பறவைகளுக்கும் அடைக்கலம்... பள்ளி வளாகமே காடு போல் ஆன அதிசயம்!

அரசுப் பள்ளி

மேலும் படங்களுக்கு


 பல அரசு பள்ளிகள் மாணவர்களுக்கே 'அடைக்கலம்' தருவதில்லை. ஆனால்,கரூர் மாவட்டம்,கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்தில் உள்ள மேட்டாங்கிணம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியோ,மாணவர்களோடு சேர்த்து எண்ணற்ற பறவைகளுக்கும் அடைக்கலம் கொடுக்கிறது. பள்ளி வளாகத்திலும்,ஊரிலும் ஐநூறுக்கும் மேற்பட்ட மரங்களை வளர்த்து காடுபோல் மாற்றி வைத்திருக்கிறார்கள். அந்த மரங்களில் தேன்சிட்டு,காக்கை,குருவிகள்,பருந்து என்று ஐம்பதுக்கும் மேற்பட்ட பறவைகள் கூடு கட்டி 'வாழ' இடம் கொடுத்திருக்கிறார்கள் அந்த பள்ளி ஆசிரியர்களும்,மாணவர்களும். பகலானால் பள்ளி மாணவர்கள் பாடம் படிக்கவும்,இரவானால் பறவைகள் பள்ளி வளாகத்தில் தாங்கள் கட்டிய கூடுகளில் தங்கவும் ஏதுவாக மாற்றி இருக்கிறார்கள். பள்ளி வளாகமே காடு போல் நூற்றுக்கும் மேற்பட்ட மரங்களால் சூழப்பட்டதால்,கூழைக்கடா பறவை,தேவாங்கு போன்ற அரிய உயினம் எல்லாம் பள்ளி வளாகத்திற்கு வந்து போகும் அளவிற்கு,பள்ளியிலும் பள்ளிக்கு வெளியிலும் 'எங்கும் பச்சை எதிலும் பச்சை' என்று மரங்களை வளர்த்தெடுத்திருக்கிறார்கள். இங்கே உள்ள பறவைகள் சிரமபடக்கூடாது என்பதற்காக,தீபாவளி விழாவின்போது ஊரில் யாரும் வெடிகள் வெடிப்பதில்லை. பள்ளிக்கு அருகே யாரும் மைக்செட் கட்டி அதிக ஒலியில் அலறவிடுவதில்லை. 

 அந்த பள்ளிக்கே சென்றோம். இந்த மாற்றத்திற்கு காரணகர்த்தாவான அந்த பள்ளி ஆசிரியர் கந்தசாமியிடம் பேசினோம்.
 "நான் இந்த பள்ளிக்கு 2009ல் பணிக்கு வந்தேன். அப்போ,இந்த பள்ளி வளாகமே ஒரு மரமும் இல்லாமல்,கட்டிடக்காடா மட்டும் இருந்துச்சு. மாணவர்கள் மைதானத்தில் விளையாடிவிட்டு நிழலுக்கு ஒதுங்ககூட ஒரு மரமும் இல்லை. அப்போதான்,எங்க பள்ளிக்கு தலைமை ஆசிரியையா மல்லிகா டீச்சர் வந்தார். அவர் அனுமதியோடு பள்ளி வளாகம் முழுக்க வேம்பு,புங்கை,அரச மரம்ன்னு பத்துக்கும் மேற்பட்ட நாட்டு வகை மரக்கன்றுகள் நூற்றுக்கணக்கானவற்றை மாணவர்களின் உதவியோடு நட்டு வளர்த்தோம்.

