Published:Updated:

''எங்கள விதவையாக்குனது வெவசாயம். ஆனா அரசாங்கம்...?!" - அரசின் அறிக்கையும், நிஜமும் #SpotVisit

நமது நிருபர்
''எங்கள விதவையாக்குனது வெவசாயம். ஆனா அரசாங்கம்...?!" - அரசின் அறிக்கையும், நிஜமும் #SpotVisit
''எங்கள விதவையாக்குனது வெவசாயம். ஆனா அரசாங்கம்...?!" - அரசின் அறிக்கையும், நிஜமும் #SpotVisit

142 ருடங்களில் காணாத வறட்சியைத் தமிழகம் கண் முன்னே கண்டுகொண்டிருக்கிறது. மழை இல்லாமல், காவிரியில் கைவிரி நிலைமை நிலவியதால், பொய்த்த விவசாயத்தைக் காண சகிக்காமல் கருகிய பயிர்களைக் கண்டு மருகிப் போய் விவசாயிகள் கொத்துக் கொத்தாக கழுத்துக்கு சுருக்குக்குக் கொடுத்தும், பூச்சிக்கொல்லி மருந்தை வாயில் ஊற்றியபடியும் தற்கொலை செய்து கொண்டார்கள். ஆனால், இந்த கல்நெஞ்ச அரசு, 'விவசாயிகளின் தற்கொலைக்கு விவசாயம் காரணமில்லை' என்று தன் கையாலாகாதனத்தை மறைக்கும்விதமாக உச்சநீதிமன்றத்தில் வாய்க்கூசாமல் பொய் சொல்லி இருக்கிறது. 'பொய் சொன்னால், போஜனம் கிடைக்காது' என்பார்கள். ஆனால் போஜனம் தரக்கூடிய விவசாயத்திலேயே கைவைத்திருக்கிறது தமிழக அரசு.

உண்மை நிலையறிய பல ஊர்களுக்குப் பயணப்பட்டோம். முதலில் கரூர் மாவட்டம் குளித்தலை தாலுகா லாலாப்பேட்டையைச் சேர்ந்த கோவிந்தன் என்ற விவசாயியின் வீட்டுக்குப் போனோம்.


'கடன உடன வாங்கிப் போட்ட விவசாயம் பண்ணின வெற்றிலை தண்ணீர் இல்லாம சருகுசருகா போயிருச்சே' என்ற விரக்தியில், கழுத்துக்குச் சுருக்கை கொடுத்து தற்கொலை செய்து கொண்டார் கோவிந்தன். வீட்டின் மூலையில் அமர்ந்து மோட்டு வளையை வெறிக்கப் பார்த்துக் கொண்டிருந்த கோவிந்தனின் மனைவி நாகலட்சுமியிடம் பேசினோம். வார்த்தைக்கு வார்த்தை வேதனையை அடைகாத்தபடி பேசினார்.

"அவரைபோல நல்ல மனுசனையும், கடும் உழைப்பாளியையும் பார்க்க முடியாது. எங்களுக்கு கஷ்டம்னா என்னனு தெரியாம வச்சுருந்தார். ஆனா இப்போ எங்களை நிரந்தர கஷ்டத்துல தள்ளிவிட்டுட்டு போயிட்டார். எல்லாம் இந்த கருமாய விவசாயத்தால்தான்" என்று விம்மி வெடித்தவர், சற்று நேர ஆசுவாசுப்பிற்குப் பிறகு சோகத்தை தொடரலானார்.

"எங்களுக்கு ரெண்டு பொண்ணுங்க, ஒரு பையன். சொந்தமா நெலம் கிடையாது. அதனால ஒரு ஏக்கர் நிலத்தை வருஷக் குத்தகைக்கு எடுத்து வாழை, கரும்பு, நெல்லுனு மாத்தி மாத்தி வெவசாயம் செய்துட்டு இருந்தார் என் வீட்டுக்காரர். வீட்டுக்குப் பக்கத்துல காவிரி ஓடுறதால விவசாயம் ஓரளவுக்கு நல்ல லாபத்தையே கொடுத்துச்சு. அதனால நாங்க வெளி வேலைக்குப் போனதில்லை. நிலத்துல வந்த வருமானத்தை வச்சுதான் என் மூத்த பொண்ணை நல்ல இடத்துல கட்டிக் கொடுத்தார். அடுத்தவளை காலேஜ்ல படிக்க வெச்சார். போன போகத்துல ஒரு ஏக்கர் நிலத்துக்குக் குத்தகையா ஐம்பதாயிரத்தைக் கொடுத்தார்.

