வெளியிடப்பட்ட நேரம்: 09:22 (26/01/2017)

கடைசி தொடர்பு:09:23 (26/01/2017)

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த விதிமுறைகளும்... நடக்கும் இடங்களும்..!

மிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக உச்சநீதிமன்ற தடையால் ஜல்லிக்கட்டு நடைபெறாமல் இருந்தது. தமிழக அரசு கொண்டுவந்த அவசரச் சட்டத்தின் மூலம் மீண்டும் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடைபெறப்போகிறது. பிப்ரவரி 1-ம் தேதி அலங்காநல்லூர் 2-ம் தேதி பாலமேடு, 5-ம் தேதி அவனியாபுரம் என தொடங்கி தமிழ்நாடுட்டில் பல ஊர்களிலும் நடைபெற இருக்கிறது.

இந்த ஜல்லிக்கட்டுபோட்டியை எவ்வாறு நடத்த வேண்டும் என விதிமுறைகளை தமிழக கால்நடைத்துறை அறிவித்துள்ளது. அந்த விதிமுறைகளில் ஜல்லிக்கட்டுப் போட்டியை எப்படியெல்லாம் நடத்த வேண்டும், அதற்காக என்னென்ன வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என சொல்லப்பட்டுள்ளது.

ஜல்லிக்கட்டு

ஒரு இடத்தில் ஜல்லிக்கட்டினை நடத்த நினைத்தால் அந்த மாவட்டத்தினுடைய ஆட்சியரிடம் அனுமதி பெற வேண்டும். அனுமதி பெறும் மனுவில் கலந்துகொள்ளும் காளைகளின் விபரங்கள், ஜல்லிக்கட்டில் கலந்துகொள்ளும் மாடுபிடி வீரர்களின் விபரங்கள் மற்றும் முகவரிகள் ஆகிய அனைத்து விபரங்களும் தெரிவிக்கப்பட்டு இருக்க வேண்டும். மாவட்ட கலெக்டரும் அனுமதி கொடுப்பதற்கு முன்பாக ஜல்லிக்கட்டு நடைபெறும் இடத்தை ஆய்வு செய்ய வேண்டும். இந்த ஜல்லிக்கட்டு விதிகளின் அடிப்படையில் நடைபெறுகிறதா என கண்காணிக்க கால்நடை, சுகாதாரம், காவல் மற்றும் வருவாய்த்துறை ஆகிய துறைகளை சேர்ந்த ஒரு குழுவினை உருவாக்க வேண்டும்.

இந்த குழுவில் உள்ள கால்நடைத்துறை மருத்துவர், ஜல்லிக்கட்டு மாட்டினை முழுமையாக பரிசோதனை செய்த பின்னரே களத்துக்குள் அனுமதிக்க வேண்டும். ஜல்லிக்கட்டினை திறந்த மைதானத்தில்தான் நடத்த வேண்டும். காளைகள் மைதானத்துக்கு கொண்டு வந்து 20 நிமிடங்கள் ஓய்வு எடுக்க வைத்தே களத்திற்கு அனுப்பப்பட வேண்டும். காளைகளுக்கு தண்ணீரும், உணவும் வழங்க வேண்டும். அத்துடன் காளையின் உரிமையாளரும் மாட்டின் அருகில் நிற்க வேண்டும். காளைகள் நோயால் பாதிக்கப்பட்டிருந்தாலோ அல்லது காளைக்கு காடயம் ஏற்பட்டிருந்தாலோ ஜல்லிக்கட்டில் பங்கேற்க அனுமதி கிடையாது.

ஜல்லிக்கட்டு

காளைகள் துள்ளி விளையாடும் மைதானம் 50 சதுரமீட்டருக்கு குறையாமல் இருக்க வேண்டும். அந்த இடத்துக்குள்தான் மாடுபிடி வீரர்களும் நிற்க வேண்டும். அதேபோல மாடு வெளியேறும் பகுதியை மாடிபிடி வீரர்கள் அடைத்து நிற்க கூடாது. மாடுபிடி வீரர்கள் காளையினுடைய திமிலை பிடித்துக்கொண்டே 15 மீ தூரம் வரை செல்ல வேண்டும். 30 நொடி வரையிலோ அல்லது 3 முறை காளை துள்ளி குதிக்கும் வரையோ மாட்டின் திமிலை அணைக்க வேண்டும். வீரர்கள் மாட்டில் வால், கொம்பு அல்லது கால்களை பிடித்து மாட்டினை நிறுத்த முயற்சிக்க கூடாது.

