விடுமுறைக்கான தோழன்..! அரசுப் பள்ளியின் ‘செம’ ஐடியா

’’பள்ளிக்கூடம் லீவு விட்டாச்சு. இனி ஜாலிதான்’’னு எல்லா மாணவர்களும் ஜாலி மூடில் இருக்க.. விருதுநகர் மாவட்டம் சத்திரரெட்டியாபட்டி, அரசுமேல்நிலைப்பள்ளி மாணவர்களில் 100 பேருக்கு மரக்கன்றுகளை கொடுத்து விடுமுறையில் தண்ணீர் ஊற்றி பராமரித்து பள்ளிக்கு வரும்போது பத்திரமாகக் கொண்டுவந்து நடச் சொல்லி விடுமுறையில் மரக்கன்று வளர்க்கும் பணியைக் கொடுத்திருக்கிறார் இப் பள்ளியின் தலைமையாசிரியர் மோகன்.

அரசுப் பள்ளி

பள்ளித்தலைமையாசிரியர் மோகனிடம் பேசினோம்,‘’ அமெரிக்காவில் வசிக்கிற தமிழர்களில் சுற்றுபுறச்சூழலில் அக்கறை கொண்டவர்கள் இணைந்து ’யுனேட்டட் தமிழ் பவுண்டேசன்’னு ஒரு அமைப்பை ஏற்படுத்தியிருக்காங்க. அதோட நோக்கமே மண், மரம், மழை ஆகியவற்றைக் பாதுகாக்கணும்னு என்பதுதான். அதாவது பாஸ்ட்புட் தவிர்த்து மண்ணில் விளையும் இயற்கை விவசாய உணவுப்பொருளை உண்ண ஊக்குவிப்பது, மரக்கன்றுகளை அதிகளவில் நடுவது, மழைநீரைச் சேமித்து வைப்பது இதுதான். இந்த அமைப்பு தமிழ்நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் மரக்கன்றுகளை நட்டு அதை மாணவர்களையே பராமரிக்கச் செய்யவேண்டும்னு பள்ளிகளில் மரம் வளர்க்கும் திட்டத்தை தொடங்கியிருக்காங்க. அதன்படி, விருதுநகர் மாவட்டத்தில் முதலில் எங்க பள்ளியிலதான் அமல்படுத்தணும்னு சொன்னாங்க. இந்த பவுண்டேசனின் உதவியோடு வனத்துறையிடமிருந்து 70 வேம்பு மற்றும் 30 புங்கன் என மொத்தம் 100 மரக்கன்றுகளை வாங்கி நடலாம்னு முடிவுசெய்தோம். ஆனால், ஏப்ரல் 21-ம் தேதியோட எல்லா மாணவர்களுக்கும் தேர்வு முடிஞ்சு லீவு விட்டுடுவோம்.. மரக்கன்றுகளை நடமுடியாது, அப்படியே நட்டாலும் நட்டவுடனே விடுற உயிர்நீரோட மாணவர்கள் வீட்டுக்குப் போயிடுவாங்க. ஒன்றரை மாசம் லீவு முடிஞ்சு ஜூன் மாதம் பள்ளிக்கூடம் தொறந்ததும் வந்துப்பார்த்தா நூற்றுக்கு நூற்று மரக்கன்றுகளும் ஒன்னுபோல பட்டுப்போயிருக்கும். அதனால பள்ளி ஆசிரியர்களிடம் பேசி ஒரு முடிவெடுத்தோம்.

