Published:Updated:

விவசாயிகள் தற்கொலை செய்வது ஏன்? அதிரவைக்கும் ஒரு வரவு செலவுக் கணக்கு

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
விவசாயிகள் தற்கொலை செய்வது ஏன்? அதிரவைக்கும் ஒரு வரவு செலவுக் கணக்கு
விவசாயிகள் தற்கொலை செய்வது ஏன்? அதிரவைக்கும் ஒரு வரவு செலவுக் கணக்கு

விவசாயிகள் தற்கொலை செய்வது ஏன்? அதிரவைக்கும் ஒரு வரவு செலவுக் கணக்கு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

விவசாயிகளின் தற்கொலை என்பது அன்றாட செய்தியாகி விட்டது. பார்த்துப் பதறியவர்கள் எல்லாம் ஒரு சாதாரண சம்பவமாக விவசாயிகள் தற்கொலையை கடந்து செல்லப் பழகி விட்டார்கள். கருகிய பயிரை காணச் சகிக்காமல், வாங்கிய கடனுக்கு வட்டி கட்ட முடியாமல் மாரடைப்பு வந்தும், விஷம் குடித்தும் தங்களை மாய்த்துக் கொள்ளும் விவசாயிகளின் எண்ணிக்கை கூடிக்கொண்டே போகிறது. நகரத்து நசநசப்பில் உழல விரும்பாத நாற்பதைக் கடந்த மனிதர்களால் மட்டுமே செய்யப்பட்டு வந்த வேளாண் தொழில், கிட்டத்தட்ட முடிவு நிலைக்கு வந்திருக்கிறது. விவசாயத்தைப் பற்றி சிறிதும் புரிதலற்ற, அதை ஒரு தொழிலாக அங்கீகரிக்கத் திராணியற்ற ஆட்சி அதிகாரங்களின் மீது விழும் சாட்டையடியாகவே ஒவ்வொரு தற்கொலையும் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. 

தமிழகத்து மக்களுக்கு, குறிப்பாக காவிரியை ஜீவாதாரமாகக் கொண்ட நஞ்சை விவசாயிகளுக்கு விவசாயம் என்பது தொழிலல்ல. அது வாழ்க்கையின் ஒரு அங்கம். அன்றாடம் உறங்குவது போல, சாப்பிடுவது போல வேளாண்மையும் அன்றாடப் பணிகளில் ஒன்று. பண்டிகைகள், சுபகாரியங்கள், கொண்டாட்டங்கள் எல்லாமே வேளாண்மை சார்ந்தது தான். வேளாண்மையை விலக்கிவிட்டுப் பார்த்தால் வேறொன்றும் மிச்சமிருக்காது. வீடு தேடி வந்த அரசுப்பணிகளை கூட உதறித்தள்ளி விட்டு விவசாயத்தில் முழுமூச்சாக ஈடுபட்டவர்கள் ஏராளம் உண்டு. 

எல்லாம் குலைந்து போய்விட்டது இன்று. நாற்பது வயதுக்கு உட்பட்ட இளைஞர்களே இன்று கிராமங்களில் இல்லை. ஈரோட்டில், ஓசூரில், சென்னையில்... கிடைத்த ஒரு தொழிலில் உறைந்து விட்டார்கள். தலைமுறை தலைமுறையாக சந்ததிகளை வாழ வைத்த விவசாயத்தை தம்மோடு முடித்துக்கொண்டு, “பிள்ளைக்கு வேண்டவே வேண்டாம்" என்று பெற்றோரே வெளிநாட்டுக்கு அடிமாட்டுத் தொழிலாளியாகத் தள்ளி விடுகிறார்கள். 

