“காவிரியில் தண்ணீர் வந்தால்தானே நிலம் கேட்பார்கள் என நினைக்கிறது அரசு” - பொங்கும் டெல்டா விவசாயிகள்! | Delta farmers are gearing for another protest

வெளியிடப்பட்ட நேரம்: 10:56 (24/03/2017)

கடைசி தொடர்பு:10:55 (24/03/2017)

“காவிரியில் தண்ணீர் வந்தால்தானே நிலம் கேட்பார்கள் என நினைக்கிறது அரசு” - பொங்கும் டெல்டா விவசாயிகள்!

தண்ணீர்

காய்ந்து கெடுத்தால் வறட்சி நிவாரணம், மழை பெய்து கெடுத்தால் வெள்ள நிவாரணம் வாங்கி பழக்கப்பட்ட நம் விவசாயிகளுக்கு, போராட்ட குணத்தையும் கற்றுக்கொடுத்திருக்கின்றன மத்திய மாநில அரசுகள். 

ஆம்... டெல்லியில் தமிழக விவசாயிகள் அரை நிர்வாண போராட்டம் நடத்திக்கொண்டிருக்கையில், காவரியிலிருந்து தண்ணீர் திறந்துவிட வேண்டுமென உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. வழக்கை ஜூலை மாதம் 11ம் தேதி ஒத்திவைத்த நீதிமன்றம், ஜூலை 11ம் தேதி வரை தினமும் 2 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்துவிட வேண்டுமென உத்தரவிட்டது.

நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக ”காவிரியில் எங்கள் மாநிலத்துக்குப் போதிய தண்ணீர் இல்லை, உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தண்ணீர் திறந்துவிடமுடியாது” என கர்நாடக முதல்வர் சித்தராமையா பகிரங்கமாக தெரிவித்திருப்பது தமிழக விவசாயிகளை கொதிப்படையச் செய்திருக்கிறது. 

கர்நாடக அரசுக்கு எதிராக காவிரி உரிமை மீட்புக்குழுவினர், காவிரித்தாய் காப்பு முற்றுகை தொடர் அறப்போராட்டத்தை அறிவித்துள்ளது. அதன் நிர்வாகக்குழு உறுப்பினர் அயனாவரம் முருகேசனிடம் பேசினோம்

முருகேசன் “காவிரி தீர்ப்பாயத்தைக் கலைத்துவிட்டு, இறுதித்தீர்ப்பையும் ரத்து செய்ய முடிவெடுத்துள்ளது. அதற்காக மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உமாபாரதி ஒரு பொய்யான தகவலை கூறியுள்ளார். காவிரி தீர்ப்பாயம் அமைத்து 26 ஆண்டுகள் ஆகியும் வெற்றிகரமான தீர்ப்பை வழங்கமுடியவில்லை என்று கூறியுள்ளார். காவிரி தீர்ப்பாயம் இறுதி தீர்ப்பை கடந்த 05.02.2017ம் ஆண்டு வெளியிட்டது, 19.02.2013ம் ஆண்டு அரசிதழில் வெளியிட்டது. அதன்பிறகு காவிரி மேலாண்மை வாரியம், காவிரி ஒழுங்குமுறைக்குழு அமைக்கும்படி காலக்கெடு விதித்து. 

மேகதாது அணையின் குறுக்கே கர்நாடகா அரசு புதிய அணையைக் கட்டினால் தமிழநாட்டுக்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட வராது. காவிரி நீரைத் தடுத்து, செயற்கையாக காவிரி சமவெளியை பாலைவனமாக மாற்றி, இந்திய அரசின் திட்டத்தை கொஞ்சம் கொஞ்சமாக நிறைவேற்றினால் விவசாயிகள் தங்களுடைய நிலத்தையும், ஊரையும் விட்டே ஓடிவிடுவார்கள் என்பதுதான மோடி அரசின் திட்டம். இதற்காக ஒரு பக்கம் காவிரி நீரை உச்சநீதிமன்றமே சொன்னாலும் தரமுடியாது என்று சொல்வது, இன்னொரு பக்கம் நச்சுக்குழாய்களை நிலத்திற்குள் இறக்கி, மண்ணை புண்ணாக்குவதுதான் இவர்களின் திட்டம். 

