”எங்கள் திட்டங்களுக்கு தமிழகத்தில் மட்டும்தான் தடை வருகிறது!" - ஓ.என்.ஜி.சி அதிகாரிகள் பேட்டி | We are facing problems only in Tamil Nadu, says ONGC officials

வெளியிடப்பட்ட நேரம்: 21:02 (23/03/2017)

கடைசி தொடர்பு:21:21 (23/03/2017)

”எங்கள் திட்டங்களுக்கு தமிழகத்தில் மட்டும்தான் தடை வருகிறது!" - ஓ.என்.ஜி.சி அதிகாரிகள் பேட்டி

ஓ.என்.ஜி.சி அதிகாரிகள் பேட்டி

மிழ்நாட்டில், எதற்கு வேண்டுமானாலும் பஞ்சம் வரலாம்; ஆனால் வளர்ச்சி என்ற பெயரில் அரசு கொண்டுவரும் ஆபத்தான திட்டங்களுக்கும், அதனை எதிர்த்து மக்கள் நடத்தும் போராட்டங்களுக்கும் பஞ்சமே இருந்ததில்லை. இதோ, இன்னும் ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு எதிரான மக்கள் போராட்டம்கூட முடியவில்லை. அதற்குள், மீத்தேன் திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி அளித்துவிட்டது என அதிர்ச்சியளிக்கும் செய்திகள் வரத் துவங்கிவிட்டன. இப்படி கெயில், மீத்தேன் திட்டம், ஷேல் கேஸ், ஹைட்ரோகார்பன் போன்ற திட்டங்களின் பெயர் அடிபடும்போதெல்லாம், நம் நினைவுக்கு வரும் மற்றொரு பெயர், ஓ.என்.ஜி.சி. இன்று, திருச்சியில் பேசிய ஓ.என்.ஜி.சி அதிகாரிகள், 'நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கும் ஓ.என்.ஜி.சி நிர்வாகத்துக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை. இந்தத் திட்டத்தைக் கைவிடுவது குறித்து மத்திய அரசுதான் முடிவெடுக்க வேண்டும்' என்று தெரிவித்தனர்.

கடந்த 35 நாட்களாக ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு எதிரான போராட்டம் தொடர்ந்து நடந்துவருகின்றது. கடந்த பிப்ரவரி மாதம் 16-ம் தேதி புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் சுற்றுவட்டாரப் பகுதிகளில், ஹைட்ரோகார்பன் எடுக்கும் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. நெடுவாசல், கோட்டைக்காடு, நல்லாண்டார் கொல்லை, வடகாடு உள்ளிட்ட பல கிராமங்களில், மக்கள் தங்கள் பகுதியில் உள்ள விவசாயத்தையும், தங்கள் வாழ்வாதாரத்தையும் அழிக்கும் இந்தத் திட்டத்தை மத்திய அரசு கைவிடும் வரை போராடுவோம் எனப் போராட்டத்தில் இறங்கினார்கள். கடந்த 9-ம் தேதி வரை 22 நாட்கள் நெடுவாசலில் தொடர் போராட்டம் நடைபெற்றது.

ஓ என் ஜி சி அதிகாரிகள் பேட்டி

வடகாட்டில் 18-வது நாளாகவும், நல்லாண்டார்கொல்லையில் 35-வது நாளாகவும் போராட்டம் இன்றும் தொடர்கிறது. நேற்று, போராட்டக்குழுவினர் மத்திய பெட்ரோலிய அமைச்சர் தர்மேந்திரபிரதானைச் சந்தித்தார்கள். அப்போது, “நெடுவாசல் திட்டம் தொடர்பாக முதலில் மக்கள் கருத்தறிய வேண்டும். நெடுவாசல் கிராம மக்கள் - மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநில அரசு - பெட்ரோலியத் துறை அமைச்சகம் உள்ளிட்ட அதிகாரிகள் அடங்கிய முத்தரப்புக் கூட்டத்துக்கும் ஏற்பாடு செய்யலாம். தொடர்ந்து விவாதித்த பிறகு முடிவுக்கு வரலாம்” என அவர் யோசனை கூறினார்.

ஆனால் போராட்டக்குழுவினரோ, “நெடுவாசல் திட்டம் செயல்படுத்தப்படுவதால் உள்ளூரில் நிலத்தடி நீர் பாதிக்கப்படும். அந்தப் பகுதி மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும், அரிய மண்வளம்கொண்ட தங்கள் கிராமப் பகுதியில் ஹைட்ரோகார்பன் திட்டத்தைத் தயவு செய்து செயல்படுத்த வேண்டாம்” எனக் கோரிக்கை வைத்தனர். ஆனாலும் அறிவிப்பு வரும் வரை போராட்டம் தொடரும் எனப் போராடி வருகின்றனர். 

இந்நிலையில், இன்று திருச்சியில் ஓ.என்.ஜி.சி-யின் நிர்வாக இயக்குநர் மற்றும் உதவி மேலாளர் குல்பீர் சிங் மற்றும் காவிரிப் படுகைக்கான ஓ.என்.ஜி.சி பொது மேலாளர் பவன்குமார் இருவரும் செய்தியாளர் சந்திப்பை நடத்தினார்கள்.

