வெளியிடப்பட்ட நேரம்: 16:00 (10/02/2017)

கடைசி தொடர்பு:18:02 (10/02/2017)

பணத்தை மிச்சப்படுத்தும் சோலார் வீடு..! 72 வயது இளைஞரின் முயற்சி!

சோலார் மாடித்தோட்டத்தில் சுரேஷ்

கர வாழ்க்கைக்குப் பழக்கப்பட்ட மக்கள் பெரும்பாலும் மின்சாரம் இல்லாமல் இயங்க முடியாது. அதிலும், புயல், வெள்ளம் என்று வந்துவிட்டால் நகர மக்கள் படும் கதி அதோ கதிதான். மின்சாரம் இல்லாமல் தொலைதொடர்பு துண்டிக்கப்பட்டு, வீட்டிலும் மின்சாரம் இல்லாமல் தண்ணீரை பயன்படுத்த முடியாமல், வீட்டைச் சுற்றிலும் வெள்ளம் சூழ்ந்து என மக்கள் படும் அவஸ்தைகள் மிக அதிகம். அவசரக்காலத்தில் தமக்கு ஏற்படும் பிரச்னைகளை தீர்க்க பலரும் தற்போது வீடுகளில் சோலார் மின்தகடுகளை பொருத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இதில் குறிப்பிடத்தகுந்தவர், சுரேஷ். இந்த சுரேஷை பெரும்பாலோனோர்க்கு தெரிந்திருக்கும் அளவுக்கு இவர் பிரபலமில்லை. தன் வீட்டில் சோலார் மின்தகடுகள், பயோகேஸ் எரிவாயுக்கலன், மழைநீர் சேகரிப்பு, மாடித்தோட்டம் என அனைத்தையும் ஒரு சேர உருவாக்கி மின்சாரத்தேவையை குறைப்பதோடு சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பு ஏற்படாதவாறு தனது வீட்டை பாதுகாத்து வருகிறார். 

பயோகேஸ் மற்றும் மழைநீர் சுத்திகரிப்பு தொட்டி

சென்னை, கீழ்ப்பாக்கம் ஈகா தியேட்டருக்கு அருகே வசித்து வருகிறார் சுரேஷ். 73 வயது முதிர்ந்த குரலாக இருந்தாலும், சுரேசின் குரலில் உற்சாகம் அதிகமாக தெரிந்தது. அவர் தனது வீட்டைச் சுற்றிக் காட்டிக்கொண்டே பேசத் தொடங்கினார். “நான் சென்னை, இந்திய தொழில்நுட்பக் கல்லூரியில் இயந்திரப் பொறியியலும், அஹமதாபாத் இந்திய மேலாண்மை கல்லூரியில் முதுகலைப்படிப்பும் பயின்றேன். அதற்கு பின்னர் பல்வேறு நிறுவனங்களில் வேலை பார்த்தேன். ஐம்பது வருட தொழில் அனுபவம் எனக்கு உண்டு. அதனால் அதிகமான மேல்நிலை மனிதர்களின் பழக்கம் ஏற்பட்டது. அதனால் தான் இந்தியாவிலேயே முதன் முறையாக வீட்டிலேயே பயோகேஸ் கலன், சோலார் மின் உற்பத்தி, மழைநீர் சேகரிப்புத் திட்டம், மாடித் தோட்டம் என்று நான்கையும் என்னால் அமைக்க முடிந்தது. இன்று என் அனுபவத்தை வைத்துக் கொண்டுதான் இதையெல்லாம் செய்ய முடிகிறது" என்று முன்னுரை கொடுத்தவர் தொடர்ந்து பேசினார்.