ஆரம்பத்தில்,மாணவர்கள்,'அந்த மரக்கன்றுகளுக்கு தண்ணீர் ஊற்ற சொல்கிறார்களே'ன்னு கோபபட்டாங்க. 'மரங்கள் இல்லைன்னா,மழை இல்லை. மழை இல்லைன்னா,மனித இனமே இல்லை'ன்னு முதன்மை பாடமா ஒவ்வொரு வகுப்பின் முன்னாடி ஒரு பத்து நிமிடம் எல்லா கிளாஸ் மாணவர்களுக்கும் மரத்தின் முக்கியத்துவம் பற்றி எங்க தலைமை ஆசிரியை பாடம் எடுக்க சொன்னாங்க. அப்படி ஆறு மாதகாலம் செஞ்சோம். அதன்பிறகு,மாணவர்கள் ஆர்வமாகி,சனி,ஞாயிறு,தேர்வு விடுமுறைன்னு எல்லா நாளும் மரக்கன்றுகளுக்கு தண்ணீர் ஊற்றினார்கள். விளைவு,பள்ளி வளாகத்தில் இப்போ 110 மரங்கள் இருக்கின்றன. அதேபோல,பள்ளி வளாகத்திற்கு வெளியே,பக்கவாட்டிலும் மரக்கன்றுகள் வைத்து வளர்த்தோம். அப்புறம்,ஊரின் முக்கிய இடங்களிலும்,எங்க ஊரில் இருந்து பக்கத்தில் உள்ள அண்ணாநகர்ங்கிற ஊர் பாதையிலும்,அரவனாம்பேட்டைங்கிற ஊருக்கு போற பாதையிலும் இருபுறமும் மரக்கன்றுகள் வைத்தோம். மாணவர்களின் ஆர்வத்தை பார்த்து அந்த மரக்கன்றுகளை வளர்த்தெடுப்பதில் ஊர்மக்களும் சேர்ந்து முனைப்பா செயல்பட்டாங்க. 

