இதற்குத்தான் ஜல்லிக்கட்டு கேட்டோம்!

ஜல்லிக்கட்டு மாடுகள்

மிழகத்தின் பாரம்பர்ய கலாசாரமான ஜல்லிக்கட்டு தொன்று தொட்டு நடந்துவரும் ஒன்று. அதற்கு எப்படி தடை வந்தது என்பதனை சற்று விரிவாக காண்போம். 1966-ம் ஆண்டு வனவிலங்குகளை பயன்படுத்தி பொது இடங்களில் வித்தை காட்டக் கூடாது என இந்திய விலங்கு வதைச்சட்டம் அமைத்து விலங்குகளின் பட்டியல் தயாரிக்கப்பட்டது. அதன்படி, வன விலங்குகளைப் பொது இடத்தில் துன்புறுத்துவது சட்டப்படிக் குற்றம் என ஆனது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் வரைக்கும் சிங்கம், புலி போன்ற விலங்குகளை வைத்து சர்க்கஸ் காண்பிக்கப்படுவதையும் பார்த்திருக்கிறோம். ஆனால் வனவிலங்கு ஆர்வலர்களின் அதீத செயல்பாட்டால் 2008-ம் ஆண்டு தமிழகத்தில் பாரம்பர்யமாக நடக்கும் ஜல்லிக்கட்டுக்கு எதிராக தங்களது கண்டனக் குரல்களை எழுப்பினர். அத்தோடு நிற்காமல் உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடுத்த வண்ணம் இருந்தனர். உச்சநீதி மன்றத்தில் 'ஜல்லிக்கட்டு ஒழுங்குமுறைச்சட்டம் 2009' என ஒரு சட்டத்தை அமைத்து ஒவ்வொரு முறையும் சில கட்டுப்பாடுகளுடனே ஜல்லிக்கட்டு நடந்து வந்தது. 

திமிறும் ஜல்லிக்கட்டு மாடு

 கடந்த 2011-ம் வருடம் சிங்கம், புலி, கரடி, குரங்கு போன்ற வன விலங்குளைக் பொது இடங்களில் வைத்து வித்தை காட்டக் கூடாது என்பதில் காளையையும் சேர்க்கப்பட்டது. அடுத்ததாக 'ஜல்லிக்கட்டு ஒழுங்குமுறைச்சட்டம் 2009"-ஐ அகற்றக்கோறி பீட்டா அமைப்பு உச்சநீதிமன்றத்தில் 'ஜல்லிக்கட்டை தடை' செய்யக்கோரி வழக்கு தொடர்ந்தது. இதனை விசாரித்த நீதிமன்றம் தமிழக அரசின் வாதத்தினால் சில கட்டுப்பாடுகளுடன் மீண்டும் அனுமதி கொடுத்தது. ஆனால் 2013-ம் ஆண்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டில் விலங்கு நல வாரியங்கள் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து விதிமுறைகள் மீறப்பட்டதாக நிரூபித்தன. இதையடுத்து 2014-ம் ஆண்டு 'ஜல்லிக்கட்டு தடை' என்ற அறிவிப்பினை உச்சநீதிமன்றம் வழங்கியது. அதோடு நிற்காமல் ஜல்லிக்கட்டு ஒழுங்குமுறை சட்டம்-2009-ஐ நீக்கம் செய்தும் உத்தரவிட்டது. ஜல்லிக்கட்டிற்கு தடை வந்தது இப்படித்தான். இரண்டு ஆண்டுகள் ஜல்லிக்கட்டு நடக்காமல் பெரும்பான்மையான காளைகள் அடி மாடுகளாக அனுப்பப்பட்டன. இரண்டு வருடக் காத்திருப்புக்கு பின்னர் "பொறுத்தது போதும் பொங்கி எழு" என்று மாணவர்களும், இளைஞர்களும் தமிழகம் முழுவதும் திரண்டு அறப்போராட்டம் நடத்தினர். இந்திய வரலாற்றிலேயே தலைமை இல்லாமல் பாரம்பர்யத்திற்காக ஒன்றுகூடி அமைதியாக நடந்த ஆர்ப்பாட்டம் இதுவாகத்தான் இருக்க முடியும் என்று உலகமே வியக்கும் அளவுக்கு வரலாறு படைத்தனர். ஆனால் போராட்டக்களத்தின் கடைசி நாள் "சிவபூஜையில் கரடி புகுந்ததுபோல்" ஆகிவிட்டது.