அதே நெலத்துல அஞ்சு லட்சம் வரை கடன் வாங்கி வெற்றிலை போட்டார். எங்க நேரம்... இந்த வருஷம் மழை பொய்ச்சு காவிரியில் தண்ணீர் வராம வெற்றிலை எல்லாம் கருக ஆரம்பிச்சது. கடன்காரன் வேற நெருக்க ஆரம்பிச்சுட்டான். வேதனையில் விழுந்த என் கணவர், அதுவரைக்கும் தொட்டுக்கூட பார்க்காத குடிப்பழக்கத்துக்கு அடிமையானார். நாங்க அதிர்ந்து போயிட்டோம். தெனமும் குடிச்சுட்டு வந்து 'நாம கடனாளி ஆயிட்டோம். கடன்காரன் வேற அசிங்கப்படுத்துறான். நான் செத்து போப்போறேன்'னு புலம்புவார். 'அப்படி எல்லாம் பேசாதீங்க. எப்படியும் நாம கடனை அடைச்சுடலாம். சாவுற எண்ணத்தை மனசுல வச்சுக்காம எறிஞ்சுடுங்க'னு சமாதானம் சொல்லுவேன். மனுஷன் குடிச்சுட்டு புலம்பறார்னு நினைச்சு சும்மா விட்டது என் தப்பாப் போச்சு. கடந்த ஜனவரி பதினாறாம் தேதி எங்க ஊர் சுடுகாட்டு மரத்துல தூக்குல தொங்கி, எங்களை நட்டாத்துல விட்டுட்டு போயிட்டார் தம்பி. சாவுற நிமிசத்துலகூட எங்களுக்கு செலவு வைக்கக்கூடாதுன்னு சுடுகாட்டுல போய் செத்திருக்கார் பாருங்க. அந்த மனுசன் இல்லாம நாங்க நடைப்பொணமா ஆயிட்டோம். ஒருவேளை கஞ்சிக் குடிக்கவே சிரமப்படுறோம். வெளியில வேலைக்குப் போகலாம்னா, திரும்புற பக்கமெல்லாம் வறட்சியா இருக்கு. வீட்டை விட்டு வெளிய வராத நாங்க இப்ப கிடைக்கிற வேலைக்கு போயிட்டு இருக்கோம். என் சின்ன மக, 'நான் காலேஜை நிறுத்திட்டு,வேலைக்குப் போறேன்மா'ங்கிறா. அதுக்கு என்ன பதில் சொல்றதுன்னே தெரியலை. அவர் நினைச்ச உடனே வாழ்க்கையை முடிச்சுகிட்டார். நாங்க தெனம் தெனம் சாகுறோம் தம்பி'' என்று தலையிலடித்தபடி கதறியழுகிறார் நாகலெட்சுமி.


''அவர் இறந்தபிறகு வந்த அதிகாரிங்க, 'தற்கொலைக்கு என்ன காரணம்னு கேட்டு குறிச்சுக்கிட்டு,'அரசாங்கம் உங்களுக்கு உதவும்'னு சொல்லிட்டு போனாங்க. ஆனா,'விவசாயிகள் சாவுக்கு விவசாயம் காரணமில்லை'னு கோர்ட்டுல அரசாங்கம் சொல்லியிருக்கு, அப்போ என் கணவர் தற்கொலை பண்ணிக்க நான் காரணமா இருக்கேன்னு சொல்லுதா இந்த அரசாங்கம்... இவங்க யாரும் எங்களுக்கு உதவக்கூட வேண்டாம். ஆனா நடந்ததை ஏ.சி ரூம்ல உட்கார்ந்துகிட்டு தப்பா பேசாதீங்க. எங்க வலியும் வேதனையும் உங்களை சும்மா விடாது".

