”காளைகளுக்கு ஸ்பான்ஸர்...காஸ்ட்லி பரிசு!” - அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு ஏன் மாஸ்?

  ஜல்லிக்கட்டு

'ஜல்லிக்கட்டு விளையாட்டு பாரம்பர்யமாக தமிழர்களின் வீரவிளையாட்டாக இருந்து வந்துள்ளது. ஆனால் இன்று சில இடங்களில் மட்டுமே நடத்தப்பட்டு வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக உச்ச நீதிமன்றம் ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்தது. இந்த ஆண்டும் ஜல்லிக்கட்டு நடத்த உத்தரவு கிடைக்கவில்லை. இதனால், ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள், இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் என அனைவரும் இணைந்து ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டத்தை நடத்தினர். இதற்கு பலனாக மாநில அரசு முயற்சி செய்து அவசரச் சட்டம் கொண்டு வந்தது. இந்த அவசரச் சட்டத்தால் தற்காலிகமாக ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கிடைத்திருக்கிறது. இதனைத் தொடர்ந்து, பிப்ரவரி 1-ம் தேதி 'அலங்காநல்லூர்', 2-ம் தேதி 'பாலமேடு', 5-ம் தேதி 'அவனியாபுரம்' ஆகிய பகுதிகளில் ஜல்லிக்கட்டு நடக்கிறது. இவ்வளவு பகுதிகளில் ஜல்லிக்கட்டு நடந்தாலும் 'அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு' உலகப் பிரசித்தி பெற்றது.

காளை

மதுரை, அலங்காநல்லூர் இந்த பெயரைக் கேட்டாலே ஜல்லிக்கட்டும், சீறிப்பாயும் காளைகளும்தான் ஞாபகத்துக்கு வரும். ஜல்லிக்கட்டு நடக்கும் நாளைத் தவிர வருடத்தின் மற்ற நாட்களில் அலங்காநல்லூரில் கூட்டம் அதிகமாக இருக்காது. ஜல்லிக்கட்டு நடக்கும் நாளில் அலங்காநல்லூரில் நிற்க இடமிருக்காது. திண்டுக்கல்லுக்கும் மதுரைக்கும் இடையே அமைந்துள்ளது, அலங்காநல்லூர். தேசியநெடுஞ்சாலையிலிருந்து அலங்காநல்லூருக்குள் பயணிக்கும்போது வயல்வெளிகள், குளங்கள் என அனைத்தையும் கொண்டு பசுமைக் கம்பளம் விரித்து வரவேற்பதைப் போல இருக்கும். இந்த அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு 7.30 மணிமுதல் மதியம் 2.30 மணிவரை நடக்கும். தமிழ்நாடு மட்டுமல்லாமல் பக்கத்து மாநில ஆட்களும்கூட இந்த அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை காண வருகை தருவர். நண்டு சிண்டு எல்லாம் வீட்டு மொட்டைமாடி, கொடிக்கம்பம் மற்றும் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள கட்டைகள் என கிடைத்ததில் எல்லாம் அமர்ந்து ஜல்லிக்கட்டை வேடிக்கை பார்ப்பார்கள்.

அலங்காநல்லூரில் அனைவரும் ஜல்லிக்கட்டினை பார்க்க விரும்புவது அனைத்து இன காளைகளையும், நின்று விளையாடும் காளை மாட்டையும், அதனை பிடிக்க சீறும் இளைஞர் படையினரையும் காண்பதற்காகத்தான். மாடுகளும் சொல்லிவைத்ததைபோல் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்து தனது ஆக்ரோஷத்தினை வெளிப்படுத்தும். அதேபோல இங்கு வழங்கப்படும் பரிசுப்பொருட்களும் அதிகம், அதன் விலையும் அதிகம். இந்த ஜல்லிக்கட்டை காண முந்தையநாள் இரவிலிருந்தே படுத்து இடம் பிடிக்கும் ஜல்லிக்கட்டு வெறியர்களும் உண்டு. 

காளை

பொதுவாக தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு மாடு வளர்ப்பது ஒரு கலையாக பார்க்கப்படுகிறது. ஜல்லிக்கட்டு மாட்டுக்கு கொடுக்கப்படும் பயிற்சியானது ராணுவப்பயிற்சியை போன்றே இருக்கும். பச்சரிசி உணவு, தினசரி குளியல், நீந்துதல், நடை, மண்முட்டுதல், சீறப்பழக்குதல் என பல பயிற்சிகளும் அடக்கம். இதில் விஷேசமானது என்னவென்றால் ஜல்லிக்கட்டு மாடு வளர்ப்பவரின் குணம்தான், மாட்டுக்கும் இருக்கும். சீறிவரும் மாடுகளுக்கு சொந்தக்காரர்களின் பெயர்களை தெரிந்துகொண்டு அடக்கச் செல்லும் மாடுபிடி வீரர்களும் உண்டு. அலங்காநல்லூரில் காளைகள் அதிகமாக அவிழ்த்து விடுவதற்கு, காளைகளுக்கு ஸ்பான்சர்கள் அதிகம் என்பதும் ஒரு காரணம். அவர்கள் கொடுக்கும் பரிசானது மாட்டினை அடக்குபவர்களுக்கோ அல்லது மாட்டின் உரிமையாளருக்கோ மட்டும்தான் போய்ச்சேரும்.

காளை

அலங்காநல்லூரில் இவ்வளவு பெரிய கூட்டம் கொண்ட ஒரு விளையாட்டை நடத்துவது அவ்வளவு எளிதான காரியமல்ல. இதற்கு ஜல்லிக்கட்டு நடத்தும் விழா கமிட்டியார் பிணைப்புத் தொகையாக குறிப்பிட்ட அளவு முன்பணம் செலுத்த வேண்டும். இந்தப் போட்டியில் கலந்துகொள்ளும் மாடுகள் குறித்தத் தகவலை சென்னையில் உள்ள பிராணிகள் நல வாரியத்துக்கு அனுப்பி ஒப்புதல் பெற வேண்டும். மத்திய பிராணிகள் நல வாரியத்தால் காளை தகுதியானது என சான்றளிக்கப்படும். அதேபோல அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் விதிமுறைகளும் சற்று கடுமையாகத்தான் இருக்கும். காளை கட்டவிழ்க்கப்பட்டு வாடிவாசலிலிருந்து வெளியே வரும்போது நான்கு இளைஞர்களுக்கு மேல் காளையை அடக்க முயற்சி செய்யகூடாது. அனைத்து மருத்துவ வசதிகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டு இருக்கும். கால்நடை மருத்துவர்களும், ஆய்வாளர்களும், காளை சரியாக இருக்கிறதா என பரிசோதித்த பின்னரே அனுமதிப்பர்.

ஜல்லிக்கட்டு நடைபெறும்போது, தெக்கத்தி காளை, வடக்கத்தி காளை என காளைகளில் பெரும்பாலான இனங்களையும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக்கு வருகை தந்தால் காணலாம்.

- துரை.நாகராஜன்.      

                                                                                                                                                      

Do you like the story?

Please Appreciate the Author by clapping!