வெளியிடப்பட்ட நேரம்: 08:19 (06/04/2017)

கடைசி தொடர்பு:12:56 (15/04/2017)

பூமிக்கடியில், மின்சாரம் இல்லாமல் ஒரு இயற்கை ஃபிரிட்ஜ்... நெதர்லாந்து ஆச்சர்யம்!

பாதாள குளிர்சாதனப் பெட்டி முகப்பு பூமி

நாம் வீட்டில் அன்றாடம் உபயோகிக்கும் எலக்ட்ரானிக் சாதனங்களில் முக்கியமானது குளிர்சாதனப்பெட்டி. இன்றைய கோடை கொளுத்தும் நிலையில் இதன் பங்கு மிகமுக்கியமானது. வீடுகளில் மட்டுமல்லாமல் பெரிய, பெரிய கடைகளிலும் காய்கறிகள் கெட்டுப்போகாமல் இருக்கக் கடை முழுவதும் அறைகள் குளிரூட்டப்பட்டு காய்கறிகள் பாதுகாக்கப்படுகின்றன. ஆனால், குளிர்சாதனப்பெட்டியில் மொத்தம் வைக்கப்படும் உணவுப் பொருட்கள் உடலுக்கு கேடு தரும் என மருத்துவர்கள் எச்சரிக்கை கொடுத்துக் கொண்டுதான் இருக்கின்றனர். மேலும், 150 வாட்ஸ் திறனுடைய குளிர்சாதனப்பெட்டி தினமும் 12 மணிநேரம் இயங்கினால் மாதத்திற்கு 54 யூனிட் மின்சாரம் செலவாகும். மாதம் 100 யூனிட் மின்சாரம் இலவசம். இதில் குளிர்சாதனப்பெட்டிக்கு மட்டுமே பாதியளவு மின்சாரம் போய்விடும். மீதம் இருக்கும் மின்பொருளும் தங்கள் திறனுக்கேற்றவாறு மின்சாரத்தை உறிஞ்சும். தற்போது நெதர்லாந்தில் டச்சு மக்கள் செயற்கை குளிர்சாதனத்துக்கு மாற்று வழியாக பூமிக்கடியில் பாதாள குளிர்சாதனப்பெட்டி அமைத்து வீட்டு உணவுப்பொருட்களைப் பாதுகாத்து வருகின்றனர். இப்படி பூமிக்கடியில் அமைக்கப்படும் குளிர்சாதனப்பெட்டியானது மிகவும் குளிர்ச்சியானதாகவும், விலை மலிவானதாகவும் மற்றும் உணவுப்பொருட்களைத் தரமாக சேமிக்கவும் ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

பூள்ளே வைக்கப்பட்டுள்ள காய்கறிகள்

இக்குளிர்சாதனப்பெட்டிக்கு மின்சார பயன்பாடு துளியும் தேவையில்லை என்பது கூடுதல் தகவல். குளிர்சாதனப்பெட்டியில் அமைக்கப்பட்டுள்ள தண்ணீர் கொள்கலனில் தண்ணீர் நிரப்ப வேண்டும். அந்தத் தண்ணீரை மட்டுமே எடுத்துக் கொண்டே குளிர்சாதனப்பெட்டி முழுவதும் சீரான குளிரைக் கொடுத்து உணவுப்பொருட்களைச் சேமிக்கிறது. இதனால் எந்த வாயுவும் வெளிவரப்போவதில்லை, அதனால் இது சுற்றுப்புற சூழலுக்கு மிகவும் உகந்தது. மேலும், இதில் சேமிக்கப்படும் உணவினை மனிதர்கள் உண்பதால் உடலுக்கு எந்தவிதத்திலும் பாதிப்பை ஏற்படுத்தாது. இந்த குளிர்சாதனப்பெட்டியில் 10 முதல் 12 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் உணவுப்பொருட்களைப் பாதுகாக்க முடியும். மேலும், இந்த அமைப்பானது முற்றிலும் பூமிக்கடியில் இருக்குமாறு அமைக்கப்பட்டும், பூமிக்குள் இருக்கும் வாயுக்களால் உணவுப்பொருட்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை. இந்தக் குளிர்சாதனப்பெட்டியில் காய்கறிகள், பழங்கள் என அவற்றுடன் சேர்த்து மற்ற உணவுப் பொருட்களையும் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளலாம். இந்த அமைப்பு அமைக்கும்போதே குளிர்சாதனப்பெட்டியை சுற்றிலும் பசுமையாக இருக்குமாறு செடிகள் வளர்ப்பது அவசியம்.

