Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நீரா பானத்தின் பலன்கள் என்ன? #BenefitsOfNeera

நீரா

மிழகத்தில் மார்ச் 1-ம் தேதி முதல் பெப்சி, கோக் ஆகிய வெளிநாட்டு குளிர்பானங்களை விற்பதில்லை என வணிகர் சங்கம் அறிவித்தது. இதற்கு மாற்றாக காளிமார்க் நிறுவனத்தின் பவண்டோ, டொரினோ போன்ற உள்ளூர் தயாரிப்புகளை வாங்கி பயனடையுங்கள் என செய்திகளும் வாட்ஸ் ஆப்பில் வலம் வருகிறது. நாளாக நாளாக தமிழ்நாட்டில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்துகொண்டே போகிறது. இதனால் விவசாயத்துக்கு தண்ணீர் இல்லாமல் வறட்சியால் நிலங்கள் தரிசாக கிடக்கின்றன. நம்முடைய ஆற்றுத் தண்ணீரை எடுத்து அதிக விலைக்கு விற்கும் அந்நிய நாட்டு குளிர்பானத்துக்கு பணம் செலவு செய்யக் கூடாது என எண்ணும் உங்களுக்கு ஒரு சபாஷ். ஆனால், மற்ற குளிர்பான நிறுவனங்களும் தான் நமது நிலத்தடி நீர்வளத்தை உறிஞ்சுகின்றன என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். இதற்கு மாற்று இளநீர்தான் என்று சொன்னால் குளிர்பானம் போல எங்கும் எடுத்துக் கொண்டு போக முடியாது என திரும்ப கேள்வி கேட்கலாம். உங்களுக்காகவே எங்கும் எளிதில் பயன்படுத்தக்கூடிய குளிர்பானங்களுக்கு மாற்றாக 'நீரா' எனப்படும் 'தென்னங்கள்' பதப்படுத்தி கேரளாவில் விற்பனை செய்யப்படுகிறது. இது கேரளாவில் மட்டுமல்ல, இனி தமிழகத்திலும் விற்க விரைவில் அனுமதி கிடைக்கபோகிறது.

தென்னை மரங்களில் இருந்து இறக்கப்படும் ஒருவகைப் பானம்தான் 'நீரா'. வழக்கமாக தென்னை மர பாளையை சீவி அதில் உள்பக்கம் சுண்ணாம்பு பூசப்பட்ட மண்கலயங்களை பொருத்தி கட்டி வைத்து 12 மணிநேரம் காத்திருந்தால் கிடைக்கும் பானம் பதநீர். உடலுக்கு குளுமைத் தரக்கூடிய குளுமையான பானம் இது. பாளைகளில் சுரக்கும் இந்த பதநீரை காய்ச்சி கருப்பட்டி, கற்கண்டு போன்ற இனிப்பு பொருட்களை உற்பத்தி செய்யலாம். இது காலம் காலமாக இங்கு நடைபெற்று வரும் குலத்தொழில். அதேபோல், தென்னையில் இருந்து இறக்கப்படும் மற்றொரு பானம் கள். இதை சாப்பிட்டால் போதை ஏறும். சுண்ணாம்பு பூசாப்படாத மண்கலயத்தை பாளைகளில் கட்டிவிட்டால் அதில் சுரக்கும் பானம் தான் கள்.

நீரா பதப்படுத்தி விற்பனை

தமிழ்நாட்டில் தென்னை,பனை மரங்களில் இருந்து கள் இறக்கவும், விற்பனை செய்யவும் தடை உள்ளது. சரி, விஷயத்துக்கு வருவோம்  பதநீர், கள் இரண்டும் சரி. நீரா என்றால் என்ன? தென்னை மரத்தில் இருந்து அதை எப்படி இறக்குவது? என்கிற உங்கள் சந்தேகம் புரிகிறது.
அதற்கான பதிலை விரிவாக சொல்கிறார், தமிழ்நாடு விவசாயிகள் விழிப்பு உணர்வு இயக்கத்தின் மாநிலத்தலைவர், அக்ரி வேலாயுதம். தமிழ்நாட்டில் நீரா இறக்கவும், அதை விற்பனை செய்யவும் அனுமதி கேட்டு பல ஆண்டுகளாக போராடி வரும் பலரில் இவர் முக்கியமானவர்.

