வெளியிடப்பட்ட நேரம்: 10:05 (04/03/2017)

கடைசி தொடர்பு:10:05 (04/03/2017)

ஸ்மார்ட் சிட்டிகளுக்கு முன் ஸ்மார்ட் வில்லேஜ்களை நாம் யோசிக்க வேண்டாமா?

ஸ்மார்ட்

பயணம் என்பது நெரிசல்மிக்க நாட்களில் அலுவலகத்துக்கும் வீட்டுக்குமான தூரத்தை கடப்பதாக மட்டுமே இருக்கும் மாநகர மாக்கான்களில் நானும் ஒருவன். Routine is the biggest addiction என்பது உண்மைதான். ஆனால், என்றோ ஒருநாள் திடிரென அன்றாடத்தில் நமக்கொரு ஒவ்வாமை வரும். இதையெல்லாம் விட்டுவிட்டு, மனித வாசனை குறைவாக இருக்கும் இடத்தின் மீது ஒரு ப்ரீதி எழும். அந்த யோசனை எழுந்துவிட்ட தருணத்தில் இருந்து அதை உண்மையாக்கும் நொடி வரை வேறு எதிலும் மையல் ஏற்படாது. அப்படி எனக்கும் ஆனது. சில நாட்களுக்கு முன் அதை நிஜமாக்க ஒரு நீண்ட பயணம் சாத்தியமானது. அப்படி போனபோது கால் வைத்த ஓர் இடம் கோவாவில் இருக்கும் அமைதியான தீவார் தீவு.

கோவா என்றாலே இசையும், இரைச்சலும் கூடிய இடமாகத்தான் எனக்கும் தெரியும். ஆனால், அம்மாநிலத்திலும் உலகமயமாக்கல் சாத்தியப்படாத பகுதிகள் நிறைய இருக்கின்றன. இன்னமும் அந்த பகுதிகளுக்கு நீர்வழி மார்க்கம் தான். காரையே ஃபெர்ரியில் ஏற்றி ஆற்றை தாண்ட உதவுகிறார்கள். ஆறு எல்லாம் இல்ல. அறுபது என்றே சொல்லலாம். அவ்வளவு அகலம். அவ்வளவு தண்ணீர். 
தீவாரில் கால் வைத்ததில் இருந்தே அலாதியாக இருந்தது. எங்கும் அமைதி. ஒவ்வொரு வீட்டுக்கும் சீரான இடைவெளி.இயற்கையோடு இணைந்து வாழ்கிறார்கள். நீண்ட நேரம் கழித்து கண்ணில்ப்பட்ட ஒருவரிடம் பேசினேன்.

நாங்கள் பேசியதன் சாராம்சத்தை ஒற்றவரியில் இப்படி சொல்லலாம். அவருக்கு நகருக்கு வந்துவிட ஆசை. எனக்கு அங்கேயே தங்கிவிட பேராசை. பச்சை நிற வயல்களும், நீர் நிறைந்த ஆறுகளும், அமைதியே உருவான தெருக்களும் எனக்கு பெரும்போதையை கொடுத்தது. அவருக்கு மல்ட்டிப்ளெக்ஸ் படங்களும், சர்க்கரை தண்ணியுடன் பொறித்த கோழிகளும் பிடித்தமானதாக இருந்தது. அவரிடம் நன்றி சொல்லிவிட்டு கிளம்பியபோது தான் ஒன்று தோன்றியது. ஸ்மார்ட்சிட்டிகளுக்கு இவ்வளவு மெனக்கெடுகிறோம். ஸ்மார்ட் வில்லேஜஸ் பற்றி நாம் ஏன் யோசிக்கவே இல்லை?

விவசாயம்

ஸ்மார்ட் என்றதும் கிராமங்களுக்கு இணைய வசதி கொண்டு வருவது பற்றி சொல்லவில்லை. இன்னமும் நாம் நம்மை விவசாய நாடு என்றுதான் சொல்லிக் கொள்கிறோம். ஆனால், விவசாயத்தை நாம் எப்படி பார்க்கிறோம்? அது ஒரு லாபம் தரும் தொழிலாக இருந்ததெல்லாம் கடந்த காலம் என்றுதான் சொல்ல வேண்டியிருக்கிறது. 

வளர்ந்து வரும் நகரங்களுக்கு எதுவுமே போதாது. இன்னும் இன்னும் நிலம் கேட்கின்றன மாநகரங்கள். அதன் ராட்சச வளர்ச்சிக்கு முன்னால், பொருளாதார பலத்துக்கு முன்னால் கிராமங்களும், கிராம மக்களும் நசுங்கிபோகிறார்கள். கிடைக்கும் நல்ல விலைக்கு விளைநிலங்களை கொடுத்துவிடுகிறார்கள். 10% சம்பள உயர்வு போதாது என பேப்பர் போடும் நாம், அவர்களின் இந்த செயலை எந்த விதத்திலும் குறை சொல்ல முடியாது. விவசாயிகளின் விளைபொருட்களுக்கு நியாயமான, நிரந்தரமான, உறுதியான சந்தை இங்கில்லை. பொருளுக்கு விலையே தெரியாமல் ஒருவன் எப்படி அதை தயாரிப்பான்? எவ்வளவு செலவு செய்வான்? மழையும் பொய்த்துப் போகிறது. பக்கத்து மாநிலமும் கைவிரிக்கிறது. அரசு, நிலங்களையே கொடுத்துவிடு என்கிறது. இங்கே விவசாயம் என்பது ஒரு தொண்டு. ஓர் உதவி. 

இந்த நிலை மாற வேண்டும். அதைத்தான் ஸ்மார்ட் வில்லேஜ் என்கிறேன். அதற்கு என்ன செய்ய வேண்டும் அரசு?

  1. விவசாய கிராமங்கள் தொடங்கி சின்ன சின்ன தொழில்கள் செய்துவரும் கிராமங்களின் தேவைகளை மனதில்கொண்டு, தேவையான வசதிகளை முதலில் செய்து தர வேண்டும். 
  2. Work from home, Work while you move- எங்கிருந்து வேண்டுமென்றாலும் வேலை செய்யலாம் என ஆகிவிட்ட நிலையில் ஒரு மாநகரிலே மக்கள் தொகை கூட விடாமல் decentralization செய்வதை யோசிக்க வேண்டும்.
  3. கிராமங்களின் இயல்புகள் தொலையாமல் சாத்தியப்படும் நகர மக்களை கிராமங்கள் நோக்கி அழைக்க வேண்டும். அல்லது திருப்ப வேண்டும்.
  4. விவசாயத்தொழிலை சீர் செய்து, அதை லாபமகரமானதாக ஆக்க வேண்டும். அது மட்டுமே அடுத்தத் தலைமுறைய இந்த தொழில் செய்ய ஈர்க்கும். அதற்கு ஸ்மார்ட் விவசாய முறைகளை கண்டறிய வேண்டும்.
  5. தீவார் திவில் நான் சந்தித்தவரும் நானும் ஓர் இடத்தில் சேர்ந்து வாழ முடிந்தால், அதுதான் ஸ்மார்ட் வில்லேஜுக்கான ப்ளூ பிரிண்ட். 

இந்தியாவிடம் அபரிதமான மனித சக்தி இருக்கிறது. அதுதான் நம்மை இப்போது காப்பாற்றி வருகிறது. அதைவிட நிறைய நிலம் இருக்கிறது. அதை நாம் என்ன செய்யப் போகிறோம்?

இந்தியாவின் உண்மையான வளர்ச்சி ஸ்மார்ட் வில்லேஜ்களில் தான் இருக்கிறது என நான் நம்புகிறேன். நீங்கள்?

-கார்க்கிபவா

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்