞ்சளும் காய்ந்து அந்த விவசாயிகள் மாய்ந்து போனார்கள். இனி 4 லட்சம் ஏக்கர் தென்னை மரங்களுக்கு நீர் ஆதாரமாக விளங்கும் பரம்பிக்குளம் ஆழியாறு திட்ட பொன்னையன்அணைகளும் வற்றிப்போகும் அபாயம் ஏற்பட போகிறது. 3 லட்சம் ஏக்கரில் 25 ஆண்டுகாலம் வளர்த்த தென்னை மரங்கள் காய்ந்து கருகும் நிலையில் உள்ளது. இன்னும் மூன்று மாதங்களில் இளநீர் பறிக்கும் தென்னை விவசாயிகள் கண்ணீர் விடப்போகிறார்கள். நிகழ்ந்த, நிகழும், நிகழப்போகும் விவசாய மரணங்களை போர்க்கால அடிப்படையில் தடுத்து நிறுத்தவேண்டும்... கூட்டுறவு மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் விவசாய பயிர்கடனை உடனே வழங்க வேண்டும். வறட்சி மாநிலமாக தமிழகத்தை அறிவிக்க வேண்டும். நீதிமன்ற உத்தரவை மதிக்காத கர்நாடக அரசை கண்டிப்பதுடன், கர்நாடகம் செல்லும் நெய்வேலி மின்சாரத்தை தடுத்து நிறுத்த வேண்டும்" என்றார் பொன்னையன்.

  விவசாயிகள் சாகவில்லை! விவசாயம் செத்துக் கொண்டிருக்கிறது!.

- ஜி.பழனிச்சாமி.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்