மாடித்தோட்டத்தில் சுரேஷ்

"இதுதான் பயோகேஸ் உற்பத்தி செய்யும் கலன். இதிலிருந்து எடுக்கும் வாயுவைத்தான் சமையலுக்கு பயன்படுத்துகிறேன். ஒரு நாளைக்கு 4 கிலோ காய்கறிக்கழிவுகள் மற்றும் மக்கும் குப்பைகளை அக்கம் பக்கம் வீடுகளில் இருந்து வாங்கி வந்து பயொகேஸ் கலனில் போடுவேன். கலனில் இணைக்கப்பட்டுள்ள குழாய்கள் மூலமாக சமையலறைக்குள் வைக்கப்பட்டுள்ள அடுப்பு இணைக்கப்பட்டிருக்கும். இதன் மூலம் நான் வீட்டு சமையலுக்கு தேவையான எரிபொருளை இதில் இருந்தே எடுத்துக் கொள்கிறேன். அவசர தேவைக்காக வருடத்துக்கு இரண்டு சிலிண்டர்கள் வாங்குவேன். இந்த கலனை அமைக்க மொத்தமாக 40,000 ரூபாய் செலவானது. இதிலிருந்து வெளிவரும் கழிவுகளை மாடித்தோட்டத்துக்கு உரமாகப் பயன்படுத்திக் கொள்கிறேன். இந்த பயோகேஸ் கலனானது 2,406 கிலோ அடர்த்தி கொண்டது. இதில் பூண்டு, எழுமிச்சை போன்ற கழிவுகளை கலனில் போடுவதை தவிர்க்கலாம். இந்த கலன் மூலம் எரிபொருளாக எனது வீட்டில் வருடத்துக்கு 3,000 ரூபாய் மிச்சமாகும்" என்றவர் அடுத்ததாக மழைநீர் சேகரிப்பினை காட்டினார். 

மழைநீர் சேகரிப்பு

"மழைநீர் சேகரிப்பு சுத்திகரிப்புத் தொட்டி 250 லிட்டர் கொள்ளளவு கொண்டது. மாடியிலிருந்து விழும் மழைநீர் சுத்திகரிக்கப்பட்டு கீழே உள்ள தரைத்தளத் தொட்டியில் சேகரமாகும். மீதம் உள்ள நீர்  சுத்திகரிக்கப்பட்டு கிணற்றுக்குள் சென்றுவிடும். இதன் மூலம் எனக்கு தண்ணீர் தேவை பெரும்பாலும் குறைகிறது" என்றவர், அடுத்ததாக மாடித்தோட்டத்தினை காட்டினார். "மாடித்தோட்டம் சாதாரணமாக 4 பைகளை வைத்து ஆரம்பித்தேன். அதுவும் பயோகேஸில் மீதமாக வரும் கழிவுகளுக்காத்தான். ஆனால் செடிகள் நன்றாக வளர ஆரம்பித்தன. இதனை பார்த்தவுடன்தான் எனக்கு மாடித்தோட்டம் அமைத்தால் என்ன என யோசனை தோன்றியது. இதற்காக பீர்க்கங்காய், சுரைக்காய், எலுமிச்சம், வெள்ளரிக்காய், அகத்திக்கீரை, கொத்தமல்லி, சேப்பங்கிழங்கு, அவரைக்காய், முள்ளங்கி, மிளகாய், பீட்ரூட், பாலைக்கீரை, பீன்ஸ் என ஒரு வீட்டுக்குத் தேவையான அனைத்தையும் மாடித்தோட்டத்தில் வைத்திருக்கிறேன். காலையிலும் மாலையிலும் இருபது நிமிடங்கள் இந்த தோட்டத்தை பராமரிக்கும் வேலையை செய்வேன். அப்போது செடிகள் வாடியிருந்தால் அதனுடன் பேசுவேன். ஆனால் நான் செடிகளுடன் பேசுவதை அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் கேலிசெய்வார்கள். நான் அதையெல்லாம் ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்வதில்லை. வீட்டைச் சுற்றிலும் வாழை, கொய்யா, மூங்கில், தென்னை ஆகிய மரங்களையும் வைத்திருக்கிறேன். வீட்டைச் சுற்றிலும் காடுபோல அமைத்துள்ளேன். இதே போல வீட்டைச் சுற்றிலும் 15 அடி நீளம் ஒரு அடி ஆழத்துக்கு குழி அமைத்து வீட்டுக்குள் வரும் மழைநீரை வாசலிலேயே தடுத்து பூமிக்குள் அனுப்பி விடுகிறேன். இதன் மூலமா அதிகமான மழை பெய்தாலும்கூட என் வீட்டுக்குள்ள தண்ணீர் வராது" என்றவர், மாடியின் உச்சியில் அமைத்திருந்த சோலார் மின்தகடுகளை காட்டினார்.