‘'மண்ணுல போடுற காசு வீடுவந்து சேர்றது நிச்சயமில்ல, அந்தரத்துல ஆடுற தொழில் நமக்கு வேண்டாம்னு தலபாடா அடிச்சிக்கிட்டேன். பாவி மனுசன் கேட்கல. இப்போ, என்னைய அனாதையாக்கிட்டு அவர் போய் சேர்ந்துட்டரு’' என்று கதறும் பார்வதியம்மா இருப்பது நாகை மாவட்டம் வேதாரண்யம் வட்டத்தில்.

“என்னோட வீட்டுக்காரர் சுந்தரேசன் விவசாய கூலித்தொழிலும், மாட்டுத்தரவும் செய்வார். ரெண்டு புள்ளைகளும் கல்யாணமாகி தனியா இருக்காங்க. ஒரு பொண்ண கட்டிக்கொடுத்து அது ரெண்டு புள்ளைய பெத்துட்டு செத்துபோச்சு. அந்த பேரப்புள்ளைங்களையும் நாங்கதான் சுமக்கிறோம்.

அவர் இருந்தப்ப ஒரு ஏக்கர் நிலத்தைக் குத்தகைக்கு எடுத்தார். அப்பவே நமக்கெல்லாம் இது சரிபட்டுவராது, நாம தவணை வட்டிக்கு பணம் வாங்கி, மண்ணுலபோட்டுட்டு அது வருமா வராதான்னு தவிச்சிக்கிட்டே இருக்கனும். கஞ்சி குடிச்சாலும் கடனில்லாம நிம்மதியா இருப்போம்னு சொன்னேன். அவர் கேட்காம ‘எப்பவும் அடுத்தவங்களுக்கே உழைக்கிறோம் நானும் சொந்தமா சாகுபடி செய்யனும்னு ரொம்பநாள் ஆசை. ஒருமுறை செஞ்சிதான் பார்ப்போமே’னு விடாப்பிடியாய் நின்னார். கடனவுடன வாங்கி நடவு செஞ்சோம். ஆரம்பத்துல வெள்ளாமை நல்லாதான் வந்தது. ஆனா தண்ணி வரத்து குறைஞ்சதும் ரெண்டு மூணுதடவ டீசல் இன்ஜின் வாடகைக்கு வச்சி தண்ணி இறைச்சோம். அப்பவும் பயிருக்கு தண்ணி பத்தல. கடைசியா பிப்ரவரி 24-ம் தேதி வயலுக்கு போய்வந்தவரு ‘பயிரைப் பார்க்க சங்கடமா இருக்கு. தண்ணி ஊத்தலைன்னா அதெல்லாம் மொத்தமா செத்துப்போயிடும், எங்கேயாவது கடன் வாங்கிக் கொடுன்னு' கேட்டார். சோத்துக்கே வழியில்லாதபோது நான் பயிருக்கு யார்கிட்டபோய் பணம் வாங்குறதுன்னு சொன்னேன். கொல்லைப்பக்கம் போய் படுத்தவரை கொஞ்ச நேரம் கழிச்சி சாப்பிடக் கூப்பிட்டேன் வர்ல. கிட்டப்போய் பார்த்தா, வாயில நுரைதள்ளி துடிச்சிக்கிட்டு கிடந்தார். அலறி அடிச்சுகிட்டு வேதாரண்யம் ஆஸ்பத்திரிக்கு தூக்கிட்டுப் போனோம். அங்க திருவாரூருக்கு போகச்சொன்னாங்க. அங்கேயும் கொண்டுபோய் சேர்த்தோம், ஒருவார்த்தக்கூட பேசாம போய் சேர்ந்திட்டார்.“எங்களுக்குச் சொந்த நிலமில்ல. வீடுகூட புறம்போக்குலதான் இருக்கு. இதுவரைக்கும் விவசாயத்துக்காகக் காசு பணத்தை இழந்தேன். இப்ப என் தாலியவே இழந்துட்டு நிக்கிறேன். ஆனா அரசாங்கம் அவர் விவசாயத்தால தற்கொலை செய்துக்கலைனு சொல்லுது... அப்ப என்ன சின்னவீடு செட்டப் வைச்சிகிறேன்னு சொல்லி அதுக்கு நான் குறுக்கால நின்னு அதனால செத்து போயிட்டாரா...இவங்க எல்லாம் எங்க கஷ்டத்தை புரிஞ்சுக்காம போனா போகட்டும், மனசு வலிக்கிற மாதிரி பேச வேண்டாம்ய்யா. என் பேரப்புள்ளைங்க மட்டும் இல்லைன்னா நானும் அவர் போன இடத்துக்கே போயிருப்பேன். அவங்களுக்காக உசுர கையில புடிச்சுட்டு நிக்கிறேன்".

