வெளியிடப்பட்ட நேரம்: 11:13 (25/03/2017)

கடைசி தொடர்பு:14:17 (26/03/2017)

மத்திய அரசின் மீத்தேன் திருவிளையாடல்..! அதிர்ச்சியில் காவிரி டெல்டா மக்கள்

புலி வருது புலி வருது என பயமுறுத்தி ஒருநாள் உண்மையாகவே புலி வந்த கதை நம் அனைவருக்கும் நினைவு இருக்கும். காவிரி டெல்டா மாவட்டங்களில் நிலக்கரி மீத்தேன் எடுக்கும் திட்டத்தில் அதே தந்திரத்தை தான் மத்திய அரசு கடைப்பிடிக்கிறது. கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக மீத்தேன் திட்டம் குறித்த அச்சமும் குழப்பங்களும் காவிரி டெல்டா மக்களை ஆட்டிப்படைத்து கொண்டிருக்கிறது. மீத்தேன் திட்டம் ரத்து செய்யப்படுவதாக கடந்த ஆண்டு நவம்பர் 10-ம் தேதி மத்திய பெட்ரோலியத்துறை இணை அமைச்சர் தர்மேந்திரா பிரதான் அறிவித்தார். இதனால் காவிரி டெல்டா மக்கள் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களும் மகிழ்ச்சி அடைந்தார்கள். இந்நிலையில்தான் தற்போது மத்திய  சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் நிபுணர் குழு, காவிரி டெல்டாவில் நிலக்கரி மீத்தேன் எடுக்க, தி கிரேட் ஈஸ்டர் எனர்ஜி கார்ப்பரேஷன் நிறுவனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இப்பகுதி மக்களை பதற்றத்திலும் குழப்பத்திலும் ஆழ்த்தியுள்ளது. ஆரம்பத்திலிருந்தே மத்திய அரசு இந்த திட்டத்தில் வெளிப்படையாகவும் நேர்மையாகவும் நடந்துகொள்ளவே இல்லை. மத்திய அரசின் திருவிளையாடல்களுக்கு தமிழக ஆட்சியாளர்களும்  தொன்று தொட்டு துணை நின்று வருகிறார்கள். 

பாண்டிச்சேரி அருகேவுள்ள பர்கூர் தொடங்கி, நெய்வேலி, ஜெயங்கொண்டம், வீராணம், திருவிடைமருதூர், குடவாசல், வலங்கைமான், நீடாமங்கலம், மன்னார்குடி உள்ளிட்ட இன்னும் பல பகுதிகளில் 1 லட்சத்து 66 ஆயிரத்து 210 ஏக்கரில் 98 ஆயிரம் கோடி கன அடி மீத்தேனும், 29 ஆயிரத்து 389 மில்லியன் டன் நிலக்கரியும் எடுக்க  தி கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி கார்ப்பரேஷன் நிறுவனத்திற்கு 2010-ம் ஆண்டு மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் அனுமதி வழங்கியது. 2011-ம் ஆண்டு இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்து இட்டு, பச்சைக்கொடி காட்டினார் அப்போதைய தமிழக துணை முதல்வர் மு.க. ஸ்டாலின்.

ஒரு சிறு குண்டூசி தயாரிப்பில் ஈடுபட்டாலே அதை மிகப்பெரிய வளர்ச்சி திட்டமாக விளம்பரம் செய்து தம்மட்டம் அடித்துகொள்ளும் மத்திய, மாநில ஆட்சியாளர்கள் மீத்தேன் திட்டம் குறித்த அறிவிப்பை அடக்கியே வாசித்தார்கள். இத்திட்டம் குறித்தும் இத்திட்டத்தால் நிகழப்போகும் பேராபத்துகள் குறித்தும்  சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் அபயக்குரல் எழுப்பிய பிறகு காவிரி டெல்டா மக்களுக்கு இத்திட்டம் குறித்து தெரிய வந்தது. இத்திட்டம்  மிகவும் ஆபத்தானது. காவிரி டெல்டா மாவட்டங்களை பாலைவனமாகவே மாற்றிவிடும். இது நடைமுறைப்படுத்தப்பட்டால், நிலத்தடிநீர் முழுமையாக வெளியேற்றப்படும், ஆற்றுநீர், மணல் பெருமளவு அபகரிக்கப்படும். ரசாயன கழிவுகளால் விளைநிலங்கள், நீர்நிலைகள் நஞ்சாக மாறும், இங்கு வசிக்கும் மக்களை பல்வேறு வகையான கொடிய நோய்கள் தாக்கும், நிலநடுக்கம், தீ விபத்துகள் உள்ளிட்ட இன்னும் பல்வேறு அபாயங்கள் உருவாகும் என்பதால் இத்திட்டத்திற்கு எதிராக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எதிர்ப்பு குரல் எழுப்பினார்கள். இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் உள்ளிட்டவர்கள் இத்திட்டத்தை எதிர்த்து தீவிரமாக போராடினார்கள். மக்கள் போராட்டம் தீவிரமடைந்தது.

