Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கொசுக்களை ஒழிக்கும் சிட்டுக்குருவி... அவற்றை அழித்தது யார்? #WorldSparrowDay

சிட்டுக்குருவி

‘‘சின்னஞ்சிறிய வண்ணப்பறவை எண்ணத்தைச் சொல்லுதம்மா.. அது இன்னிசையோடு தன்னை மறந்து சொன்னதைச் சொல்லுதம்மா...’’ என்ற பாடல் கேட்கும் போதெல்லாம் நினைவின் இடுக்கில் இருந்து பட்டெனப் பறக்கும் ஒரு சிட்டுக்குருவி. மனிதர்களோடு மனிதர்களாக கலந்து வாழ்ந்த இந்தச் சின்னஞ்சிறிய உயிர் அழிவின் விளிம்பில் இருக்கிறது. உயிர்பன்மயத்தை உயிர்ப்போடு வைத்திருக்க உயிர்ச்சங்கிலி எத்தனை முக்கியமானது என்பது நமக்குத் தெரியும். ஆனால், மனிதனின் ஒவ்வொரு செயலும் அந்தச் சங்கிலியின் கண்ணிகளைக் காவு வாங்கிக்கொண்டே இருக்கிறது. விளைவு, புவிவெப்பம், நோய்களின் பெருக்கம், சூழல்கேடு, ஆரோக்கியக்கேடு என நமது செயலுக்கான பலன் பலவழிகளில் திரும்ப வந்து துவைத்தெடுக்கிறது. 

கூரைகள், வீடுகளின் முற்றங்கள், இடுக்குகளில் தனக்கான கூடுகளைத் தானே வடிவமைத்துக்கொண்டு காலையில், ‘க்வீச்...க்வீச்..’எனக் குட்டிக் குயிலாகத் துயிலெழுப்பும் சிட்டுக்குருவிகள் சத்தம் இன்றைக்குக் கேட்பது அரிதாகிவிட்டது. கிராமங்களிலேயே இந்த சத்தம் அரிதானபோது நகரங்களில் கேட்கவே வேண்டாம். உயிர்பன்மயத்தில் உடைந்துபோன கண்ணிகளை ஒட்ட வைக்கும் முயற்சியில் உலகம் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறது. அதன் ஒரு பகுதியாக சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக பல்வேறு முயற்சிகள் எடுக்கப்படுகின்றன. அதன் ஒருகட்டமாக சிட்டுக்குருவி பற்றிய விழிப்பு உணர்வு ஏற்படுத்துவதற்காக மார்ச் 20-ம் தேதி உலக சிட்டுக்குருவிகள் தினமாகக் கொண்டாடப்படுகிறது. 2010-ம் ஆண்டு முதல் இது கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் முக்கியத்துவத்தை உணர்த்தும் விதமாக டெல்லி அரசு இதை மாநிலப் பறவையாக அறிவித்துள்ளது.

தென்னைஓலையின் நார் கிழித்து, சின்னஞ்சிறிய அலகால், கூடுகளைப் பின்னும் அழகே அலாதியானது. தானியங்கள், சிறிய பூச்சி இனங்கள், சில தாவரங்களின் பூக்கள்தான் சிட்டுக்குருவிகளின் உணவு. சிட்டுகளின் அழிவால், பயிர்களின் மகரந்தச்சேர்க்கை பாதிக்கப்பட்டு, மகசூலும் குறைந்து வருகிறது என்கிறார்கள் அறிவியலாளர்கள். அடைக்கலக்குருவி, ஊர்க்குருவி எனப் பலபெயர்களில் அழைக்கப்படும் சிட்டுக்குருவிகள், காகத்திற்கு அடுத்து மனிதர்களுடன் நெருக்கமாக வாழும் பறவை. இவை அழிய, செல்போன் டவர்களில் இருந்து வரும் கதிர்வீச்சு, குருவிகளின் கருவை சிதைக்கிறது எனச் சொல்லப்பட்டாலும் அவை, இன்னமும் அறிவியல்ரீதியாக நிரூபிக்கப்படவில்லை. ஆனால், செல்போன் டவர்கள் வருவதற்கு முன்பாகவே குருவிகளை விரட்டிவிட்டன நமது செயல்கள்.

