வெளியிடப்பட்ட நேரம்: 10:00 (30/01/2017)

கடைசி தொடர்பு:10:12 (30/01/2017)

46 வருடங்களை போன்சாய் மரங்களுக்காக செலவிட்ட போன்சாய் ஆர்வலர்!

போன்சாய்     

 மேலும்  போன்சாய் மரங்கள் படங்களை காண

சுமார் 1300 வருடங்களுக்கு முன்னால் வாழ்ந்த சீன மக்களை மகிழ்ச்சிப்படுத்த வேண்டுமெனில் அவர்களுக்கு போன்சாய் மரங்களை அன்பளிப்பாக கொடுத்தால் போதும். சீனர்களுக்கு போன்சாய் மரங்கள் என்றால் அளவில்லாத விருப்பம். அக்காலக்கட்டத்தில் சீனர்களின் மிக உயர்ந்த பரிசு பொருளாக இந்த மரங்களே இருந்து வந்திருக்கிறது. பல வருடங்கள் இயற்கையான முறையில் பெரிய மரங்களை சிறியதாக்கி தொட்டியில் வளர்க்கும் மரங்களே போன்சாய் மரங்கள். நமது ஊரில் உள்ள ஆல மரம், அரச மரங்களைக்கூட இந்த முறையில் சிறிய மரமாக்கி வளர்க்கலாம். சுருக்கமாக சொல்லப்போனால் ஒரு மரத்தின் முதுமையான தோற்றத்தை சிறிய உருவத்தில் பெற வைக்கும் முறை. வருடங்கள் பல கடந்த போதும் இன்றளவும் இம்மரங்கள் அனைவராலும் விரும்பப்படும் கலையாகும்.

bonsai

 மேலும்  போன்சாய் மரங்கள் பற்றிய படங்களை காண

போன்சாயின் பிறப்பிடம் சீனாவாக இருந்தாலும் இந்த கலை ஜப்பானியர்களை பெரிதும் கவர்ந்தது. இந்த கலை பிற்காலங்களில் ஜப்பானிய கலையாகவே மாறிப்போனது. பல வருடங்களாக ஜப்பானிலேயே முடங்கி இருந்த இந்தக் கலை ஜென் புத்த மதத்தினரால் ஏற்றுக் கொள்ளப்பட்டு இன்று உலகம் முழுவதும் போன்சாய்க்கலை பரவி எல்லா மக்களுக்கும் பிடித்ததாக மாறியிருக்கிறது. 

bonsai

 மேலும்  போன்சாய் மரங்கள் பற்றிய படங்களை காண

 "நம் இந்தியாவில் இக்கலைகளுக்கெல்லாம் முன்னரே வாமண விருட்சம் எனும் குட்டை மரங்கள் இருந்தது" என தனது பேச்சை தொடங்குகிறார், ரவீந்திரன். தமிழகத்தின் கடைக்கோடியில் உள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவிலைப் பூர்விகமாகக் கொண்டவர். கடந்த மூன்று வருடங்களாக தக்கலையில் உள்ள பத்மநாதபுரம் அரண்மனை அருகே தனது "நிக்கி போன்சாய் பூங்கா" என அந்த மரங்களுக்காகவே தனியாக தோட்டம் அமைத்துள்ளார். அவருடன் பேசிக்கொண்டே பூங்காவிற்குள் நுழைந்தோம். பூங்காவுக்குள் நுழைந்தவுடன் நம் கண்களை நிறைத்தது போன்சாய் மரங்களால் பின்னப்பட்ட பசுமை வலைதான். ரவீந்திரன் போன்சாய் பற்றிய தனது தேடலை பகிர்ந்து கொண்டார். "500-க்கும் மேற்பட்ட வகைகளை கொண்டு 1000-க்கும் மேற்பட்ட  மரங்கள் இருக்கிறது. ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையும் ஓர் தேடலை நோக்கி நகர்வதுபோல, என்னுடைய தேடல் போன்சாய் மரங்களாகவே இருந்தது. 20 வயதில் ஆரம்பித்த என்னுடைய தேடலானது 66 வயதாகியும் இன்றும் ஓயவில்லை" என்றவர் தொடர்ந்தார்.