உட்புறத் தோற்றம்

பூமிக்கடியில் அமைக்கப்பட்டிருக்கும் குளிர்சாதன பெட்டியின் கொள்ளளவு, சாதாரண குளிர்சாதனப்பெட்டியைப் போல 20 மடங்கு அதிகமான கொள்ளளவைக் கொண்டது. இந்த அமைப்பிற்குள் சாதாரணமாக ஒரு மனிதன் உள்ளே சென்று வரக்கூடிய வகையில் அமைக்கப்பட்டிருக்கும். இதற்குள் காற்றுபுகாத, தண்ணீர் ஒரு சொட்டுகூட புகாத மற்றும் பூச்சிகள் புகாத வகையிலும் வடிவமைக்கப்பட்டிருப்பது, இதன் மற்றொரு சிறப்பு. இக்குளிர்சாதனப்பெட்டியில் உள்ளே நிலவும் வெப்பநிலை மற்றும் ஈரப்பதத்தைக் கண்டறியும் வசதியும் உள்ளது. இதனுள்ளே ப்ளைவுட் மரப்பலகைகளால் அலமாரிகள் செய்யப்பட்டுள்ளன. இதுபோக உள்ளே வெளிச்சத்துக்கு எல்இடி விளக்கு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பானது, நம் முன்னோர்கள் தானியங்களை சேமிக்கவும், மிதமான வெப்பநிலையில் வைத்துப் பாதுகாக்கவும், பூமிக்குக் கீழே அறை ஒன்று தோண்டி அதில் சேமித்து வந்தனர். இந்த அமைப்பும் அதே வகையில்தான் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆனால் ஒரே வித்தியாசம், தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள சாதனம் குளிர்ச்சிக்கு மட்டும்தான். இந்த பாதாள குளிர்சாதனப்பெட்டியானது விஞ்ஞானத்தின் ஒருபடி மேலே போய் நோய்த்தாக்குதல் இல்லாமல் வாழவும் இது வழி செய்கிறது.

வடிவமைப்பு

இதன் முக்கியமான நன்மை மண்வளம், நிலத்தடி நீர் மற்றும் சுற்றுச்சூழல் என எந்தவிதமான இயற்கை சூழ்நிலைகளுக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் பாதாள குளிர்சாதனப்பெட்டி அமைக்கப்பட்டுள்ளது. குளிர்சாதனப் பெட்டிக்குள் மேற்கண்ட வெப்பநிலையை(10-12 டிகிரி செல்சியஸ்) மாற விடாமல் வைத்திருக்கும். அப்போதுதான் உள்ளே வைத்திருக்கும் பழங்களும், காய்கறிகளும் கெட்டுப்போகாமல் பாதுகாப்பாக இருக்கும். இந்தப் பாதாள குளிர்சாதனப் பெட்டியை அமைக்கும்போது மேற்புறம் ஒரு மீட்டர் உயரத்திற்கு இருக்குமாறு அமைத்தால் போதுமானது. இந்த குளிர்சாதனப்பெட்டி அமைப்பதற்கு யாரிடமும் அனுமதி வாங்கத் தேவையில்லை.

மலர்களால் அலங்கரிக்கப்பட்ட குளிர்சாதனப்பெட்டி

அதேபோல இதனைப் புதைப்பதற்கு தேர்ந்தெடுக்கும் இடம் புதிய இடமாக இருக்க வேண்டும். இது 3,000 லிட்டர் தண்ணீர் கொள்ளளவைத் தாங்க கூடிய அளவு உருவம் கொண்டதாக இருக்கும். இதில் 5 குடும்பங்களுக்கு ஒரு மாதத்துக்குத் தேவையான 500 கிலோ உணவுவை சேமித்து வைக்க முடியும். இந்தக் குளிர்சாதன பெட்டியை பூமிக்கடியில் அமைக்கும்போது அந்த இடம் குளிர்ச்சியான இடமாகவும் இருக்க வேண்டும். இதன் மேற்புறம் லேமினேட் செய்யப்பட்ட தகடுகளால் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மொத்த எடை 300 கிலோ ஆகும். இதன் மேற்புறம் அமைக்கப்படும் கதவுகளை நம் விருப்பத்துக்கு ஏற்றவாறு அமைத்துக் கொள்ளலாம். ஆனால், வெயிலைச் சிதறடிக்கும் வெள்ளை நிறமே இதற்கு ஏற்றது. இவ்வாறு சுற்றுச்சூழலுக்கும், வீட்டிற்கும் நன்மை ஏற்படும்படி அமைக்கப்பட்டுள்ளதால் நெதர்லாந்து மட்டுமல்ல, மேலை நாடுகளிலும் மக்களிடையே நல்ல வரவேற்பு பெற ஆரம்பித்துள்ளது.

- துரை.நாகராஜன்.


டிரெண்டிங் @ விகடன்