எங்க பள்ளியில படிக்குற 6-ம் வகுப்பு, 8-ம் வகுப்பு மாணவ, மாணவிகள் 150 பேரில், விடுமுறைல அவரவர் சொந்த ஊருக்குப் போகும் மாணவர்கள் எண்ணிக்கையை கழிச்சுட்டு 100 மாணவ, மாணவிகளுக்கு ஆளுக்கு ஒரு மரக்கன்றை கொடுத்து, இந்த ஒன்றரை மாத லீவு நாட்கள்ல வீட்டுல வச்சு முறையாத் தண்ணீர் ஊற்றி பராமரிக்கணும். ஜூன் மாதாம் பள்ளிக்கூடத்துக்கு வந்ததும் அவரவர் மரக்கன்றுகளை பெஞ்சுகளில் அவரவர் பெயர் எழுதி ஒட்டியிருக்கும் இடத்துல அவரவர் மரக்கன்றுகளை வச்சிடணும். எத்தனை பேரோட மரக்கன்று உயரமாவும், செழுமையாவும் வளரந்திருக்கோ அத்தனை பேருக்கும் ஒரு பரிசுன்னு சொல்லியிருக்கோம். இந்த 100 மரக்கன்றுகள் வளர்க்குற பொறுப்பை எடுத்திருக்குற மாணவர்களின் வகுப்பாசிரியர், மூன்று நாளுக்கு ஒரு முறை மாணவரோட பெற்றோரின் போன் நம்பருக்கு போன் செய்து மாணவரிடம் பேசி, ’’தண்ணீர் ஊத்துனியா, கன்று எப்படி வளர்ந்துருக்குன்னு’’ கேட்பார்கள்.

7-ம்வகுப்பு மற்றும் 9-ம் வகுப்பு மாணவர்களிடம் இந்த லீவு நாட்கள்ல வீட்டுக்கு பக்கத்துல கிடைக்குற புங்கன், வேப்பமுத்து, வாதாங்கொட்டை, நாவல், கொடுக்காப்புளின்னு என்னென்ன விதைகள் கிடைக்குதோ அதை பாக்கெட் கவர்களில் மண்ணை நிரப்பி போட்டு முளைக்க வச்சு கொண்டுவரச் சொல்லியிருக்கோம். விதைபோட்டு வளர்த்துக் கொண்டுவரமுடியாதவர்கள் விதையைத் தேடி அலையாமல், கன்றுகளை வேரோட எடுத்து வளர்த்தும் கொண்டுவரலாம். இவர்களுக்கும் பரிசுன்னு சொல்லியிருக்கோம். லீவு நாட்கள்ல விளையாடினாலும் ஒரு மரக்கன்றை கொடுத்து முறையா தண்ணீர் ஊற்றி வளர்த்துடணும்னு சொல்லுறதுனால மாணவருக்கு ஒரு பொறுப்பு வந்துடும். ஜூன் மாசம் பள்ளிக்கூடம் ஆரம்பிச்சதும் அந்தந்த மரக்கன்றுகளை அந்தந்த மாணவர் கையாலயே குழி எடுத்து, நட்டு, பாத்தி கட்டி தினமும் தண்ணீர் ஊத்தி வளர்க்க சொல்லப்போறோம். அந்தந்த மரக்கன்றுக்கு அந்தந்த மாணவர் பெயரையே வைக்கப் போறோம்’.

மரக்கன்று

இந்த பவுண்டேசன் மாணவர் மூலம் மரம்வளர்ப்பு திட்டத்தை மாவட்டத்துல முதல்ல எங்க பள்ளியில துவங்குறதுக்கு பள்ளியிலேயே மாடித்தோட்டம் போட்டு பராமரிச்சதும் ஒரு காரணம். ஆறு மாசத்துக்கு முன்னால விருதுநகர் ஜே.சி.ஐ அமைப்போட இணைந்து ‘என்பள்ளி என்தோட்டம்’’ங்குற திட்டத்தின் படி, கீரைகளை எப்படி வளர்க்குதுன்னு 11-ம் வகுப்பு மாணவர்கள் 80 பேருக்கு பள்ளியிலேயே பயிற்சி கொடுத்து, செடிகள் வளர்க்கும் 80 பைகளில் தென்னை நார்க்கழிவு, மண்புழு உரம், மட்கிய சாணவுரம் ஆகியவற்றைக் கலந்து மாணவர்கள் கையாலயே நிரப்பச் சொல்லி அதில் பொன்னாங்கன்னி, கரிசலாங்கண்ணி, பசலை, முளைக்கீரை ஆகிய நாலு வகையான கீரை விதைகளை விதை போட்டு தினமும் காலையில வகுப்புக்குள்ள போறதுக்கு முன்னாலயும், மாலையில வகுப்பைவிட்டு வீட்டுக்கு போகும் போதும் என ரெண்டு தடவை தண்ணீர் ஊற்றி வளர்த்தாங்க. ஸ்டூடன்ஸ் கையாலயே மண் நிரப்பி, விதை போடச்சொல்லி , தண்ணீர் ஊத்தச் சொல்லி அந்தந்த செடிகளுக்கு அந்தந்த மாணவர்கள்தான் பொறுப்புன்னு சொன்னதுனால, தான் விதைச்ச கீரைவிதையை நல்லா வளர்க்கணும்னு எல்லா மாணவர்களுமே நல்லா வளர்த்தாங்க. இதுல சில மாணவர்கள் வீட்டுல இருந்து மட்கிய சாணத்தைக் கொண்டு வந்து போட்டும் வளர்த்தாங்க. ’’தாம் விதைத்த விதை கீரைகளாக வளர்ந்து வருகிறது’’ என்ற சந்தோசமும், இயற்கை விவசாயத்தின் மீது ஆர்வமும் நம்பிக்கையும் வந்துச்சு, இதுல, சரியாக விதை வளராவிட்டா மாணவர்களுக்கு வருத்தம் வந்துடக்கூடாதுன்னு மீண்டும் விதை விதைக்க கூடுதலாக விதைகள் வச்சிருந்தோம். ஆனா, எல்லா விதைகளும் முளைச்சு மாணவர்களுக்கு நல்ல மகசூலை கொடுத்துச்சு.

