Published:Updated:

“அரசியல் கட்சிகளுக்கு பயத்தை உருவாக்க வேண்டும்!” – திருச்சியில் முழங்கிய விவசாயிகள்

சி.ய.ஆனந்தகுமார்
“அரசியல் கட்சிகளுக்கு பயத்தை உருவாக்க வேண்டும்!” – திருச்சியில் முழங்கிய விவசாயிகள்
“அரசியல் கட்சிகளுக்கு பயத்தை உருவாக்க வேண்டும்!” – திருச்சியில் முழங்கிய விவசாயிகள்

“தமிழக விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை என்றால் விவசாயிகளின் உணர்வை மதிக்காத அரசியல் கட்சிகளுக்கு பயத்தை உண்டாக்குவோம்" என நேற்று திருச்சியில் ஆவேசமாக முழங்கிய விவசாய சங்க தலைவர்கள், தங்கள் அடுத்தக்கட்ட போராட்டம் குறித்தும் ஆலோசனை நடத்தினார்கள். 

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில், டெல்லியில் 41நாட்கள் போராட்டம் நடத்திய தமிழக விவசாயிகளுக்கு பாராட்டு விழா, திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள ரவி மினி அரங்கத்தில் நேற்று மாலை நடைபெற்றது.

விழாவில், தமிழக அனைத்து விவசாயிகள் சங்க கூட்டமைப்பின் தலைவர் தெய்வசிகாமணி, மாநிலச் செயலாளர் கோபாலகிருஷ்ணன், தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் கே.எம்.இராமகவுண்டர், தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு, விவசாய சங்க தலைவர்கள் மற்றும் தமிழகம் முழுவதிலும் இருந்து வந்திருந்த, பல்வேறு விவசாய சங்கங்களின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய விவசாய சங்கத் தலைவர்கள், “41 நாட்கள் டெல்லியில் போராடிய நமது விவசாயிகளை, தமிழகத்தின் தலைவர்கள் நேரில் வாழ்த்தினார்கள். ஆனால், பிரதமர் மோடி மட்டும் சந்திக்கவில்லை. கோவையில் நடந்த சிலை திறப்பு விழாவில், கலந்துகொள்ள நேரம் ஒதுக்கிய பிரதமருக்கு விவசாயிகளை சந்திக்க நேரமில்லையா? அய்யாக்கண்ணு தலைமையிலான நமது விவசாயிகள், தமிழகத்துக்காக மட்டும் போராடவில்லை. ஒட்டுமொத்த இந்திய விவசாயிகளுக்கும் சேர்த்துத்தான் போராடினார்கள். விளைபொருட்களுக்கு உரிய விலை என்பது நமக்கானது மட்டுமல்ல. போராடிய தமிழக விவசாயிகள் நாட்டுக்கே வழிகாட்டியாக இருக்கிறார்கள்” என முழங்கினார்கள்.
 

பிரமாண்ட மாநாடு

கூட்டத்தில் பேசிய தெய்வசிகாமணி, “தமிழக விவசாயிகள் தற்போது சந்திக்கும் அனைத்து பிரச்னைகளுக்கும், இந்த அரசுகள்தான் காரணம். இவர்கள் இயற்கை வளங்களை சூறையாடியதாலும், மரங்களை வெட்டியதாலும்தான் தற்போது தமிழகத்தில் வரலாறு காணாத வறட்சி நிலவுகிறது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும், அதனை மத்திய அரசு செய்யவில்லை. வறட்சியால் பலியாகிவரும் விவசாயிகளின் தற்கொலை மரணங்களைத் தடுக்க அரசுகள் முன்வரவில்லை. எனவே அரசுதான் இதில் முதல் குற்றவாளி.