‘‘ நீரா என்பது பதநீருக்கும் கள்ளுக்கும் இடைப்பட்ட பானம். இது கடந்த மூன்று ஆன்டுகளாக கேரளாவில் சக்கை போடு போட்டு வருகிறது. சாப்பிட்டவுடன் புத்துணர்வு கொடுக்கும் குளுகுளு பானமான நீராவை, குழந்தைகள் முதல் பெரியவர் வரை விரும்பி பருகி வருகிறார்கள்.
நீராவை பதநீர் இறக்குவது போல இறக்கமுடியாது. 5டிகிரி செல்சியஸ் குளுமையில்தான் அது எப்போதும் இருக்கவேண்டும். அதாவது சீவப்பட்ட தென்னம் பாளைகளில் அதற்கென்று வடிவமைக்கப்பட்ட பானை வடிவ ஐஸ்பெட்டி களை பொருத்தி கட்டிவைக்கவேண்டும். ஐஸ் பானைகளில் சேகரமாகும் நீராவை இறக்கி, தயாராக உள்ள ப்ரீஸர் பொருத்தப்பட்ட வேனில் ஏற்றி, கூலிங் சென்டர் எனப்படும் குளுகுளு சேகரிப்பு மையங்களுக்கு கொண்டு சென்று அங்குள்ள டேங்கரில் நிரப்ப வேண்டும். பிறகு அதை பாட்டிலில் அடைத்து ப்ரீஸர் பொருத்தப்பட்ட மினிவேன் மூலம் ஏற்றி சென்று, அந்தப்பாட்டில்களை கடைகளில் விற்பனைக்கு விநியோகம் செய்யலாம். கண்டிப்பாக ஐஸ்பெட்டி எனப்படும் குளுகுளு பெட்டிகள் உள்ள கடைகளில்தான் இதை இருப்பு வைத்து விற்கமுடியும். 3 மாதங்கள் வரை இருப்பு வைத்து விற்பனை செய்யலாம்.

நீரா பதப்படுத்துதல்

ஒரு தென்னை மரத்தில் இருந்து நாள் ஒன்றுக்கு 5 லிட்டர் நீரா இறக்கமுடியும். ஒரு மரத்தில் இருந்து 6 மாதங்கள் தொடர்ந்து நீரா இறக்கி விற்கலாம். கேரளா மாநிலத்தில் விவசாயி ஒருவர் ஆண்டுக்கு 25 மரங்களில் மட்டும் நீரா இறக்கி விற்க அந்த மாநில அரசு அனுமதி கொடுத்துள்ளது. 50 மரங்களுக்கு அதிகமாக வைத்துள்ள விவசாயிகள் சுழற்சி முறையில் ஆண்டு முழுவதும் நீரா இறக்க முடியும். தமிழ்நாட்டிலும் கேரளா முறையை நடை முறைப்படுத்தினால் அனைத்து விவசாயிகளும் பயன் பெறுவார்கள். தேங்காய் விலை வீழ்ச்சியும் குறையும்.

மேலும் நீராவில் இருந்து மதிப்புக்கூட்டிய பொருளாக சர்க்கரை, சாக்லெட், பிஸ்கட் போன்ற பொருட்களையும் உற்பத்தி செய்து தென்னை விவசாயிகள் கூடுதல் லாபம் பெறமுடியும். பன்னாட்டு கம்பெனி பானங்களுக்கு போட்டியாக கேரளாவில் தூள் கிளப்பிவரும் நீரா. தமிழ்நாட்டிற்கு வரப்போகிறது ஜோரா... இதனால் பலாயிரம் தென்னை விவசாயிகள் வளம் பெறுவார்கள். ஒரு தென்னைக்கு வருடத்திற்கு ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்கும். ஆனால் இந்த நீரா பானத்தால் விவசாயி ஒரு தென்னைக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வரை சம்பாதிக்கலாம்" என்கிறார் வேலாயுதம்.

கொச்சியில் இயங்கும் மத்திய தென்னை வளர்ச்சி வாரியம்..கடந்த பல ஆண்டுகளாக நீரா இறக்கும் பயிற்சி, பதப்படுத்தும் தொழில்நுட்ப கல்வி, அதை மதிப்புக்கூட்டிய பொருளாக மாற்றுவது எப்படி? என்பது போன்ற களப் பயிற்சிப்பட்டறைகளை ஊக்கத்தொகையுடன் கொடுத்து வருகிறது. இதில் தமிழ்நாட்டு விவசாயிகள் பல நூறுபேர் கலந்து கொண்டு பயிற்சி பெற்றுள்ளார்கள் என்பது குறிப்பிடதக்கது.

எது எப்படியோ...வறட்சி, விலை வீழ்ச்சி போன்ற காரணங்களினால் கவலையில் இருக்கும் விவசாயிகளுக்கும் நீரா புத்துணர்வு கொடுக்கும் என்று நம்புவோம்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement