"போராடுகிற நாங்கள்தான் தீவிரவாதிகளா?"- நம்மாழ்வார் விழாவில் வெடித்த அற்புதம்மாள் | "Are we terrorists?" slams Arputhammal in nammalvar birthday special function

வெளியிடப்பட்ட நேரம்: 09:31 (07/04/2017)

கடைசி தொடர்பு:09:30 (07/04/2017)

"போராடுகிற நாங்கள்தான் தீவிரவாதிகளா?"- நம்மாழ்வார் விழாவில் வெடித்த அற்புதம்மாள்

இயற்கை விவசாயத்தை வளர்க்கவும்,காவிரிப்படுகை விவசாயத்தை கூறு போட வந்த மீத்தேன் உள்ளிட்ட எமன்களுக்கு எதிராகவும் பலமாகக் களமாடியவர் இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார். அவரது 79-வது பிறந்தநாளான நேற்று, பல இடங்களில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.  

நம்மாழ்வாரின் வானகம்

மேலும் படங்களுக்கு க்ளிக் செய்க...

நம்மாழ்வார் அவர்களின் வானகத்திலும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் நம்மாழ்வார் அவர்களின் மனைவி சாவித்திரி அம்மாளும்,மகள் மீனாவும் கலந்து கொண்டனர். 26 வருடங்களாக ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதாகி சிறையில் வாடும் பேரறிவாளனின் தாய் அற்புதம்மாளும் கலந்து கொண்டார். கூடவே,சிறப்பு அழைப்பாளர்களாக ஆந்திராவில் 90 லட்சம் ஏக்கர் நிலங்களை இயற்கை விவசாயத்திற்கு திருப்பிய ராமாஞ்சநேயிலு, த.மு.எ.க.ச பொதுச்செயலாளர் தமிழ்ச்செல்வனும் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். இயற்கையைக் காக்க போராடும் சமூக போராளி முகிலனுக்கு சூழலியல் செயற்பாட்டாளருக்கான விருது,நெல் ஜெயராமன்,நாகை கருப்பம்புலம் சிவாஜி உள்ளிட்டவர்களுக்கு மரபு விதை காப்பாளர்கள் விருது,பிரபு துரைலிங்கம் என்பவருக்கு இயற்கை வழி விவசாயி விருதும் வழங்கி கவுரவிக்கப்பட்டது. வானகத்தில் இருக்கும் நம்மாழ்வார் சமாதியில் காலை ஒன்பது மணிபோல் பூஜை செய்து வணங்கினார்கள். அங்கே பல்வேறு இயற்கை வழி பாரம்பரிய தானியங்களை கொண்டு முளைக்க வைக்கப்பட்ட முளைப்பாரி சட்டிகளையும் வைத்தும் வணங்கினர். பின்பு அதை ஊர்வலமாக எடுத்துக் கொண்டு போய்,விழா மேடையின் முன்புறம் வரிசையாக வைத்தனர். அதோடு,மேடையில் வண்டி சக்கரம்,தென்னை ஓலைகள்,அரசமர இலைகள்,பல்வேறு இலைகள்,கொடிகளை கொண்டு அலங்காரம் செய்திருந்தனர். இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட தானியங்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட கம்பங்கூல்,கேழ்வரகு கூல் காலை உணவாக வழங்கப்பட்டது. மதியமும் இயற்கை தானியங்களை கொண்டு சமைத்த சைவ உணவு பரிமாறப்பட்டது. 

இந்த கூட்டத்தில் பேசிய சிறப்பு அழைப்பாளர் ராமாஞ்சநேயிலு, "நான் ஐ.டி பீல்டுலதான் வேலையில் இருந்தேன். விவசாயம்ன்னா என்னன்னே தெரியாம இருந்தேன். நம்மாழ்வாரின் தொடர்பு கிடைத்தபிறகு எனக்கு இயற்கை விவசாயத்தின் மீது ஈடுபாடு வந்தது. அவரின் வழிகாட்டுதலோடு,நஞ்சு விவசாயம் செய்து மனித உயிர்களுக்கு வியாதிகளை தந்து கொண்டிருந்த விவசாயிகளை இயற்கை விவசாயத்திற்கு திருப்ப பாடுபட்டேன். முதல்ல அவ்வளவு சிரமமா இருந்துச்சு. இருந்தாலும்,உறுதியா போராடி கொஞ்சம் கொஞ்சமா பலரையும் இயற்கை வழி விவசாயத்திற்கு திருப்பினேன். இப்படியே 90 லட்சம் ஏக்கர் நிலங்களை இயற்கை விவசாயம் செய்ய வைக்கும் அளவிற்கு இப்போது மாற்றி இருக்கிறேன். இதனால், முன்பு நஞ்சுள்ள பொருட்களை உற்பத்தி செய்வதில் இந்தியாவிலேயே மூன்றாவது இடத்தில் இருந்தது ஆந்திரா. இப்போ 22 வது இடத்திற்கு போயிருக்கு. அதுக்கு காரணம் நம்மாழ்வார்தான். அதோடு, எங்க மாநிலத்தில் முப்பதுக்கும் மேற்பட்ட விவசாயக் குழுக்களை அமைத்து, விவசாயிகள் விளைவிக்கும் பொருட்களை வாங்கி மொத்தமாக விற்கிறோம். இதில், ஐம்பது சதவிகிதம் லாபம் சம்மந்தப்பட்ட விவசாயிகளுக்கும், 25 சதவிகிதம் குழுக்களுக்கும்,மீதமுள்ள 25 சதவிகிதம் விற்பனை செய்ற கம்பெனிகளுக்கும் போய் சேர்ற மாதிரி பண்றோம். இதனால்,விவசாயிகளுக்கு லாபம் கிடைத்து,அங்கே படித்தவர்கள் விவசாயம் செய்ய வருவது அதிகரிச்சுருக்கு. விவசாயத்தை லாபம் தரும் விசயமகவும் மாற்றி காட்டி இருக்கிறோம். அடுத்து,இயற்கை விவசாயத்தை சிறு வயதிலேயே மாணவர்களுக்கு கற்பிக்க வேளாண் பள்ளிகளையும் அமைக்க இருக்கிறோம். இதற்கெல்லாம் காரணம் உங்க நம்மாழ்வார்தான். எங்க மாநிலத்தில் அவர் பிறந்திருந்தால் அவரை கொண்டாடி இருப்போம்" என்றபோது கூட்டம் ஆர்ப்பரித்தது.

சாவித்திரி நம்மாழ்வார்

மேலும் படங்களுக்கு க்ளிக் செய்க...

அடுத்து பேசிய,எழுத்தாளர் தமிழ்ச்செல்வன்,"இன்றைக்கு இளைஞர்கள் ஜல்லிக்கட்டிற்காகவும், ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பாகவும் போராட கிளம்பி இருப்பது வரலாற்று நிகழ்வு. தமிழகம் இதுவரை பார்த்திராத புரட்சி. இந்தியாவிற்கே முன்னோடி போராட்டம். அப்படி இளைஞர்களை தட்டி எழுப்பியது நம்மாழ்வார், ஆனந்தவிகடன் உள்ளிட்ட பத்திரிகைகள், மருத்துவர் கு.சிவராமனின் எழுத்துக்கள் ஆகியவைதான். இதில் நம்மாழ்வார் குறிப்பிடத்தக்க காரணி. இளைஞர்களின் இந்த தன்னுணர்வு,தன்னெழுச்சி போராட்ட வடிவத்தையும் தந்தவரும் அவர்தான். எங்க ஊரில் அலுமினியம் கம்பெனிக்கு எதிராக மக்கள் போராடினார்கள். ஆனால்,கோர்ட் மூலமாக போராடினார்கள். அங்கே வந்த நம்மாழ்வார் ஒரு வார்த்தை சொன்னார். அதை மக்கள் போராட்டமா,உள்ளூர் போராட்டமா மாத்துங்கன்னார். அதன்பிறகு அந்த போராட்டம் வீரியம் ஆனது. நாங்க போட்ட வழக்கில் கோர்ட், 'அந்த அலுமினிய கம்பெனியில் இருந்து காற்றில் அலுமினியம் பறந்து வந்து உங்க வீடுகளில் படியுதுன்னு சொல்றீங்க. மூன்று நாட்கள் அப்படி ரன்செக் பண்ணுவோம். நடப்பதை பார்ப்போம்' ன்னு சொன்னது. ஆனால்,'அப்படி பண்ண அனுமதிக்காதீங்க'னு நம்மாழ்வார் சொன்னார். அவர் சொன்னப்படி செய்ததால் அந்த கம்பெனி இழுத்து மூடப்பட்டது. அவர் சொன்ன அந்த தன்னுணர்வு என்கிற வார்த்தை எங்களுக்கும் ஊக்கி. அதனால்தான்,கதைகள் எழுதிகொண்டிருந்த நான் உள்ளிட்ட பல எழுத்தாளர்கள் அதிகம் பதியப்படாத உள்ளூர் வரலாறுகளை எழுத ஆரம்பித்தோம்" என்றார்.


நம்மாழ்வார் விழா

மேலும் படங்களுக்கு க்ளிக் செய்க...

