Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

வீட்டுக்கொரு ஆலமரம் அந்தக்காலம்... ஊருக்கு ஒன்றாவது இன்று இருக்கிறதா!?

நிழல் தரும் ஆலமரம்தான்

மரங்களில் மிகவும் சிறப்பு வாய்ந்த தன்மை உடைய மரம் ஆலமரம். அகலமான உருவ அமைப்பு கொண்ட அகல்மரம், பின்னர் பெயர் மருவி ஆலமரம் என பெயர் பெற்றது. 1980-1990-களில் வெளிவந்த தமிழ்த் திரைப்படங்களில், பஞ்சாயத்தில் தீர்ப்பு சொல்லும் நாட்டாமையும், சொம்பும் கூடவே ஆலமரமும் மிஸ் ஆகாத விஷயங்கள். பஞ்சாயத்து என்றாலே ஆலமரங்கள் நிழலில் நடைபெறுவதாகத்தான் அப்போதைய சினிமாவில் காட்டப்படும். இதற்கும் நம்முன்னோர் காரணம் வைத்திருந்தனர். ஆலமர நிழலில் அமரும் மக்கள் உணர்ச்சிவசப்படாமல் இருப்பார்கள் என்பதை அறிந்துதான் ஆலமரத்து நிழலில் பஞ்சாயத்துகளை நடத்தினர். அரசமரத்தை போன்றே ஆலமரத்திற்கும் அதிக மருத்துவ குணங்கள் உண்டு. இந்த ஆலமரம் நூறு ஆண்டுகளுக்கும் மேல் வளரும் தன்மையுடையது. 'ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி என்ற வாசகம் பிரபலம். கருவேல மரத்தின் குச்சிகளாலும், ஆலமரத்தின் குச்சிகளாலும் பல்லை துலக்கும்போது பல்லின் ஈறுகள் அனைத்தும் வலிமை பெறுகின்றன. ஆலங்குச்சியில் இருந்து வரும் பாலில் ஒருவித துவர்ப்புத்தன்மை இருக்கும். இந்த பால்தான் பல்லுக்கு தேவையான சக்தியை அளிக்கிறது. இதுதவிர, ஆலமரத்தில் வேர் முதல் மரத்தின் நுனி வரை வரை மருத்துவ குணங்கள் நிறைந்தது.

விழுதுகளுடன் கம்பீரமான ஆலமரம்

பழங்காலத்தில் நாட்டை ஆண்ட அரசர்கள் ஆலமரம், அரச மரம், புங்கை மரம் ஆகியவற்றை சாலை ஓரங்களிலும், ஊர் எல்லைகளிலும் நட்டு வளர்த்தனர். அதன் பயனைத்தான் இன்று நாம் அனுபவித்து வருகிறோம். பல தலைமுறைகளைக் கடந்து காட்சி தரும் மரங்களில் ஆலமரத்துக்கு தனி கம்பீரம் உண்டு. அகன்ற ஒரு ஆலமரத்தை கிளைகளிலிருந்து விழுதுகள் தரையில் ஊன்றி மரத்திற்கு தாங்கும். விழுதுகள் தாங்கிய ஆலமரத்தை எவ்வளவு பெரிய புயல்கள் தாக்கினாலும் சாயாத உறுதியை கொண்டது. அதனால்தான் என்னவோ அனைத்து பறவைகளும் அதில் தஞ்சமடைகின்றன. இந்தியாவின் தேசிய மரமும் இந்த ஆலமரம்தான். இந்த ஆலமரம் ஒரு கூட்டுக்குடும்பம் என்றும் சொல்லலாம். காகம், கிளிகள், குருவிகள், மைனா என பல இனங்களைச் சேர்ந்த பறவைகள் அனைத்தும் ஒரே நேரத்தில் தஞ்சம் அடையும் மரமும் ஆலமரம்தான். வேறு எந்த மர வகைகளிலும் அனைத்து பறவைகளும் குடியிருக்காது. இதற்கு ஆலமரங்களில் இருக்கும் பழங்களும் காரணம். ஆலமரத்துபழம் அனைத்து பறவைகளும் விரும்பி உண்ன ஏற்றது.  

இதுதவிர, சில ஆண்டுகளுக்கு முன்பு வரை, பத்து ஏக்கர் விவசாய நிலம் வைத்திருந்தால் வயலுக்கு நடுவில் ஆலமரம் நிச்சயம் இருக்கும். அந்த வயலில் வேலை செய்வோர் மதிய உணவை முடித்துவிட்டு மரத்தடி நிழலில் ஓய்வெடுப்பர். பணியாட்கள் இதன் நிழலில் சிறிதுநேரம் ஓய்வெடுத்தாலே களைப்பு தீர்ந்து மறுபடியும் வேலையில் தீவிரம் காட்டத் தொடங்கி விடுவர். வழிப்போக்கர்களும் ஆலமர நிழலை தஞ்சம் அடைந்து களைப்பு தீர்ந்த பின்னர் தங்கள் பயணத்தை மேற்கொள்வர். இன்று வயல்கள் அனைத்தும் காய்ந்து கிடக்கின்றன, வயலின் ஊடாக இருந்த ஆலமரமும் தூக்கி எறியப்பட்டு விட்டது. முன் காலத்தில் வீட்டுக்கு ஒரு ஆலமரம் என்ற எண்ணிக்கையில் இருந்தது. அதன்பிறகு தெருவுக்கு ஒன்று, ஊருக்கு ஒன்று என்று எண்ணிக்கை குறைந்து விட்டன. இன்றைய நிலையில் 6 முதல் 8 கிராமங்களுக்கு ஒன்று என்ற எண்ணிக்கையில் ஆலமரங்கள் காணப்படுகின்றன. சிறுவர்கள் விழுதுகளில் ஊஞ்சல் விளையாடி மகிழ்வதும் இந்த ஆலமரத்தில்தான்.

கம்பீரமான தோற்றத்தில் ஆலமரம்

ஆலமரத்திற்கு கன்று தனியாக நட்டு வளர்க்க வேண்டிய அவசியமில்லை. பறவைகள் உண்ணும் பழத்தின் விதைகள் எச்சத்தின் மூலமாக வெளிப்பட்டு தானாக ஆலமரம் முளைக்கும். அப்படி முளைக்கும் இந்த மரக்கன்றுகள் சற்று உயரமாக வளரும் வரை அவற்றுக்கு ஈரப்பதம் தேவை.அதன் பின்னர் இது வறட்சியை தாக்கி வளரும் தன்மை கொண்டது. இன்று பல்வேறு இடங்களில் ஆலமரங்கள் பாதுகாக்கப்படுகிறது. இதில் சற்று முக்கியமானது 'அடையாறு' ஆலமரம். கடந்த 450 ஆண்டுகளாக பாதுகாக்கப்பட்டு வருகிறது. இன்றைய சூழலில் பழங்காலம் தொட்டு பாரம்பர்யமாக கருதி வரும் ஆலமரங்கள் நாம் காக்க வேண்டிய பொக்கிஷங்கள்தான். காட்டை அழிக்கும் சாமியார்கள் இங்கு மரம் நட்டு வளர்ப்பார்கள் என நினைப்பதை தவிர்த்து, நன்மை தரும் அனைத்து மரங்களையும் பாதுகாப்பதும் நமது கடமைதான் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

- துரை.நாகராஜன்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close