வெளியிடப்பட்ட நேரம்: 09:29 (21/03/2017)

கடைசி தொடர்பு:10:08 (21/03/2017)

நியூட்ரினோ ஆய்வு மையத்துக்கு தடை... என்ன சொல்கிறார்கள் வழக்கு தொடுத்தவர்கள்?

நியூட்ரினோ

தேனி மாவட்டம் பொடிப்புரம் கிராமத்தில் அமையவிருந்த நியூட்ரினோ ஆய்வு மையத்திற்கு வழங்கப்பட்ட சுற்றுச்சூழல் அனுமதியை ரத்து செய்துள்ளது தென்மண்டல பசுமை தீர்ப்பாயம். இந்தியாவில் அதிக மழைபொழியும் இடம் சிரபுஞ்சி. தமிழ்நாட்டில் அதிக மழைபெறும் பகுதி தேனி மாவட்டம் தேவாரம் அம்பரப்பர் மலைப்பகுதிதான். இந்தப்பகுதியில் 1500 கோடி ரூபாய் திட்டமதிப்பில், நியூட்ரினோ ஆய்வுமையம் அமைக்க 2011-ம் ஆண்டு மத்திய அரசு அனுமதிகொடுத்தது. நியூட்ரினோ ஆய்வுமையம் அமைத்தால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும், சுற்றுச்சூழலுக்கு கேடு ஏற்படும் என இப்பகுதி பொதுமக்கள் போராட்டத்தை முன்னெடுத்தனர். 

அதைத்தொடர்ந்து, 2015-ம் ஆண்டு, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, ‘இந்த பகுதியில் நியூட்ரினோ திட்டம் செயல்படுத்தப்பட்டால் சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்படும், இப்பகுதி மக்களின் வாழ்வாதாரம் மற்றும் இந்தப்பகுதியை சுற்றியுள்ள அணைகளும், மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள விலங்குகளும் பாதிக்கப்படும். இந்த திட்டத்திற்கு தமிழ்நாடு மாசுகட்டுப்பாடு வாரியத்தின் அனுமதி பெறவில்லை. எனவே திட்டத்திற்கு தடைவிதிக்க வேண்டும்‘ என உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஆய்வுமையம் அமைப்பதற்கு இடைக்கால தடைவிதித்தனர். மேலும், தமிழ்நாடு மாசுகட்டுப்பாடு வாரியத்தின் அனுமதி பெறும்வரை ஆய்வுப்பணிகளை தொடரக்கூடாது எனவும் உத்தரவிட்டது. 

இந்நிலையில், நியூட்ரினோ திட்டத்துக்கு மத்திய அரசு வழங்கிய அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என பூவுலகின் நண்பர்கள் சார்பாக தென்மண்டல பசுமை தீர்ப்பாயத்தில் மனு செய்தனர். இந்த வழக்கில் நேற்று (20/3/17) தீர்ப்பு வழங்கிய தென்மண்டல பசுமை தீர்ப்பாயம், நியூட்ரினோ ஆய்வுமையத்துக்கு வழங்கப்பட்ட மத்திய அரசின் சுற்றுச்சூழல் அனுமதியை ரத்து செய்து தீர்ப்பளித்துள்ளது. இது தொடர்பாக பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த சுந்தரராஜனிடம் பேசினோம். ‘‘ சுற்றுச்சூழல் தாக்கீது அறிக்கை தாக்கல் செய்த சலீம் அலி என்ற நிறுவனம், சுற்றுச்சூழலை ஆய்வுசெய்வதற்கு, அறிக்கைகள் தயாரிப்பதற்கு தகுதிபெற்ற நிறுவனம் அல்ல. எனவே அதன் அறிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது. மேலும் இது தேசிய வனவிலங்கு சரணாலயம் அமையவுள்ள இடம் என்பதால், அதுதொடர்பான அனுமதியை வாங்கியிருக்க வேண்டும். ஆனால், அதுவும் வாங்கவில்லை என்பதால், மத்திய அரசு வழங்கிய சுற்றுச்சூழல் அனுமதியை தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் ரத்து செய்துள்ளது. இது மக்கள் போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி’’ என்றார்.

தேனி

நியூட்ரினோ எதிர்ப்பாளரும், நாம் தமிழர் கட்சியின் தேவாரம் நகர பொறுப்பாளுமான குணசேகரன், ‘‘ இந்த பகுதியில் 700 வகையான பட்டாம்பூச்சிகள் இருக்கின்றன. நியூட்ரினோ ஆய்வுமையம் அமையவுள்ள மலைப்பகுதியின் பின்பகுதியில் உள்ள மதிகெட்டான்சோலை, பல்லுயிர் பெருக்கத்துக்கு ஆதாரமான பகுதி.ஓர் ஆண்டுக்கு 193 நாட்கள் மழை பெய்யும் பகுதி. இந்த பகுதியில் ஆய்வுமையம் அமைந்தால் மக்களின் வாழ்வாதாரம் பறிபோவதோடு, வனவிலங்களும் பாதிக்கப்படும் என்பதால் தொடர்ந்து போராடி வந்தோம். மத்திய அரசின் அனுமதியை ரத்து செய்துள்ள பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவு வரவேற்கத்தக்கது’’ என்றார். 

ஏற்கெனவே தடை இருக்கும் நிலையில், தற்போது மத்திய அரசின் அனுமதி ரத்து செய்யப்பட்டு இருப்பதால் நியூட்ரினோ ஆய்வுமையம் அமைவதற்கு வாய்ப்பு குறைவு என்பதால் தேவாரம் பகுதி மக்கள் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். 

 

- ஆர்.குமரேசன்,

படங்கள் : வீ. சக்தி அருணகிரி. 


டிரெண்டிங் @ விகடன்