வெளியிடப்பட்ட நேரம்: 16:12 (06/03/2017)

கடைசி தொடர்பு:17:07 (06/03/2017)

இந்தப் பல்கலைக்கழகத்தை கூகுள் எர்த்-ல் பார்த்திருக்கிறீர்களா?

தமிழ் பல்கலைக் கழக - கட்டிடக்கலை

ந்தியப் பண்பாடு, நாகரிகம் ஆகியவற்றின் அடிப்படைகளில் ஒன்றாக தொன்றுதொட்டு இன்றுவரை விளங்கி வருவது தமிழ்மொழி. இந்தியா விடுதலைக்குப் பின்னர் இந்தி எதிர்ப்புப் போராட்டம், ஜல்லிக்கட்டுத் தடைக்காகப் போராட்டம் மற்றும் நெடுவாசல் வரைக்கும் தமிழக மக்களை ஒன்றிணைத்த ஒரு அடையாளம் தமிழ். தமிழன் என்ற அடையாளத்தை இன்று வரை அழியாமல் பாதுகாக்கும் ஒரே மொழி தமிழ்மொழி. இவ்வளவு சிறப்பு வாய்ந்த தமிழ்மொழியின் கலாசாரம் இந்த உலகமறிந்த ஒன்று. சிறப்பு வாய்ந்த தமிழ்மொழிக்கு அடையாளமாக ஏதாவது ஒரு அடையாளத்தைக் கொடுக்க 1980-ம் ஆண்டு எம்.ஜி.ஆர் தலைமையிலான அரசு முடிவெடுத்தது. இதுதவிர, அதில் அமைக்கப்படும் கட்டடங்களும் தமிழின் சிறப்புகளை வெளிக்காட்ட வேண்டும் என்பதற்காக ஒரு பல்கலைக்கழகம் அமைய வேண்டும் எனத் திட்டம் தீட்டப்பட்டது. அதற்காக 1,000 ஏக்கர் நிலத்தை ஒதுக்கி தஞ்சாவூரில் தமிழ்ப் பல்கலைக்கழகத்தை அமைத்தார். பல்கலைக்கழகம் அமையப்போகும் ஐந்து கட்டடங்களிலும் 'தமிழ்நாடு என்ற எழுத்து வடிவில் கட்டடங்கள் அமைக்கப்பட வேண்டும் என அப்போது முடிவெடுக்கப்பட்டது.

 

 

 

ஆனால், அப்போது முதன்முதலில் 'ழ்' என்ற எழுத்து வடிவில் முதன்முதலில் கட்டடம் அமைத்தனர். அதன்பின்னர் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தால் பலமுறை முயற்சி செய்து 2014-ம் ஆண்டுக்குப் பிறகு மீதம் இருக்கும் 'த,மி,நா,டு' என்ற எழுத்துகளும் முழுமையாகக் கட்டி முடிக்கப்பட்டு இருக்கின்றன. நமது கலாசாரம், கட்டடக்கலை, இலக்கியம், கலை, பண்பாடு, தத்துவம் ஆகிய துறைகளில் பெரும் பங்களிப்பு கொடுப்பது தமிழ்மொழி என்பது அனைவரும் அறிந்ததே. வடமொழிக்குப் பல்கலைக்கழகங்கள் பல்வேறு இடங்களில் அமைந்துள்ளதைப் பார்த்துத்தான் தமிழ்ப் பல்கலைக்கழகத்தை நிறுவியதாகவும் சொல்லப்படுகிறது. பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டபோது தமிழர்கள் மட்டுமல்லாமல் உலக மக்கள் அனைவரும் வரவேற்றனர். அவர்களும் தமிழ்மொழியின் சிறப்பினையும், தமிழ்க் கலாசாரத்தையும் அறியும் ஆர்வத்தில் இருந்ததே காரணமாகவும் சொல்லப்படுகிறது. 

தமிழ்நாடு எழுத்து வவிவில் கட்டிடங்கள்

தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் கட்டப்பட்டுள்ள கட்டடங்கள் மற்றும் அவற்றின் உருவ அமைப்பில் 'தமிழ்நாடு' எனும் சொல் கட்டடங்களாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அந்த எழுத்துகள் வடிவமைக்கப்படும்போது ஐந்து எழுத்துகளைக் கொண்ட கட்டடங்களும் முழுமையாக 360 டிகிரியில் வட்ட வடிவத்தில் அமைக்கப்பட வேண்டும். அதற்காக முதலில் 'ழ்' என்ற எழுத்து அமைக்கப்பட்டு அதனைச் சுற்றி மீதி எழுத்துகள் அமைக்கப்படும் என முடிவு செய்யப்பட்டது. ஒவ்வொரு எழுத்துக் கட்டடமும் 75 டிகிரி கோணத்தில் அமைக்கப்பட்டுள்ளது இன்னும் சிறப்பு. 'த' வடிவம் கொண்ட கட்டடத்தில் கலைப் புலத்துறையும், 'நா' வடிவம் கொண்ட கட்டடத்தில் சுவடிப் புலத்துறையும், 'ழ்' வடிவம் கொண்ட கட்டடத்தில் மொழிப் புலத்துறையும் செயல்படுகிறது. 'மி' வடிவக் கட்டடத்தில் அறிவியல் துறை அமைந்துள்ளது.. 'டு' வடிவக் கட்டடம் சென்ற ஆண்டு திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

கறிகாற்சோழன் கலையரங்கம்

இந்தத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் மொத்தம் ஐந்து கட்டடங்களில் 26 துறைகள் அமைந்துள்ளன. இதில் கலைத்துறையில் நாடகம், இசை, சிற்பம் எனவும், மொழித்துறையில் மொழியியல், தத்துவம் மற்றும் இலக்கியம், அறிவியலில் சித்த மருத்துவம், கணினி எனவும், சுற்றுச்சூழல் துறையில் சிற்பக்கலை, கட்டடக்கலை, இசைக்கலை, நாடகக்கலை எனவும், சுவடித்துறையில் அரிய சுவடித்துறை, ஓலைச் சுவடித்துறை, தொல்லியல்துறை என 26 துறைகள் அமைக்க வேண்டும். இந்தப் பல்கலைக்கழகம் துவங்கப்பட்டதன் நோக்கம் தமிழ்வளர்ச்சி மற்றும் ஆய்வுகளை நடத்துவதற்காகத்தான். மேலும் உலகம் முழுவதும் உள்ள கலைஞர்களை அழைத்து பணியில் அமர்த்தி ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் என்பதற்காகவும் ஆரம்பிக்கப்பட்டது. அனைத்து மொழிகளின் சிறப்பு பற்றி தமிழில் கொண்டுவருவது, தமிழ்நூல்களைத் தமிழக மக்கள் அனைவரும் கற்க உதவி செய்வது எனப் பல்வேறு நோக்கங்களுக்காக ஆரம்பித்த பல்கலைக்கழகமானது இப்போது சிறப்பான செயல்பாடுகளை வெளிப்படுத்தவில்லை என்றும் சொல்லப்படுகிறது. எழுத்துகளில் மட்டும் வடிவம் செய்துவிட்டால் போதுமா... ஆரம்பிக்கப்பட்ட நோக்கம் எங்கே போனது என்ற கேள்விகளும் தமிழ் ஆர்வலர்கள் முன்வைக்கின்றனர். ஆனால், இன்னும் தமிழின் சிறப்புகளைச் சொல்ல இதுபோன்ற ஒன்றிரண்டு நினைவுச்சின்னங்கள் உயிர்ப்போடுதாம் இருக்கின்றன என்பது மட்டும் உண்மை. 

--துரை.நாகராஜன்.


டிரெண்டிங் @ விகடன்