வெளியிடப்பட்ட நேரம்: 10:54 (30/03/2017)

கடைசி தொடர்பு:11:38 (30/03/2017)

பிரசவத்துக்காக ஒரு மாத பரோல் கேட்ட வீரத் தமிழச்சி பற்றி தெரியுமா உங்களுக்கு?

தமிழச்சி


சென்னையின் குடிநீர் தாகம் தீர்ப்பதில் கடலூர் வீராணம் ஏரிக்கும் முக்கியப் பங்கு இருக்கிறது. அந்த வீராணம் ஏரியிலிருந்து புவனகிரிக்குச் செல்லும் பெரிய வாய்க்காலில் இருந்து தீர்த்தாம்பாளையத்துக்கு பிரிந்துச் செல்லும் கிளை வாய்க்காலுக்கு பெயர் அஞ்சலை வாய்க்கால். இந்தப் பெயர் ஏன் வந்தது என்பது சுவாரஸ்யமான செய்தி. அதைத் தெரிந்துகொள்ளும் முன் அஞ்சலை எனும் பெயருக்கு உரிய வீரம் மிக்க தமிழச்சி யார் எனப் பார்ப்போமா?

அந்நியரிடம் அடிமைப்பட்டுக் கிடந்த நம் நாட்டுக்கு சுதந்திர சுவாசத்தை மீட்டெடுத்தவர்களில் பெண்களின் பங்கு கணிசமானது. தமிழகத்தைச் சேர்ந்தவர்களும் ஏராளம். அவர்களில் குறிப்பிடத் தகுந்த ஒருவர்தான் கடலூர் அஞ்சலையம்மாள்.

கடலூரில் 1890 ஆம் ஆண்டு பிறந்தவர் அஞ்சலையம்மாள். ஐந்தாம் வகுப்பு வரையே படிக்க வாய்ப்பு கிடைத்த இவருக்கு சமகால அரசியல் குறித்து தெரிந்துகொள்வதில் மிகுந்த ஆர்வம். அந்நியரிடம் அடிமைப்பட்டுக் கிடக்கும் நாட்டின் நிலைப் பற்றிய செய்திகளைத் தேடித்தேடி அறிந்துகொள்கிறார். காந்தியடிகள் ஒத்துழையாமை இயக்கத்தை மேற்கொண்டபோது, தன்னையும் அதில் கரைத்துக்கொள்கிறார் அஞ்சலையம்மாள். அதுவே பொதுவாழ்க்கை அவரது எடுத்து வைத்த முதல் அடி.

1857 ஆம் ஆண்டு நடந்த சிப்பாய் கலகத்தில் இந்திய விடுதலைக்காக போராடிய பல்லாயிரக் கணக்கானவர்களைக் கொலைச் செய்ய காரணமாயிருந்த நீலன் சிலை சென்னையில் இருந்தது. இதை அகற்றுவதற்காக சோமயாஜீலு தலைமையில் நடந்த போராட்டத்தில் தீவிரமாக பங்கேற்றார் அஞ்சலையம்மாள். தான் மட்டுமல்லாமல் தனது ஒன்பது வயது மகள் அம்மாகண்ணுவையும் போராட்டத்தில் கலந்துகொள்ள வைத்தார். வெள்ளையர் அரசு கைது செய்கையில் தாயும் மகளும் சேர்ந்தே சிறைக்குச் சென்றனர். சிறையைக் கண்டு அஞ்சாதவராய் தன் மகளை வளர்த்தார். காந்தியடிகளின் மனம் கவர்ந்தவராக அம்மாகண்ணு மாறினார். காந்தியடிகள் தமிழகம் வரும்போதெல்லாம் அம்மாகண்ணுவைப் பார்க்க விரும்புவார். ஒருமுறை 'லீலாவதி' எனப் பெயர் சூட்டி தனது வார்தா ஆசிரமத்துக்கே அழைத்துச் சென்றுவிட்டார்.

அஞ்சலையம்மாள்

1932-ம் ஆண்டு நடந்த போராட்டத்தில் பங்கெடுத்து, கைதாகி, சிறைச் செல்லத் தயாரானார் அஞ்சலையம்மாள். வேலூர் சிறைக்குள் அவர் நுழைந்தபோது நிறைமாத கர்ப்பிணி. பலரும் அவரைத் தடுத்தும் இந்திய விடுதலைக்காக சிறைச் செல்ல தயக்கம் காட்டவே இல்லை. சிறைக்குள் கடும் வேதனையை அனுபவித்தார். ஒரு மாதம் அவகாசம் கேட்டு வெளியே சென்று வீர மகனைப் பெற்றெடுத்தார். பிறந்து இரு வாரங்களே ஆகியிருந்த பச்சிளம் குழந்தையோடு மீண்டும் சிறைச் சென்றார். கைக் குழந்தையோடு சிறை வாசத்தை ஏற்ற அவரின் உறுதி, அவருக்குத் தண்டனை கொடுத்தவர்களையே கண்டிப்பாக அசைத்திருக்கும். எந்தச் சூழலிலும் தாயக விடுதலைக்கான தன் பயணத்தில் பின் வாங்க தயாராக இல்லை அஞ்சலையம்மாள்.

அஞ்சலையம்மாளைப் பற்றி பேசும்போதெல்லாம் தவறாமல் குறிப்பிடப் படும் சம்பவம் ஒன்று இருக்கிறது. காந்தியடிகளை அஞ்சலையம்மாள் சந்திக்க முடியாத அளவு தடை இருந்த சூழல் அது. அதை மீறியும் காந்தியடிகளைப் பார்க்க வேண்டும் எனும் பேராவல் அஞ்சலையம்மாளுக்கு. அதற்காக பர்தா அணிந்துகொண்டு, தடையை மீறிச் சென்று சந்தித்தாராம். அதனால் தென்னாட்டு ஜான்சி ராணி என்று காந்தி பாராட்டினாராம்.  

அஞ்சலையம்மாளின் வீடு எப்போதும் தொண்டர்களால் நிறைந்திருக்கும். அவர்களுக்கு தன்னால் இயன்ற உணவு உபசரிப்பைச் செய்ய ஒருபோதும் சுணக்கம் காட்டியதில்லை. இந்திய விடுதலைக்குப் பிறகு மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். தனது தொகுதிக்கு உட்பட்ட மக்களுக்கான பல நல்ல திட்டங்களைக் கொண்டு வர கடும் முயற்சி எடுத்தார். அவ்வாறு எடுக்கப்பட்ட ஒன்றுதான் தீர்த்தாம்பாளையத்தின் குடிநீர் பிரச்னையைத் தீர்த்தது. கடுமையான குடிநீர் பஞ்சத்துக்கு ஆளான அக்கிராமத்து மக்கள், நீண்ட தொலைவு சென்று நீர் பிடித்து வர வேண்டியதாயிற்று. அந்தச் சிக்கலுக்கு முற்றுப்புள்ளியாகத்தான் புவனகிரிச் செல்லும் வீராணம் வாய்க்காலிலிருந்து கிளை வாய்க்காலை உருவாக்கி தீர்த்தாம்பாளையத்துக்கு கொண்டு வந்தார். குடிநீர் பிரச்னையும் தீர்ந்தது. அதற்கான நன்றிக் கடனாகவே அஞ்சலை வாய்க்கால் என்று இன்றும் அழைக்கப்படுகிறது.

அஞ்சலையம்மாள் போன்ற வீரப் பெண்மணிகளைப் பற்றி நினைவு கூர்வதும், அவர்களைப் பற்றி அடுத்த தலைமுறைக்கு அறிமுகம் செய்வது மிகவும் அவசியம்.

- வி.எஸ்.சரவணன்.
 


டிரெண்டிங் @ விகடன்