Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஜக்கி நட்ட 10 லட்சம் மரங்கள் எங்கே? வீடியோ ஆதாரத்துடன் கேள்வி எழுப்பும் பியூஷ் மானுஷ்!

பியூஷ்

“ஈஷாவுக்கு எதிரான ஒரு குற்றச்சாட்டை நிரூபியுங்கள். நான் இந்த இடத்தைவிட்டே போய்விடுகிறேன்..."ஆதியோகி சர்ச்சையைத் தொடர்ந்து பல ஊடகங்களைச் சந்தித்துப் பேசிய ஜக்கி வாசுதேவ், எல்லாப் பேட்டிகளிலும் தவறாமல் சொன்ன வாசகம் இது. 112 அடி ஆதியோகி சிலை, காடுகளை அழித்தது, விதி மீறி கட்டப்பட்ட கட்டடங்கள், பிரதமர் நரேந்திர மோடி வருகைத் தந்தது, யானைகள் வழித்தடம் அழிப்பு, யானைகள் சாவு, தீவிர இந்துத்துவவாதி, அப்பாவி மக்களை மூளைச் சலவை செய்கிறார், சொத்துக்களை அபகரிக்கிறார், கார்ப்பரேட் சாமியார், கயவ சாமியார் எனத் தொடர்ந்து ஏகப்பட்ட குற்றச்ச்சாட்டுகள் ஜக்கி வாசுதேவ் மீது வைக்கப்பட்டது. இதற்கான நேரடி பதில்களை சில இடங்களில் சொன்னார், சில இடங்களில் கேள்விகளுக்கான பதில்களை மழுப்பினார் என சமீபகாலங்களில் ஒட்டுமொத்த இந்திய ஊடகங்களிலும் இடம்பிடித்திருந்தார் ஜக்கி வாசுதேவ். 

ஆனந்தவிகடன் உள்பட சில ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில்... "எனக்கெதிராக குற்றம் சுமத்துபவர்கள். வாருங்கள். கேமராவைக் கொண்டு எல்லா இடங்களுக்கும் சென்று படம் பிடித்து பாருங்கள். இங்கு ஏதேனும் தவறு நடந்திருக்கிறதா என்பதைப் படம்பிடித்து சொல்லுங்கள்..."என்று சொல்லியிருந்தார். இதன் பொருட்டு, சமூக ஆர்வலர் பியூஷ் மானுஷ், கேமராவோடு ஈஷாவிற்கு சென்று ஜக்கி வாசுதேவிற்கு எதிரான சில ஆதாரங்களைத் திரட்டியுள்ளார். அதை வீடியோ பதிவுகளாக தன் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார். இதுவரை இரண்டு வீடியோ பதிவுகளை வெளியிட்டுள்ளார்.

ஜக்கி நட்ட அந்த 10 லட்சம் மரங்கள் எங்கே? 

சீமைக் கருவேல மரங்களின் காட்சிகளோடு தொடங்கும் இந்த முதல் காட்சிப் பதிவு, ஈஷாவைச் சுற்றி ஜக்கி நட்டதாக சொல்லும் 10 லட்சம் மரங்களுக்கான தேடல் பொருட்டாக இருக்கிறது. ஆதியோகி சிலையை நோக்கி நடக்கும் பாதை முழுக்க சிமெண்ட் கற்கள் பதிக்கப்பட்டுள்ளன. இது போன்ற சிமெண்ட் தரைகள் அதிக வெப்பத்தைக் கக்கும். சிமெண்ட் தரையில் பட்டு பிரதிபலிக்கும் வெப்பம் சுற்றியிருக்கும் மலைகளிலும், மரங்களிலும் வெப்பத்தை அதிகப்படுத்தும். அது பறவைகளுக்குப் பெரிய கேடாக அமையும் என்ற குற்றச்சாட்டை முன்வைக்கிறார். 

ஆதியோகி சிலைக்குப் போகும் பாதையில் ஆங்காங்கே "மரமல்லி" எனப்படும் மரங்களை நட்டிருக்கிறார்கள். இதற்குப் பின்னணியிலும் அரசியல் இருப்பதாகச் சொல்கிறார். மரமல்லி எதற்கும் உதவாத ஒரு மரம். இதில் கனிகள் காய்க்காது, பறவைகள் வாழாது. ஆனால், வெகு வேகமாக வளர்ந்துவிடும் தன்மைக் கொண்டது. மேலும், அங்கிருக்கும் பெரிய கிரானைட் கற்களை வெட்டியெடுக்க எத்தனைப் பெரிய இயற்கை அழிவு ஏற்பட்டிருக்கும் என்பதையும் விளக்குகிறார். இறுதியாக ஈஷாவின் சில முக்கியப் பகுதிகளில் கேமராவோடு நுழைய பியூஷுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. இப்படியாக முடிகிறது அந்த முதல் காட்சிப் பதிவு. 

சட்டவிதிகளுக்குப் புறம்பான கட்டங்கள்: 

காப்புக் காட்டிலிருந்து 50 மீட்டர் தொலைவிற்கு ஈஷாவின் எந்தக் கட்டுமானமும் இல்லை என்று சொன்னார் ஜக்கி வாசுதேவ். ஆனால், ஈஷா அதை மீறியிருப்பதற்கு பலவித காட்சி ஆதரங்களோடு, அந்த ஆதாரங்களை எப்படி அறிவியல் பூர்வமாக திரட்டினார்கள் என்பதையும் இந்தக் காட்சிப்பதிவு விளக்குகிறது. காப்புக் காட்டின் எல்லையிலிருந்து 50 மீட்டர் தொலைவிற்குள் ஈஷாவின் 30 எக்கர் ஆக்கிரமிப்பும், 150 மீட்டர் தொலைவிற்குள் சுமார் 80 ஏக்கர் ஆக்கிரமிப்பும் இருப்பதை ஆதாரப்பூர்வமாக இந்தப் பதிவு விளக்குகிறது.

இதுகுறித்து பியூஷிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது,

"ஜக்கி வாசுதேவ் ஈஷாவைச் சுற்றி 10 லட்சம் மரங்கள் நட்டிருப்பதாகச் சொல்கிறார். ஆனால், நிச்சயம் அங்கு அவ்வளவு இல்லை. வெள்ளிங்கிரி மலையில் 60 லட்சம் மரங்களை நட்டதாகச் சொல்கிறார். வனத்துறைக்கு சொந்தமான ஒரு வனத்தில் இவர் எப்படி, யாரின் அனுமதியோடு சென்று அத்தனை லட்சம மரங்களை நட்டார் என்ற கேள்வியும் எழுகிறது. மலையில் 60 லட்சம் மரங்கள் நட்டதற்கான ஆதாரம் என்னவென்பதும் தெரியவில்லை. தமிழகம் முழுக்க 3 கோடி மரங்களை நட்டு, 7.2 சதவீத பச்சை நிலத்தை அதிகரித்திருப்பதற்காக ஒரு பொய்யான வாதத்தை முன்வைக்கிறார். ஏதோ, தான் தான் பசுமைத் தூதுவர் என்பது போல் பேசுகிறார். இது உண்மையிலேயே, உணர்வுப்பூர்வமாக இயற்கைக்காகப் போராடுபவர்களைக் கொச்சைப்படுத்துவது போன்ற செயலாக இருக்கிறது.

piyush manush

அதே மாதிரி, காப்புக் காட்டின் எல்லையிலிருந்து 50 மீட்டர் தூரத்திற்கு எந்தக் கட்டுமானமும் இல்லை என்றார். அதற்கான அனைத்து ஆதாரங்களையும் நாங்கள் தற்போது முன்வைத்துள்ளோம். அவர் சட்ட விதிமுறைகளை எந்தளவிற்கு மீறியிருக்கிறார், காடுகளை எந்தளவிற்கு அழித்திருக்கிறார் என்பது இதன் மூலம் நிரூபணமாகிறது. ஜக்கி வாசுதேவின் ஏமாற்று வேலைகளையும், பொய்ப் பிரச்சாரங்களையும் மக்கள் முன்பு தொடர்ந்து எடுத்துச் செல்வோம். அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகளை நிரூபித்தால், இங்கிருந்து போவதாக சொல்லியிருந்தார். இப்போது நாங்கள் அதை நிரூபித்திருக்கிறோம். ஆனால், அவர் எங்கும் போக வேண்டாம். இங்கேயே இருக்கட்டும். ஏனென்றால், புதிதாக ஒரு இடத்திற்குப் போய் மீண்டும் காடுகளை அழிக்கத் தொடங்குவார். அதற்கு பதில், இங்கிருந்தபடியே, மொத்தக் காட்டையும் அவர் அழிக்கட்டும்..." என்று உணர்ச்சிப் பொங்க பேசி முடிக்கிறார் பியூஷ் மானுஷ். 

-இரா. கலைச்செல்வன்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 8 - அரியலூர் அனிதாவும் நானும்!
Advertisement

MUST READ

Advertisement