கடந்த 30 ஆண்டுகளில் விவசாயப் பெருங்குடிகள் மீது நிகழ்த்தப்பட்ட போரின் கடைசிக்களம் இது. தமிழகத்தின் மிகப்பெரும் வேளாண் உற்பத்தி மண்டலங்களான தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களில் பேருந்துப் பயணம் செய்து பார்த்தால் இந்த அவலம் உறைக்கும். எக்காலமும் பச்சை போர்த்தியிருந்த பெரும்பாலான நிலங்கள் துண்டாடப்பட்டு வீட்டு மனைகளாக மாறிவிட்டன. 200 ஏக்கர், 300 ஏக்கர் என்று வந்த விலைக்கு விளைநிலங்களை வாங்கி குவித்து ரியல் எஸ்டேட் தொழிலை விஸ்தரிக்கிறார்கள் சிலர்.  கிராமங்களில் மனித நடமாட்டமே அற்றுப் போயிருக்கிறது. 

திருச்சி, புதுக்கோட்டை, கடலூர் மாவட்டங்களின் ஒரு பகுதியையும் தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களையும் உள்ளடக்கிய காவிரி டெல்டாவில் 4 லட்சம் விவசாயிகள், 16 லட்சம் விவசாயத் தொழிலாளர்கள் வசிக்கிறார்கள். வேளாண்மையை விட்டால் வேறு தொழில் தெரியாது இவர்களுக்கு. பிற பகுதிகளில் இருப்பதைப் போல, வேறு தொழில் வாய்ப்புகளும் இந்தப் பகுதிகளில் இல்லை. 

ஒவ்வோராண்டும் ஜூன் மத்தியில் மேட்டூர் அணை திறக்கப்படும். ஆகஸ்ட் மத்தியில் குறுவை அறுவடை முடியும். ஆகஸ்ட் மூன்றாவது வாரத்தில், சம்பாவுக்கான ஆயத்தங்கள் தொடங்கும். பொங்கலுக்கு முன்பு அறுவடை தொடங்கிவிடும். இடைப்பட்ட நேரத்தில் கொஞ்சம் பேர் தாளடி பருவத்தில் மூன்றாம் போகம் பயிர் செய்வார்கள். இடையிடையே கிடைத்த இடைவெளியில் கோடைப்பயிர்களாக உளுந்து, கடலை போன்ற தானியங்கள் பயிரிடப்படும். ஆக, வேலைக்கோ, பணத்துக்கோ, உழைப்புக்கோ எக்காலமும் குறையிருக்காது. தீபாவளியை ஒட்டி குருவை அறுவடை முடிவதால் பண்டிகை களைகட்டும். பொங்கலுக்கு சம்பா அறுவடை கைக்கு வந்து விடும். அந்தக் கொண்டாட்டத்துக்கும் குறைவிருக்காது. கிராமங்கள் வண்ணமயமாக இருந்தன. 

கடந்த 5 ஆண்டுகளில் காவிரிப் படுகையில் குறுவையும் நிறைவாக நடக்கவில்லை. சம்பாவும் நடக்கவில்லை. காரணம், கடந்த 5 ஆண்டுகளில் ஒருமுறை கூட மேட்டூர் அணை முறையான தேதிகளில் திறக்கப்படவில்லை. அதனால் கடந்த 5 ஆண்டுகளில் வேளாண் மக்களுக்கு தீபாவளியும் இல்லை. பொங்கலும் இல்லை. இதைப்பற்றி யாரும் கவலைப்படவும் இல்லை. 

விவசாயிகள் நலனுக்காக உருவாக்கப்படும் எந்தத் திட்டமும் முறைப்படி திட்டமிடப்பட்டதில்லை. குறிப்பாக, கடந்த பத்து ஆண்டுகளில் உருவாக்கப்பட்ட எந்தத் திட்டமும் விவசாயிகளை முழுமையாகச் சென்றடைந்ததில்லை. ஆளும் கட்சி முக்கால்பாகம், எதிர்கட்சி கால்பாகம் என்ற கணக்கில் எல்லாமே பகிர்ந்து கொள்ளப்படுகின்றன. விவசாயத்தை ஜீவனாகக் கொண்ட கிராமங்களில் இன்று செழிப்போடு வாழ்வது அரசியல்வாதிகளும், ஒப்பந்தகாரர்களும் தான். வேளாண்மையை தொழிலாகக் கொண்டவர்கள் நிலை தேய்ந்து கொண்டே போகிறது. 

காவிரி விவகாரம் என்ற ஒற்றை வார்த்தைக்குள் விவசாயத்தின் பேரழிவை, விவசாயிகள் தற்கொலையை முடக்கி விட முடியாது. இந்தியாவை ஆண்ட, ஆளுகிற எந்த அரசும் விவசாயத்தை தொழிலாகவே கருதவில்லை. ஒரு பிரதமர், "விவசாயத்தை விட்டு வெளியேறுங்கள்" என்று ஆலோசனையே சொன்னார். விவசாயத்தை முற்றிலும் அகற்றிவிட்டு, கீழே புதைந்திருக்கும் நிலக்கரிக்கும், மீத்தேனுக்கும் குறி வைத்தார்கள். இன்றைய பிரதமர் விவசாயத்தின் ரத்த நாளமாக இருந்து வாழ்வித்துக் கொண்டிருக்கிற மானியங்களில் கை வைக்கிறார். 

உலகின் மொத்த மக்கள் தொகை ஏறக்குறைய 720 கோடி பேர். அத்தனை பேருக்கும் மூன்று வேளை உணவு வேண்டும். என்றால், இந்த உலகத்தில் உணவு உற்பத்தியை விட முக்கியத்துவம் வாய்ந்த, லாபகரமான தொழில் வேறென்ன இருக்கிறது? உணவின் மூலப்பொருளை உற்பத்தி செய்யும் கர்த்தாக்களான விவசாயிகளை உற்சாகப்படுத்தி ஊக்கப்படுத்த வேண்டிய அரசுகள், அந்த பூர்வகுடிகளை அழித்து அவர்களின் மேல் தொழிற்சாலைகளைக் கட்டி அனைத்தையும் நிறுவனமயமாக்கத் துடிக்கின்றன.. தேங்காய்க்கு விலை கிடைக்காமல் உள்நாட்டில் விவசாயி போராடிக் கொண்டிருக்கையில், தேங்காய் எண்ணெய் பயன்படுத்தினால் இதயநோய் வரும் என்று நம்பவைத்து  பேரல் பேரலாக 70 ஆயிரம் கோடிக்கு பாமாயிலை இறக்குமதி செய்து ரேஷன் கடையில் விற்கிறார்கள். இவர்களை என்னவென்று சொல்வது? தேங்காய் எண்ணெயால் இதய நோய் வருமென்றால் கேரள மக்கள் எல்லோரும் இதய நோயாளிகளாகத் தானே இருக்க வேண்டும்? ஆனால்,  இந்திய அரசின் உயர் பதவிகளில் இருக்கும் பெரும்பாலானோர் கேரளக்காரர்களாகவே இருக்கிறார்கள். அதிக கல்வியறிவு கொண்ட மாநிலமும் அது தான். தமிழ் சினிமாவை ஆட்கொண்டிருக்கும் பெரும்பாலான கதாநாயகிகள் அந்த தேங்காய் எண்ணெய் மண்ணில் இருந்து தான் உற்பத்தியாகிறார்கள்.  

இந்தியாவில் இருக்கும் அத்தனை விவசாயிகளுக்கும் இருக்கும் பொதுவான ஒற்றுமை, ஏதாவது ஒரு விதத்தில் கடன்காரர்களாக இருப்பது தான். 19 லட்சம் கோடிக்கு பட்ஜெட் போடுகிற மத்திய அரசு, வேளாண்மை மேம்பாட்டுக்கு ஒதுக்குவது வெறும் 36 ஆயிரம் கோடி. மாநில அரசு ஒதுக்குவது 4300 கோடி. இதில் பெரும்பகுதி, உரம், பூச்சிக்கொல்லி, எந்திரங்களை தயாரிக்கும் நிறுவனங்களுக்கு மானியமாக போய்விடுகிறது. 

