தமிழ்நாடு ஆகப்போகிறதா 'தண்ணியில்லா காடு'..!?#TNdrought2017 | Will Tamilnadu survive this upcoming drought?

வெளியிடப்பட்ட நேரம்: 17:12 (04/02/2017)

கடைசி தொடர்பு:17:12 (04/02/2017)

தமிழ்நாடு ஆகப்போகிறதா 'தண்ணியில்லா காடு'..!?#TNdrought2017

தண்ணீர் இல்லா வறட்சி தமிழ்நாடு

றட்சியால் விவசாயிகள் தற்கொலை என்ற செய்திகள் இன்று அன்றாடம் தமிழ்நாட்டு மக்கள் படிக்கும் செய்தியாகி விட்டது. இந்த வறட்சிக்கு என்ன காரணம் என்பதை சற்று விரிவாகக் காண்போம். கர்நாடக மாநிலம், கோலார் மாவட்டத்தில் உள்ள நந்திதுர்க்கா மலைப்பகுதியில் ஆரம்பித்து கர்நாடகாவில் 93-கி.மீ தூரம் பயணித்து ஆந்திராவின் சித்தூர் மாவட்டத்திற்குள் நுழைகிறது பாலாறு. அதன்பிறகு ஆந்திராவில் 33 கி.மீ பயணம் செய்யும் பாலாறு தமிழ்நாட்டில் வேலூர் மாவட்டம், வாணியம்பாடியில் நுழைகிறது. கர்நாடகாவிலிருந்து தண்ணீர் ஓடும் ஆறாக வரும் பாலாறு தமிழ்நாட்டிற்குள் நுழையும்போது வெறும் நீரோடையாக நுழைகிறது. ஆந்திராவில் பாலாறு மொத்தம் பயணிக்கும் தூரமே 33 கி.மீதான், அந்த இடைவெளிக்குள் 22 தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன. பாலாற்றின் நதிநீர் ஒப்பந்தப்படி பாலாற்றில் தடுப்பணை கட்டுவதோ, தண்ணீரை தேக்கி வைப்பது அல்லது தண்ணீரை திசை திருப்புதல் என எதுவும் செய்யக் கூடாது. 

தடுப்பணை

         தமிழ்நாட்டிற்குள் நுழையும் பாலாறானது தமிழ்நாட்டில் 233 கி.மீ பயணித்து கல்பாக்கத்தை அடுத்த சதுரங்கப்பட்டினத்தில் கடலில் கலக்கிறது. ஆந்திர அரசு அதிகமான தடுப்பணைகள் கட்டியுள்ளதால் விவசாயத் தேவைக்கு தண்ணீர் இல்லாமல் பாலாறு பாழ்பட்டு காட்சியளிக்கிறது. மழைக்காலத்தில் மட்டும் சிறிதளவு தண்ணீர் வருகிறது. ஏற்கனவே தண்ணீர் வராமல் தடுக்கும் ஆந்திரா பாலாற்றின் தடுப்பணைகளினுடைய அளவை உயர்த்தும் வேலையில் ஈடுபட்டுள்ளது. கடந்த 2000-ம் ஆண்டு தமிழ்நாடு - ஆந்திர எல்லைப்பகுதியில் ஜோதிநகர், சாமுண்டிப்பள்ளம் என்ற இடத்தில் 5 அடிக்கு தடுப்பணை கட்டப்பட்டிருந்தது. அதனை தற்போது 7 அடியிலிருந்து 12 அடியாக உயர்த்தியிருக்கிறார்கள். அதேபோல, குப்பம் அருகிலுள்ள நாயனூர் என்ற இடத்தில் 5 அடி உயரமுள்ள தடுப்பணையை 12 அடியாக உயர்த்திக்கட்டும் பணியினை ஆரம்பித்துள்ளது. இதனையடுத்து சோமபள்ளம், ஒக்கேல்ராவ் ஆகிய பாலாற்றுப் பகுதியில் ஏற்கனவே கட்டியிருக்கும் தடுப்பணைகளின் உயரங்களை அதிகரிக்கவும் ஆந்திர அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான கட்டுமானப் பொருட்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இதுபோக இனி புதிதாக இரண்டு அணைகளை கட்டவும் ஆந்திர அரசு திட்டமிட்டுள்ளதாகவும் தெரிகிறது. கடந்த 2016-ம் ஆண்டு ஜூலை மாதம் புல்லூர் பெரும்பள்ளம் பகுதியில் இருந்த தடுப்பணையை 5 அடியிலிருந்து 12 அடியாக உயர்த்தியிருப்பது குறிப்பிடத்தக்கது. ஆந்திர அரசின் இந்த செயல் அப்போதே தமிழக விவசாயிகள் மத்தியில் கொந்தளிப்பினை ஏற்படுத்தியது. இதனையடுத்து தமிழக அரசின் சார்பில் அப்போதே உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. 

பவானிசாகர் அணை

       இதற்கெல்லாம் ஆந்திர அரசு சொன்ன ஒரே காரணம், "மழைத்தண்ணீரை சேமித்து வறட்சிக் காலத்தில் பயன்படுத்தவே இந்த தடுப்பணைகளின் உயரங்களை அதிகப்படுத்துதல்" என்பதுதான். இப்போது நாயனூர் பகுதியில் தடுப்பணை உயரப்படுத்தும் பணிகள் நடைபபெறப்போவதால் வேலூர் காஞ்சிபுரம் மாவட்ட விவசாயிகள் மிகுந்த மன வேதனையில் ஆழ்ந்துள்ளனர். இந்த பாலாற்றினை நம்பி வேலூர் மாவட்டத்தில் 11,000 ஹெக்டேர் நிலங்கள் நேரடியாக பாசனத்தை பெறுகிறது. பாலாற்றின் நீரை நம்பி வேலூர் மாவட்டத்தில் 350 ஏரிகள் மற்றும் காஞ்சிபுரத்தில் 50 ஏரிகளும் உள்ளன. இதுபோக பவானி ஆற்றின் குறுக்கேயும் கேரளா அரசு அணை கட்ட துவங்கி விட்டது. காவிரியில் தமிழகத்திற்கு தரவேண்டிய தண்ணீரைக்கூட கர்நாடகம் தருவதில்லை. இதனால் சென்ற ஆண்டு காவிரி நீரை நம்பி பாசனம் செய்த விவசாயிகள் தற்கொலை செய்ய நேர்ந்தது. இன்று டெல்டாவில் நெல் விளையும் வயல்களில் தண்ணீர் இல்லாமல் காய்ந்து சருகாக போன புற்களை மாடுகள் மேயும் அவலங்கள் அதிகமாக அரங்கேறி வருகின்றன. 

மணல் அள்ளும் லாரிகள்

முல்லைப்பெரியாறிலும் கேரளா தமிழகம் இடையே எப்போதும் பிரச்னைதான். இப்படி தமிழ்நாடு மொத்தமாக வஞ்சிக்கப்பட்டுக் கொண்டே வருகிறது. அடுத்த மாநிலம்தான் வஞ்சனை செய்கிறது என்றால், விவசாயத்துக்கே தண்ணீர் இல்லாத தாமிரபரணியில் அரசு நிறுவனமான சிப்காட்டே தண்ணீரை உறிஞ்சி தொழிற்சாலைகளுக்கும், குளிர்பான நிறுவனங்களுக்கும் வழங்குகிறது. இதனை உயர்நீதிமன்றமே "விவசாயத்துக்கே தண்ணீர் இல்லாதபோது தொழிற்சாலைகளுக்கு எதற்கு தண்ணீர்" என நேரடியாக கண்டிக்கும் வகையில் தமிழக அரசின் செயல்பாடு மோசமாக இருக்கிறது. தமிழ்நாட்டில் அனைத்து இடங்களிலும் உள்ள சிப்காட்டுகளும் தண்ணீரை எடுத்து தொழிற்சாலைகளுக்கு கொடுக்கிறது. இதற்கு சாட்சி, காஞ்சிபுரம் மாவட்டம், பிள்ளைப்பாக்கத்தில் ஏரிக்குள் சிப்காட் அமைந்துள்ளதுதான். இதுதவிர தமிழகம் முழுவதும் உள்ள ஏரிகள், குளங்களையும் அரசுப் பொதுபணித்துறை முறையாக தூர்வாரவில்லை. நகரக் கட்டமைப்பு என்ற பெயரில் நதிகள், ஏரிகள் மற்றும் குளங்கள் ஆகியவற்றை அழித்து விட்டது. இது தவிர பருவமழையும் தமிழகத்தை ஏமாற்றிவிட்டது.

மணல் அள்ளும் இயந்திரங்கள்

   கடந்த 2016-ம் ஆண்டு தமிழ்நாடு முழுவதும் 200 விவசாயிகளுக்கும் மேல் பூச்சி மருந்து குடித்தும், மாரடைப்பாலும் மரணத்திருக்கிறார்கள். தமிழ்நாட்டில் ஆற்றுபகுதிகளில் நீர்வளம் குறைவதற்கு ஆற்றில் அளவுக்கு அதிகமாக மணல் அள்ளுவதும் ஒரு முக்கிய காரணம். இவ்வளவு ஆண்டுகளாக ஆண்ட அரசுகளும், ஆளும் அரசுகளும் விவசாயிகள் நலன், விவசாய மேம்பாட்டுத்திட்டங்கள் மற்றும் விவசாய கடன்கள் உள்ளிட்ட திட்டங்களால் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தியிருக்கிறோம் என்று மார்தட்டுகிறது. வருடம் முழுவதும் விவசாயத்துக்கும் விவசாயிகளுக்கும் நிதி ஒதுக்கப்படுகிறதே, அது முழுமையாக விவசாயிகளுக்கு போய் சேர்கிறதா என்றால் கிடையாது.

விவசாயி மரணம்

விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு பணமாக கொடுக்கும் அரசு அவர்களுக்கு தேவையான தண்ணீரை கொடுத்திருந்தால் இவ்வளவு விவசாயிகளின் உயிர் போயிருக்காதே... உணவு உற்பத்தியும் அதிகரித்து, உணவுப்பொருட்களின் விலையும் குறைந்திருக்குமே... இதையெல்லாம் வெறும் பணத்தால் ஈடுகட்டினால் உணவு உற்பத்திக்கு வெளி மாநிலங்களிடம்தான் உணவுக்காக கையேந்த வேண்டும், அதுவும் அதிக விலை கொடுத்து... இதிலிருந்து தெரிவது விவசாயத்தினை வளப்படுத்த முறையான கொள்கைகள் வகுக்கப்படவில்லை என்பதுதான். தமிழ்நாட்டில் அரசு அதிகாரிகள் மத்தியில் "தண்ணியில்லாத காடு" என்ற வார்த்தை அதிக பிரபலம். அதேபோல தமிழ்நாடும் தண்ணி இல்லாத காடாக மாறிவிட்டது. இனியாவது தமிழகஅரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே விவசாயிகளின் ஒட்டுமொத்த குரலாக உள்ளது.

-துரை.நாகராஜன்.


டிரெண்டிங் @ விகடன்