கீரை விதைதூவிய, 35 முதல் 40 நாட்களில் முழுமையாக வளர்ந்து அறுவடை நிலைக்கு வந்ததும், அவரவர் பைகளில் வளர்த்த கீரைகளை அவரவர் கையாலயே அறுவடை செய்யச் சொன்னோம். அறுவடை செய்த கீரைகளை என்னாப்பா செய்யலாம்னு மாணவர்களிடமே கேட்டதும், ‘’சத்துணவு சாம்பார் குழம்புல போட்டு எல்லாருமே கீரைக்குழம்பா சாப்பிடலாம் சார்’’னு மாணவர்களே சொன்னதுதான் ஆசிரியர்கள் எல்லாருக்கும் சந்தோசத்தை ஏற்படுத்துச்சு.

மாணவர்களோட ஆசைப்படியே ஒரு நாளுக்கு 5 பேர் வீதம் அறுவடை செய்யச் சொல்லி ஒருநாள் விட்டு ஒருநாள் என்ற கணக்கில் 16 நாளுக்கு அறுவடை செய்து சத்துணவு சாம்பார் குழம்பில் சேர்த்து மாணவர்களுக்கு பரிமாறினோம். இந்த 16 நாளும் பள்ளிக்கூடத்துல கீரைசாம்பார்தான். காய்கறி விதைகளைக் கொடுத்தால் பறிப்புக்கு வர குறைந்தது 65 நாட்கள் ஆகும். மேலும், மாணவர்களுக்கு இயற்கை விவசாயத்தைப் பற்றி எளிதா புரிஞ்சுக்கணும்னுதான் 35 - 40 நாட்கள்ல பறிப்புக்கு வர்ற கீரைகளை விதைக்க சொன்னோம். இதுலயே இயற்கை விவசாயத்து மேல மாணவர்களுக்கு முழு நம்பிக்கை வந்துடுச்சு. இதே கீரைத்தோட்டத்தை திரும்பவும் ஜூன் மாதம் ஆரம்பிக்கப் போகிறோம். இந்த விசயம் எல்லாப் பள்ளிகளுக்கும் தெரிஞ்சு பின்பற்ற ஆரம்பிச்சாங்க.

’’ஒரு நல்ல மாணவனுக்கு அடையாளம் மரக்கன்று நடுவது மட்டுமல்ல.. அதை வளர்த்துக்காட்டுவது..’’ இதுதான் எல்லா மாணவரிடமும் ஆசிரியர்கள் அடிக்கடி சொல்லும் வரிகள். ஒவ்வொரு மாணவரும் ஒவ்வொரு வருடத்திலும் வீட்டில் ஒரு மரமும், பள்ளியில் ஒரு மரக்கன்றும் நட்டு பராமரித்தாலே போதும். வறட்சி ஓடிடும். பசுமை படர்ந்துவிடும் ’’ என்று சொன்னபடியே மாணவர்களிடம் ஒவ்வொரு மரக்கன்றையும் பத்திரமாக கொடுக்கத் தொடங்கினார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!