காவிரி சமவெளி பகுதியில் கார்ப்பரேட் நிறுவனங்களின் தொழிற்சாலைகளைக் கொண்டு வருவதுதான் இந்திய அரசின் தொழிற்கொள்கை. மக்கள் போராட்டங்களால் சில இடங்களில் ஓ.என்.ஜி.சி நிறுவனம், கார்ப்பரேட் நிறுவனம் செயல்படாமல் பின்வாங்கி இருப்பது தற்காலிக தந்திரம். எனவே, டெல்டா விவசாயமும், விவசாயிகளும் பாதுகாக்கபட வேண்டுமென்றால் தொடர் அறப்போராட்டத்தை நடத்தியே தீர வேண்டும். வரும் 28ம் தேதி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தொடர் முற்றுகை போராட்டம் நடத்துவோம்” என்றார். 

தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர் பி.ஆர். பாண்டியன் கூறுகையில், “உச்சநீதிமன்ற தீர்ப்பு ஒரு சடங்காக போய்விட்டது. அதே நேரத்தில் கர்நாடக முதலமைச்சர் காவிரி குறித்து கருத்து சொல்வதற்கு அதிகாரமே கிடையாது. இருமாநில அணைகளின் நிர்வாகம் மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் போய்விட்டது. அதனால் உச்சநீதிமன்ற தீர்ப்பை நிறைவேற்றி தண்ணீரை பெற்றுத்தர வேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்குத்தான் இருக்கிறது. மத்திய அரசுதான் உச்சநீதிமன்ற தீர்ப்பை அவமதிப்பதற்கும், மாநில அழிவதற்கும் பொறுப்பு. தமிழகம் அழிவதற்கு முழு பொறுப்பு மத்திய அரசுதான். உச்சநீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தாலும் அதை நிறைவேற்றுவது மத்திய அரசுதானே. மத்திய அரசாங்கமே உச்சநீதிமன்ற வழக்கை மதிக்காத போது, மாநில அரசாங்கம் எப்படி மதிக்கும். சட்டம் என்பது பாதிக்கப்பட்டவர்களுக்கு மட்டும்தான், அதிகாரத்தில் இருப்பவர்களுக்கோ, ஆட்சியாளர்களுக்கோ கிடையாது என்பது பாஜக ஆட்சிக்காலத்தில் நிருபித்துக்கொண்டிருக்கிறார்கள்.

இது இந்தியாவின் ஒற்றுமைக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். போராட்டத்தை சீர்குலைப்பதுக்குச் சிந்திக்கிறார்கள், போராட்டத்தை புரிந்துகொண்டு அதற்கான மாற்றத்தை கொண்டுவர விரும்பவில்லை. அதன் விளைவுதான் காவிரிநீர் கொடுத்தால்தானே விளைநிலங்களை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கொடுக்கமாட்டார்கள், காவிரிநீரை கொடுக்காமல் நிறுத்திவிட்டால், தாங்களாகவே நிலத்தை கொடுத்துவிட்டு போய்விடுவார்கள் என்று நினைக்கிறார்கள். காவிரி பிரச்னையில், மத்திய அரசின் துரோகம், பன்னாட்டு கம்பெனிகளின் சூழ்ச்சியும் இருக்கிறது, அதற்கு பழிகேடாகிறது கர்நாடக அரசு.

தமிழகத்தில் முதலமைச்சர்கள், அமைச்சர்கள் அவர்களுடைய பதவிகளை பாதுகாப்பது கொள்வது, அடுத்த தேர்தலில் பணத்தை கொடுத்து ஓட்டு வாங்குவதற்காக பணத்தை சேமிப்பதில்தான் குறியாக இருக்கிறார்கள். எனவே, இதிலிருந்து மாற்றம் வேண்டும் என்பதுதான் இளைஞர்கள், மாணவர்களின் பார்வையாக இருக்கிறது. அதன் வெளிப்பாடுதான் ஜல்லிக்கட்டு, நெடுவாசல், வடகாடு, நல்லாண்டார் கொள்ளையில் வெடித்திருக்கிறது. காவிரிக்காக எங்கள் போராட்டம் ஜூன் 12ம் தேதி காவிரிநீரை பெற்றுத்தர வேண்டும் நோக்கத்தோடு பல்லாயிரக்கணக்கான விவசாயிகள், மாணவர்கள், இளைஞர்களோடு மே 1ம் தேதி முதல் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட போகிறோம்” என்றார்.

சொர்க்க பூமியாக இருந்த டெல்டா போராட்ட பூமியாக மாறி வருகிறது.

-ஏ. ராம்
படம்: கே. குணசீலன் 

 


டிரெண்டிங் @ விகடன்