வீட்டுக்கு முன்பாகவே ஒரு உரக்குழி இருக்கும். கால்நடைகள் தரும் கழிவுகளும், மரங்கள் இறைக்கும் இலை, தழைகளும் அதில் நிறைந்திருக்கும். வைக்கோலால் பிணைக்கப்பட்ட ஒரு கனத்த பையில் எப்போது துளிர் விடலாம் என்ற முளைத்திறனோடு வீரியமிக்க விதைக்கோட்டை தயாராக இருக்கும். தகுந்த பருவம் வந்ததும், உரக்குழியில் நிறைந்திருக்கும் கழிவுகளை மாட்டு வண்டியில் அள்ளிச்சென்று வயலில் இறைத்து விட்டு, விதைக்கோட்டையை பிரித்து தூவி விட்டு வந்து விடுவார்கள். கெட்ட பூச்சிகளை நல்ல பூச்சிகள் விரட்டி விடும். களைச்செடிகள் வளர இடம் தராமலும் வெயில் தராமலும் பயிரே அண்டி அடர்ந்திருக்கும். வெள்ளமோ, வறட்சியோ அதுவே தன்னைப் தகவமைத்துக்கொள்ளும். நம் பாரம்பரிய நெல் ரகங்களின் சிறப்பே அது தான், விதைப்பதும் அறுப்பதுமே வேலை. இடுபொருள் என்று எந்தச் செலவுமில்லை. நெல் கொடுத்தால் உப்பு கிடைக்கும். புளி கொடுத்தால் சட்டி பானை கிடைக்கும். எல்லாமே கொடுத்தது விவசாயம். அப்போது விவசாயம் உணவுக்கானது. 

புரட்சிகளை சுமந்துகொண்டு விஞ்ஞானிகள் வயலில் இறங்கிய பிறகு தான் எல்லா அழிவுகளும். தொடக்கத்தில் உரத்தையும் பூச்சிக்கொல்லிகளையும் இலவசமாகத் தான் கொடுத்தார்கள். விற்பனையை விவசாயிக்கு பழகித்தந்தார்கள். பூச்சிக்கொல்லி என்ற விஷத்தை மருந்து என்று விவசாயியை நம்ப வைத்தார்கள். பணம், விவசாயிக்கு அறிமுகமானது. நிலங்கள் உப்பைத் தின்று செரித்தபிறகு, எல்லாவற்றுக்கும் விலை வைத்தார்கள். அங்கிருந்து தான் விவசாயி கடனாளியான கதை தொடங்குகிறது. 

கால்நடைகள் அழிந்தது, உரக்குழிகள் பாலீதீன்களால் நிறைந்தது, விதைக்கோட்டைகள் அழிந்தது... இதெல்லாம் அதன் தொடர்ச்சி தான். உணவு விஷமானது, உடம்பு நோய்க்களால் நிரம்பியது, மருத்துவமனைகள் அதிகரித்தது, உலகிலேயே அதிக மருந்து விற்பனை நடக்கும் நாடாக இந்தியா மாறியது... எல்லாம் அதன் கிளைக்கதைகள். 

காவிரி மட்டும் தான் விவசாயத்தின் பின்னடைவுக்கும், விவசாயிகளின் தற்கொலைக்கும் காரணமா? அப்படித்தான் பலர் நம்புகிறார்கள். காவிரி நமது உரிமை என்பது வேறு. ஆனால், கர்நாடகத்தில் இருந்து தண்ணீர் வந்துவிட்டால் காவிரிப்படுகையும் விவசாயிகளின் வாழ்க்கையும் பசுமையாகி விடுமா? வாய்ப்பே இல்லை என்பது தான் எதார்த்தம். அரசியல்வாதிகள் தங்களை தற்காத்துக் கொள்ள எடுக்கும் ஆயுதம் தான் "காவிரி விவகாரம்". 