அப்போது அவர்கள், “காவிரி டெல்டா பகுதிகளில் பாறை எரிவாயு, பாறை எண்ணெய், நிலக்கரிப் படுகை மீத்தேன் ஆராய்ச்சி நடவடிக்கைகளில் ஈடுபடும் திட்டம் ஏதுமில்லை. ஷேல் கேஸ் உள்ளிட்ட திட்டங்களைக் கடந்த ஒருவருடமாகவே ஓ.என்.ஜி.சி கைவிட்டுவிட்டது. ம.தி.மு.க., தலைவர் தொடர்ந்த வழக்கில், இதை நாங்கள் எழுத்துப்பூர்வமாகவே நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளோம். நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்துடன் ஓ.என்.ஜி.சி நிர்வாகத்தைத் தவறாகத் தொடர்புபடுத்தி செய்திகள் வெளியாகின்றன. இது வேதனையளிக்கிறது. நெடுவாசல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் முதன்முதலில் ஆய்வு மேற்கொண்டோம். இதற்கான நிலங்களைத் தற்காலிகமாக குத்தகைக்கு வழங்கிவருகின்றோம்" என்றனர்.

அத்துடன் “கடந்த ஐந்து நிதியாண்டுகளில் ராயல்டி, மதிப்பு கூட்டு வரி மற்றும் விற்பனை வரி என ஓ.ன்.ஜி.சி நிறுவனம் தமிழ்நாடு அரசிற்கு வரியாக ரூ.1816.43 கோடி வழங்கியுள்ளது. 125 வருட பழமையான நிறுவனம் ஓ.என்.ஜி.சி. சர்வதேச அளவில் பரிந்துரைக்கப்படும் பாதுகாப்பு அம்சங்களை பின்பற்றியே திட்டங்கள் அமல்படுத்தப்படுகின்றன. நிலத்தடி நீர்மட்டத்தை பாதிக்காத வகையிலேயே செயல்பட்டு வருகிறோம். டெல்டா பகுதிகளில் தான் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு வளங்கள் நிறைந்தவையாக திகழ்கின்றன”. என்றார் ஓ.ன்.ஜி.சி பொது மேலாளர் பவன்குமார். நெடுவாசல் பகுதியில் எரிவாயு எடுக்கும் பணியை மத்திய அரசாங்கம் ஜெம் நிறுவனத்துக்கு வழங்கியுள்ளது. அந்தப்பகுதியில் மற்றவர்கள் பயப்படுவதுபோல் ஆயிரக்கணக்கில் நிலங்களை எடுக்கப்போவதில்லை. ஹைட்ரோகார்பன் எடுப்பதற்காக பல்வேறு நிறுவனங்களுக்கு மத்திய அரசுதான் ஒப்பந்தங்களை வழங்கியுள்ளது.

எனவே நெடுவாசலில் திட்டத்தை செயல்படுத்துவதா, கைவிடுவதா என்பதை மத்திய அரசாங்கம்தான் முடிவு செய்யும். ஓ.என்.ஜி.சி கையகப்படுத்தினால் விவசாயம் பாதிக்கப்படும் என சொல்வது எல்லாம் வதந்தியே தவிர உண்மையில்லை.

நெடுவாசல் குழாய் எண்ணெய்க்கசிவு

அரியலூர், சிவகங்கை பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்காக நாங்கள் போட்ட ஆய்வுக்குழாய்களில் கசிவுகள் ஏற்படுவதாக கூறப்படுவதில் உண்மையில்லை. தற்போது, அந்த இடங்களை எங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்து கண்காணிக்கப்படுகிறது. விவசாயிகள் வாழ்வாதாரம், பாதிப்புக்கு உள்ளாகாமல் மத்திய மாநில வளர்ச்சிக்கு தனது பங்கினை ஓ.என்.ஜி.சி அளித்து வருகிறது. ஹைட்ரோகார்பன் திட்டத்தினால் நிலநடுக்கம் ஏற்படும் என பரவலாகச் சொல்லப்படுகிறது. அதில் துளியளவும் உண்மையில்லை.

 

 

நாங்களும் இந்தத் திட்டங்கள் குறித்துத் தொடர்ந்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றோம். இந்திய நாட்டுக்காகவும், நாட்டு மக்களுக்காகவும் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் தொடர்ந்து பாடுபட்டு வருகிறது. இந்தியா முழுவதும் நாங்கள் திட்டங்களை செயல்படுத்தி வருகின்றோம். இங்கு மட்டும்தான் தடை இருந்து வருகிறது. தவறான புரிதல் மற்றும் தவறான பிரசாரங்களின் மூலம் சிலர் மக்களைத் திசை திருப்பி வருகின்றனர். விவசாயம் மற்றும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் செயல்களில் ஓ.என்.ஜி.சி. நிச்சயம் ஈடுபடாது. இதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்" என்றார்கள்.

"காவிரி டெல்டா பகுதிகளில் பாறை எரிவாயு, பாறை எண்ணெய், நிலக்கரிப் படுகை மீத்தேன் ஆராய்ச்சி நடவடிக்கைகளில் ஈடுபடும் திட்டம் ஏதுமில்லை" என ஓ.என்.ஜி.சி அதிகாரிகள் பேட்டி கொடுத்த சிலமணிநேரங்களிலேயே தமிழகத்தில் மீத்தேன் திட்டத்தைச் செயல்படுத்த, மத்திய சுற்றுச்சூழல் நிபுணர் குழு அனுமதி வழங்கி  இருக்கிறது. இதற்கு என்ன பதில் வைத்திருக்கிறார்களோ?

நம்பிக்கை இருக்க வேண்டியது உங்கள் செயல்களில்தான்...உங்கள் வார்த்தைகளில் மட்டுமே அல்ல அதிகாரிகளே! 

- சி.ய.ஆனந்தகுமார்

வீடியோ/படங்கள்: தே.தீட்ஷித்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close