களத்துக்கு வெளியே சென்ற காளையானது திரும்பி வந்தால் அதனை வீரர்கள் மீண்டும் தொடக்கூடாது. போட்டி விதிமீறுபவர்கள் போட்டியிலிருந்து கண்டிப்பாக வெளியேற்றப்படுவர். விழா கமிட்டியார் பார்வையாளர்களுக்கு அமர முறையான இருக்கை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும். காளைகளானது மிரண்டு பார்வையாளர்களின் பக்கம் சென்றுவிடாமல் தடுக்க 8 அடி உயரத்தில் இரண்டு தடுப்புகளை அமைக்க வேண்டும்.

இதனை பொதுப்பணித்துறை ஆய்வு செய்து அறிக்கை அளிக்க வேண்டும். விழா ஏற்பாட்டாளர்கள் கொடுக்கும் சீருடைகளைத்தான் வீரர்கள் அணிந்து களத்திற்குள் வரவேண்டும். அதுமட்டுமல்லாமல் மாவட்ட ஆட்சியர் வழங்கிய அடையாள அட்டையை கொண்டுவர வேண்டும், அவர்களுக்கு பரிசோதனை செய்த பின்னரே போட்டிகளில் கலந்து கொள்ள அனுமதி அளிக்கப்படும். விழா தொடங்கியது முதல் விழா முடியும் வரை அனைத்து நிகழ்வுகளும் வீடியோவாக பதிவு செய்ய வேண்டும். ஜல்லிக்கட்டு நடைபெறும் இடங்களை சுற்றிலும் மருத்துவர்கள் மற்றும் ஆம்புலன்ஸ் வசதிகளுடன் தயாராக இருக்க வேண்டும். 

தமிழகத்தில் பாரம்பர்யமாக ஜல்லிக்கட்டு நடைபெறும் இடங்கள்:

மதுரை மாவட்டம்: அலங்காநல்லூர், அவனியாபுரம்பா, பாலமேடு, சக்குடி, வாடிப்பட்டி, அழகர்கோவில், சாலூர்.

சிவகங்கை மாவட்டம்: சிராவயல், அரளிப்பாறை, கண்டிப்பட்டி, என்.புதூர், காரைக்குடி , நெடுமரம், கண்டரமாணிக்கம், மலைக்கோயில், பட்டமங்கலம்.

புதுக்கோட்டை மாவட்டம்: வேந்தன்பட்டி, திருவாப்பூர், திருநல்லூர்​​​​​​​, ஆலத்தூர்​​​​​​​, பொன்அமராவதி​​​​​​​

சேலம் மாவட்டம்: தம்மம்பட்டி,​​​​​​​ கொண்டலாம்பட்டி,​​​​​​​ கூலமேடு (ஆத்தூர்),.

தேனி மாவட்டம்: பல்லவராயன்பட்டி​​​​​​​, அய்யம்பட்டி​​​​​​​.

திண்டுக்கல் மாவட்டம்: தவசிமடை​​​​​​​, குட்டத்து ஆவாரம்பட்டி, மறவபட்டி​​​​​​​, கொசவபட்டி​​​​​​​, பில்லமநாயக்கன்பட்டி​​​​​​​, புகையிலைப்பட்டி​​​​​​​,  மாரம்பாடி, நத்தம் கோவில்பட்டி​​​​​​​.

திருச்சி மாவட்டம்: பாலக்குறிச்சி​​​​​​​, ஆவாரங்காடு​​​​​​​, வார்ப்பட்டி​​​​​​​, சூரியூர்​​​​​​​, கருங்குளம்​​​​​​​.

- துரை.நாகராஜன்.


டிரெண்டிங் @ விகடன்