இறுதியாக பேசிய அற்புதம்மாள், "என் மகன் ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டபோது,அவனுக்கு வயது பத்தொன்பது. இப்போது அவனுக்கு வயது நாற்பத்தி ஐந்து. எந்த பாவமும் செய்யாத அவனை சம்பந்தமே இல்லாமல் கைது செய்து பிணையில் கூட வெளியில் விடாமல் 26 வருடங்கள் சிறையில் வைத்து அவனது வாழ்கையையே வீணடித்துவிட்டார்கள். கொலைகள் செய்தவர்களையே பத்து வருடங்களில் ரிலீஸ் செய்துவிடுகிறார்கள். ஆனால்,எந்த பாவமும் செய்யாத என் மகனை 26 வருடங்களாக சிறையில் வைத்திருக்கிறார்கள். அவனது வாழ்க்கையே முடிந்துவிட்டது. இனியும் அவனை ஜெயிலில் வைக்கணுமா?ஆரம்பகாலங்களில் என்னைப் பார்க்கும் மக்கள்,'இவர்தான் ராஜீவ்காந்தியை கொன்ன பேரறிவாளனின் அம்மா'ன்னு சொல்லும்போது பகீர்ன்னு இருக்கும். இதனால்,வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடந்தேன். அப்போதுதான் ஒருதடவை நம்மாழ்வாரைப் பார்த்தேன். 'நீங்க சொல்றதை பலரும் ஏத்துக்கலை. ஆனால்,தொடர்ச்சியாக இயங்குகிறீர்களே?'ன்னு கேட்டேன். 'நான் அவங்க அதை கேட்குறாங்களா, இல்லையான்னு பார்க்கிறதில்லை. நான் சொல்ற விசயம் உண்மையா இருக்கா, நான் என் சொல்லுக்கு உண்மையா இருக்கேனான்னுதான் பார்ப்பேன். அதனால் உறுதியா போராட முடியுது'ன்னு சொன்னார். 

அற்புதம்மாள் மற்றும் முகிலன்

மேலும் படங்களுக்கு க்ளிக் செய்க...

அதை கேட்ட எனக்கு சுளீர்ன்னு உரைச்சுச்சு. அன்னையில் இருந்துதான் ஏழைக்கு வில்லனாகவும்,பவரில் உள்ளவர்களுக்கு நண்பனாகவும் இருக்கும் முறையற்ற சட்டத்துறையையும், காவல்துறையையும் எதிர்க்க ஆரம்பித்தேன். அவர்களின் முகத்திரையை கிழிக்காமல் விடப்போவதில்லைன்னு தொடர்ந்து இயங்கிகிட்டு இருக்கேன். எனக்குள் அந்த போராட்டக்குணத்தை தூண்டியவர் நம்மாழ்வார். ஆனால் நானும், முகிலனும் இங்கே வர்றதை தெரிந்து கொண்ட காவல்துறையினர், விழா ஏற்பாட்டாளர்களிடம், 'தீவிரவாதிகளை எல்லாம் ஏன் விழாவிற்கு கூப்பிடுறீங்க. இதனால்,உங்களுக்குதான் சிக்கல். மரியாதையா அவர்களை வர வேண்டாம்ன்னு சொல்லிடுங்க'ன்னு மிரட்டி இருக்காங்க. ஆனால்,அதையும் மீறி நாங்க இங்க வந்திருக்கோம். மக்களுக்கு சிக்கலைத் தர கூடிய கூடங்குளம் அணுஉலை வேண்டாம்ன்னு போராடிய முகிலனும், ஏழைகளை வதைக்கும் சட்டத்துறைக்கு எதிராக போராடிய நானும் தீவிரவாதிகளாம். நமக்கான உரிமையைப் பெற போராடினா, நம்மைத் தீவிரவாதிகளா பார்க்கும் ஆட்சியாளர்களும், நீதித்துறையும்,காவல்துறையும் சூழ்ந்த அபாய நிலையில் இருக்கிறோம் நாம். அடுத்து, ஜல்லிக்கட்டிற்காகப் போராடிய இளைஞர்கள், ஹைட்ரோகார்பனுக்கு எதிராக போராடிய விவசாயிகள்ன்னு எல்லோரையும் தீவிரவாதிகளாக்கிடும் பொல்லாத சட்டம். ஆனால் நம்மாழ்வாரின் உறுதியை ஏற்று நாம் நமக்கான உரிமையை போராடி பெற இங்கே சபதமேற்போம்" என்றார்.

விதையாக விழுந்த நம்மாழ்வார் வீரியமாக முளைக்கத் தொடங்கி இருக்கிறார். அதன் விளைவு மக்கள் போராட்டங்களில் தெரிகிறது.

  கட்டுரை: துரை.வேம்பையன்,
         படங்கள்: நா.ராஜமுருகன்.
 


டிரெண்டிங் @ விகடன்