36 ஆறுகள், 1665 வாய்க்கால்கள் என, ஒரு நரம்பு மண்டலத்தைப்போல சுமார் 30 ஆயிரம் கிலோ மீட்டருக்கு பாசனக் கால்வாய்கள் காவிரி படுகை முழுவதும்  பிணைந்து கிடக்கின்றன. இவற்றில் 90 சதவீத வாய்க்கால்களை முறைப்படி தூர்வாருவதில்லை. வருடந்தோறும் தூர் வாருவதாகக் கணக்குக் காட்டி பெரும்பணத்தை தின்று செரித்து விட்டார்கள். அதை மட்டும் தோண்டித் துருவினால் இதுவரை வெளிவந்த மெகா ஊழல்களிலேயே பெரும் ஊழலாக இருக்கும். பல பிரதான ஆறுகளில் மணலை அள்ளி பள்ளங்களாகவும் படுகுழிகளாகவும் மாற்றி விட்டார்கள். மேடுகள் பள்ளங்களாகி விட்டன. பள்ளங்கள் மேடுகளாகி விட்டன. கரிகாலனும், உத்தமச்சோழனும், ராஜராஜனும், ராஜேந்திரச் சோழனும் திட்டமிட்டு, பார்த்து பார்த்து வடித்து வைத்த பாசனக் கால்வாய்கள் அத்தனையும் இன்று தூர்ந்தும், அடைபட்டும், ஆக்கிரமிக்கப்பட்டும் அழிந்து போய்விட்டன. அழிந்து கொண்டிருக்கின்றன. 

விவசாயி உலகுக்கு சோறிடுபவன். இரக்கமும், மானமும் அவன் உயிர் பிறப்பு. தற்கொலை செய்து கொண்டுள்ள பல விவசாயிகள் கடன் கட்ட முடியாமல் அவமானத்துக்கு அஞ்சியே இந்த முடிவை எடுத்திருக்கிறார்கள். வங்கிகள் ஒருபுறம் கந்து வட்டிக்கடைகாரர்களைப் போல நிலைகுலைந்து நிற்கும் விவசாயிகளை மிரட்டுகின்றன. வேளாண்மையின் ஜீவாதாரமாக இருக்கும் வாகனங்களை குண்டர்கள் வைத்து பறிக்கின்றன. 

வாங்கிய கடனை கேட்டால் தவறா? கடன் வாங்கினால் கட்ட வேண்டாமா? விவசாயிகளுக்கு ஒரு நியாயம்? மற்றவர்களுக்கு ஒரு நியாயமா?... இப்படியெல்லாம் சில நீதிமான்கள் கேள்வி எழுப்பக்கூடும். உண்மை தான். இந்த தேசம் விவசாயிகளுக்கு ஒரு நியாயமும் மற்றவர்களுக்கு ஒரு நியாயமும் தான் செய்து கொண்டிருக்கிறது. 

ஒரு குண்டூசி தயாரிப்பவர் கூட தன் உற்பத்திக்கு தானே விலையை நிர்ணயிக்கிறார். ஆனால், விவசாயி தன் உற்பத்திக்கு விலையை தீர்மானிக்க முடியவில்லை. ஏதோ ஒரு குளிரூட்டப்பட்ட அறையில் அமர்ந்து கொண்டு எவரோ ஒரு அதிகாரி தீர்மானிக்கிறார். வேளாண்மைக்கு தொடர்பே இல்லாத ஒரு வியாபாரி தீர்மானிக்கிறார். இரவு பகல் இல்லாமல் உழைத்து, கடன்பட்டு தான் உற்பத்தி செய்த தானியத்தை எவரோ நிர்ணயிக்கும் விலைக்கு அள்ளிக்கொடுத்து விட்டு வருகிறார் விவசாயி, அதுவும் பிடித்தம் கொடுத்து, லஞ்சம் கொடுத்து. ஒவ்வொரு பருவத்திலும் விலையை உயர்த்திக் கொடுங்கள் என்று கொடி பிடித்து எவரிடமோ கெஞ்சிக் கொண்டிருக்க வேண்டியிருக்கிறது. 