மரம்

மேலும் படங்களுக்கு

 இப்படி இருக்கையில்,2013 ம் வருஷம் தேன்சிட்டு ஒன்று எங்க பள்ளி வளாகத்தில் கூடு கட்டி இருந்திச்சு. அதை ஒரு பையன் பிச்சு எறிஞ்சுட்டான். நான் அதை கேள்விப்பட்டதும்,அவனை அழைத்து,'நாம சில நூறு மரங்களை வளர்க்கவே இந்த பாடு பட்டோமே. ஆனா,பறவைங்க ஈஸியா பல லட்சம் மரங்கள் உள்ள காட்டை உருவாக்கும். பறவைங்க மனித இனத்தின் நண்பர்கள். உன் வீட்டை யாரேனும் உடைச்சா,உன் மனசு என்ன பாடுபடும். அந்த சிறிய பறவை தனது முழு ஆற்றலையும் பயன்படுத்தி கஷ்டப்பட்டு கட்டிய அதன் வீடான கூட்டை இப்படி பிச்சு எறிஞ்சுட்டியே'ன்னு சொன்னதும்,அவனுக்கு சங்கடமா போயிட்டு. அதன்பிறகு,எந்த மாணவனும் இங்கு பறவைகளை டிஸ்டர்ப் பண்றதில்லை. இதன்விளைவாக,தேன்சிட்டு மட்டுமின்றி,பல்வேறு வகை குருவிகள்,காக்கை,பருந்துன்னு இங்க வந்து கூடுகள் கட்ட ஆரம்பிச்சு. இப்போ,ஐம்பதுக்கும் மேற்பட்ட கூடுகள் இருக்கின்றன. காலை எட்டு மணிக்கு கூட்டை விட்டு போகும் பறவைகள் இரவு ஐந்தரை மணிபோல கூட்டுக்கு திரும்பும். இதனால்,மாணவர்கள் பள்ளி வளாகத்தில் அங்கங்கே சின்ன சின்ன பாத்திரங்களில் அந்த பறவைகள் குடிக்க தண்ணீர் வைத்தார்கள். அப்படியே,வீட்டில் இருந்து எடுத்து வரும் நெல்மணிகள், பழங்கள்,காய்கறிகள் உள்ளிட்ட பறவைகள் சாப்பிடும் உணவுகளை அங்கங்கே திண்டுகளில் வைத்துவிடுவார்கள். மாலை கூடு திரும்பும் பறவைகள் அதை உண்ணும். இல்லைன்னா,தங்கள் குஞ்சுகளுக்கு அவற்றை எடுத்து கொடுக்கும். எங்க பள்ளி வளாகம் முழுக்க ஒரே பறவை எச்சமாக விழுந்து கிடக்கும். அது நாங்கள் வைக்கும் மரக்கன்றுகள் செழித்து வளர நல்ல உரமா இருக்கு. இப்படி பறவைகளுக்கு இடம் கொடுக்கும் பள்ளியா எங்க பள்ளியை மாத்திட்டதால்,பள்ளி வளாகத்தில் தேவையில்லாத இரைச்சலையோ,ரேடியோ முதலான ஒலி தரும் விசயங்களையோ,தீபாவளிக்கு வெடி வெடிப்பதையோ எங்க பள்ளி மாணவர்கள் கடந்த மூன்று வருஷமா தவிர்த்துட்டாங்க.
 காடுபோல் எங்க பள்ளி வளாகம் இருப்பதால்,கூழைக்கடாங்கிற அரிய பறவை எங்கிருந்தோ எங்க பள்ளிக்கு வந்து அடிப்பட்டு உயிருக்கு போராடிக்கிட்டு கிடந்துச்சு. அதை மாணவர்களே எடுத்து மருந்து போட்டு காப்பாத்தி,ஒரு வாரம் பள்ளி வளாகத்திலேயே வைத்து வளர்த்து,வனத்துறையிடம் கொடுத்தார்கள். அதேபோல்,தேவாங்குகுங்கிற அரிய உயிரினம் எங்கிருந்தோ வந்து எங்க பள்ளி வளாகத்திற்குள் நுழைஞ்சுட்டு. அதுக்கும் மாணவர்கள் வாழைப்பழம்,தண்ணீர்ன்னு கொடுத்து உபசரிச்சாங்க. மூன்று நாட்கள் எங்க பள்ளி வளாகத்திலேயே தங்கி இருந்த அந்த தேவாங்கு,அப்புறம் எங்கேயோ போயிட்டு. இப்படி பல அரிய பறவைகளும்,உயிரினங்களும் எங்க பள்ளிக்கு வந்துட்டு போயிருக்குங்க. இன்னும் அதிக மரங்கள் வளர்த்து,அதிக பறவைகளுக்கு வாழ்விடமும்,உணவும் தரணுமுன்ன்னு ஒவ்வொரு நாள் பிரேயரிலும் மாணவர்கள் உறுதிமொழி எடுத்துக்குறாங்க" என்றார். 

 அடுத்து பேசிய,பள்ளி தலைமை ஆசிரியை மல்லிகா,

 "எங்க பள்ளி மாணவர்களுக்கு நல்ல கல்வி,கம்பியூட்டர் அறிவு,டெக்னாலஜி,கராத்தே,சிலம்பம்,யோகா,விளையாட்டு திறமை பல வகையிலும் திறமை வளர்க்கிறோம். அதை யார் வேணும்னாலும் செய்யலாம். ஆனால்,இயற்கையின் முக்கியத்துவத்தை நாங்க எங்க மாணவர்களுக்கு கற்பிப்பப்பதைதான் நாங்க அருஞ்சாதனையா கருதுகிறோம். பள்ளிகளும்,பெற்றோர்களும்,இந்த சமூகமும் மாணவர்களை சிறுவயதிலேயே இயற்கையை நேசிக்க கற்று தராததின் விளைவே இவ்வளவு வறட்சியும்,இவ்வளவு பருவநிலை மாற்றமும். எங்க பள்ளி மாணவர்கள் மூலமா அட்லீஸ்ட் இந்த ஊராட்சி அளவுக்காவது இயற்கையை செப்பனிட வைக்கிறோமேங்கிற திருப்தி இருக்கு. குழந்தைகளுக்கு முதலில் நாம சொல்லி தர வேண்டியது இயற்கையின் படிப்பினையைதான். அப்புறம்தான் நாம அவர்களுக்கு உரிய கல்வியை புகட்டனும்" என்றார் முத்தாய்ப்பாக!.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!