bonsai

 மேலும்  போன்சாய் மரங்கள் பற்றிய படங்களை காண

"சிறு வயதிலிருந்தே செடி வளர்ப்பது என்றால் எனக்கு அவ்வளவு இஷ்டம். என்னுடைய கல்லூரி காலத்தில் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற மலர் கண்காட்சிக்கு சென்றிருந்தேன். அங்கே நான் பல்வேறு செடிகளை பார்த்து கொண்டே கடந்தபோது ஒரு சிறிய தொட்டியும், அதில் வளர்க்கப்பட்டிருந்த குட்டையான மரமும் கண்ணில்பட்டது. இது என் மனதை பெரிதும் கவர்ந்தது. அதை பற்றி அங்கே பேராசிரியர் ஒருவரிடம் கேட்டபோது, 'இது தான் போன்சாய் எனும் ஜப்பானிய கலை' என்று சொல்லி என்னை ஆச்சிரியப்படுத்தினார்.

என் ஆர்வம் கட்டுக்கடங்காமல் போகவே எனது தேடலை ஆரம்பித்தேன். என்னுடைய முதல் போன்சாய் மரமாக ஆலமரம் ஒன்றை வளர்க்க ஆரம்பித்தேன். என்னுடைய அரைகுறை அறிவை கொண்டு ஆலமரம் வளர வளர அதன் கிளைகளை வெட்டிவிட்டுக் கொண்டே இருந்தேன். வருடங்கள் செல்ல போன்சாய் பற்றிய புத்தகங்களை வாசித்தும், அது சார்ந்த வகுப்புகளில் கலந்து கொண்டு முழுமையான அனுபவத்தை பெற்றுக் கொண்டேன். என் முதல் மரம்தான் எனக்கு எப்பவுமே ஸ்பெஷல். இன்று வரை அது என்னுடன் பயணிக்கிறது. ஒரு ஆலமரத்தில் தொடங்கிய என் பயணம் பல மரங்களாக மாறியிருக்கிறது. ஒரு கட்டத்தில் என் தோப்பில் இடம் கூட இல்லாமல் போனது.

bonsai

 மேலும்  போன்சாய் மரங்கள் பற்றிய படங்களை காண

 "பூங்கா அமைக்கலாம் என்ற யோசனை தோன்றியது. பின் பல்வேறு முயற்சிகளால் பூங்காவும் சாத்தியமானது. பூங்கா தொடங்கி 3 வருடங்கள் ஓடிவிட்டது. என்னுடைய 66 வருட வாழ்கையில் கிட்டத்தட்ட 46 வருடங்களை இக்கலைக்காகவே செலவழித்திருக்கிறேன். செலவழித்த வருடங்களுக்கு ஏற்ப பல்வேறு விருதுகளையும் தட்டி இருக்கின்றன இங்குள்ள போன்சாய் மரங்கள். இங்கு 30 வயதிற்கும் மேற்பட்ட போன்சாய் மரங்கள் இருக்கின்றன. இக்கலையை பற்றிய விழிப்புணர்வை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்பதே எனது ஆசை. போன்சாய் குறித்து இன்று இந்தியா முழுவதும் வகுப்புகளும் எடுத்து வருகிறேன். நம் இந்திய நாடு மித வெப்ப மண்டல சூழ்நிலையை பெற்றுள்ளதால் அதற்கு தகுந்த மர வகைகளை தேர்ந்தெடுப்பது நலம். பின் தட்டையான தொட்டியில் குறைந்தது 3 முதல் 4 வருடங்கள் வரை வளருங்கள். மரமானது வளர வளர முறையாக வெட்டிவிடுங்கள். இதற்கிடையில் முறையான போன்சாய் பயிற்சிகளை மேற்கொள்ளுங்கள். பயிற்சியும் பொறுமையுடன் கூடிய தொடர்ச்சியான மரங்களின் பராமரிப்பும் உங்களை சிறந்த போன்சாய் வல்லுனராக மாற்றும். தன்னுடைய இலக்காக நம் ஊர்களின் மரங்களையும் போன்சாய் முறைக்கு இயற்கையாக ஒத்து வர வைப்பதுதான்" என்கிறார் மகிழ்ச்சியுடன்.

- செ.ராஜன்,

(மாணவப் பத்திரிகையாளர்).
                                             
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்