கலங்கடிக்கும் போராட்டங்கள்... கலங்காத தீர்க்கம்... டெல்லியை அதிரச்செய்யும் அய்யாக்கண்ணு இவர்தான்! | Background of delhi protest farmer Ayyakkannu

வெளியிடப்பட்ட நேரம்: 14:47 (31/03/2017)

கடைசி தொடர்பு:14:46 (31/03/2017)

கலங்கடிக்கும் போராட்டங்கள்... கலங்காத தீர்க்கம்... டெல்லியை அதிரச்செய்யும் அய்யாக்கண்ணு இவர்தான்!

டெல்லி போராட்டத்தில் விவசாயிகள்

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் டெல்லியில் 18-வது நாளாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு தமிழகத்தின் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளனர். தமிழக விவசாய சங்கங்களும் தங்களது ஆதரவைத் தெரிவித்துள்ளன. விவசாயிகள் தேசிய வங்கிகளில் பெற்றக் கடனைத் தள்ளுபடி செய்ய வேண்டும், வறட்சி நிவாரணம், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து விவசாயிகளின் போராட்டம் தொடர்கிறது.

தூக்கு கயிறு மாட்டி போராட்டம்

பதினெட்டு நாட்களாகத் தலைமையேற்று போராட்டத்தை நடத்தியது, நிதியமைச்சர் அருண்ஜெட்லியுடன் சந்திப்பு, ஹரியாணா முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சந்திப்பு என டெல்லியை அதிரவைத்தவர்  தென்னிந்திய நதிகள் இணைப்பு பாதுகாப்பு சங்க தலைவர் அய்யாக்கண்ணு என்ற விவசாயிதான்.

யார் இந்த அய்யாக்கண்ணு?... திருச்சி மாவட்டம் முசிறியைச் சேர்ந்தவர். இவருக்கு வயது 72. ஆரம்ப காலக்கட்டங்களில் ஒரு வழக்கறிஞராகத் தனது பணியைத் தொடங்கியவர். இவருக்குச் சொந்தமாக 20 ஏக்கர் நிலம் உள்ளது. இவரது தந்தை பெயர் பொன்னுசாமி, அய்யாக்கண்ணு திருச்சி மாவட்டத்தில் பிரபலமான விவசாயியும் கூட... ஆரம்ப காலங்களில் தனது வழக்கறிஞர் பணியினைத் தொடர்ந்தாலும், 1985-ம் ஆண்டு முதல் அப்பாவின் வழிவந்த பரம்பரைத் தொழிலான விவசாயத்தை கையிலெடுத்தவர்

ஆரம்பத்தில் ரசாயன உரங்களை அள்ளிப் போட்டு விவசாயம் செய்தவர், பின்னர் தன் தந்தை வழியில் இயற்கை விவசாயம் செய்ய ஆரம்பித்தார். ஓராண்டுக்கு முன்பு வரை முசிறி பகுதியில் ஒவ்வொரு மாதமும் விவசாயிகள் கூட்டத்தை நடத்தி விவசாயிகளைப் பற்றியும், அவர்கள் விவசாயம் செய்யும் முறைகளை பற்றியும் குழுவாக விவாதிப்பது இவர் வழக்கம். அந்தக் கூட்டத்துக்கும் தலைமை தாங்குபவர், விவசாயி அய்யாக்கண்ணுதான். இவருக்கு மனைவி சந்திரலேகா, துணைவி ரேவதி மற்றும் இரண்டு மகன்கள் உள்ளனர். இரண்டு மகன்களுமே வழக்கறிஞர்கள்.

திருச்சியில் போராட்டத்தின்போது

இவர் 1977-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சி சார்பாக முசிறி தொகுதியில் எம்எல்ஏ பதவிக்குப் போட்டியிட்டுள்ளார். அதன்பிறகு ஜனதா தளத்தில் இணைந்து, இறுதியாக அந்தக் கட்சிகளிலிருந்து விலகி, தேசிய விவசாயிகள் சங்கத்தை தொடங்கினார். பின்னர் பாரதிய கிசான் சங்க மாநில பொதுச்செயலாளர் மற்றும் மாநில துணைத்தலைவர் எனப் பொறுப்பு வகித்து விவசாயிகளுக்காகப் பல போராட்டங்களை நடத்தியவர்தான் இந்த அய்யாக்கண்ணு. ஆனால் மத்தியில் பாரதீய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தவுடன் அய்யாக்கண்ணுவை போராட்டத்தில் ஈடுபடக்கூடாது என பாரதிய கிசான் சங்கம் எச்சரித்தது. பதவியை உடனே தூக்கியெறிந்துவிட்டு 2015-ம் ஆண்டில் தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தை தொடங்கி தலைவராக செயல்பட்டு வருகிறார்.

விவசாயிகளுக்கு ஒரு பாதிப்பு என்றால் விவசாயிகளுக்கு ஆதரவாக ஒலிக்கும் குரல்களில் இவர் குரல் முதன்மையானது. 72 வயதிலும் விவசாயிகளுக்குத் தலைமையேற்று சுட்டெரிக்கும் வெயிலிலும் தனது போராட்டத்தைத் தொடர்ந்து நடத்தி வருகிறார். அய்யாக்கண்ணு மற்ற விவசாய சங்க போராட்டங்களில் இருந்து வேறுபட்டு எலிக்கறி உண்பது, மண்டை ஓட்டுடன் போராட்டம் எனச் சற்று நூதனமான போராட்டங்களால் தன்னைத் தனித்து காட்டுபவர். தற்போது டெல்லியிலும், விவசாயியைச் சடலமாக கிடத்தியும், விவசாயிகள் அனைவரும் அரை நிர்வாணமாகவும், மண்சட்டியை ஏந்தியும் மற்றும் எலிக்கறி உண்ணுதல் ஆகிய வித்தியாசமான போராட்டங்களால் இந்திய விவசாயிகளைத் தனது பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர். பல அரசியல் தலைவர்கள் இவரின் போராட்டத்தை கைவிடப் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், தனது கோரிக்கைகள் நிறைவேறும் வரையும், விவசாயிகளுக்கு நிவாரணம் கிடைக்கும் வரைக்கும் தனது போராட்டம் தொடரும் என அவர்களுக்குப் பதிலடி கொடுத்தவர்.

டெல்லி போரட்டத்தின்போது

கோவைக்கு சிலை திறக்க பறந்து வரும் பிரதமர் மோடி, டெல்லியில் போராட்டம் நடத்தும்போது சந்திக்காமல் விவசாயிகளை வஞ்சித்து வருகிறார். இதுபோதாது என்று பா.ஜ.க-வை சேர்ந்த ஹெச்.ராஜா, செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர்கள் விவசாயிகளை சந்திக்கணுமா?.. என சிரித்துக்கொண்டே கேள்வி கேட்கிறார். உணவளிக்கும் விவசாயிகளை எப்படியெல்லாம் வஞ்சிக்கிறார்கள், இந்த அரசியல்வாதிகள்? இன்று விவசாயிகள் கையேந்துகின்றனர், காரணம் நாளை நாம் கையேந்தக்கூடாது என்பதற்காகத்தான். இந்த போராட்டத்தை தலைமையேற்று நடத்துவது அய்யாக்கண்ணு என்ற ஒற்றை ஆள்தான். ஆனால், அங்கு இருக்கும் ஒவ்வொரு விவசாயியுமே அய்யாக்கண்ணுதான்.

- துரை.நாகராஜன்.

 


டிரெண்டிங் @ விகடன்