ஜல்லிக்கட்டு மாட்டை அடக்கும் வீரன்


 
  இந்த சின்ன விஷயத்துக்கு இவ்ளோ பெரிய போராட்டமா என சிலர் கேட்கலாம். இது ஏதோ கிரிக்கெட், வீடியோ கேம், சீட்டு போன்ற விளையாட்டுக்களைப் போல அவ்வளவு எளிதில் விளையாடிவிட முடியாது. மாடுபிடிவீரர்கள் சிறிது நிதானம் இழந்தால் கூட மரணம்தான். முதலில் மாடு அவிழ்க்கப்பட்டு வெளியே வரும்போது மாட்டின் பின்னால் சென்று யாரும் பிடிப்பதில்லை. மாடுபிடிவீரன் முதலில் பிடிப்பதே மாட்டினுடைய திமிலைத்தான். திமில் ஒன்றும் சாதாரணமானது அல்ல. மாடு குதித்து கொம்பினை சுழற்றினால் மாடு கொடுக்கும் பலத்திற்கு பிடிபடும் வீரர் களத்தில் பறப்பது நிச்சயம். இதற்காக மாடு பிடிப்பவர்கள் அச்சப்படுவதும் இல்லை. முதல் காளை பிடிபடாமல் சென்றால் காயம்பட்டாலும் மண்ணை எடுத்து காயத்தை துடைத்துக்கொண்டு மீண்டும் அவன் கண்கள் அடுத்த மாட்டிற்காக காத்திருக்கும். அதேபோல காளை வருகிறது என மைக்கில் அறிவிப்பவர் முதல் மாடுபிடிவீரர்களுக்கு தண்ணீர் கொடுப்பவர்கள் வரைக்கும் அன்றைக்கு மாடுபிடிவீரர்களுக்கு கொடுக்கப்படும் மரியாதைகள் ராஜா வீட்டு உபசரிப்பு போல பாசம் கொஞ்சம் தூக்கலாக இருக்கும். ஒவ்வொரு முறையும் மாடு வருகிறது என அறிவிப்பவர், "ஏப்பா அவரோட மாடு வருது, தில் இருக்குறவன் மட்டும் கிட்ட வந்து பிடி, பிடிக்க முடியலைனா விலகி போ" என்று சொல்வதும், களத்தில் மாடுபிடிவீரர்களுக்கு அடிபட்டுவிட்டால், "தம்பியை தூக்குப்பா, ஏம்பா 108 இங்க வாங்க தம்பிக்கு அடிபட்டிருச்சு, சீக்கிரமா தூக்குங்க" என்று சொல்லும்போது அவருடைய பாசக்குரல் மைக்கில் ஒலிக்கும். 

மாட்டை அணைதல்

   ஜல்லிக்கட்டினை அடக்க வரும் வீரர்கள் பட்டாளம் ஒரு கூட்டம் என்றால், அதனை காண வரும் கூட்டம் ஐந்து மடங்கிற்கு மேல் இருக்கும். இரவில் இருந்தே இடம் பிடித்து காத்திருக்கும் அவர்களுக்கு என்ன அவசியம். இது "தமிழர்களுடைய திருவிழா" அங்கே அனைவரும் போட்டி என்று வருவதில்லை, திருவிழா என்ற நோக்கத்தில் கூடும் கூட்டம்தான் அது. கார் முதல் தங்கம், வெள்ளி, இருசக்கர வாகனம் வரைக்கும் அனைத்தும் பரிசாக வழங்கப்படுவதும் இந்த திருவிழாவில்தான். மாட்டை அடக்கும் வீரர்களுக்கு பெண் தரப்பட்டது அந்தக்காலம், அதேபோல மாட்டை அடக்கினால் விலை உயர்ந்த பொருட்களை கொடுத்து வீரர்களை மகிழ்விப்பது என தற்போது வரைக்கும் தொடர்கிறது. திடீரென மைக்கில், "ஏய் பிடி பிடி பிடி, இதை பிடிச்சா தங்க காசு, செல்போன், கார்" என ஒரு சத்தம் கேட்டால் உடனே அவசரப்பட்டோ பொருளுக்கு ஆசைப்படாமல் நிதானமாக மாடுகளை நோக்கி திரும்பும் வீரர்களின் விளையாட்டு காண கண்கோடி வேண்டும். ஜல்லிக்கட்டுக்காக வளர்க்கப்படும் காளைகள் வளர்க்கும்போது ரேசன் கார்டில் சேர்க்காதது ஒன்றுமட்டும் குறைவுதான். அந்த அளவுக்கு பாசத்தோடு வளர்க்கப்படும் காளைகள் களத்தில் துன்புறுத்த காளையின் சொந்தக்காரருக்கு மனது வராது. வடநாட்டில் வண்ணப் பொடிகளைத்தூவி விளையாடும் ஹோலி விளையாட்டு முக்கியம் என்றால், தொன்று தொட்டு நடந்து வரும் ஜல்லிக்கட்டும் முக்கியம்தான். வழக்கமாக பொங்கலுக்கு நடக்கும் ஜல்லிக்கட்டு யாருக்கும் தெரியாமலே பத்தோடு பதினொன்றாக போய்விடும். ஆனால், சாதாரண லோக்கல் சேனல்களில் முடிந்துவிடும் ஜல்லிக்கட்டானது, இன்று முன்னனி சேனல் வரை லைவ் செய்ய வைத்திருப்பதும் இந்த ஜல்லிக்கட்டு போராட்டம்தான். 

திமிலை பிடிக்கும் வீரன்

       தமிழர்களின் கலாச்சார நிகழ்ச்சிகள் மீதும், பாரம்பர்யங்கள் மீதும் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு தற்போது இளைஞர்கள் மத்தியில் விழிப்புணர்வும் ஏற்பட்டுள்ளது. ஆர்வமும் அதிகரித்துள்ளது. உச்சநீதிமன்ற தடைக்கு முன்னர் பல இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறவில்லை. கிராம மக்களால் கைவிடப்பட்ட ஒன்றாக இருந்தது. ஆனால் இந்தமுறை வழக்கமான இடங்கள் மட்டுமின்றி, பல இடங்களில் மீண்டும் ஜல்லிக்கட்டு புத்துயிர் பெற்றுள்ளது. நம் மரபுகளில் இருந்து, கொஞ்சம் கொஞ்சமாக நழுவி, நாம் மறந்துகொண்டு இருந்த பாரம்பர்ய அடையாளங்களின் மீது புது வெளிச்சம் பாய்ச்சியுள்ளது இந்த ஜல்லிக்கட்டு. இதுபோன்ற மரபு ரீதியான கொண்டாட்டங்கள்தான், நமது கலாச்சாரங்களை எப்போதும் உயிர்ப்புடன் வைத்திருக்கும் என்பது மீண்டும் நிரூபணம் ஆகியுள்ளது. இதற்காகத்தான் கேட்டோம் ஜல்லிக்கட்டு. இதற்காகத்தான் வேண்டும் ஜல்லிக்கட்டு.
  
-துரை.நாகராஜன்  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!