மீத்தேன்

அச்சூழலில்தான் மக்களின் கவனத்தை திசை திருப்பும்விதமாக, 2015-ம் ஆண்டு தொடக்கத்தில் மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஒரு அறிவிப்பை வெளியிட்டார். ஒப்பந்தத்தில் சொல்லப்பட்டுள்ளவாறு குறித்த காலத்திற்குள் மீத்தேன் எடுக்கும் பணிகளை தொடங்காததால், தி கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி கார்ப்பரேஷன் நிறுனத்திற்கு வழங்கப்பட்டுள்ள உரிமத்தை ரத்து செய்வதற்கான நடவடிக்கைகளில் இறங்க இருப்பதாக நாடாளுமன்றத்தில் அறிவித்தார். இதனால் அப்பொழுது காவிரி டெல்டா மக்கள் நிம்மதி அடைந்தார்கள். ஆனால் உரிமம் ரத்து செய்யப்பட்டதா, இல்லையா என்ற எந்த ஒரு அதிகாரப்பூவமான தகவலும் வெளியாகவே இல்லை. இதனால் அடுத்த சில மாதங்களில் மீண்டும் மக்கள் போராட்டம் திவீரமடைந்தது. 2015-ம் ஆண்டு அக்டோபர் மாதம் இத்திட்டத்திட்டத்திற்கு நிரந்த தடை விதித்தது தமிழக அரசு. ஆனாலும் மீத்தேன் திட்டம் குறித்த பயம் மக்கள் மனதில் இருந்து நீங்கவே இல்லை. இந்நிலையில்தான் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மீத்தேன் திட்டம் ரத்து செய்யப்படுவதாக தர்மேந்திரா பிரதான் அறிவித்தார். காவிரி டெல்டா மக்கள் இனிப்பு வழங்கி, பட்டாசுகள் வெடித்து கொண்டாடினார்கள். ஆனால் மத்திய அரசின் திருவிளையாடல் தற்பொழுதும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. தி கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி கார்ப்பரேஷன் நிறுவனம், காவிரி படுகையில் நிலக்கரி மீத்தேன் எடுக்க, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் நிபுணர் குழு, அனுமதி அளித்துள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. 

ரத்து செய்யப்பட்ட திட்டத்திற்கு எதற்காக அனுமதி கேட்டு இந்த தனியார் நிறுவனம் விண்ணப்பிக்க வேண்டும். ஏன் இதனை சுற்றுச்சூழல் அமைச்சகம் பரிசீலிக்க வேண்டும் ? இதற்கு ஏன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டம் ரத்து செய்யப்படுவதாக மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் சொன்னதெல்லாம் பொய்யா ? மக்களின் போராட்டத்தை மழுங்கடிக்க நடத்தப்பட்ட நயவஞ்சக நாடகமா ? மத்திய அரசின் திருவிளையாடல் எப்பொழுதான் நிறைவுப்பெறும் ? அதிர்ச்சி கலந்த ஆதங்கத்திலும் மன உளைச்சலிலும் உறைந்து கிடக்கிறார்கள் காவிரி டெல்டா மக்கள். 

                              - கு. ராமகிருஷ்ணன்


டிரெண்டிங் @ விகடன்