2005ம் ஆண்டு எம்.எஸ்.சுவாமிநாதன் தலைமையில், தேசிய வேளாண் ஆணையம் அமைக்கப்பட்டது. விவசாயத்தை மேம்படுத்துவதற்கான வழிகளை ஆராய சுவாமிநாதன் இந்தியாவெங்கும் பயணம் செய்தார். இறுதியில், "விவசாயிகளின் விளைபொருட்களுக்கு கட்டுபடியாகும் விலை கிடைக்க வேண்டும் என்றால், உற்பத்திச் செலவோடு, 50 சதவீதம் சேர்த்து ஆதாரவிலையாகத் தர வேண்டும்" என்று மத்திய அரசுக்கு பரிந்துரைத்தது அந்த ஆணையம். 11 ஆண்டுகள் முடிந்து விட்டது. அந்த பரிந்துரை நடைமுறைக்கு வரவே இல்லை. அப்போது தேசத்தை ஆட்சி செய்தது காங்கிரஸ். இன்று ஆட்சிக்கட்டிலில் அமர்ந்திருக்கும் பிரதமர் மோடி அப்போது "சுவாமிநாதனின் அறிக்கையை அமல்படுத்த வேண்டும்" என்று குரல் கொடுத்தவர் தான். "நாங்கள் ஆட்சிக்கு வந்தால் சுவாமிநாதன் கமிட்டி பரிந்துரை நடைமுறைக்கு வரும்" என்று வாக்குறுதி கொடுத்துத் தான் விவசாயிகளிம் ஓட்டுகளை வாங்கினார்கள். ஆனால், இன்று வரை அந்த அறிக்கை இருக்குமிடம் தெரியவில்லை. இந்த 11 ஆண்டுகளில் உரம், பூச்சிக்கொல்லி, தொழிலாளர் சம்பளம் எல்லாம் பல மடங்கு உயர்ந்து விட்டது. இனி அந்தப் பரிந்துரை கூட பொருந்தப்போவதில்லை. 

வேளாண்மையை லாபகரமாக செய்யவே முடியாது என்ற நிலை வந்து விட்டது. இளைஞர்கள் விவசாயத்தை கைகழுவி விட்டார்கள். கிராமத்துக் காற்றைச் சுவாசித்துப் பழகிய, நகரத்தை ஜீரணிக்க முடியாத  சிலரால் மட்டுமே வேளாண்மை உயிரோடிருக்கிறது. அப்படியானவர்களும் அவமானத்துக்கும் இழப்புக்கும் அஞ்சி தங்களை மாய்த்துக் கொண்டிருக்கிறார்கள். 

மானியங்கள் தேவையில்லை. கடனும் கூட அவசியமில்லை. வேளாண்மையை மீண்டும் உயிர்ப்பிக்க வேண்டும் என்றால், இளைஞர்களை மீண்டும் வேளாண்மையின் பக்கம் திருப்ப வேண்டும் என்றால், மிஞ்சியிருக்கும் கொஞ்சம் வேளாண் பூர்வகுடிகளையாவது காப்பாற்ற வேண்டும் என்றால்... 

விவசாயி உற்பத்தி செய்யும் பொருளுக்கு விவசாயியே விலையை தீர்மானிக்கும் உரிமையைத் தரவேண்டும். விவசாயத்தை ஒரு தனித்துவமான தேசிய தொழிலாக அங்கீகரிக்க வேண்டும். கிராமப்புறங்களில் சர்வ வசதிகளோடு சேமிப்புக் கிடங்குகளை அமைக்க வேண்டும். ஏற்றுமதி வாய்ப்புகளை உருவாக்கித் தரவேண்டும்.    

இன்றைய விவசாயத்தின் எதார்த்த நிலையைப் புரிந்து கொள்ள தஞ்சாவூர் மாவட்டம் திருவைக்காவூரைச் சேர்ந்த மோகன் என்ற விவசாயியின் வரவு செலவு கணக்கைப் பாருங்கள். 

1 ஏக்கருக்கான செலவும் வரவும்

இன்னொரு அடிப்படை புள்ளி விபரமும் முக்கியமானது.  

1960ல், மாநில அரசின் ஒரு மாத குறைந்தபட்ச ஊதியம் ரூ.60. ஒன்றரை மூட்டை நெல்லின் விலையும் ரூ.60 தான். இன்று 7வது ஊதியக்குழு குறைந்தப்பட்ச ஊதியமாக பரிந்துரைத்திருப்பது ரூ.16,000. ஒன்றரை மூட்டை நெல்லின் விலை ரூ.1350. 

புரிகிறதா விவசாயிகளின் தற்கொலைகளுக்கான காரணம்!

- வெ.நீலகண்டன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு