வெளியிடப்பட்ட நேரம்: 14:33 (07/03/2017)

கடைசி தொடர்பு:15:49 (08/03/2017)

நாட்டுக்குத் தேவை மரங்கள்தாம்... மடங்கள் அல்ல..!- கொந்தளிக்கும் சமூக ஆர்வலர்கள்

மரங்கள் சூழ்ந்த திருவண்ணாமலை கோயில்

ஒரு நாட்டுக்கு அதனுடைய பொருளாதாரம் எவ்வளவு முக்கியமோ அதேபோல மரங்கள் மிக அவசியம். காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை நாற்கர சாலை என்ற பெயரில் சாலையின் இருபுறமும் இருந்த மரங்களை வெட்டிச் சாய்த்தனர். அதன் விளைவினை புவி வெப்ப உயர்வு மற்றும் குறைவான மழைப்பொழிவு எனப் பல இடர்ப்பாடுகளைத் தமிழகம் சந்தித்து வருகிறது. பசுமையான மரங்களாகக் காட்சியளித்த நெடுஞ்சாலைகள் பாலைவனமாகக் காட்சியளிக்கிறது. இதேபோல, சாலைவிரிவாக்கம் என்ற பெயரில் பல மாவட்டங்களில் மரங்கள் வெட்டப்பட்டு வந்தன.

 திருவண்ணாமலை கிரிவலப்பாதை விரிவாக்கத்துக்காகச் சாலை ஓரங்களில் இருந்த மரங்கள் வெட்ட ஆரம்பித்த நேரத்தில் தேசிய பசுமைத்தீர்ப்பாயம் கிரிவலப்பாதையில் மரங்களை வெட்டக்கூடாது என உத்தரவிட்டது.இப்போது மீண்டும் திருவண்ணாமலையில் அருணாச்சலேஸ்வரர் கோயிலில் மரங்களை வெட்ட இந்து சமய அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது. இந்து சமய அறநிலையத்துறை ஆணையர், அருணாச்சலேஸ்வரர் கோயில் இணை ஆணையருக்கு இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார். அந்த உத்தரவில் "கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் கட்டப்படவுள்ள பக்தர்களின் தங்கும் விடுதி அமைப்பதற்கு 'சேனாநதி தோப்பு' என்ற இடத்தில் உள்ள 545 மரங்களை பொதுப்பணியினரே வெட்டி கோயிலுக்குத் தேவையான மரங்களை ஒப்படைக்க வேண்டும். மீதமுள்ள மரங்களை பொது ஏலம் விடலாம்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வெட்ட தயாராக உள்ள மரஙகள்

முன்னர் சாலை விரிவாக்கத்துக்காக 125 மரங்கள் வெட்ட முயற்சி நடந்தது. ஆனால், பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் எதிர்ப்பால் அப்போதைய முயற்சி கைவிடப்பட்டது. இப்போது புதிய கட்டடம் கட்டுதல் என்ற பெயரில் அதிக எண்ணிக்கையிலான மரங்கள் குறிவைக்கப்பட்டுள்ளன. இதில் பனைமரம் முதல் விலை உயர்ந்த வில்வமரங்கள் வரை 22 வகையான மரங்கள் அகற்றப்பட இருக்கின்றன. இந்தப் புதிய திட்டத்தால் அழிக்கப்பட இருக்கும் புதிய நிலப்பகுதியானது கோயிலில் இருந்து 8 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. பக்தர்கள் இங்கு வந்து தங்கிவிட்டு கோவிலுக்குச் செல்வது சற்று சிரமமான காரியம். மேலும் இந்த வனப்பகுதி அடர்ந்த மரங்களைக் கொண்ட வனப்பகுதியாகவும் விலங்குகளின் புகலிடமாகவும் இருக்கிறது. தினசரி மான்களின் வருகை இருந்துகொண்டே இருக்கும். புதிய கட்டடமான யாத்ரி நிவாஸ் மடத்தின் கட்டடம் அமைக்கப்பட்டால் வனவிலங்குகளின் வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்படும். மனிதனின் அடிப்படை வாழ்வியலில் மரங்களின் பங்கு மிக அதிகம். 