சிட்டுக்குருவி

வெளிக்காற்று உள்ளே வராமல் குளிரூட்டப்பட்ட வீடுகள், நெருக்கமான வீடுகள், முற்றம் இல்லாமல் முழுவதுமாக மூடிய வீடுகள், மரங்கள் இல்லாதது போன்ற காரணங்களால்தான் சிட்டுகள் நகரங்களில் இருந்து நகர்ந்துவிட்டன. எரிவாயுக்களில் இருந்து வெளியேறும் ‘மெத்தைல் நைட்ரேட்’ காற்றில் கலந்து வளிமண்டலங்களை மாசுபடுத்துகின்றன. இதனால், சிட்டுக்குருவிகளுக்கு உணவாகும் சில பூச்சி இனங்கள் அழிந்துபோகின்றன. இதனால் ஏற்படும் உணவுப்பற்றாக்குறை சிட்டுக்குருவையை நகரங்களை விட்டு விரட்டிவிட்டது. பலசரக்குக் கடைகளில் சிந்திச்சிதறும் தானியங்களை உண்டுவந்தன. பல்பொருள் அங்காடிகள் வந்த பிறகு அதற்கும் வாய்ப்பில்லாமல் போய்விட்டது. நகரங்களில் இருப்பதைப் போலவே கிராமப்பகுதிகளிலும் வாழவழியில்லை. கிராமப்பகுதிகளிலும், பயிர்களில் தெளிக்கும் ரசாயனங்கள், குறைந்துப்போன சிறுதானிய சாகுபடி ஆகியவை இந்த இனம் அழிய காரணமாகிவிட்டது. வேறு என்னதான் செய்யும் அந்தச் சின்னஞ்சிறிய உயிரினம்? வாழ்தலுக்காக உணவு கிடைக்கும் பகுதியை நோக்கி நகர்ந்துவிட்டன. கொசுக்களின் முட்டை சிட்டுக்குருவிகளின் விருப்ப உணவு. குருவிகள் இல்லாததால், கொசுக்கள் கொட்டமடிக்கின்றன..நோய்கள் நம்மை வட்டமடிக்கின்றன. 

‘எத்தனை அடிச்சாலும் தாங்குறான்டா’ என வடிவேல் காமெடிபோல, இத்தனை இன்னல்களுக்கும் இடையில் இன்னமும் வாழ்ந்துகொண்டுதான் இருக்கின்றன சிட்டுக்குருவிகள். அவற்றைக் காக்க வேண்டிய நமது சமூகக் கடமை. முதலில் நமது குழந்தைகளுக்குக் குருவிகளை அறிமுகம் செய்து வையுங்கள். கடிகாரத்திலேயே குருவியின் ஓசையை மணிக்கொரு முறை கேட்டுக்கொண்டிருந்தது நம்மோடு போகட்டும். நம் குழந்தைகளாவது, சிட்டுகளின் சிம்பொனியைக் கேட்கட்டும். இதற்காக நாம் அதிகம் மெனக்கெடவேண்டாம். வாய்ப்பிருப்பவர்கள், வீடுகளில் சிட்டுக்குருவி தங்குவதற்கான வசதியை ஏற்படுத்திக்கொடுங்கள், வீட்டு மொட்டைமாடி, பால்கனி போன்ற இடங்களில் ஒரு கிண்ணத்தில் தண்ணீரும், கொஞ்சம் சிறுதானியங்களையும் வைத்தால் போதும் ஓடோடி வந்து உக்கார்ந்துவிடும் சிட்டுக்குருவி. பழைய பானைகள், அட்டைப்பெட்டிகள் என ஏதாவது ஒன்றில் சிறிது வைக்கோல் நிரப்பி ஒருமூலையில் வைத்து விட்டால், குருவிகள் அதில் குடியேறிவிடும். தற்போது கடைகளில் சிட்டுக்குருவிகளுக்கான கூடுகள் கிடைக்கின்றன. நாம் மனது வைத்தால் நகரங்களிலும் சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கையை அதிகமாக்கலாம். அதற்குத் தேவை சிறிது தானியம், சிறிது தண்ணீர், பெரிய மனது.. இவை அனைத்தும் நம்மிடம் இருக்கின்றனதானே..!

-ஆர்.குமரேசன்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement