“நம்மாழ்வார் குழு மூலம் கிராமத்தைத் தத்தெடுப்போம்..!” மாணவியின் ஆர்வம் | This college student wants to adopt a village

வெளியிடப்பட்ட நேரம்: 15:25 (09/04/2017)

கடைசி தொடர்பு:15:24 (09/04/2017)

“நம்மாழ்வார் குழு மூலம் கிராமத்தைத் தத்தெடுப்போம்..!” மாணவியின் ஆர்வம்

நம்மாழ்வார் சொன்ன நாட்டு மாடுகள்

ளைஞர்கள் மற்றும் மாணவர்களின் கவனம் ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கு பிறகு விவசாயத்தின் மீதும், விவசாயிகளின் பக்கம் திரும்ப ஆரம்பித்துள்ளனர். நம்மாழ்வார் போன்றவர்களைத் தவிர, முன்பெல்லாம் ஒரு கல்லூரியில் விவசாயத்தைப் பற்றி ஒருவர் பேசப்போனால் அவர் பேசும் சொற்களை மாணவர்கள் காதில் விழுந்திருக்குமா என்றால் சந்தேகம்தான். ஆனால் இன்று மாணவர்கள் சார்பிலோ அல்லது கல்லூரி நிர்வாகத்தின் சார்பிலோ, விவசாயிகளையும், விவசாய ஆர்வலர்களையும் கல்லூரிக்கு அழைத்து வந்து பேச வைக்கிறார்கள். அப்படி, ஒரு விவசாய ஆர்வலர் ஒரு கல்லூரியில் ஆற்றிய உரை, அக்கல்லூரி மாணவர்களை ஒரு குழுவாக உருவாக்கி ஒரு கிராமத்தை தத்தெடுக்க வைக்கும் அளவுக்குக் கொண்டு போயிருக்கிறது. இன்று மாணவர்கள் மத்தியில் விவசாயத்தைப் பற்றிய ஆர்வமும், புரிதலும் பெருகி, விவசாயம் காப்பாற்றப்படும் திசையில் சென்று கொண்டிருக்கிறது என்பதை நிரூபித்திருக்கிறது.

ஜனவரி மாதம் பொங்கல் சிறப்பு விழாவுக்காக அழைக்கப்பட்டிருக்கிறார், அந்த விவசாய ஆர்வலர். ஜல்லிக்கட்டுப் போராட்டத்தை ஆரம்பித்ததில் தானும் ஒருவனாக இருந்தவர். நாட்டு மாடுகளைக் காப்பதற்காக தனி ஒரு ஆராய்ச்சிப் பண்ணையை தொடங்கியவர். எங்கே இயற்கை விவசாயம், நாட்டு மாடுகள் பற்றி பேச அழைத்தாலும் உடனே சம்மதிப்பவர். அந்தக் கல்லூரி மாணவர்களும் இவரின் வருகையை எதிர்பார்த்து இருந்த நேரம் மைக்கை பிடிக்கிறார், அந்த விவசாய ஆர்வலர். அவர்தான் காங்கேயம் கால்நடை ஆராய்ச்சி மையத்தின் நிறுவனர் கார்த்திகேய சிவசேனாதிபதி. மைக்கை பிடித்ததும் மாணவர்களின் கரகோஷம் அரங்கினை அதிர வைக்கிறது.

மைக்கினை பிடித்தவர், ஒரு மணிநேரத்திற்கும் மேலாக இயற்கை விவசாயம், நாட்டு மாடுகளைக் காப்பதன் அவசியம், விவசாயிகள் தற்கொலை என்பது உள்ளிட்ட கருத்துக்களில் தனது பேச்சை முடிக்கிறார். மாணவர்களும் வழக்கம்போல பேச்சைக் கேட்டுவிட்டு கலைந்து செல்கிறார்கள். இவரும் உரையை முடித்துக்க்ண்டு கல்லூரியிலிருந்து வீட்டிற்கு வந்துவிடுகிறார். ஒரு கல்லூரிக்கு பேசச் சென்றால் இதுதான் வழக்கம்போல நடக்கும். அதன்பின்னர் தான் செல்லும் கல்லூரியிலிருந்து மாணவர்கள் வந்து யோசனை கேட்டால் தனது பண்ணையை காண்பித்து விளக்குவார். ஆனால் பொங்கல் தினத்தன்று அந்தத் தனியார் கல்லூரியில் இவர் பேசிய பேச்சைக் கேட்டு இவரால் பல மாணவர்கள் ஈர்க்கப்பட்டது அப்போது சிவசேனாதிபதிக்கு தெரியாது. திடீரென அக்கல்லூரியிலிருந்து ஒரு மாணவி கிளம்பி இவர் ஆராய்ச்சி மையத்துக்கு வருகிறார். இவரும் வழக்கம்போல வரும் மாணவர்கள் போலத்தான் என எண்ணி அந்த மாணவிக்குப் பண்ணையை சுற்றிக் காட்டுகிறார். ஆனால், அதன் பின்னர், அந்தக் கல்லூரி மாணவி சொல்லும் ஒவ்வொரு விஷயமும் சேனாதிபதியை வியக்க வைத்தது. அதைத் தனது வலைப்பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.

கார்த்திகேய சிவசேனாதிபதியுடன் ஶ்ரீதேவிகா

சேனாதிபதி சொன்ன மாணவி ஶ்ரீதேவிகாவிடம் பேசினோம். அவர் சொன்ன விஷயம் இதுதான் "ஐயா, நான் ஒரு விவசாய குடும்பத்தை சேர்ந்த பெண். அரசுப் பள்ளியில் படித்து மெரிட்டில் கல்லூரியில் சேர்ந்தேன். தற்போது இரண்டாம் ஆண்டு படித்து வருகிறேன். நீங்கள் கல்லூரிக்கு வந்து பேசிவிட்டு சென்ற பின்னர், எங்கள் மாணவர்கள் மத்தியில் ஒரு விவசாய தூண்டுதல் உருவானது. அதன் பிறகு மாணவர்கள் சேர்ந்து ஒரு குழுவாக இருக்கிறோம். என் பெற்றோர்களும் செயற்கை விவசாயம்தான் செய்கிறார்கள். இனி என் தோட்டத்தில் இயற்கை விவசாயம் செய்யப் போகிறோம். எங்கள் குழு மூலம் ஒரு முடிவெடுத்துள்ளோம். ஒரு கிராமத்தை தத்தெடுத்து அந்தக் கிராமத்தில் விவசாயிகளுக்கு இயற்கை விவசாயத்தைப் பற்றிய புரிதலை கற்றுக் கொடுக்க வேண்டும்.

விவசாயத்துக்கு ஆதாரமான நிலத்தடி நீரை எப்படி உயரச் செய்வது, நாட்டு மாடுகள் வளர்ப்பு என விவசாயத்தில் தரம் உயர்த்தி முன்மாதிரி கிராமமாக மாற்ற வேண்டும். இதற்காக நீங்கள் மாணவர்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். தத்தெடுக்கும் கிராமத்தில் மக்களின் மனநிலை தன் மகன் டாக்டர், இஞ்சினியர் ஏன் படிக்க வைக்க வேண்டும் என எண்ணங்களை மாற்றி விவசாயத்தின் பக்கம் திருப்ப வேண்டும். இப்போது தேர்வு நடந்து கொண்டுள்ளதால் திட்டத்தை ஒத்தி வைத்திருக்கிறோம். தேர்வு முடிந்தபின்னர் அதற்கான முழு வேலைகளில் மாணவர்கள் குழு ஈடுபடும். இந்தக் குழுவுக்கு 'நம்மாழ்வார் குழு' எனப் பெயரிட்டுள்ளோம். விவசாயத்தை எப்படியாவது காப்பாற்ற வேண்டும்" என்றார்.

இறுதியாகக் கார்த்திகேய சிவசேனாதிபதியிடம் பேசினோம். "பொதுவாக நான் கல்லூரிக்கு சென்று பேசும்போது மாணவர்கள் என் பேச்சை கேட்டு ரசிப்பார்கள். ஆனால், ஶ்ரீதேவிகா நேரடியாக ஆராய்ச்சி மையத்துக்கே கிளம்பி வந்துவிட்டார். அந்த மாணவி சொன்ன விஷயம் நல்ல திட்டம். அதனை முழுமையாக நிறைவேற்றுங்கள் எனச் சொல்லி அனுப்பியுள்ளேன்" என்றார்.

வளரட்டும் விவசாயம்! வாழட்டும் விவசாயி!

- துரை.நாகராஜன்.


டிரெண்டிங் @ விகடன்