விவசாயிகளின் போராட்டத்துக்கு நாடு முழுவதும் ஆதரவு பெருகியுள்ளது. ஆனால், மத்திய அரசு மதிக்கவில்லை. உத்தரபிரதேச தேர்தலில், ‘விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்வேன்’ எனப் பிரதமர் மோடி முழங்கினார். கேட்காத ஒரு மாநிலத்தில் முழங்கிய மோடி, இதே கோரிக்கைகளை வலியுறுத்திப் போராடிய, நமது விவசாயிகளைக் கண்டுகொள்ளவே இல்லை ஏன்? கர்நாடகாவில் விரைவில் தேர்தல் வருவதால், காவிரி பிரச்னையை மத்திய அரசு கண்டுகொள்ளாது. தமிழகத்தில் அரசே இல்லை.

உத்தரபிரதேசத்தில் விவசாயக்கடன்களை மாநில அரசுதான் தள்ளுபடி செய்தது. அதேபோல் கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களிலும், அம்மாநில அரசுகள் தலா சுமார் 9 ஆயிரம் கோடிக்கு மேலான விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்துள்ளது. அந்தப் பணத்தை அரசு திருப்பிச் செலுத்தும்வரை, விவசாயிகள் மீது நடவடிக்கைகள் எடுக்கக்கூடாது என அம்மாநில முதல்வர்கள் வங்கி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்கள். அதையே தமிழக முதல்வரும் செய்யவேண்டும். புதிய கடன்களை வழங்க வழி செய்யவேண்டும். அப்படிச் செய்தால், விவசாயிகள் சாக மாட்டார்கள். இந்தக் கோரிக்கைகளை அரசுகள் கண்டுகொள்ளவில்லை எனில், கடந்த 1980-ம் ஆண்டு சென்னை மெரினாவில் 20 லட்சம் விவசாயிகள் கூடினார்களே. அதைப்போல ஒரு பெரிய மாநாட்டை விரைவில் நடத்தவேண்டும். அதன்மூலம், 'விவசாயிகளின் கோரிக்கைகளை கண்டுகொள்ளவில்லை எனில், தேர்தலில் நமக்கு ஓட்டுப்போடமாட்டார்கள்' என்கிற பயத்தை அரசியல் கட்சிகளுக்கு உருவாக்க வேண்டும். விரைவில் பிரமாண்டமான மாநாடு குறித்த அறிவிப்பு வெளியாகும்”என்றார்.
 

திருச்சியில் முழங்கிய  தமிழக விவசாய சங்கங்கள்

இறுதியாக ஏற்புரை ஆற்றிய அய்யாக்கண்ணு,“நமது போராட்டத்துக்கு துணை நின்ற அனைத்துக் கட்சியினருக்கும், விவசாயிகளுக்கும் நன்றி சொல்லிக்கொள்கிறேன். முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கொடுத்த வாக்குறுதியை நம்பித்தான், தற்காலிகமாகப் போராட்டத்தை முடித்துள்ளோம்.  நாங்கள் நிர்வாணமாகப் போராடியதை குறைசொல்கிறார்கள். எங்கள் போராட்டத்தை மதிக்காமல், எங்களை நிர்வாணப்படுத்தியதே அரசுதான்.

வரும் 18-ம்தேதி நாங்கள் டெல்லி கிளம்புகிறோம். அடுத்து 21ம்-தேதி  நாடுமுழுவதும் உள்ள 300-க்கும் மேற்பட்ட விவசாய சங்கத் தலைவர்களுடன் ஆலோசனைக்கூட்டம் நடத்த உள்ளோம். அந்தக்கூட்டத்தில், எங்களின்  அடுத்தக்கட்ட போராட்டம் குறித்து, அதன் வடிவங்கள் குறித்து ஆலோசனை நடத்த உள்ளோம். எங்கள் கோரிக்கைகள் நிறைவேறவில்லை என்றால், அடுத்தக்கட்டப் போராட்டம் மிகத் தீவிரமாக இருக்கும்.” என்றார் கடுமையாக.

காதில் வாங்குமா அரசுகள் ?