சோலார் தகடுகளுடன் சுரேஷ்
 

“நான் ஜெர்மனி நாட்டுக்குப் பயணம் செய்த போது, அங்கு சூரிய ஒளியை வைத்து மின்சாரம் உற்பத்தி செய்வதைக் கண்டேன். ஆறு மாதங்கள் மட்டுமே சூரிய ஒளியை கொண்ட நாடு ஜெர்மனி அதனைச் செய்யும்போது, வருடத்தின் பன்னிரண்டு மாதங்களும் சூரிய ஒளியை பெறும் வளமுள்ள நம் நாட்டில் செய்யலாமே என மனதில் தோன்றியது. முதலில் ஒரு கிலோவாட்டில் தொடங்கினேன். இன்று மூன்று கிலோவாட்டில் மின் தகடுகளை அமைத்துள்ளேன். இதற்கான செலவுத்தொகை மொத்தம் 4 லட்சம் ஆனது. இந்த தகடுகளிலிருந்து சூரிய ஒளிமூலம் மின்சாரம் பெறப்பட்டு கீழே உள்ள பேட்டரிகளில் சேமிக்கப்பட்டு பின்னர் மின்சாரத்தை எடுத்துக் கொள்கிறேன். வீடுகளிலும் பயன்படுத்தும் பல்புகள் மற்றும் மின்சாதன பொருட்களும் மின்சாரத்தை குறைக்கும் அளவில் இருக்க வேண்டும். இன்று என் வீட்டில் மைக்ரோவேவ் ஓவன் மற்றும் வாட்டர் ஹீட்டர் மட்டும் தான் அரசு மின்சாரத்தில் இயங்குகின்றன. ஒரு கிலோவாட் உற்பத்தி நிலையம் பேட்டரியுடன் அமைக்க ஒன்றரை லட்சம் வரை செலவாகும். ஆனால் அரசு மின் கட்டணத்தோடு ஒப்பிடும்போது சோலார் மின்தகட்டில் முதலீடு செய்த பணத்தை விரைவாக எடுத்து விடலாம். பத்து வருடங்களுக்குப் பிறகு அரசுக்கு செலுத்தும் மின்கட்டணம் மிச்சம்தானே. கடந்த ஐந்து வருடங்களில் ஒரு நாள் கூட எனக்கு மின் தடை இல்லை. வர்தா புயல் பாதிக்கப்பட்டபோதுகூட என் வீட்டில் அந்த ஒரு நாள் இரவு மட்டும் மின்சாரம் இல்லை. ஆனால் அடுத்த நாளே எனக்கு மின்சாரம் கிடைத்து விட்டது. பக்கத்தில் இருக்கும் வீடுகளுக்கு மின்சாரம் கிடைக்க 4 நாட்கள் ஆனது. அப்போது சோலார் மின்தகடுகளைப் பற்றி அக்கம் பக்கத்தினர் ஆச்சர்யத்துடன் கேட்டனர். ஆனால் இப்போது அதை மறந்து விட்டனர். ஆனால் மீண்டும் ஒருநாள் எல்லோரும் சோலாரை வீடுகளில் அமைக்கும் காலம் விரைவில் வரும். பல பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் இதை நான் எடுத்துச் சொல்லியிருக்கிறேன். என் வாழ்நாள் உள்ளவரைக்கும் இதை அடுத்தவர்களுக்கு எடுத்துச் சொல்லுவேன்" என்கிறார், உறுதியுடன்...


-துரை.நாகராஜன், ம.சக்கர ராஜன்(மாணவப் பத்திரிகையாளர்).
படங்கள்: தி,குமரகுருபரன்.


டிரெண்டிங் @ விகடன்