தஞ்சை மாவட்டம் திருவையாறு அருகேயுள்ள அணைக்குடி கிராமத்தைச் சேர்ந்த செல்வராஜ் விவசாயி மனைவி
ராசாத்தியிடம் பேசினோம்.

''ஆத்துல தண்ணியும் வரல, மழையும் பேயல, இப்படியே போய்கிட்டு இருந்தா எப்படி கரும்பை காப்பாத்த போறோம்னு சொல்லிட்டு இருந்தாரு. விவசாயத்தைத் தீவிரமா பார்ப்பார். நெல்லா இருந்தாலும், கரும்பா இருந்தாலும் சொல்லி வச்சமாதிரி மகசூல் எடுப்பாரு. நெல் போட்டா தண்ணீர் போதாதுனு கடந்த ரெண்டு வருஷமா கரும்பு போட்டு வந்தோம். இந்த வருஷம் மழையும் பேயல, ஆத்துலேயும் தண்ணீர் வரலங்கிறதுனால ஆழ்குழாய் கிணறு போடுவோம்னு சொல்லி என்கிட்ட இருந்த நகை, நட்டெல்லாம் அடமானம் வைச்சாரு. கூடுதலா வட்டிக்குப் பணம் வாங்கித்தான் போர் போட்டோம்.

எங்க பகுதியில் 30 அடி ஆழத்திலேயே தண்ணீர் கிடைக்கும். ஆனா, 70 அடி ஆழம் தோண்டியும் தண்ணீர் இல்லையே, 100 அடிக்கு மேல போர் போட்டாலும் தண்ணீர் வருமா... அதுக்குள்ள கரும்பு பட்டு போயிடுமேனு வருத்தப்பட்டுகிட்டே இருந்தார்.

விவசாயத்துக்காக வட்டிக்குக் கடன் வாங்கியிருக்கோம். ரெண்டு வருஷத்துக்கு முன்னால ஆலைக்கு வெட்டி அனுப்பின கரும்புக்கான காசு ரெண்டு லட்சம் வரணும். அதுவும் வரல. நமக்கான காசை கரும்பு ஆலையில கேட்டு பாருங்க. அது இந்த நேரத்துல ஆறுதலா இருக்கும்னு சொல்லிட்டு இருந்தேன்.

ஆலைக்குப் போனாரு. அங்க என்ன சொன்னாங்கன்னு தெரியல. வந்தவரு சோகமா இருந்தாரு. என்ன கேட்டும் வாய் தொறக்கல. எங்களை நட்டாத்துல விட்டுட்டு போயிட்டாரு. எங்களுக்கு மூணு பிள்ளைங்க. அப்பா பார்த்த விவசாயத்த என் மூத்த மகன் செய்ஞ்சுட்டு இருக்கான். ரெண்டாவது பையன் சென்னையிலயும், மூணாவது மகன் மனநிலை சரியில்லாததுனால என்கூடவும் இருக்கான்.
இப்ப நாங்க வைச்ச கரும்பை காப்பாத்தணும்னா அக்கம்பக்கத்து ஆழ்குழாய் கிணறு வைச்சிருக்கவங்ககிட்ட உதவி கேட்கணும். அவங்க தண்ணீர் கொடுத்தாதான் கரும்பு நெலைக்கும்... இல்லைன்னா ஒட்டு மொத்த குடும்பமும் தற்கொலை பண்ணிகிடுறத தவிர வேற வழியில்ல சாமீ".

 துரை.வேம்பையன்,
மு. இராகவன்,ஏ.ராம்
படங்கள்: நா.ராஜமுருகன்

க. சதீஷ்குமார்,செ.ராபர்ட்