வெட்ட உள்ள இடம்


இதுகுறித்து, நம்மிடம் பேசிய, திருவண்ணாமலை மாவட்ட நுகர்வோர் அமைப்பின் தலைவர் செந்தமிழ் அரசு, "பெளர்ணமி, கார்த்திகை தீபம் உட்பட அனைத்து நாட்களிலும் மக்கள் கூட்டமாக வந்து தரிசனம் செய்வர். கிரிவலப்பாதையில் மக்கள் பாதயாத்திரையாக வந்து இறைவனைத் தரிசனம் செய்வர். மேலும் இந்தக் கோயிலுக்கு பக்தர்கள் வந்துபோவது இந்த மலையில் உள்ள விலை மதிப்பில்லாத மூலிகை நறுமணங்களுக்காகவும்தான்...முதலில் சாலை விரிவாக்கத்துக்காக மரங்களை வெட்ட முயற்சி செய்தார்கள். பின்னர் தேசிய பசுமைத்தீர்ப்பாயத்தால் விதிக்கப்பட்ட தடையால் மரங்கள் வெட்டுவது தடுக்கப்பட்டது. ஆனால் மறுபடியும் கட்டடங்கள் கட்டுகிறோம் என்ற பெயரில் முன்பைவிட அதிகமான மரங்கள் அகற்றத் திட்டமிடப்பட்டுள்ளது. கோயிலில் இருந்து அதிக தூரத்தில் புதிய மடம் அமைய உள்ளதால் பக்தர்கள் அதிகமாகத் தங்க மாட்டார்கள். இப்போது அதிகாரிகள் திட்டமிடுவது வி.ஐ.பி-க்களும், பெரும்பணக்காரர்களும் வந்து தங்குவதற்காகத்தான். மேலும், இங்கு கோயில் அருகிலேயே காலி இடம் உள்ளது. முன்பு கட்டப்பட்ட இரண்டு மண்டபங்களும் காலியாகவே இருக்கின்றன. அந்த இரண்டு மடங்களும் கோயிலுக்கு அருகில் இருப்பதால் பக்தர்கள் தங்கிச்செல்ல வசதியாக இருக்கும். இதையெல்லாம் விட்டுவிட்டு 545 மரங்களை வெட்டி மண்டபம் அமைக்க வேண்டிய அவசியம் இல்லை. எல்லாமே இங்கு லாபநோக்கோடுதான் செய்யப்படுகின்றன. மரங்களை ஏலம் விட்டு பணத்தைத் தாங்களே பங்கு போட்டுக் கொள்வர். ஆணையர் வெட்டப்படும் மரங்களுக்குப் பதிலாக 1000 மரக்கன்றுகள் நடப்படும் எனத் தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளார். அவ்வாறு வைக்கப்படும் மரங்கள் எல்லாம் வெளிநாட்டு வகை மரங்கள்தான். மடம் அமையப்போகும் இடத்திலுள்ள மரங்கள் எல்லாமே விலையுயர்ந்தவை" என்றார்.

வெட்டப்படும் இடங்களில் மேயும் மான்கள்

படம்: முகமது சல்மான்

பாதை விரிவாக்கத்திற்காக மரங்களை வெட்டுவதைத் தடை செய்தால், காடுகளுக்குள் இருக்கும் மரங்களையே வெட்டுகிறோம் என அதிகாரிகள் இறங்கியிருப்பது சமூக ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. "கோயிலுக்கு மடங்கள் முக்கியம்தான், அதற்கு காலியாக இருக்கும் இரு மடங்களையும், இடங்களையும் உபயோகப்படுத்தலாமே... அதைவிட்டுவிட்டு மரங்கள் இருக்கும் மலையை ஒட்டியிருக்கும் பகுதிதான் வேண்டும் என அதிகாரிகள் அடம்பிடிப்பது என்ன நியாயம் என்ற கேள்விக்கு அதிகாரிகள்தான் பதில் சொல்ல வேண்டும்" என ஏராளமான குரல்கள் ஒலிக்க ஆரம்பித்துள்ளன. 

'மரம் வளர்ப்போம், மழை பெறுவோம் என்ற வாசகம் புதிய மரங்களை நடுவதற்கு மட்டுமல்ல, இருக்கும் மரங்களைக் காப்பதற்கும்தான் என அரசுக்கும் அதிகாரிகளுக்கும் எப்போது புரியுமோ தெரியவில்லை...

- துரை.நாகராஜன்,

படங்கள்: கா.முரளி.


டிரெண்டிங் @ விகடன்